வேண்டும் வேண்டும் உந்தன் உறவு

படம்: வசந்தத்தில் ஓர் நாள்
இசை : எம்.எஸ்.வி
பாடியவர்கள் : எஸ்.பி.பி ,வாணி ஜெயராம்

வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்


அன்பின் நிமித்தம் ஏற்படும் உறவுக்கு என்றும் அழிவு இல்லை. அழியாத உறவாக என்றும் நிலைத்திருக்கச் செய்யும் இதயங்களால் இணைந்த உறவுதான். அதனால்தானோ என்னவோ பேசாமடந்தையான பெண்கள் கூட வாய்திறந்து கூறிவிடுவார்கள் தங்கள் காதலைக் காதலனிடம். அவள் எவ்வளவு பேரழகியாயிருந்தாலென்ன ஓர் இரசிகனில்லாமல்? பூவில் தேன் நிறைந்திருந்தென்ன பொன் வண்டு வராமல்? என்ன பெண்மை, என்ன மென்மை இன்பம் இல்லாமல்? பெண்மையும் மென்மையும் ஓர் ஆண்மையினால் ஆளப்படும் போதே பெண்மை முழுமை அடைகின்றது. இதன் மூலம் இரண்டு உள்ளங்களுக்கிடையிலான நெருக்கம் உறுதிப்படுத்தப் படுகின்றது. அதனால்தான் இப்பாடல் ஆரம்பத்திலேயே ஓர் ஆணின் உறவு வேண்டுமென்பதைக் காதலி வெண்பனித் தென்றல் உள்ளவரையில் அவனின் உறவு வேண்டுமென்பதைத் தெரிவிக்கின்றாள்.

தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்
நான்கு இதழ்கள் கலந்திட வேண்டும்
நாளை என்பதே மறந்திட வேண்டும்


காதலர்கள் இருவரும் காலம் கடந்துவிடக் கூடாது என்பதையே விரும்புவார்கள். அவர்கள் இன்பலய சுகங்களை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள். அதனால்த்தான் அந்த காதல் வயப்பட்டிருக்கின்ற அந்தக் கணங்களை நீண்டு செல்ல வேண்டுமென்ற அவாவோடிருப்பார்கள். கண்ட கனவுகளை இருவரும் பரிமாறிக் கொள்கின்றார்கள். இரவு பகலாகி இருவரும் பிரிய நேரிடுமோவென வருந்தும் இருவரும் பெருமூச்சு மூலம் மனவருத்தத்தை வெளிப்படுத்துகின்றார்கள். எப்பொழுதும் பிரிவு என்றுவரும் போது ஆண்களைவிட பெண்களே எதிரிகளாக இருப்பார்கள்.

இரவும் பகலும் தொடர்ந்து இருந்து பொழுது புலராமல் இருந்துவிடக் கூடாதா? என ஏங்கும் அவளின் கருத்தை அவனும் ஆமோதிக்கின்றான். ஆமோதித்தது மட்டு;மல்லாமல் நாங்கள் இருவரும் அன்பைப் பகிர்ந்து கொண்டு இன்பமுடன் இருக்க நீங்களும் எங்கள் அருகிலேயே இருந்து உதவி செய்யுங்களேன் என இரவிடமும், நிலாவிடமும் வேண்டுகின்றனர். ஆதனால்த்தானோ என்னவோ கவிஞர் அவர்கள் தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும் தொடரும் மாலை மலர்;ந்திட வேண்டும் என வரிகளை அமைத்துள்ளார்.

வேண்டும் வேண்டும் உந்தன் அழகு
வெண்பனித் தென்றல் உள்ளவரை

ஆண்கள் எப்போதுமே அவசரக்கார்கள். அவர்கள் ஆழமான அன்பை நுகர்வதோடு பெண்ணின் அழகை ஆராதிப்பவர்களாக இருப்பார்கள். அதனால்தான் ஆணானவன் இரவின் உறவை எதிர்பார்த்துக் காத்திருப்பான். அவனுக்கு மட்டுமே சொந்தமான அவள் அழகை அடையத் துடிப்பான். ஆதலால் பெண்ணுக்கான அழகையும் அந்த அழகை அனுபவிக்கத் துடிக்கின்ற இரவும் நீண்டிருக்க வேண்டுமென துடித்திருப்பான். அதனால்த்தான் பெண்ணிற்கான அழகும் வேண்டும், இரவும் நீண்டிருக்க வேண்டுமென்ற ஆவலை இப்பாடலில் கேட்கக் கூடியதாக இருக்கின்றது.

உலகம் என்னைப் புகழ்ந்திட வேண்டும்
உங்கள் காலடி தொடர்ந்திட வேண்டும்


இப்பூமியில் எதுவும் மாறலாம். மாறாதது அன்பு மட்டுமே. தூய அன்பிற்கு என்றுமே அழிவில்லை. வானிலிருந்து விழுகின்ற மழைநீர் சேர்கின்ற இடத்தைப் பொறுத்தே அதன் மதிப்பு கூடும் அல்லது குறையும். புனித நதியில் விழுந்தால் புனித நீராகும். சாக்கடையில் விழுந்தால் சாக்கடை நீர் என்பர். அதுபோலவே பெண்ணும் சேர்கின்ற இடத்தைப் பொறுத்தே பெருiமையும் புகழும் கூடும், குறையும். நம் அன்பு இருக்கின்றதே அது எந்தச் சூழ்நிலையிலும் மாறதது. இவ்வுடலுக்கு மட்டும் தான் இளமை மறைந்து முதுமையென்பது வரும். எம் அன்பிற்கு என்றுமே முதுமையில்லை.

நல்ல மனைவியின் இலக்கணமே கணவனை எல்லா வகையிலும் மகிழ்வடன் கவனித்துக் கொள்வது ஆகும். அன்பின் பிறப்படமாய், பொறுமையின் சிகரமாய், அமைதியின் மறு உருவமாய் வாழ்வது ஆகும்.

பொறுமையோடும் பாசத்தோடும் அவள் குடும்பம் நடத்தும் போது அவள் புகழ் விண்ணுலகம் வரை எட்டும். அந்தப் புகழ்ச்சியிலேயே நற்பண்புடைய பெண்ணானவள் கணவனைத் தெய்வமாகக் காண்பாள். கணவனின் காலடியே தவமென இருப்பாள். அதனால்த்தான் இப்பாடல் வரிகளிலும் உலகம் என்னைப் புகழ்ந்திட வேண்டும், உங்கள் காலடி தொடர்ந்திட வேண்டும் என்று பாடப்பட்டுள்ளது.

உன்னை நினைந்தே நான் வாழ்ந்திட வேண்டும்
ஒவ்வொரு பிறப்பிலும் இணைந்திட வேண்டும்.


அன்பு நிறைந்த துணைவியைப் பெற்ற ஒரு கணவன் அந்த அன்பின் நிமித்தம் அவளுடைய நினைப்பிலேயே வாழ்ந்திட வேண்டும் என்று எண்ணுவான். இன்னொரு பிறப்பு தொடர்ந்து இருக்குமாயின் அத்தனை பிறப்பிலும் அந்த அன்பின் துணையுடன் வாழ வேண்டுமென்றுதான் விரும்பவான். அந்த வாழ்க்கையைத்தான் எப்பொழுதுமே எண்ணி நிற்பான். கால ஓட்டத்தில் இன்றைய மனிதன் திருமணம் ஆனபின்பு அன்பின் உறவு இறுக்கமாக இருக்கிறதோ இல்லையோ வாழ வேண்டும் என்ற முனைப்போடு மட்டும் வாழ்ந்து முடிக்கிறான். அந்த இன்பமான உணர்வே இதயத்தில் இன்பத்தைத் தரும். அந்த நினைவுகளை அனுபவிக்காமலேயே சிலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அந்தப் பாடல்வரிகளில் கூறப்பட்ட உண்மையை, உணர்வை உணர்ந்து கொள்வோமாயின் நிச்சயமாக மனிதர்கள் ஒவ்வொருவருமே இந்த உறவில் வாழ வேண்டும் என்றுதான் எண்ணுவார்கள். ஆதனால்தான் இவ்வாறான பாடல்களைக் கவிஞர்கள் நிஜ வாழ்க்கையில் அனுபவிக்காதவற்றை கற்பனைகளின் ஊடாகவாவது அனுபவிக்கட்டும் என்று படைத்துள்ளார்களோ தெரியவில்லை. எனவே மீண்டும் மீண்டும் இவ்வாறான உறவுகளோடு உலகம் இன்புற்றிருக்க வேண்டும் என்று கூறிய வண்ணம் இப்பாடலைக் கேட்டுக் கொண்டே நான் ஒரு சில கணங்கள் கண்களை மூடிக்கொண்டு விடை பெறுகின்றேன்.

- அல்பேட்டா மோகன்

Related Articles