கொக்கான் வெட்டுதல்

பாடசாலையில் படிக்கும் காலங்களில் எமக்குப் பிடித்தமான விளையாட்டுக்களில் கொக்கான் வெட்டுதல் முக்கிய விளையாட்டாக இருந்தது. இதைக் கூடுதலாகப் பெண்கள்தான் விளையாடுவார்கள். மாங்கொட்டை போடுதல், சிப்பி, ஏரோப்பிளேன், இது தவிர கிளித்தட்டு, கெந்திப் பிடித்தல், றவுண்டெஸ்(Rounders) இவைகளும் எமது பாடசாலைகளில் முக்கிய இடத்தை வகித்திருந்தன. இவையெல்லாமே உடலை அசைத்து விளையாடும் விளையாட்டுக்கள். ஆனால் கொக்கான் வெட்டுதல் அப்படியல்ல. அது இருந்து விளையாடும் விளையாட்டு. ஏதாவதொரு விறாந்தை நுனியில் இருந்துதான் இதை விளையாடுவோம். சீமெந்து விறாந்தை இவ்விளையாட்டுக்கு உகந்தது. விறாந்தை இல்லாவிட்டால் டோங்கு(மார்பிள்) மேலெழும்பாது. (bump பண்ணாது).

கொக்கான் வெட்டுவதற்கு ஒரு டோங்கும்(மார்பிள்), இரு சிறிய கற்களும் அல்லது ஒரு டோங்கும், நான்கு சிறிய கற்களும் வேண்டும். அனேகமாக எங்கள் எல்லோரதும் பாடசாலை சூட்கேசில் ஒரு டோங்கு, ஒரு சிற்பி, ஒரு நன்கு சப்பையான காய்ந்த மாங்கொட்டை என்பன இருக்கும். சூட்கேஸ் இல்லாதவர்கள் கொம்பாஸ் பெட்டிக்குள் வைத்திருப்பார்கள்.

வீட்டிலும் எப்போதாவது நண்பிகள் ஒன்று கூடும் போது கொக்கான் வெட்டி விளையாடுவோம். ஆனால் இவ்விளையாட்டை வீடுகளுக்குள் யாரும் வரவேற்பதில்லை. கொக்கான் வெட்டினால் வீட்டுக்குத் தரித்திரம் பிடிக்கும் எனப் பெரியவர்கள் சொல்வார்கள். "ஏன் தரித்திரம் பிடிக்கும்?" என்ற எனது கேள்விக்கு யாருமே இதுவரை பதில் சொல்லவில்லை.

ஆனால் இவ்வளவு தூரம் எமக்குப் பிடித்தமான விளையாட்டு உலகளவில் பலருக்கும் தெரியாமல் இருப்பதுதான் ஏனென்று தெரியவில்லை. அமெரிக்காவைப் பார்த்தால் கண்ட கண்ட விளையாட்டுக்களை எல்லாம் உலக வெற்றிக் கிண்ண விளையாட்டு என்று அறிவித்துப் போட்டியாக வைத்து விடுவார்கள். எங்கள் விளையாட்டுக்களில் இந்த கொக்கான் போல் உலகளாவாத எத்தனையோ விளையாட்டுக்கள் இருக்கின்றன.

இந்தக் கொக்கானை மட்டும் உலக வெற்றிக் கிண்ணப் போட்டியாக்கி இருந்தால் எங்கள் பெண்களில் எத்தனை பேர் சம்பியன் ஆகியிருப்பார்கள்.

சந்திரவதனா
26.4.2005

Post a Comment

Comments


பழய நினைவுகள் வந்தது. அதென்ன பொம்பிளயள் சம்பியன் எடுக்கிறது? எங்கட சொந்தத்துக்க நான் தான் சம்பியன் தெரியுமோ. பெண்டுகள் கூட என்னோட கொக்கான் வெட்ட மாட்டினம். நீங்கள் சொல்லிற மாதிரி பொம்பிளயள்தான் பெரும்பாலும் விளையாடுறவை. ஆனா எங்கட ஊரில ஒரு அற்புதம் நடந்துது. வழமையா மதவடிப் பூவரசுக்குக் கீழ கடுதாசி விளையாடிக்கொண்டிருக்கிற கிழட்டுக்கூட்டமொண்டு திடீரெண்டு கொக்கான் வெட்ட ஆரம்பிச்சுது. முதல் ரெண்டு மூண்டாத் தொடங்கி பிறகு கடுதாசியையே விட்டுட்டு முழுக்க கொக்கான் வெட்டினவை. ஆனா ஒரு மாதத்தில பிறகும் கடுதாசிக்கே போயிட்டினம். அதில கோழிப்பீ வழிக்கிறதெண்டு ஒண்டு வரும் தெரியுமோ. posted by வசந்தன்(Vasanthan) : Tuesday, April 26, 2005 2:55:37 PM


பழைய நினைவுகளை எல்லாம் மீளக்கொண்டுவரச்செய்துவிட்டீர்கள், சந்திரவதனா.

அதென்ன பொம்பிளயள் சம்பியன் எடுக்கிறது? எங்கட சொந்தத்துக்க நான் தான் சம்பியன் தெரியுமோ. பெண்டுகள் கூட என்னோட கொக்கான் வெட்ட மாட்டினம்.

அப்படிக் கேளும் வசந்தன். நான் கொக்கன் வெட்டில் அவ்வளவு 'பாண்டித்தியம்' பெறாவிட்டாலும், அந்த மாதிரி கெந்திப்பிடிப்பேன். சென்ற வருடம் வன்னியில் நின்றசமயத்திலும் வந்திருந்த மற்றதோழிகளுடன் கெந்திப்பிடித்து, நல்ல ஃபோர்மில் இன்னும் இருப்பதை நிரூபித்து, 'ஆண்குலத்தின் மானத்தைக்' காப்பாற்றியிருக்கின்றேன் :-).

கொக்கான் வெட்டுவதை உலக விளையாட்டு ஆக்குவதுபோன்று கெந்திப் பிடிப்பதையும், ஆக்கவேண்டும் என்பதை எனது சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.posted by டிசே தமிழன் : Tuesday, April 26, 2005 3:54:36 PM


"ஆனால் இவ்விளையாட்டை வீடுகளுக்குள் யாரும் வரவேற்பதில்லை. கொக்கான் வெட்டினால் வீட்டுக்குத் தரித்திரம் பிடிக்கும் எனப் பெரியவர்கள் சொல்வார்கள்."

நானும் கேள்விப்பட்டிருக்கின்றேன். உண்மையில் அப்படி ஏதும் இருக்காது. வீட்டில் விளையாடுவதை தவிர்ப்பதற்காக அப்படி சொல்வார்கள் என்று நினைக்கின்றேன். posted by Mathan : Tuesday, April 26, 2005 4:47:27 PM


றவுண்டெஸ் இது என்ன விளையாட்டு சந்திரவதனா? நான் கேள்விப்பட்டதில்லை. நாங்கள் கொக்கான் வெட்டும் போது மாபிள் பாவிப்பதில்லை. எல்லாம் கற்கள்தான் நிலத்தில் bump பண்ணவும் விடுவதில்லை. மேலே எறிந்து விட்டு கற்களைக் கூட்டி அள்ள வேண்டும். அதிகம் விளையாடினது இல்லை.

"அதில கோழிப்பீ வழிக்கிறதெண்டு ஒண்டு வரும் தெரியுமோ." வசந்தன் இது என்ன? தெரியாது விளக்கம் தரவும். posted by கறுப்பி : Tuesday, April 26, 2005 5:05:30 PM


நன்றிகள் சந்திரவதனா அக்கா பழைய நினைவு மீட்டலுக்கு. என்ன இப்ப எங்கட வலைப்பதிவெல்லாத்திலயும் ஈழத்தின் பழைய நினைவுகள கொஞ்சம் அதிகமாக மீட்கிறீர்கள். நல்ல விடயம்.

//அந்த மாதிரி கெந்திப்பிடிப்பேன். சென்ற வருடம் வன்னியில் நின்றசமயத்திலும் வந்திருந்த மற்றதோழிகளுடன் கெந்திப்பிடித்து//

டிசே தமிழன் நீர் தனியவா அத்தனை பெட்டையளோடுயும் கெந்திப்பிடிச்சனீர்? அடுத்த முறை போகேக்க சொல்லும், நானும் உதவிக்கு வாறன்.. :) posted by இளைஞன் : Tuesday, April 26, 2005 6:26:40 PM


நாங்கள் கொக்கான் வெட்டும் போது மாபிள் பாவிப்பதில்லை. எல்லாம் கற்கள்தான் நிலத்தில் பம்ப் பண்ணவும் விடுவதில்லை. மேலே எறிந்து விட்டு கற்களைக் கூட்டி அள்ள வேண்டும்.

கறுப்பி சொன்னதுபோலத்தான் நாங்களும் விளையாடிருக்கின்றோம்.

டிசே தமிழன் நீர் தனியவா அத்தனை பெட்டையளோடயும் கெந்திப்பிடிச்சனீர்? அடுத்த முறை போகேக்க சொல்லும், நானும் உதவிக்கு வாறன்.. :)

கட்டாயம். அடுத்தமுறை ஈழத்திற்குப் போகும் போது சேர்ந்தே போவோம் :-).

இப்படி அவ்வவ்போது 'உண்மைகளைச்' சொல்லும்போது அதைப் பொறுக்க முடியாத, என் பிரிய 'எதிரிகள்' கார்த்திக்கும், வசந்தனும் தொந்தரவு செய்தபடியிருந்தனர். இப்போது நீங்கள், கரிகாலன் போன்றவர்கள் எனக்கு ஆதரவாக இருப்பதைப் பார்க்கையில், இனி 'உண்மைகளைப்' பயப்பிடாமல் பேசலாம் போலக் கிடக்கிறது. posted by டிசே தமிழன் : Tuesday, April 26, 2005 8:01:42 PM


என்ன கெந்தியடித்தல் கொக்கான் வெட்டுவது என எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறீர்கள். அவை இதம் தரும் நினைவுகள் posted by ஜெயச்சந்திரன் :Tuesday, April 26, 2005 9:07:20 PM


உங்கள் ஊரில் ஆண்களும் கொக்கான் வெட்டினார்களா? எங்கள் ஊரில் நானிருந்தவரை ஆண்கள் கொக்கான் விளையாடியதாய் எனக்குத் தெரியவில்லை. எங்கள் வீட்டில் கூட சம்பா, சோகி என்று விளையாடுவார்கள். குண்டடிப்பார்கள். (மார்பிள்) ஆனால் கொக்கான் பக்கம் எந்த ஆண்களும் வருவதில்லை.

வசந்தன்
அதென்ன கோழிப்பீ வழிக்கிறது? அப்படி ஒரு விளையாட்டு எங்கள் ஊரில் இருக்கவில்லை. அது பற்றி கொஞ்சம் விபரமாகச் சொல்லுங்கள்.

கறுப்பி, டி.சே.தமிழன்
நாங்கள் கண்டிப்பாக மார்பிள் பாவிப்போம். ஆனால் bump பண்ணாமலும் விளையாடுவேம். அது விளையாட்டுத் தொடங்க முதலே தீர்மானிக்கப் படும். ஆனாலும் கூடுதாலாக bump பண்ண விட்டுத்தான் விளையாடுவோம்.

மதன் சொல்வது சரியாக இருக்கலாம். விளையாட்டோடையே இருந்து, வீட்டு வேலைகளைக் கவனிக்காமல் பெண்கள் இருந்து விடுவார்கள் என்ற ஏதாவது ஒரு காரணத்தை வைத்துத் தரித்திரம் பிடிக்கும் என்று சொல்லி வைத்திருப்பார்கள்.

குமிழி, இளைஞன்
இதம் தரும் நினைவுகளை உங்களிடமும் மீட்டியதில் சந்தோசம்.

சுமதி
றவுண்டெஸ்(Rounders) என்பது Baseball போன்றதொரு விளையாட்டு. குறூப்பாகவும் விளையாடலாம். தனித்தனியாகவும் விளையாடலாம். பேஸ்போலுக்கு Baseball மட்டையால் பந்தை அடிப்பார்கள். நாங்கள் விளையாடும் றவுண்டெஸ்ஸில் பந்தை மேலெறிந்து விட்டு அது கீழே வரும் போது கையாலேயே பந்தை அடிப்போம். கிறிக்கெற்றுக்குப் போல பந்தை எறிந்து விட்டு ஓடி ஓடிப் புள்ளிகளைச் சேர்க்க வேண்டும். றவுண்டெஸ்சில் ஐந்தாறு கற்கள் முழு வட்ட ஆரையில் இடைவெளி விட்டு வைக்கப் பட்டிருக்கும். பந்தை அடித்து விட்டு ஓடி ஒவ்வொரு கல்லாகத் தாண்ட வேண்டும். மீண்டும் அடித்த இடத்துக்கே வந்தால் ஒரு புள்ளி. கிறிக்கெற் போல catch பிடித்தால் அவுட். இது எங்கள் பாடசாலையில் மிகவும் உற்சாகமாக விளையாடப் படும் விளையாட்டு. போட்டிகளில் சேர்க்கப் படுவதில்லை என்றாலும் மாணவிகளின் பிரதான விளையாட்டு. posted by Chandravathanaa :Wednesday, April 27, 2005 11:06:01 AM


றவுண்டஸ் கிட்டத்தட்ட எல்லே விளையாட்டு மாதிரியெண்டு நினைக்கிறன்.

posted by வசந்தன்(Vasanthan) : Wednesday, April 27, 2005 12:12:14 PM

கொக்கான் வெட்டேக்க மேல எறிஞ்சு கீழ கிடக்கிறதுகள ஒண்டு ரெண்டு எண்டு வழிச்செடுத்து எறிஞ்சதப் பிடிக்க வேணும். பிறகு நிலத்தில ஒண்டுமில்லாத நேரத்தில சுட்டி விரல வளைச்சு நிலத்தில வழிச்சு எறிஞ்சத ஏந்த வேணும். அப்பிடி வெறுமையா சுட்டிவிரலால வழிக்கிறதத்தான் அப்பிடிச்சொல்லிறது. posted by வசந்தன்(Vasanthan) : Wednesday, April 27, 2005 12:14:23 PM


அட சரியா பேஸ்போல் விளையாட்டு மாதிரித்தான் இருக்கு இந்த ரவுண்டெஸ். எங்கட ஊரில இது இல்லை. நாங்கள் ஐஸ் போல் எண்டு ஒண்டு விளையாடுவம். இது ரெண்டு குறூப்பா புறிஞ்சு பேணிகளை அடுக்கி வைச்சிட்டு பந்தால் அடித்து விழுத்த வேணும் விழுந்த பேணிகளை மற்ற அணி அடுக்கி வைக்க முதல் பந்தை எடுத்துக்கொண்டு வந்து அவர்களின் கால்களில் அடித்து அவுட் ஆக்க வேணும். இது எனக்குப் பிடிச்ச விளையாட்டு.

எனக்கொரு ஆசை புளொக் நண்பர்கள் எல்லாரும் இந்தக் கோடை விடுமுறைக்கு கனடா வந்தால் இரண்டு பிரிவாகப் பிரிச்சு பல விளையாட்டுப் போட்டி வைச்சுப் பாக்கலாம். எப்பிடி என்ர யோசினை? நல்லா இல்ல? posted by கறுப்பி : Wednesday, April 27, 2005 3:51:10 PM


கருத்துக்களை வாசித்துக் கொண்டு வரும்போது பேணிப்பந்து பற்றி ஒருதரும் சொல்லேலயே, நானாவது சொல்லுவம் எண்ட வர கீழ கறுப்பி அதப்பற்றி எழுதியிருக்கிறா.

நாங்கள் அதை "பேணிப்பந்து" எண்டுதான் சொல்லுறனாங்கள். பேணிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து பந்தால் அடித்து விழுத்துவது - பின்னர் அதை எடுத்து அடுக்குவது - அடுக்குவதற்கிடையில் எதிரணி எம்மை அவுட்டாக்குவது.

இதே விளையாட்டை "பிள்ளையார் பேணி அல்லது பிள்ளையார் பந்து" என்று சொல்லி அழைத்ததாகவும் ஞாபகம். அதன் காரணம் பேணிகளை பிள்ளையார் போன்று அடுக்குவதாகவிருக்கலாம். உதாரணம்: முதலில் நான்கு - அதன்மேல் மூன்று -அதன்மேல் இரண்டு - கடைசியில் ஒன்று என்று அடுக்கப்பட்டு விளையாடப்படுவது.

கறுப்பி ஐரோப்பா வாழ் தமிழர்கள் இப்படியான விளையாட்டுக்களை வருடத்தில் ஒருதடவை அந்தந்த நாடுகளில் உள்ள தமிழ்ப்பாடசாலைகள் 5லம் நடத்துகிறார்கள் என நினைக்கிறேன்.

ஆனால் எனக்கொரு யோசனை இந்த விளையாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு கணினி விளையாட்டாக அவற்றை வடிவமைப்பது நன்றாக இருக்கும். உதாரணமாக Flash போன்ற மென்பொருட்களைக் கொண்டு அவற்றை வடிவமைக்கலாம். இன்னும் ஒருவருடம் போனால் அதனை நான் செய்வேன். அதற்கு முன்னர் யாராவது செய்தால் எனக்கு அனுப்பி வையுங்கள். posted by இளைஞன் : Wednesday, April 27, 2005 4:45:25 PM


இளைஞன் ஏனையா எல்லவற்றையும் கணனியோடு தொடுக்கின்றீர்கள். மனுசர் உடம்பு பெருத்து அசைய முடியாமல் இருக்கிறம். கொஞ்சம் ஓடியாடி விளையாடினால் உடம்பு குறையும் எண்டு பாத்தால் எல்லாத்தையும் கணனிக்கை கொண்டு வந்து புகுத்தி வெறும் "பொட்டேட்டோவா" மாறுற எண்ணமா? கனடாவில வெக்கை கொஞ்சம் வந்தால்தான் யாராவது நடப்பது. மற்றும் படி பக்கத்தில பால் வாங்கப் போறதெண்டாலும் கார்தான். நான் இப்ப வேலைக்கு நடந்து போய் நடந்து வாறன். அரை மணித்தியால நடை நல்லா இருக்கு. என்ர நண்பர் ஒருநாள் நான் நடந்து வாறதைப் பாத்திட்டுக் காறைக் கொண்டு வந்து பக்கத்தில நிப்பாட்டி ஏறுங்கோ கொண்டு போய் வீட்டில விடுறன் எண்டார். நான் சொன்னன் காரை விட்டிட்டு இறங்கி வாரும் இப்பிடியே கதைச்சுக் கொண்டு நடப்பம் எண்டு. என்னை ஒரு மாதிரிப் பாத்திட்டு ஆள் போயிட்டுது. உடம்பு பெருத்தாலும் சொகுசு மனுசரை விடுதில்லை. posted by கறுப்பி : Wednesday, April 27, 2005 5:34:28 PM


இவவுக்கு திமிரெண்டு அவர் நினைச்சிருப்பரோ?

கணினியிலே விளையாட்டைக் கொண்டு வருவதென்பது,மூளைக்கு பயிற்சி! உடற் பயிற்சிக்கு முற்றத்தில் கெந்திப்பிடிச்சு விளையாடுங்கோவன். அல்லாட்டி "பேணிப் பந்து" விளையாடுங்கோ வேணுமெண்டால் முதுகு வீங்கிற அளவு பந்தெறிய நானன் வாறன்.

posted by இளைஞன் : Wednesday, April 27, 2005 7:36:42 PM

கனடாவில எங்கை முத்தம் இருக்கு? (*_*) எல்லாம் புல்லுத்தான். எங்கட செம்மண் புழுதி முத்தம் மாதிரி வருமே. நான் நினைச்சன் கெந்திப் பிடிச்சு பேணி எறிஞ்சு எல்லாத்தையும் கொம்பியூட்டரில கொண்டு வந்து விளையாடப் போறீங்கள் எண்டு. என்ர பிள்ளைகள் தமக்கு விருப்பமான உருவத்தை கேம்மில செய்து தமக்கு விருப்பமான பெயரை வைச்சு கொம்பியூட்டரில விளையாடீனம். அதுமாதிரி நாங்களும் இளைஞன், பெயரிலி, வசந்தன், வன்னியன், சயந்தன், டீசே எண்டு உருவாக்கிப் போட்டு மோதவிடலாம் எண்டு நினைச்சன்.

"இவவுக்கு திமிரெண்டு அவர் நினைச்சிருப்பரோ?"
ஹ ஹ அது தெரிஞ்ச விசயம் தானேposted by கறுப்பி : Wednesday, April 27, 2005 5:34:28 PM


அவ பேணிப்பந்தத்தான் சொல்லிறா.

நாங்கள் ஐஸ்போல் எண்டு சொல்லி விளையாடுற விளையாட்டு என்ன தெரியுமே?
ஒழிச்சுப் பிடிச்சு விளையாடுறதத்தான் அப்பிடிச்சொல்லுறது. தேடுற அணி ஒழிச்சிருக்கிற ஆளக் கண்டா அந்த ஆளிண்ட பேரச்சொல்லி ஐஸ்போல் எண்டு கத்திக்கொண்டு அவையின்ர வட்டத்துக்கு ஓட வேணும். அதுக்குள்ள ஒழிச்சிருக்கிறவர் துரத்தி ஆருக்காவரு அடிச்சா வெற்றி.

கறுப்பி! ஐஸ்போல்.

இளைஞன்!
நல்ல பேர வச்சுக்கொண்டு ஏனிப்பிடிச் செய்யிறீர்? மவனே! பேணிப்பந்து, கிளித்தட்டு எண்டு எந்த விளையாட்டாவது கணிணியில வந்துதோ...தேடிவந்து அடிப்பன். கிட்டிப்புள்ளு பற்றியும் ஆராவது எழுதுங்கோவன். 2 மாதத்துக்க ஒருத்தரும் எழுதாட்டி நானே தனிப்பதிவில எழுதிப்போடுவன். posted by வசந்தன் : Thursday, April 28, 2005 1:49:49 AM


பிள்ளையார் பேணி தெரியும். யாருக்கும் கிளிப்பொந்து என்று விளையாடுகின்ற விளையாட்டுத் தெரியுமா?

2 மாதத்துக்க ஒருத்தரும் எழுதாட்டி நானே தனிப்பதிவில எழுதிப்போடுவன்.

என்ன வசந்தன் பரீட்சைகாக இரண்டு மாதமாய் படிக்கப் போகின்றீர்களா? வெளிநாட்டுக்கு வந்தும் நீர் திருந்தவில்லைப்போல. எக்ஸாமிற்கு முதல்தான் புத்தகத்தைத் தூக்கினால் கிக் (not 'kick' out from your uni). இதைப்புரிந்துகொண்டு சும்மா படிக்கிறன் என்று நடிக்காமல், ஊர் விளையாட்டுக்கள்/விசயங்களை உங்கட பதிவில் எழுதுங்கள் பார்ப்பம். posted by டிசே தமிழன் : Thursday, April 28, 2005 6:27:12 AM


வசந்தன்
விளக்கத்துக்கு நன்றி. அப்படி நாங்களும் விளையாடுவோம். ஆனால் அப்படிச் சொல்வதில்லை. "எல்லே" என்ற பெயர் புதிதாய் இருக்கிறது. றவுண்டெஸ்சைத்தான் அப்படிச் சொல்வார்களோ?

சுமதி
நீங்கள் சொல்லும் ஐஸ்போல்(பேணிப்பந்து) விளையாட்டு, அதாவது பேணியை அடுக்கி எறிந்து வீழ்த்துவதை நாங்களும் விளையாடுவோம். பெடியன்கள்தான் இதை ஆர்வமாக விளையாடுவார்கள். இதே நேரம் காலில் அடித்து அவுட்டாக்கும் இன்னொரு விளையாட்டும் உண்டு.

இளைஞன்
கணினியிலும் செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
என்னத்தைக் கணினியில் செய்தாலும் முற்றத்தில் விளையாடும் விளையாட்டுக்களுக்கு அவை ஈடாகமாட்டா.

வசந்தன்
கிட்டியும் புள்ளும்(புள்ளா? புல்லா? அல்லது இன்னும் வேறேதுமா?) விளையாட்டை மறந்தே போனன். என்ரை அண்ணன் ஒரே விளையாடிக் கொண்டிருப்பார். அண்ணன், தம்பி, சித்தப்பாமார் என்று எல்லாரும் விளையாடுவினம். நானும் இடைக்கிடை விளையாடியிருக்கிறன். இருந்திருந்திட்டு ஆரின்ரையாவது நெற்றியை அண்ணன் அடிக்கிற கிட்டிக்கோல் பதம் பார்த்து அம்மாட்டை நல்லா வேண்டிக் கட்டியிருக்கிறார். எதுக்கும் உங்கடை பதிவிலை அதைப் பற்றி விபரமா எழுதுங்கோ. கவனம்! இளைஞன் அதையும் கணினி விளையாட்டா ஆக்கினாலும் ஆக்குவார்.

டி.சே.தமிழன்
அதென்ன கிளிப்பொந்து விளையாட்டு? துப்பரவாக ஞாபகமில்லை. விளக்கமாக அதைப் பற்றி எழுதுங்கள்.

குழைபோட்டு விளையாடுவது யாருக்காவது தெரியுமோ...? posted by Chandravathanaa :Thursday, April 28, 2005 9:46:27 AM


குழைபோட்டு விளையாடுவது

"எவடம் எவடம் புளியடி புளியடி" என்று விளையாடுவது தானே? posted by இளைஞன் : Thursday, April 28, 2005 11:50:01 AM


டி.சே.!
நீர் சொல்லீட்டீர் எண்டதுக்காக வாற கிழம திரும்ப என்ர பதிவில எழுதிறன். ஆனா கிட்டிப் புள்ளு பற்றி இப்ப இல்ல.

சந்திரவதனா!
'எல்லே' எண்டுதான் அத இலங்கையில சொல்லிறது. அந்தப் பேராலதான் தேசிய மட்டத்தில சொல்லுறது. ஏன் பாடப்புத்தகங்களிலயும் அப்பிடித்தான் இருக்கு. அதுசரி இலங்கையின்ர தேசிய விளையாட்டு என்ன எண்டு கேட்டா என்ன சொல்லுவியள்? நாங்களெண்டாலும் சிறிலங்கா எங்கட நாடில்ல எண்டு சொல்லுற காலத்தில அதப் படிச்சம். ஆனா உங்களுக்கென்ன வந்தது? posted by வசந்தன் : Thursday, April 28, 2005 5:11:18 PM


இரண்டு தடி கொண்டு விளையாடுவதால் கிட்டி பொல்லு என்பது தான் சரி என நினைக்கிறேன். எல்லே இலங்கையின் தேசியவிளையாட்டு. அது தான் றவுண்டெஸ் என நினைக்கிறேன். posted by kulakaddan : Thursday, April 28, 2005 9:46:52 PM


ஐஸ் போல் மாதிரி டொச்?இது தடி ஒன்றை வெகு தொலைவிற்கு எறிய அதற்குள் மற்றவர்கள் ஒளித்து விடுவார்கள் ஒழித்தவர்களை தேடிகண்டவுடன் நிலத்தில் புள்ளடி இடவேண்டும். முதல் பிடிபட்டவர் அடுத்து தொடருவார் posted by kulakaddan : Thursday, April 28, 2005 9:51:06 PM


இளைஞன்,
குழை போட்டு விளையாடுவது,
நடுவில் நிலத்தில் வட்டம் போட்டு குழைக்கொப்பு வைக்கப் பட்டிருக்கும். குழை கிடைக்காவிடில் லேஞ்சி.
ஐந்தாறு அடி தள்ளி வட்டத்தின் இரு பக்கமும் ஏழெட்டுப் பேர் அடங்கிய குழுக்களாக நிற்போம். ஒவ்வொருவருக்கும் குழுத்தலைவர் இலக்கம் தருவார். அடுத்த பக்கக் குழுத்தலைவர் பத்து என்று கூப்பிட்டால் இந்தப் பக்கத்திலிருந்து பத்தாம் இலக்கத்துக்குரியவர் ஓடிப்போய் அந்த குழையை எடுத்துக் கொண்டு திரும்பித் தனது இடத்துக்கு வர வேண்டும். அவர் குழையைத் தொடும் போது அடுத்த குழுவிலிருந்து ஒருவர் ஓடி வந்து இவரைத் தொட்டால் பத்தாம் இலக்கத்துக்குரியவர் அவுட்.. தொடமுன்னரே அவர் குழையோடு ஓடி விட்டால் அடுத்த குழுவிலிருந்து வந்தவர் அவுட்..

இன்னுமொரு, குழை விளையாட்டு உள்ளது.
வட்டமாக நிலத்தில் இருப்போம். ஒருவர் குழையோடு வட்டத்தைச் சுற்றிக் கொண்டிருப்பார். திடீரென யாருக்கும் பின்னால் அதைப் போட்டு விடுவார். அவர் மீண்டும் குழை போட்ட அந்த இடத்துக்கு வரும் வரை பின்னால் குழையிருப்பதைக் குறிப்பிட்டவர் கண்டு கொள்ளாவிட்டால் அவருக்கு குழையால் பேயடி கிடைக்கும். ஆனால் இந்த விளையாட்டு இரண்டாம் மூன்றாம் வகுப்பு விளையாட்டு.

இவடம் எவடம்?
புளியடி புங்கடி

இது வேறு விளையாட்டு. இந்த விளையாட்டுக்கு இரண்டு கைகளையும் சேர்த்து வைத்திருக்க அதில் மண் போட்டு, ஒரு சிறு தடியும் குத்தி, கண்ணைப் பழைய சேலைத் துண்டால் அல்லது வேட்டித் துண்டால் கட்டி அழைத்துச் செல்வார்கள். ஒவ்வொரு கொஞ்சத் தூரத்துக்கும் "இவடம் எவடம்?" என்று கேட்பார்கள். கண் கட்டப் பட்டவர் "புளியடி புங்கடி" என்று பதில் சொல்ல வேண்டும். குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும், ஒரு அழுத்தத்தோடு "இவடம் எவடம்?" என்று கேட்பார்கள். சரியாகச் சொன்னால் உங்களுக்கு வெற்றி. posted by Chandravathanaa :Friday, April 29, 2005 11:07:18 AM

Related Articles

எட்டுக்கோடு

கல்லுச் சுண்டுதல்

கொக்கான் வெட்டும் முறை