Arts -
சினிமா
|
Written by முல்லை
|
Tuesday, 21 October 2014 23:00 |
படத்தின் தலைப்பே குத்துவது போல இருக்கிறதே என்று பயந்து கொண்டு படத்தைப் பார்த்தால், உண்மையிலேயே மனதை ஆழமாகத் தைக்கிறது.
கதைக்கு எடுத்துக் கொண்ட கருவும் களமும் நன்றாகவே பொருந்தியிருக்கின்றன.
ஆண்கள் இருவருக்கும் நடிப்பதற்கு எதுவுமேயில்லை. வெறும் உரையாடல்கள் மட்டும்தான் அவர்களுக்கு.
ஆனால் சிறுவர்கள் இருவரும் யதார்த்தமான உரையாடல்களுடன் இயற்கையான அசைவுகளைத் தந்து நடித்து பெரியவர்களை விஞ்சி நிற்கிறார்கள்.
சிறுவன் நிலத்தில் விழுந்திருந்து கன்னத்தைப் பிடித்த வண்ணம் அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஓடிச் சென்று அவனைத் தூக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
"டேய்.. இதுக்குள்ளேயே இருக்கிறாய்?"
"ஓம்.. இப்பதான் வீடுவேண்டி இஞ்சை வந்தனாங்கள்.. அந்தா அந்த குறுக்கு றோட்டு.."
"அந்தச் சின்ன வீடுகளோ..?"
இந்த உரையாடல்களில் இருந்து இருவர்களையும் அழகாக இனம் காட்டுகின்றார் சுமதி ரூபன்.
"நாங்கள் முதல் வரக்கை நல்லாயிருந்தது.. இப்ப சரியான தமிழ்ச் சனம்.." இந்த வரிகள் வரும்போது தான் முள் தைக்க ஆரம்பிக்கிறது.
"உனக்கு இந்த வயசிலை..." என்று கையை ஓங்கும்போது அவரது மனதில் உள்ள முட்கள் பளிச்சென்று தெரிகின்றன.
உரையாடல்களை யதார்த்தமாக உலவ விட்டிருக்கின்றார் சுமதி ரூபன்.
சில வசனங்கள்தான் இடம்பெறுகின்றன. அதிலே நளினம், சலிப்பு, ஏளனம் என்று எல்லாவற்றையும் கலந்து தந்திருக்கின்றார். பிள்ளை கறுப்பாக இருப்பதற்கு தந்தை சொல்லும் காரணம் அருமை.
ஆரம்பத்தில் தொடங்கும் இசையும், அறிமுகமும் ஏதோ ஒரு திகில் படத்தைப் பார்க்கப் போகும் பிரமையை ஏற்படுத்துகிறது.
கதை எப்படிப் போனாலும் போகட்டும் நான் இப்படித்தான் என்கின்ற பாணியில் இசை அடம்பிடிக்கிறது. உரையாடும் போதும் சரி, காட்சிகளைக் காட்டும் போதும் சரி படத்தின் இசை தனது பாதையில் எந்தவித சுரத்தையுமில்லாமல் தன்பாட்டுக்கு தனியாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. சில நேரத்தில் இசை காதைக் குடைகிறது. தகப்பன் அதிர்ச்சியில் திரும்பும் போதும், சிறுவனை அடிக்கும்போதும் மட்டும் வேண்டுமென்று இசையில் சிறு மாற்றம் செய்யப்பட்டது போன்று தோன்றுகிறது. எனது பார்வையில் இசைச் சேர்க்கை கை தரவில்லை.
சிறுமி காரில் இருந்து இறங்கி தந்தையை விட்டு மைதானம் நோக்கி ஓடுவது போன்று காட்டப்படுகின்றது. அடுத்த செக்கனில் சிறுமி தந்தையின் அருகில் நின்று மைதானத்தில் விளையாடுவதுற்கு அனுமதி கேட்கிறாள். பொருந்தவில்லை.
ஆண்கள் இருவரும் உரையாடும்போது பின்புலத்தில் உயர்ந்த கட்டிடங்கள், விளையாட்டு மைதானம், மரங்கள் என மாறிமாறி காட்டப்படுகின்றன. இந்த இடத்தில் ஏதோ ஒருவித குழப்பமான நிலை தோன்றுகின்றது.
சிறுவன் கீழே விழுந்திருக்கிறான். என்ன நடந்தது என்று தெரியாமல் அதிர்ந்து காணப்படுகிறான். சரி... சிறுவனுடைய நிலையைச் சொன்னவர்கள், சிறுமியின் பிரதிபலிப்பை ஏன் பெரியளவில் காட்டாமல் விட்டார்கள் என்ற கேள்வி எழுகிறது.
நல்லதொரு குறும்படம். சில குறைகளைத் தவிர்த்திருந்தால் இன்னும் அழகாக வந்திருக்கும்.
நம்பிக்கை நட்சத்திரமாக சுமதி ரூபன் இருக்கிறார். அவரது அடுத்த படைப்பு இன்னும் நன்றாக வரும்.
யேர்மனியிலிருந்து முல்லை
|
Last Updated on Tuesday, 21 October 2014 23:30 |