„தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்“ என்பது பேசுவதற்கும், முழங்குவதற்கும் நல்லாகத்தான் இருக்கிறது.
நிஜத்தில், தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் அவனை நையாண்டி பண்ணியும், நையப்புடைத்தும் கொன்றிடுவோம் என்றும் நிரூபிக்கக் கூடிய மனிதர்கள் வாழும் உலகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நாம் கடந்த வந்த பாதையிலும், நடை போடுகின்ற பாதையிலும் நடக்கும் கொடுமைகளும், சந்திக்கும் இழப்புகளும் ஏராளம். மனம் கலங்கி, கசிந்து, ஆற்றாமையில் துவண்டு, துடித்து...
இவைகளின் முன்னே…
நடிகை சிறீதேவியின் மரணம் மிகச் சாதாரணமே. ஆனாலும் அதிர்ந்துதான் போனேன்.
அன்று முழுக்க நேரமே இருக்கவில்லை. அர்த்த ஜாமத்தில்தான் அதுவும் அரைகுறைத் தூக்கத்தில் எனது அலைபேசியை நோண்டினேன். செய்தி பார்த்து நிஜமாகவே அதிர்ந்து போனேன்.
என் பதின்மங்களில் நான் பார்த்து ரசித்த அழகு. அதன் பின்னும் மிகவும் ரசித்தேன். „உனக்குப் பிடித்த நடிகை யார்?“ என்று அப்போது யார் கேட்டாலும் „சிறீதேவி“ என்று தயங்காது சொல்லியிருக்கிறேன்.
இப்போது நினைத்தாலும் அந்தக் காலத்தில் என்னோடு வாழ்ந்த உறவுகளில் ஒன்று என்பது போன்றதானதொரு உணர்வு.
மரணம் தவிர்க்க முடியாததுதான் இருந்தாலும்
மனதால் அதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
சந்திரவதனா
26.02.2018
சிறீதேவி (ஸ்ரீதேவி) Sridevy Kapoor
சந்திரவதனா
Blogs