home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 16 guests online
தேவை ஒரு சினிமாப்பாணி PDF Print E-mail
Arts - சினிமா
Written by ஆழ்வாப்பிள்ளை   
Monday, 14 July 2014 10:30
2011இல் பொங்கு தமிழில் பேசும் படம் பகுதியில் ஏழாம் அறிவு படத்தைப் பற்றி ஒரு விமர்சனம் வந்திருந்தது. அப்பொழுதே எனக்கு ஒரு நெருடல் இருந்தது. ஆனால் அந்த நெருடலை நான் வெளியே சொல்லவில்லை.

விமர்சனம் என்பது ஒவ்வொருவர் பார்க்கும் கோணங்களைப் பொறுத்தது. ஒரு படைப்பில் ஆழ்ந்து அதில் கிடைக்கும் பயனாக வெளிவருவது. ஆகவே ஏழாம் அறிவு படத்திற்கான அந்த விமர்சனத்துக்கு நான் கருத்து வைக்க வேண்டிய தேவை அன்று இருக்கவில்லை.

இன்று வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அது `கத்தி´ திரைப்படத் தயாரிப்பாளர்கள் பற்றியது „உங்கள் உணர்வுக்கு நன்றி நண்பா. உங்களை நாங்கள் நெருக்கமாகவும், நேசமாகவும் உணர்கின்றோம்“ என்று ஏழாம் அறிவைப் பார்த்து ஒரு விமர்சகர், அதன் தயாரிப்பாளரான ஏ.ஆர்.முருகதாசின் உணர்வுக்கு நன்றி சொல்லி இருந்தார். அந்த நன்றிக்கு ஏ. ஆர்.முருகதாஸ் பொருத்தமானவர்தானா என்பதே எனது அன்றைய நெருடலாக இருந்தது.

பக்கத்து நாட்டில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் செத்துக் கொண்டிருந்த பொழுது நாங்கள் „மட்ச்“ பார்த்துக் கொண்டிருந்தோம் என்று  நடிகர் சூர்யா, ஏழாம் அறிவு படத்தில் பொங்கி எழுந்து பொரிந்து தள்ளுவார். இவை எல்லாம் வெறும் உணர்ச்சிகளில் வந்தவை அல்ல. எல்லாமே வியாபார நோக்குக்காக புகுத்தப் படும் அலங்கரிப்புகள். சாப்பிடும் பொழுது ஊறுகாயைத் தொட்டுக் கொள்வது போல, தென்னிந்திய தமிழ்ச் சினிமாவானது அப்பப்ப ஈழத் தமிழர் பிரச்சினைகளைத் தொட்டு விட்டுப் போகும்.  அப்படிச் செய்தால்தான் புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் அவர்களால் தங்கள் திரைப்படங்களைச் சந்தைப் படுத்த முடியும். துட்டுப் பார்க்க முடியும். சாமான்ய இயக்குனர்கள் தொடக்கம் சீமான் இயக்குனர்கள் வரை தங்களது சினிமா வியாபாரத்துக்கும், அரசியல் நிலைப்பாடுகளுக்குமாகத்தான் எங்கள் பிரச்சனைகளைத் தொட்டுக் கொள்கிறார்கள். தென்னிந்தியத்  தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல தென்னிந்தியத் தமிழ் தொலைக்காட்சிகளுக்கும் சந்தைப் படுத்தும் தளமாக, தெனாலிகளாக புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் நாங்கள் இருக்கின்றோம்.

புலம் பெயர் தமிழர்களே தாங்கள் வாழும் நாடுகளில் தென்னிந்திய தமிழ் சினிமாப் படங்களை வாங்கி வெளியிடும் முகவர்களாக இருக்கிறார்கள். இப்பொழுது தயாரிப்பாளர்களாகவும் மாறி வருகிறார்கள். ஆக பணம் என்பது தென்னிந்திய தமிழ்ச் சினிமாத் துறைக்கு  தாரளமாகக் கிடைத்து விடுகிறது.

ஈழத்தமிழர்கள் பணத்தை முதலீடு செய்யலாமே தவிர, நடிகர்கள் மற்றைய கலைஞர்கள் எல்லாமே அவர்கள்தான்.  அப்படி எங்காவது ஒரு நடிகன் ஈழத் தமிழனாக இருந்தால் வில்லன் பாத்திரத்தை அவனுக்குத் தந்து விடுவார்கள். இது அன்றைய நடிகர் ஏ.ஈ. மனோகரன் தொட்டு இன்றைய வ.ஐ.ச ஜெயபாலன் வரை நடந்திருக்கிறது. பொப் பாடகராக அறியப்பட்ட நடிகர் ஏ.ஈ. மனோகரன் சிலோன் மனோகராகி எல்லா தமிழ் கதாநாயகர்களிடமும் அடிவாங்கி காணாமல் போய் விட்டார். இப்பொழுது கவிஞரான வ.ஐ.ச ஜெயபாலனை ஆடுகளம் வில்லன் ஜெயபாலன் என்ற அடைமொழியில்தான் அழைக்கிறார்கள். அப்படி அழைத்தால்தான் எல்லோருக்கும் தெரிகிறது. இலங்கைத் தமிழனுக்கு வில்லன் வேசம் கட்டுவது இராமாயண காலத்தில் இருந்து ஆரம்பிக்கப் பட்டதோ என்ற ஐயம் தோன்றுகிறது.

கடவுணு பொரண்டுவ (Kadawuna poranduwa) திரைப்படத்தை  தமிழரான எஸ்.எம். நாயகம் தயாரித்திருந்தார். இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேனென்றால் பின்னாளில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட சமுதாயம் என்ற முதல் தமிழ்ப் படத்தை சிங்களவரான ஹென்றி சந்திரவன்ச தயாரித்திருந்தார். ஆக சிங்களத்தில் வெளியான முதல் திரைப்படத்தை ஒரு தமிழரும் தமிழில் வெளியான முதற் திரைப்படமான சமுதாயத்தை சிங்களவரும் தயாரித்து மொழிகள் மதங்கள் கடந்து கலைத்துறைக்குப் பணியாற்றி இருக்கிறார்கள் என்பதை இங்கு காணலாம்.  

இலங்கையில் வர்த்தக ரீதியில் பல சிங்கள் வெற்றிப்படங்கள் உருவாக தமிழ்க்கலைஞர்கள் பலர் காரணமாக இருந்திருக்கின்றார்கள். ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, நெறியாள்கை, படப்பிடிப்பு, படத்தொகுப்பு, நடிப்பு எனப் பல பரிமாணங்களை சிங்களப் படத்துறையில் காட்டிய தமிழ்க்கலைஞர்களால் வர்த்தக ரீதியில்  தமிழ்ப் படத்துறையை வளர்த்தெடுக்க முடியாமற் போனதற்கு தென்னிந்திய தமிழ் திரைப்படத் துறையின் ஆதிக்கமே காரணமாக இருந்திருக்கிறது.

அன்று இலங்கையில் தயாரிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களை தென்னிந்தியத் திரையில் ஒளிக்கவிடாமால் பக்குவமாகப் பார்த்துக் கொண்டார்கள். இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்புகள் தவிர இலங்கையில் தயாரிக்கப் பட்ட மற்றைய தமிழ்ப் படங்களை திரையிட சட்டம் இடம் தரவில்லை என அன்றைய முதல்வர் கருணாநிதி மறுத்து விட்டார். இலங்கைத் தமிழ்ப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட அவர்களது  சட்டம் தடுக்கிறது. ஆனால் சிங்களப் படத்தை தமிழ் நாட்டில்  திரையிட முடியும். அதற்குச் சட்டம் இடம் கொடுக்கிறது. இப்பொழுது அதற்கும் குழி பறித்திருக்கிறார்கள்.

போராட்டங்கள் பற்றிய முழுநீளத் திரைப்படங்கள், குறும் படங்கள் போன்றவற்றை உருவாக்கியவர்களால், இந்திய அமைதி காக்கும் படை ஈழத்தில் செய்த அவலங்களையோ, முள்ளி வாய்க்கால் துயரங்களையோ எந்த வடிவிலும் தர முடியவில்லை. முள்ளி வாய்க்காலில் நடந்த அவலங்களை சனல்  4 தொலைக் காட்சிக்கும், மனித உரிமை அமைப்புக்களுக்கும் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் சிங்களவர்களே. அதை வைத்துத்தான் எங்களுடைய அடுத்த கட்ட நகர்வு இன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சிங்களவன் தந்த தகவல்களை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று யாருமே எங்குமே போராட்டம் நடத்தவில்லை. தீக்குளிக்கவில்லை. ஆனால் சிங்களவர் ஒருவர் முன்வந்து முள்ளிவாய்க்கால் அவலங்களுக்குப் பின்னர் அவைகளால் ஏற்பட்ட தாக்கங்களை வைத்து யதார்த்தமாக ஒரு திரைப்படம் எடுத்தால் முரண் படுகிறோம்.

சமீபத்தில் பொங்கு தமிழ் இணையத் தளத்தில், „`இனம்´ படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தோர் எமது படத்துக்கு ஆதரவு தராதது ஏன்?"  என்று  `அமைதிக்காக´ திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் பேட்டியில் ஆதங்கப்  பட்டிருக்கிறார்கள்.

அமைதிக்காக போன்ற இலங்கைத் தமிழரது போராட்டங்கள் சம்பந்தமான இன்னும் சில படங்கள் வெளியிட முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. அவற்றை வெளியிட யாருமே பெரிதாகக் குரல் கொடுக்கவில்லை.

பிரசன்ன விதானகே இயக்கிய படங்கள் எல்லாமே யதார்த்தமானவை. அவர் இயக்கிய திரைப்படங்கள், அவற்றிற்குக் கிடைத்த அங்கீகாரங்கள், பாராட்டுகள், உள்நாட்டு, சர்வதேசப் பரிசுகள் என்பன பற்றி ஏராளமான கட்டுரைகள் வந்திருக்கின்றன. இதைத் தெரியாதவர்கள் அல்லர் இயக்குனர் கவுதமனும், மே 17 இயக்க தோழர்களும், தேசிய உணர்வாளர்களும். ஆனாலும் எதிர்க்கிறார்கள். திரையிடக் கூடாது என்கிறார்கள். தாங்களும் தரமாட்டார்கள். தருவதையும் ஏற்க விடமாட்டோம் என்கிறார்கள்.

ஒன்று மட்டும் புரிகிறது எங்கள் அவலங்களை எங்கள் நிலமைகளை வைத்து அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்ளப் பார்க்கிறார்களே தவிர எங்கள் நலனுக்கு எதுவுமே செய்ய அவர்கள் தயாராக இல்லை. வசதியாக இருக்கும் புலம் பெயர் தமிழர்கள் இந்த இடத்தில் சற்றுச் சிந்திக்க வேண்டும். எங்களுக்கான தனித்தன்மையான  திரைப்படங்களை உருவாக்க வேண்டும் . அவை முற்று முழுதாக தென்னிந்தியக் களியாட்டத் தமிழ் திரைப்படங்களாக இல்லாமல் மாறுபட்டு இருக்க வேண்டும். பிரசன்ன விதானகே போன்ற யதார்த்த இயக்குனர்களுக்கான அங்கீகாரத்தை நாங்கள் தந்தாலே போதும். எங்களுக்கான திரைப்படத் துறைக்கான வழி கிடைத்து விடும்.

தென்னிந்திய தமிழ் திரைப்படத்துறையினர் தங்களுக்கு என்று ஒரு பாணி அமைத்து படங்களைத் தயாரிப்பவர்கள். நீண்ட வருடங்கள் அனுபவம் கொண்டவர்கள். அவர்கள் பாணியில்தான் நாங்கள் செல்ல வேண்டும் என்றில்லை. அது வேண்டாத வேலையோடு  தோல்வியிலேயே முடிந்து விடும். எங்களில் பலர் தென்னிந்திய தமிழ் சினிமாப் பாணியில் திரைப்படங்கள் தயாரித்து அதனூடன அனுபவங்களை ஏற்கெனவே சந்தித்து இருப்பார்கள். அவர்களும் இந்தத் துறையில் ஆர்வம் உள்ள மற்றவர்களும் எங்களுக்கான பாணி என்ன என்பதைக் கூடிப் பேச வேண்டும். ஒரு தெளிவைப் பெற வேண்டும்.

´கத்தி` திரைப் படம் வெளி வரும். புலம் பெயர் தமிழர் வாழும்  நாடுகளில் எல்லாம் காண்பிக்கப் படும். அதிலும் ஈழத் தமிழர்களைப் பற்றி ஓரிரு வரிகள் வரும்.

ஆழ்வாப்பிள்ளை
4.7.2014
Last Updated on Monday, 13 October 2014 20:51