மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் துணைவனோ, துணைவியின் கரம்பிடித்து நீள நினைந்து வாழ நினைப்பதுதான் வாழ்க்கை. எத்தனை விதமான துன்பத்திலும், இன்பத்திலும் என்றுமே பிரியாத உறவாக இருக்கப் போவது அந்த வாழ்க்கை. அந்த வாழ்க்கையைத் தருவது திருமண பந்தம். அத் திருமணபந்தத்தில் இணைகின்ற இருவரின் மனம் ஒருமித்து உணர்வுகளும் சிந்தனைகளும் மகிழ்வாக இணைந்து கொண்டால், அந்த வாழ்க்கைக்கு நிகர் உலகில் எதுவுமில்லை. ஆயினும் எல்லோருக்கும் எல்லாம் சரியாக அமைந்து விடுவதில்லை. கணவன், மனைவி உறவென்பது அவரவர் மனநிலைக்கு ஏற்ப சிறப்புறுகின்றது. இந்த உலகில் சிறப்பான வாழ்க்கை அமையாதவர்களும் வாழத்தான் செய்கின்றார்கள். இரு துருவங்களான தம்பதியினரின் அகநிலை சார்ந்த உறவை வெளிப்படுத்தும் வகையிலான பாடலொன்றை இப்போது பார்ப்போம்.

படம்: மௌனராகம்
பாடல்: மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
பாடியவர்: S.P. பாலசுப்பிரமணியம்


மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ


என்ற வினா முதல் வரியிலேயே எழுப்பப்படுகின்றது.

அந்த வினாவிலிருந்தே அந்த இருவரின் உறவுகளிடையே உண்மையான அன்போ, இறுக்கமான பாசமோ இல்லையென்று தெளிவாகக் காட்டுகின்றது. அந்த வரிகள்: மஞ்சத்தில் கிட்டாத உறவை யார்தான் ஏற்றிடுவர். இந்த இடத்திலே ஆண் மிகவும் பாதிக்கப் படுகின்றான். பெண்ணானவள் தன்னுடன் வாழ்வாள் என்ற ஒப்பந்தத்திலான அடிப்படையில் இணைந்த பின்பு மனம் விரும்பாத உறவை அவள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றாள். ஆயினும் கணவன் அன்புக்கு அவளோ அடையாளம் எனக் கொள்கின்றாள். ஒரு காட்சியில் கணவன் அவளுடைய அங்கத்தைத் தொட்டு விடுகின்றான். அது அவளுக்குச் சுட்டு  விடுகின்றது. இதை எதிர்பார்க்காத கணவன் எப்படித்தான் தாங்கிடுவான். அவளின் எதிர்ப்பைத் தாங்க கணவனின் உணர்வை வெளிப்படுத்தும் வரிகளிலே இப்பாடலில் அழகாகக் கவிஞர் தந்திருக்கின்றார்.

பூபாளமே கூடாததென்னும்
வானம் உண்டோ சொல்
தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன


நண்பர்கள் போலே வாழ்வதற்கும் இந்த ஆர்ப்பாட்டமான மேளமும், மாலையும் எதற்குத் தேவை. சொந்தமோ, பந்தமோ இல்லாத ஒரு உறவு எதற்காக?

மேடையைப் போல வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல


இந்த உலகம் ஒரு நாடக மேடை என்று கூறுவார்கள். அந்த மேடையில் நாம் எல்லோரும் நடிகர்கள் என்பார்கள். அவன் வாழ்க்கையில் இந்த உலக மேடையில் நாம் கணவன் மனைவியாக நடிப்பது தேவைதானா என்று கேட்கிறான் கணவன். இந்த இடத்திலே ஒரு விடயத்தை அவன் மனைவிக்கு உணர்த்த முயற்சிக்கின்றான். அதனால்தான் வாழ்க்கையென்பது நாடகமல்ல, வாழ்க்கை முடிந்ததும் விலகிச் செல்ல என்ற கருத்தை அவள் முன் வைக்கின்றான்.

ஓசையைப்போல உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல

ஒரு ஓடையிலே செல்லும் போது அந்த ஓடை நேராகவே செல்லுகின்றது. அந்த ஓடையில் பயணத்தை மேற்கொள்ள விரும்புகின்ற ஒருவன் நேராகவே செல்வேன் என்ற உறுதியோடு செல்கின்றான். அது பாதை மாறிச் செல்லுமாக இருந்தால் அந்த வாழ்க்கை எதற்கு? உறவென்பது உறுதியானது, நேர்த்தியானது என்ற உண்மையை இப்பாடல் மூலமாக உணர்த்துகின்றார் கவிஞர்.

விண்ணோடுதான் உலாவும் வெள்ளி
வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன - வா


மேகத்தில் உலாவுகின்ற வெள்ளி வண்ண நிலவும் வானத்தோடுதான் ஒட்டி உரசி உலாவுகின்றது. அப்படி நீயும் என்னோடு வாழ்ந்தால் என்ன? என்ற உணர்வோடு அவனுடைய பாடல் வரிகள் நிறைவு பெறுகின்றது.

இந்தப்பாடல் வரிகளினூடாக சேராத இரண்டு உறவுகளின் இதயங்களின் உறவை இப்பாடல் உணர்த்தி நிற்கின்றது. சேராத உறவொன்று சேர்ந்திருப்பதை விட பிரிந்திருப்பதுதான் நல்லது என்று இன்றைய உலகம் கூறும்.

பாடலில் கூறிய சம்பவங்கள் காட்சிப்படுத்தல் கதை என்பன பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சுவையாக இருக்கலாம். ஆனால் நிஜவாழ்க்கையில் அல்லது நடைமுறையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் இவ்வாறு பொருந்தாத அல்லது மனம் விரும்பாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றார்கள். இவ்வாறான வாழ்க்கை ஒரு நிலையில்லாத வாழ்க்கை எமக்காக வாழாமல் சமூகத்துக்காகவும், நிர்ப்பந்தத்துக்காகவும் வாழ்கின்றார்கள். வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி வாழ்வதை விட விரும்பியே பிரிந்து விரும்பியவரை மணப்பது மேல்.

- அல்பேட்டா மோகன்

Related Articles