இலண்டனில் சந்திரா இரவீந்திரனின் நிலவுக்குத்தெரியும்' நூல் வெளியீட்டு நிகழ்வும், ஆய்வுரை/பதிலுரையும்
கடந்த ஞாயிற்றுக்கிழமை, 18.3.2011 அன்று லண்டன் என்பீல்ட் நகரில் Dugdale Centre மண்டபத்தில் அவை நிறைந்த நிகழ்வாகவும் நல்லதொரு குடும்ப நிகழ்வாகவும் சந்திரா இரவீந்திரனின் நிலவுக்குத் தெரியும் சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்வு நிகழ்ந்தேறியது
வடமராட்சி-பருத்தித்துறையில் மேலைப் புலோலியூர், ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சந்திரா. 1991இல் பிரித்தானியாவுக்கு இடம்பெயரும்வரை யாழ்ப்பாண அரச செயலகத்தில் பணியாற்றியவர். இவர் 1981இல் (செல்வி) சந்திரா தியாகராஜா என்ற பெயரில் தனது கன்னிப்படைப்பான `ஒரு கல் விக்கிரகமாகிறது´ என்ற சிறுகதையை எழுதி எழுத்துலகில் நுழைந்தவர். வடமராட்சியில், பருத்தித்துறை யதார்த்தா இலக்கிய வட்டத்தினால் இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான நிழல்கள் 1988இல் வெளியிடப்பட்டது. ஈழமுரசு, ஈழநாடு ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்த 5 சிறுகதைகளினதும் 1984-85 இரசிகமணி கனக. செந்திநாதன் நினைவுக்குறுநாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள் என்ற குறுநாவலினதும் தொகுப்பாக நிழல்கள் முன்னர் வெளிவந்திருந்தது. லண்டன், ஐ.பீ.சீ. அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 2009வரை, ஏழாண்டு காலமாக இலக்கிய நிகழ்ச்சிகளை வழங்கியிருந்தார்
3. இந்த 'நிலவுக்குத் தெரியும் நூலிலே இடம்பெற்றுள்ள 10 கதைகளும் வெவ்வேறு காலப்பகுதிகளில் எழுதப்பட்ட.... வெவ்வேறு மனநிலைகளைப் பிரதிபலிக்கிற... அதே நேரம் ஒரு குறிப்பிட்ட முக்கிய காரணியால் உருவாகிய கதைகள் என்பது மிகவும் உண்மையாக இருக்கும்.
4.இவை பெரும் பாலும் இங்கு வந்திருக்கும் எமது ஆய்வாளர்களின் பார்வையில் நன்றாகப் பரிசீலிக்கப்பட்டு விட்டன. இதற்கப்பால் இவை பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டி எதுவுமில்லையென்றே நினைக்கிறேன்.
6. ஆனால்.... இன்றைய காலகட்டம்...... எங்கள் படைப்பாளிகளிடமிருந்து எதிர்பார்க்கும் முக்கிய விடயங்கள் இன்னும் எழுத்துருவில் வரவில்லை என்று தான் நான் சொல்வேன். நான் அல்லது நாங்கள் படைப்புகளாக.... எழுத்துருவில் பதிய வைக்க வேண்டிய கட்டாயமான விடயங்களை சரித்திரம் எமைப் பார்த்தபடி எதிர் நோக்கிக் காத்திருக்கிறது. ஆனால் நாங்கள் இன்னமும் வாய்விட்டு அழவில்லை! அதற்குரிய நேரமோ காலமோ இடமோ எமக்கின்னும் கிடைக்கவில்லை! நெஞ்சு முட்டிக் கிடக்கிறது! அது உடைப்பெடுக்கத் தொடங்கினால் ஒரு பிரளயமும் புதிய வரலாறும் உருவாகும் நிலை இருக்கிறது!
அவர்கள் எங்களிடமிருந்து நிறைய எதிர்பார்த்தார்கள். எங்களில் பலர் நினைத்தோம். பணத்தை அனுப்பினால் போதும்....; நாம் இழந்தவற்றையெல்லாம் திரும்பப் பெற்று விடலாம் என்று! அதற்கும் அப்பால்.... நிறைய விடயங்களை நாங்கள் செய்யத் தவறி விட்டோம் என்பது தான் உண்மை! அது உண்மையிலும் உண்மை! அதை யாராலும் மறுக்க முடியாது!
நிலவுக்குத் தெரியும் என்ற சிறுகதைத் தொகுப்பு தமிழ்நாடு, காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக நவம்பர் 2011இல் வெளிவந்துள்ளது. இதில் பால்யம், தரிசு நிலத்து அரும்பு, அவர்கள் இல்லாத தேசம், என் மண்ணும் என் வீடும் என் உறவும், முறியாத பனை, நெய்தல் நினைவுகள், வல்லை வெளி தாண்டி, யாசகம், காற்று, கண்ணில் தெரியும் ஓவியங்கள் ஆகிய பத்துக் கதைகள், உமா வரதராஜனின் துயரத்தின் நெடும்பயணம் என்ற விரிவான முன்னுரையுடன் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.
லண்டனில் நிலவுக்குத் தெரியும் நூல்வெளியீடு லண்டன் நூல்வெளியீட்டு நிகழ்வுகளின் தாமதப் பாரம்பரியத்தை மீறி-குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. மங்கள விளக்கேற்றலை அடுத்து, செல்வி தர்ஷியா இரவீந்திரகுமாரன் அவர்களின் வீணை இசை நிகழ்வுடன் நிகழ்ச்சி களைகட்டத் தொடங்கியது. அவருடன் இணைந்து குமரன் இரவீந்திரதாஸ் மிருதங்கம் வாசித்தார். இனிய இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஆசியுரையை என்பீல்ட் நாகபூஷணி அம்மன் ஆலய பிரதம குருவான சிவஸ்ரீ கமலநாதக் குருக்கள் வழங்கினார். ஆசியுரையைத் தொடர்ந்து வரவேற்புரையை செல்வி தர்ஷியா இரவீந்திரகுமாரன் நிகழ்த்தினார்.
நிகழ்வின் தலைமையை மாதவி சிவலீலன் ஏற்று மிக நேர்த்தியாகவும் கட்டுக்கோப்பாகவும் அதனைக் கொண்டுநடத்தினார். வரவேற்புரையையடுத்து, மாதவியின் தலைமையுரை இடம்பெற்றது. தனது உரையில் நிலவுக்குத் தெரியும் கதைத் தொகுதியில் சில கதைகளை மேலோட்டமாக அறிமுகம் செய்ததுடன் தனது மனதுக்குப் பிடித்த கதைகளாக முறியாத பனை, பால்யம் ஆகிய கதைகள் பற்றிய தன் இலக்கியப் பார்வையை தெளிவுபடுத்தினார். தொகுதியில் இடம்பெற்ற ஏழு கதைகள் போராட்டகால ஈழத்துத் தமிழரின் வாழ்நிலையைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்ட அவர், சந்திராவின் மிக நுணுக்கமானதும் கவித்துவமானதுமான வர்ணனைகளை விதந்து பாராட்டினார். போராட்ட காலத்தில் பெண்களினால் வெளிப்படுத்த முடியாத பல மெல்லுணர்வுகளையும், சமூகத்தில் அவர்கள் எதிர்நோக்கியிருந்த சவால்களையும் துல்லியமாக ஒரு உள்வீட்டுப் பார்வையுடன் தனது கதைகளில் வெளிக்காட்டியிருப்பதை அவர் குறிப்பிட்டார். மேலும் கண்ணில் தெரியும் ஓவியங்கள் என்ற கதையில் மற்றவர்கள் பெரிதும் தொடாத ஒரு கோணத்தில் சந்திரா தன் பார்வையை பதித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
அறிமுக உரையை இலக்கிய ஆர்வலர்.ச.ச.முத்து அவர்கள் வழங்கினார். ச.ச.முத்து ஈழமுரசு பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளை எழுதுபவர். குறிப்பாக ஈழவிடுதலைப் போராளிகளின் வாழ்க்கை வரலாறுகளை தொடர்ச்சியாக ஒரு வரலாற்றுப் பதிவாக பத்திரிகையில் எழுதி வருபவர். ச.ச.முத்து, விடுதலைப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் வடபுலத்துக் களத்தில் இயங்கியவர் என்ற வகையில், அவரது பார்வையில் சந்திராவின் சிறுகதைகளின் களப்பின்னணி பற்றியும், பாத்திரங்களின் பின்புலம் பற்றியும் சுவையானதொரு அறிமுகத்தை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டன. முதலாவது ஆய்வுரையை நளாயினி இந்திரன் வழங்கியிருந்தார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் செல்வி நளாயினி கணபதிப்பிள்ளையாக தமிழ்த்துறையில் பயின்றவர். கொழும்பு சுவடிகள் காப்பகத்தில் சிலகாலம் பணியாற்றித் தற்போது லண்டனில் பார்னட் பிரதேச நூலகமொன்றில் நூலகராகப் பணியாற்றுகின்றார். நளாயினி இந்திரன் தனது உரையில் சந்திராவின் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு, அதனதன் இயல்புகள் பற்றிய தனது கருத்தை அழகான விமர்சனமாக முன்வைத்தார். சந்திரா தன் கதாபாத்திரங்களினூடாக மானசீகமாக வாழ முற்பட்டிருப்பதாகத் தெரிவதை நளாயினி சுட்டிக்காட்டத் தவறவில்லை.
நளாயினியைத் தொடர்ந்து செல்வி துரைச்செல்வி பொன்னுத்துரை ஆய்வுரையை நிகழ்த்தினார். தமிழகத்தில் பட்டப்பின்கல்வியைப் பெற்ற துரைச்செல்வி, வேர்முகங்கள், ஏழாவது ஊழி ஆகிய நூல்களின் ஆசிரியரான பொ.ஐங்கரநேசனின் சகோதரியாவார். அவரது உரை பெரும்பாலும் சாதியக் கண்ணோட்டத்தில் நிலவுக்குத் தெரியும் கதைகளைப் பார்ப்பதாகவே அமைந்திருந்தது. அக்கதைகளின் அடிநாதமாக அமைந்திருந்த போர்க்கால வாழ்வியல்பற்றி அவர் குறிப்பிடுவதைத் தவிர்த்துக் கொண்டதாக உணர முடிந்தது. அவரது பார்வைக்கோணம் வறுமையே பெண்களின் பாலியல் துன்புறுத்தலுக்குக் காரணியாகின்றது என்ற போக்கில் அமைந்திருந்தது.
அவரைத் தொடர்ந்து ஒருபேப்பர் பத்திரிகையின் ஊடகவியலாளரும், இலக்கியப் படைப்பாளியுமான அருணாசலம் இரவி தனது கருத்துரையைவழங்கினார். ஈழத்தின் குறிப்பிடத்தக்கதொரு தரமான பெண் எழுத்தாளராக சந்திராவை இனம்கண்ட அவர், சக படைப்பாளியாக நின்று நூலிலுள்ள கதைகளுள் தனது மனதுக்கு நெருக்கமான சிலவற்றைப் பற்றிய சில கருத்துக்களைத் தெரிவித்தார். அ.இரவி, தமிழகப் படைப்பாளிகளின் கதைகளுடன் இவரது கதைகளை ஒப்பிட்டு, சிறுகதை இலக்கண வரம்பிற்குள் அமையாது சில கதைகள் வெறும் விவரணங்களாகச் செல்வதாகக் குறிப்பிட்டார். கதைகளின் தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என்ற அவர் சந்திராவின் முறியாத பனை என்ற கதையின் தலைப்பினை சிலாகித்துப் பேசியது முன்னுக்குப் பின் முரணாக அமைந்திருந்தது.
அ.இரவியின் உரையைத் தொடர்ந்து சம்பிரதாயமான நூல் வெளியீடு இடம்பெற்றது. திரு பத்மநாப ஐயர் வெளியீட்டுரை நிகழ்த்தினார். அவர் தனதுரையில் இந்நூலில் இடம்பெற்ற சில கதைகள் தனது யுகம்மாறும் தொகுப்பிலும் பிற TWAN வெளியீடுகளிலும் இடம்பெற்றதாகத் தெரிவித்தார். முதற்பிரதியை அவர் வோல்த்தம்ஸ்ரோ தமிழ்ப்பள்ளி அதிபர் குகச்சந்திரனுக்கு வழங்கியபின், சிறப்புப் பிரதிகளை வழங்கும் பணியை சந்திராவின் தாயார் சிவகாமசுந்தரி தியாகராஜா ஏற்றுக் கொண்டார். முக்கிய வர்த்தக, சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு சிறப்புப் பிரதிகள் திருமதி சிவா தியாகராஜாவால் வழங்கப்பட்டன.
நூல்வெளியீட்டைத் தொடர்ந்து திரைப்பட, கலைஇலக்கிய விமர்சகரும், Global Tamil News இணைய வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுள் ஒருவருமான ஊடகவியலாளர் ஜமுனா இராஜேந்திரன் விமர்சன உரை நிகழ்த்தினார். சந்திராவின் கதைகளில்- பால்யம் என்ற கதையைத் தேர்ந்து அதனை மிக அழகாக விமர்சனம் செய்தார். பால்யப் பருவத்தை எட்டும் இரு சிறுமிகளின் பேசா மொழியாக அமைந்த மன உணர்வுகளை மிக அழகாகக் கதையில் பெண்மையுணர்வுடன் வடித்திருப்பதாக அவர் கூறினார். திரு. ஜமுனா இராஜேந்திரன் பால்யம் என்ற அக்கதையின் காட்சிப்படிமங்களை ஒரு குறும் திரைப்பட வர்ணனைபோன்று கச்சிதமாக எடுத்துரைத்தார். ஜமுனா ராஜேந்திரனும் முன்னதாகப் பேசிய அ.இரவியின் பாதையிலேயே பயணித்து, புனைகதையின் வரைவிலக்கணம் பற்றிய தனது கருத்துக்களை முன்வைத்தார். அவரது பார்வையிலும் சந்திராவின் பெரும்பாலான கதைகள் விவரணங்களேயன்றி கதைகள் அல்ல. மண்ணையும், மக்களையும், மண்ணின் மணத்தையும் விபரிப்பது மட்டும் கதைகளாகிவிடா என்பதே ஜமுனாவின் வாதமாக இருந்தது. மேலும் கடந்தகால வரலாறுகளை விபரிப்பதைக் கதைகளில் தவிர்க்கவேண்டும் என்றார் அவர்.
ஈழத்துப் புனைகதை இலக்கியம் தனியானதொரு பரிணாம வளர்ச்சியைக் கண்டிருப்பதாகவும், தனித்துவமான அதன் போக்கு- தமிழகப் பாரம்பரியச் சிறுகதைகளின் இலக்கண வரம்புகளுக்கு அப்பாற்பட்டு தனித்துவம் மிக்கதாக, இரத்தமும் சதையுமான அனுபவவயப்பட்ட உணர்வு வெளிப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் நிலவும் கருத்து இன்று தமிழகத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகி விட்டது. இதை ஈழத்தின் முக்கிய படைப்பாளியான எஸ் பொ. தனது அண்மைக்கால நூல்களில் விபரமாகவே ஆராய்ந்துள்ளார். ஈழத்தமிழர்களின் புதியதான புலப்பெயர்வுகளின் விளைவாக முகிழ்த்துவரும் தமிழ் இலக்கிய வகையான புலம்பெயர்ந்தோர் இலக்கியம் தொடர்பாக எஸ்.பொ. தமிழ்நாட்டில் புதுவைப் பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற் புலத்திலே 22.3.2006 அன்று நிகழ்த்திய பேருரை, பின்னாளில் பனிக்குள் நெருப்பு என்ற நூலாகவும் வெளியிடப்பட்டது. (பார்க்க: பனிக்குள் நெருப்பு: புலம்பெயர்ந்தோர் இலக்கியம் ஒரு வரலாற்றுப் பார்வை. எஸ்.பொன்னுத்துரை. சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32ஃ9 ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, ஜுன் 2006. ISBN:: 81-89748-17-3.)
மலேசிய, தமிழகப் பல்கலைக்கழகங்களில் ஈழத்துத் தமிழ் இலக்கியம் தனியானதொரு பாடமாக (Module) ஆய்வுசெய்யப்படுகின்ற இன்றைய நிலையில், பாரம்பரிய புனைகதை இலக்கண வரம்புகளுக்குள் நவீன ஈழத்துத் தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் நீட்சியாகக் காணும் புலம்பெயர் படைப்பிலக்கியங்களை மீண்டும் இந்த புனைகதை இலக்கண வரம்புக்குள் வலிந்து இழுத்துச்சென்று சேர்க்கும் தமிழகக் கனவின் ஒரு முயற்சியாகவே இவ்விரு உரைகளையும் என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது.
ஜமுனா இராஜேந்திரனைத் தொடர்ந்து தனது விரிவான விமர்சனத்தை முன்வைத்தவர் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான சூ.யோ.பற்றிமாகரன் அவர்கள். அன்னையர் தினமான அன்று இரு மாவீரர்களின் அன்னையான திருமதி சிவா தியாகராஜாவை வாழ்த்தித் தன் உரையைத் தொடர்ந்த பற்றிமாகரன், சந்திரா இரவீந்திரனின் எழுத்துத்துறை வரலாற்றை அவரது ஆரம்பகாலப் படைப்புகளிலிருந்து அண்மைக்கால அறுவடைகள் வரை விபரமாக எடுத்துரைத்தார்.
கருத்துரை வழங்கியோரின் பதிலுரையை நிகழ்வின் நாயகியான சந்திரா இரவீந்திரன் வழங்கினார். மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்ட சந்திராவின் உதட்டிலிருந்து வார்த்தைகள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் வெளிவந்தன. அவரது சகோதரர்கள் இருவர் (மொறிஸ், மயூரன்) ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆகுதியானவர்கள். தமையன் பிறேமராஜன் வற்றாப்பளை மகா வித்தியாலயத்தின் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர். இராணுவ எறிகணைகளால் அவயவங்களை இழந்த ஒரு சாதாரண தமிழ்மகன். 1990இலிருந்து தீட்சண்யன் என்ற புனைபெயருடன் உலகெலாம் பரந்திருந்த விடுதலைப் போராட்டம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பங்களித்தவர். இயல்பாகவே கவிதையில் ஆற்றல் மிக்க இவர் புலிகளின் குரல் வானொலியில் 1990இலிருந்து கவிதைகளை அரங்கேற்றியிருந்தார். தீட்சண்யம் என்ற கவிதைத் தொகுப்பில் இவை பதிவுக்குள்ளாகியுள்ளன. (பார்க்க: தீட்சண்யம்: கவிதைகள். எஸ்.ரி.பிறேமராஜன் (மூலம்), சந்திரவதனா செல்வகுமாரன் (தொகுப்பாசிரியர்). ஜேர்மனி: மனஓசை, Manaosai verlag, 74523 Schwaebisch Hall, 1வது பதிப்பு, மே 2009).
இத்தகையதொரு ஈழ விடுதலைப் போராட்டத்தின் பின்புலத்தில் வளர்ந்த ஒருவராக, மாவீரர்களான தன் சகோதரர்களின் கண்களும், வாயுமாகச் செயற்படவிளையும் சந்திராவின் உணர்வுக் குவியல்களே நிலவுக்குத் தெரியும் நூலில் இடம்பெற்றுள்ள படைப்புகள் என்பது எனது கருத்தாகும். இவை சத்திய தரிசனமானவை. மேற்பூச்சற்றவை. யாவும் கற்பனை என்று முடித்து வைக்கும் நவரசக் கதைகள் அல்ல இவை. போராட்ட வாழ்வின் அனுபவங்களை, அழிவுகளை, ஏக்கங்களை மட்டுமே அவை மொழிகின்றன. இயல்பு வாழ்வோடு ஒட்டாத கற்பனையில் வார்க்கப்பட்ட பாத்திரங்கள் எதுவும் அவரது கதைகளில் இல்லை. ஈழத்துப் போர்க்கால இலக்கியங்களாகக் கச்சிதமாகப் பொருந்துபவை இவை. தனித்துவமான ஈழத்துப் படைப்பிலக்கியங்கள் இவை. இவற்றுக்கான வரைவிலக்கண வரம்புகளை எதிர்காலம் தீர்மானிக்கட்டும். பாரம்பரிய இலக்கணச் சட்டங்களுக்குள் இவர்களைச் சிறைப்படுத்துவது சரியல்ல.
நிகழ்வின் இறுதியாக செல்வன் ரிஷியன் இரவீந்திரகுமாரன் நன்றியுரையை வழங்கி நிகழ்வினை நிறைவுசெய்தார்.
மே 2009இன் மௌனத்தின் பின்னர் அதிர்ச்சியில் உறைந்திருந்த புலம்பெயர் தமிழ் இலக்கிய உலகம் சற்றே சுதாரித்துக்கொண்டுள்ள ஆண்டாக 2011இன் பின்னரைப்பகுதி விளங்கியது. ஆங்காங்கே இலக்கிய நிகழ்வுகள் மிக அமைதியான முறையில் ஏற்பாடுசெய்யப்பட்டு வந்தன. 2012இன் ஆரம்ப நிலைமை சற்று வழமைக்குத் திரும்புவதாக உணர முடிகின்றது. நீறுபூத்த நெருப்பாக நிகழ்ந்த இந்நிகழ்வும் இலக்கியச் சுவைஞர்களுக்கு ஒரு நல்ல சந்திப்பாக அமைந்திருந்தது. லண்டனில் திக்கெட்டும் சிதறிவாழும் இலக்கியவாதிகள் பரஸ்பரம் சந்தித்து மகிழும் ஒரு நிகழ்வாக அமைந்தமையும் மனதுக்கு இதமாக இருந்தது.
பதிலுரை: சந்திரா இரவீந்திரன்
1. எல்லோருக்கும் வணக்கம்
2. ஒரு பெரும் மழையின் பொழிவில் நனைந்து, தோய்ந்து ஒட்டிய உடைகளோடு வந்து நிற்கும் ஒரு சின்னப் பெண்ணின் மனநிலையோடு உங்கள் முன் இப்போ வந்து நிற்கிறேன். பேசுவதற்கான வார்த்தைகள் தொலைந்து போன ஒரு திகைப்பில் நிற்கிறேன். ஆயினும் சில வார்த்தைகளாவது பேசிவிட வேண்டிய நேரம் இது!
3. இந்த 'நிலவுக்குத் தெரியும் நூலிலே இடம்பெற்றுள்ள 10 கதைகளும் வெவ்வேறு காலப்பகுதிகளில் எழுதப்பட்ட.... வெவ்வேறு மனநிலைகளைப் பிரதிபலிக்கிற... அதே நேரம் ஒரு குறிப்பிட்ட முக்கிய காரணியால் உருவாகிய கதைகள் என்பது மிகவும் உண்மையாக இருக்கும்.
4.இவை பெரும் பாலும் இங்கு வந்திருக்கும் எமது ஆய்வாளர்களின் பார்வையில் நன்றாகப் பரிசீலிக்கப்பட்டு விட்டன. இதற்கப்பால் இவை பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டி எதுவுமில்லையென்றே நினைக்கிறேன்.
5. அதையும் மீறி....ஒரு வரியில் நான் சொல்வதென்றால், என்னுடைய இளமைக் காலத்திலிருந்து இப்போது வரையான காலப்பகுதியில் என்னை அதிகம் பாதித்த விடயங்கள் இங்கு படைப்புகளாக உருவாகியிருக்கின்றன என்று சொல்லலாம். ஆனால்... படைப்புகளாக உருவாகுவதற்கு ஏதுவான சூழ்நிலைகள் இல்லாமல், இன்னும் பல எழுதப்படாமல்.... எனக்குள் என்னை வதைத்துக் கொண்டு இன்னும் நிறையவே இருக்கின்றன. அந்தச் சுமை தாளாமல் நான் பல சமயங்களில் சோர்ந்து போய் என்னையே நொந்து கொண்டு இருக்கிறேன்.
6. ஆனால்.... இன்றைய காலகட்டம்...... எங்கள் படைப்பாளிகளிடமிருந்து எதிர்பார்க்கும் முக்கிய விடயங்கள் இன்னும் எழுத்துருவில் வரவில்லை என்று தான் நான் சொல்வேன். நான் அல்லது நாங்கள் படைப்புகளாக.... எழுத்துருவில் பதிய வைக்க வேண்டிய கட்டாயமான விடயங்களை சரித்திரம் எமைப் பார்த்தபடி எதிர் நோக்கிக் காத்திருக்கிறது. ஆனால் நாங்கள் இன்னமும் வாய்விட்டு அழவில்லை! அதற்குரிய நேரமோ காலமோ இடமோ எமக்கின்னும் கிடைக்கவில்லை! நெஞ்சு முட்டிக் கிடக்கிறது! அது உடைப்பெடுக்கத் தொடங்கினால் ஒரு பிரளயமும் புதிய வரலாறும் உருவாகும் நிலை இருக்கிறது!
என்னுடைய தம்பி – மயூரன், அண்ணருடன் வன்னியில் இருந்த காலத்தில் எனக்கு ஒரு மடல் வரைந்திருந்தான். அதில் அவன் நான்கு வரிகள் தான் எழுதியிருந்தான்.
ஓன்று – இளையக்கா, நலமாக இருக்கிறீர்களா?
இரண்டு – உங்களைப் போன்றவர்கள் எங்கள் மண்ணை விட்டுப் போவது பெருங்கவலையைத் தருகிறது என்று அண்ணர் என்னிடம் சொல்லிக் கவலைப்பட்டார்.
மூன்று – 'விழுதுகள்´ பகுதியில் எனது தோழர்களைப் பற்றி எழுத மறவாதீர்கள்.
நான்கு – முக்கியமான சில விடயங்களைப் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. முடிந்தால் ஒரு நல்ல கமரா வாங்கி அனுப்பி வையுங்கள்.
இரண்டு – உங்களைப் போன்றவர்கள் எங்கள் மண்ணை விட்டுப் போவது பெருங்கவலையைத் தருகிறது என்று அண்ணர் என்னிடம் சொல்லிக் கவலைப்பட்டார்.
மூன்று – 'விழுதுகள்´ பகுதியில் எனது தோழர்களைப் பற்றி எழுத மறவாதீர்கள்.
நான்கு – முக்கியமான சில விடயங்களைப் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. முடிந்தால் ஒரு நல்ல கமரா வாங்கி அனுப்பி வையுங்கள்.
இவ்வளவும் தான் எழுதியிருந்தான். எனக்கு இவை தேவாரம் மாதிரி இப்பவும் மனப்பாடமாக இருக்கின்றன. ஏனென்றால், இந்த நான்கு வரிகளையும் ஆழ்ந்து நோக்கினால், நாங்கள் எங்களது மண்ணிற்காகச் செய்ய வேண்டிய, செய்யத் தவறிய.... முழுவிடயங்களும் இதற்குள் அடங்குவது விளங்கும்!
அவர்கள் எங்களிடமிருந்து நிறைய எதிர்பார்த்தார்கள். எங்களில் பலர் நினைத்தோம். பணத்தை அனுப்பினால் போதும்....; நாம் இழந்தவற்றையெல்லாம் திரும்பப் பெற்று விடலாம் என்று! அதற்கும் அப்பால்.... நிறைய விடயங்களை நாங்கள் செய்யத் தவறி விட்டோம் என்பது தான் உண்மை! அது உண்மையிலும் உண்மை! அதை யாராலும் மறுக்க முடியாது!
7. இந்தத் தொகுப்பிலே வரும் ' அவர்கள் இல்லாத தேசம்' என்ற சிறுகதையை நான் உண்மையில் ஒரு நாவலாக எழுத உத்தேசித்துத் தான் தொடங்கியிருந்தேன். பின்னர் அதற்கான சூழலும் நேரமும் அதை சிறுகதையாக்கி விட்டிருக்கிறது! அது நாவலாகி வருமானால் நான் அழுதழுது தான் அந்த வரிகளைத் தொடர்ந்திருப்பேன். அவர்கள் யாருமில்லாத அந்த தேசத்தை பார்ப்பதற்கு நான் உண்மையில் அஞ்சுகிறேன்! அதனை வெறுக்கிறேன்! என்னிடமே ஆயிரம் கேள்விகளைக் கேட்டு உடைந்து போகிறேன்! மனதிற்குள் சிதைந்து கொண்டிருக்கிறேன்!
அண்ணரைச் சந்தித்த போது ஒரு வசனம் சொன்னார் - தன்னைத் தானே சுட்டிக்காட்டிச் சொன்னார்.
'நான் சொன்னபடி இன்னும் எதையும் செய்யேல்லை. ஆனால் மாவீரர்கள் சொன்னதைச் செய்திட்டினம்... அவர்களுக்கு கிட்ட நிற்கிற தகுதி எனக்கு இன்னும் இல்லை' என்று.
'நான் சொன்னபடி இன்னும் எதையும் செய்யேல்லை. ஆனால் மாவீரர்கள் சொன்னதைச் செய்திட்டினம்... அவர்களுக்கு கிட்ட நிற்கிற தகுதி எனக்கு இன்னும் இல்லை' என்று.
நான் ஊமையாகிப் போனேன். இந்த மனநிலை...... அல்லது இதனை வெளிப்படையாகச் சொல்கிற மனநிலை உள்ள ஒரு விடுதலைப் போராட்டத் தலைவன் எங்களிடமிருந்து எதனை எதிர்பார்த்திருப்பான்?!!
இது போதும், இவர்களையெல்லாம் இழந்த தேசத்தின் கதியை விளக்குவதற்கு இது ஒன்றே போதும் என்று நான் நினைக்கிறேன்.
படைப்பாளிகளான நாங்கள் இன்னும் சரியாக எங்களுடைய தேசத்தின், எங்களுடைய இனத்தின் வரலாற்றை மிகச்சரியாகப் படைப்புகளில் கொண்டு வரவில்லை.
அண்மையில் ஒரு ஆங்கிலத் திரைப்படம் பார்த்தேன். 'The Boy in The Striped Pyjama . Irish எழுத்தாளர் Johnboyne அவர்களால் எழுதப்பட்ட கதை. Mark Herman தயாரிப்பில் உருவான படம். ஒரே காலப்பகுதியில் 2008ல் லண்டனிலும் அமெரிக்காவிலும் வெளியாகியிருந்த படம். அண்மையில் அது பற்றி திரு.மு.புஷ்பராஜன் அவர்கள் எழுதியிருந்த ஒரு கட்டுரை கூட 'காலச்சுவடு' இதழில் பார்த்தேன். ஜேர்மனியிலிருந்த நாசி சித்திரவதை முகாமில் யூத மக்களுக்கு நடந்த கொடுமைகளை ஒரு வித்தியாசமான பார்வையில் எழுதியிருந்தார். ஒரு 12 வயதுப் பையனை வைத்து ஒரு இனத்திற்கு நிகழ்ந்த கொடுமைகளை வெகு அற்புதமாகப் படைத்திருந்தார். மனசை அதிர வைக்கிற படைப்பு! அது வெகு இயல்பாகப் படமாகியும் இருக்கிறது.
அவர்களின் பிரச்சனை வெளியில் வந்திருக்கிறது. இன்னமும் வந்து கொண்டிருக்கிறது! அதற்கு சாட்சிகள் அத்தாட்சிகள்...... டயறி வடிவிலும்..... தப்பி வந்தவர்கள் ஊடாகவும் உலகறியும் வாய்ப்பு அவர்களுக்கு நிறைய இருந்திருக்கிறது. ஆனால் எங்களுக்கு அது வெகு சொற்பமே! அந்த சொற்பத்தை நாங்கள் தேடிப் பயணிக்க வேண்டும் என்பதே என் அவா. எங்களுடைய மனித சாட்சிகள் தான் எங்களுடைய வரலாற்றை ஒரு நேர்மையான படைப்பாக உருவாக்குவதற்கு உதவ வேண்டியவர்கள். அவர்கள் எங்களுக்கு நேர்மையோடு உதவ வேண்டும். அந்த வகையில் தான் ஒரு காலத்தின்..... ஒரு இனத்தின்...... ஒரு மண்ணின் பதிவு உண்மையான வரலாற்றுப் பதிவாக உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. யாரும் கற்பனையில் புனைந்து விட்டுப் போகலாம். ஆனால் அது இப்போ எமக்குத் தேவையில்லை.... எமது அடுத்த தலைமுறைக்கும் அது தேவையில்லை. உண்மையான நேர்மையான..... ஒரு வரலாற்றுப் பதிவு தான் நாங்கள்...... படைப்பாளிகள் இப்போ அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க வேண்டிய விலைமதிப்பற்ற படைப்பு என்று நான் கருதுகிறேன்.
8. இங்கே...இந்த 'நிலவுக்குத் தெரியும்' நூல் இன்றைய சூழலுக்கு முன்னரே வந்திருக்க வேண்டிய ஒரு நூல் என்று தான் நான் கருதினேன். ஏனென்றால், அதற்கப்பாலான விடயங்களை இப்போ எம்மிடமிருந்து உலகம் ஆவலோடு காத்திருக்கிறது! ஆனால் எனது இந்த நூல் வரவேண்டிய காலம் இதுவாக அமைந்தமை தவிர்க்க முடியாமலும் இருந்தது!
இங்கே இந்த நூல் பற்றி ஆய்வுரை செய்த இந்த இலக்கிய கர்த்தாக்கள், உண்மையில் போற்றப்பட வேண்டியவர்கள். ஒவ்வொருவரது பார்வையினதும் மிக நுணுக்கமான வெளிப்பாடுகளைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். இந்த நூலை அவர்கள் வாசிக்கும் போது இதிலுள்ள படைப்புகளோடு மட்டுமல்ல.... என்னோடும் சேர்ந்து பயணித்திருக்கிறார்கள். என் கைகளைப் பற்றிக் கொண்டு நடந்திருக்கிறார்கள். அல்லது என்னைத் திட்டிக்கொண்டும் பேசிக்கொண்டும் கூட நடந்திருக்கலாம். ஆனால் என்னோடு சேர்ந்து பயணித்திருக்கிறார்கள் என்பது நிச்சயம். அந்த வகையிலே வெகு அற்புதமான ஆய்வுகளையும் விமர்சனங்களையும் தந்த ஆய்வாளர்கள் திரு.பற்றிமாகரன், திரு.ஜமுனா ராஜேந்திரன், திருமதி.நளாயினி இந்திரன், திரு.அ.இரவி, செல்வி.துரைச்செல்வி பொன்னுத்துரை மற்றும் ஒரு அழகான அறிமுக உரையைத் தந்த திரு.ச.ச.முத்து அவர்களுக்கும் எனது நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், முக்கியமாக இந்த நிகழ்வை மிக அருமையாகத் தொகுத்துத் தலைமை தாங்கி நடாத்திய திருமதி.மாதவி சிவலீலன் அவர்களை நான் பெருமையுடன் பார்க்கிறேன். அவர் தமிழில் சிறப்புக்கலை கற்றவர். பேச்சாளர், ஆசிரியர். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பது போல... காரை சுந்தரம்பிள்ளை அவர்களின் மகள்.... என்றால் தமிழில் சளைத்தவர் ஆகிவிடுவரா என்ன என்று எண்ணத் தோன்றும் அளவிற்கு வெகு சிறப்பாக இந்த நிகழ்வை நடாத்தியிருந்தார். அவருக்கு எனது சிறப்பான நன்றிகள் பல.
மேலும் நான் நன்றி சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான நபர் இந்த விழாவிற்கு வருகை தரமுடியாத ஒரு துயர் மிகுந்த தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். என் அன்பிற்கும் நட்பிற்குமுரிய எழுத்தாளர் உமா வரதராஜன் அவர்கள். என்னுடைய நூலிற்கு முன்னுரை எழுதியவர். அவரை நான் நேரில் இன்னும் சந்திக்கவில்லை. ஆனால் அவரது படைப்புகளினூடாக அவரை ஏற்கனவே சந்தித்திருக்கிறேன். என்னுடைய 'காற்று' என்ற சிறுகதையை எங்கோ வாசித்து விட்டு, மிகுந்த புல்லரிப்போடு அது பற்றிய ஒரு விமர்சனத்தை எனக்கு எழுதி அனுப்பியிருந்தார். அதனை தன்னுடைய 'வியூகம்' இணையத்தளத்திலும் என்னுடைய அனுமதி கேட்டு மகிழ்வோடு பிரசுரித்தார். அதனைத் தொடர்ந்து மிகுந்த ஆர்வத்துடன் என்னுடைய ஏனைய கதைகளையும் வாசிக்கப் பிரியப்பட்டு தேடிப்பெற்று வாசித்தார். அதன் விளைவே இந்த நூலின் உருவாக்கத்திற்கான அடிப்படைக் காரணம் என்றும் கூறலாம். என்னுடைய கதைகளைப் பற்றிய ஒரு கருத்துப் பரிமாற்றம் அங்கு நடைபெற்ற ஒரு சந்திப்பின் போது, காலச்சுவடு இதழ் ஆசிரியருடன் இடம்பெற்றமைக்கு என்னுடைய 'காற்று' என்கிற கதை ஒரு முக்கிய காரணமாய் இருந்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.
காலச்சுவடு பதிப்பகம், இவற்றை நூலாக்கப் போவதாக எனக்கு அறிவித்த போது நான் எதிர்பாராத மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் இவற்றிற்கு முன்னரே திரு.பத்மநாப ஐயர் அவர்கள் என்னுடைய கதைகளை நூலாக்குவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். அவர் என்னுடையது மட்டுமென்றில்லை ஈழத்தின் நல்ல படைப்புகளை நூல் வடிவம் ஆக்குவதில் அவருக்கு எப்பவுமே பேரின்பம் தான்! ஆனால் ஐயர் அவர்களின் முயற்சி ஆரம்பமாவதற்கு முன்னரே காலச்சுவடு அதனை தாமாக முன்வந்து நூலாக்கி விட்டிருக்கிறது! எப்படியும் இது நூலாகுவதற்கான காலம் கைகூடி வரும் வேளை இதுவாக இருந்திருக்கிறது என்றே நினைக்கிறேன்! காலச்சுவடு பதிப்பகத்தினருக்கும் திரு.கண்ணன் அவர்களுக்கும் என் நன்றிகள். மேலும் இந்த நூலிற்கு அழகுற அட்டைப்படம் வடிவமைத்துத் தந்திருக்கும் கவிஞர் றஷ்மி அவர்களிற்கும் நான் இச்சமயம் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மேலும் இந்த விழாவை ஒழுங்கமைப்பதில் பெரிதும் உதவிகள் செய்து உற்சாகப்படுத்திய திரு.பத்மநாப ஐயர் அவர்களுக்கும், இந்த நூல்களை இந்தியாவிலிருந்து வருவிப்பதற்கு உதவிய 'தமிழர் தகவல்' ஆசிரியர்- திரு.சிவானந்தஜோதி அவர்களுக்கும், 'நாழிகை' ஆசிரியர் - திரு.மாலி அவர்களுக்கும் என் நன்றிகளை இவ்வேளை கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மற்றும், இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு என்னோடு ஒத்துழைத்து உதவிகள் புரிந்த எனது கணவருக்கும் எனது குழந்தைகள் தரணியன், ரிஷியன், தர்ஷியா ஆகியோருக்கும் இத் தருணம் நான் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பலருக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் அந்த நன்றியுரையை வழங்க என் சின்னமகன் ரிஷியன் ஆயத்தமாக நிற்கிறான். அதற்கான நேரத்தை நான் இப்போ அவருக்கு விட்டுக் கொடுத்து இத்துடன் எனது சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன்.
நன்றி
வணக்கம்.
வணக்கம்.