கள்ளிக்காட்டில் பிறந்த தாயே...

படம்: தென்மேற்கு பருவக்காற்று
இசை: NR ரஹ்நந்தன்
பாடியவர்: விஜய் பிரகாஷ்
வரிகள்: வைரமுத்து


மனிதர்கள் எவரும் பெற்றோரின்றி பிரசவிக்கப்படவில்லை. குடும்பத்தின் முன்னோடி பெற்றோர்கள் என்றால் மிகையாகாது. ஒரு மனிதனுக்குக் கிடைக்கின்ற மனைவி, மக்கள், நண்பர்கள், உறவினர்கள் இவர்கள் யாவரையும் விட மரியாதைக்குரியவர்களும், மதிப்பளிக்கக் கூடியவர்களும் பெற்றோர்கள் தான். பிள்ளைகளின் நல் வாழ்வுக்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணம் செய்த தாய் தந்தையரை புலம் பெயர் தேசத்துக்கு அழைத்து வந்துவிட்டு அவர்களின் சுகதுக்கங்களை மறந்து உபகாரப் பணத்துக்காக வருத்துகின்ற கொடுமை சோகம் தருகின்றது.  தாய் தந்தையருக்கு இணையாக இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை. ஆனாலும் நாம் எல்லோரும் தாய் தந்தை எம்மோடு இருக்கும் போது அவர்களின் அன்பையும், அருமையையும் புரிந்து கொள்வதில்லை. அன்பைப் புரிந்தாலும் அவர்களின் தியாகங்களைப் புரிவதில்லை. நாம் இவர்களைப் பிரிந்து ஒரு தனிமையான காலத்திலோ அல்லது அவர்களை இழந்த ஒரு கொடுமையான தனிமையிலே தான் அந்தப் பாசதீபங்களின் அன்பையும் ஆதரவையும் தியாகத்தையும் உணர்ந்து கொள்கின்றோம். அந்த அன்பு நிறைந்த அணைப்புக்காக ஏங்குகின்றோம். பாலூட்டிச் சீராட்டித் தூங்காது தன்னை வளர்த்து ஒரு முழு மனிதனாகத் தன்னை இந்த உலகத்திற்கு அர்ப்பணித்த தாயின் உள்ளம் நோகாது நடந்து கொள்ள வேண்டும். ஒரு தாய் தன் பிள்ளைக்குச் சாபமிடத் தேவையில்லை. அவள் மனம் நொந்தாலே நாம் வாழ மாட்டோம். அத்தகைய பெறுமதி வாய்ந்தது தாயின் உள்ளம். படாதபாடுபட்டு பிள்ளைகளை உலகுக்கு அளித்த பெற்றோர்களின் மனதை நோகடிக்கும் எந்த ஒரு பிள்ளையையும் இறைவன் மன்னிக்க மாட்டான். அப்பெற்றோர்கள் படும் மனக்கஷ;டங்கள் பின்பு அவர்களின் பிள்ளைகளினாலேயே அவர்களும் அனுபவிக்க நேரிடும். பெற்றோருக்குக் கொடுமை செய்யும் ஒருவன் செய்கின்ற எந்தவொரு நன்மைகளும் பெறுமானம் அற்றவையே. மனைவி அன்புக்குரியவள்தான். மரியாதைக்குரியவள்தான். ஆனால் ஒரு தாயின் ஸ்தானத்தை மனைவிக்குக் கொடுக்க முடியாது. தாயும் தாரமும் ஒன்றாக முடியாது.

இசைச்சோலைக்குள் நுழைகின்றேன். குயில்கள் கூவுகின்றன. மயில்கள் ஆடுகின்றன. ஒரு அமைதியான சூழலில் என் அன்னையின் எண்ணம் நினைவுக்குள் வருகின்றது. இளமையில் இதயத்தை இரும்பாக்கி தன் கைகளை நம்பிக்கையாகக்கொண்டு இந்தப் புவியோடு தன்னையும் பிணைத்து தன் உதிரத்தையும் உயிரையும் கொடுத்த என் அன்னையை நினைத்துக் கொள்கின்றேன். என் அன்னையின் கடும் உழைப்பும் சிக்கலான வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். வீட்டு வேலையோடு கூலி வேலையும் புரிகின்றாள் ஒரு தாய். உடல் வலிமை உழைப்பு உயிர் அனைத்தையும் குடும்பத்தாருக்கும் பிள்ளைகளுக்கும் அர்ப்பணிக்கின்றாள்.

என் தாயும் தன் பிள்ளைப் பருவத்திலேயே தனித்து நின்று தன் பிள்ளைகளை வளர்க்கப் போராடினாள். வாழ்க்கைப் பயணத்தின் சாரதியாக கணவனுக்கு நல்ல மனைவியாக பிள்ளைகளுக்கு நல்ல தாயாக என்றும் பரிணமித்து நின்றவள் என் அன்னை. வறுமையின் நிறத்தைக் காட்டாமல் இருக்க என் அன்னை கண்களைக் கசக்காது, கண்ணீரைத் தோண்டிப் புதைத்தது ஒரு காலம். பாசம் என்று பல உறவுகள், நேசத்தோடு பல உறவுகள், வேசத்தோடு இன்னும் பல உறவுகள். உணவு என்பது எல்லோருக்கும் தேவையானது. ஒரு நாளில் ஒருவனுக்கு மூன்று தடைவ தேவை என்பார்கள். ஆனால் என் அன்னையினால் மூன்று நேரம் உலைவைக்க முடியா விட்டாலும் ஒரு நேரமாவது உலை வைக்க தன் உதிரத்தை உழைப்பாக்கியவள். எண்ணிப் பார்க்கின்றேன். தான் உண்ணாது எமக்காகச் சமைத்து வைப்பாள். நொந்திடுமோ நெஞ்சமென்று உரத்துப் பேச மாட்டாள். ஒரு கணமேனும் வறுமைத்தன்மை பிள்ளைகளுக்குக் காட்ட மாட்டாள். கைவலிக்க உழைத்து எங்கள் கவலைகளை மறக்க வைப்பாள். பொல்லாத இந்த உலகத்தில் நல்ல ஒழுக்கந்தன்னை கற்றுத்தந்தாள். அத்தனைக்கும் மேலாக அன்னையிடம் பட்ட கடன் எத்தனையோ... எத்தனையோ... அத்தனையும் அடைப்பதற்கு இப்பிறவி போதவில்லை.

காற்றடிக்கும், மழை கொட்டும், கடும் வெயிலடிக்கும். ஆனால் என் அன்னை களைக்கிறது என்று ஒருநாளும் ஓயவில்லை. தன் பிள்ளைகளுக்குக் கஞ்சி வேண்டும் என்பதற்காய் தன் நோயைக் கூடக் காட்டாமல் உழைத்து உழைத்து என்னை உருவாக்கி நின்றாள். உள்ளம் உருகுதையா அவள் உயிர்த் தியாகத்தை எண்ணி. உள்ளத்தில் போற்றி வைப்போம். அன்னை அவள் இல்லையென்றால் என் வாழ்க்கையே வரண்ட பாலை வனம்தான். ஆனால் இன்று என் வாழ்வு செழிப்பதற்கு என்  அன்னை அன்று தன்னை வாட்டி வளர்த்தெடுக்காவிட்டால் இன்று என் வாழ்வு அடியற்ற வாழ்வாகப் போயிருக்கும்.

வேலி முள்ளிலை அவ விறகெடுப்பா
நாழி அரிசிவச்சு ஓலை எரிப்பா
பிள்ளை
உண்டமிச்சம் உண்டு உசிர் வளர்ப்பா
தியாகமப்பா.
அந்த வகையில்,
கள்ளிக் காட்டில் பிறந்த தாயே
என்னைக் கல்லுடைச்சு வளர்த்த நீயே


என்ற இப்பாடல் என் கண்முன்னே ஓடித்திரியும் என் அன்னையின் கடும் உழைப்பைக் காட்டி நிற்கின்றது. இப்பாடல் வழியாக என் அன்னையின் அற்புதங்களை நினைத்துப் பார்க்கிறேன். வளைந்து நெளிந்து போகும் ஏதையல Pசயமயளா இன் குரலால் பாடப்படும் இப்பாடல் கொடுக்கும் உருக்கம் கேட்போர்  அனைவரின் மனதையும் உருக்குகின்றது. இப்பாடலில் வரும் வரி பாவமப்பா, தியாகமப்பா என்று அவர் படிக்கும் போது என் கண்கள் கலங்குவதை என்னால் தடுக்க முடியவில்லை. எல்லோரும் கேட்டுப் பார்ப்போம்.

- அல்பேட்டா மோகன்
கனடா

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்னை கல்லுடைச்சு வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் உழைச்ச தாயே
என்னை முள்ளு தைக்க விடல நீயே
காடைக்கும் காட்டு குருவிக்கும் எந்த புதருக்குள் இடமுண்டு
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும் தாய் ஒதுங்கதான் இடமுண்டா?
கரட்டு மேட்டையே மாத்தினா அவ கல்லை புழிஞ்சு கஞ்சி ஊத்துனா..

உழவு காட்டில விதை விதைப்பா
ஓணான் கரட்டில கூழ் குடிப்பா
ஆவாரம் குழையில கை துடைப்பா -பாவம்மப்பா
வேலி முள்ளில் அவ விறகெடுப்பா
நாழி அரிசி வைச்சு உலைய வைப்பா
பிள்ளை உண்ட மிச்சம் உண்டு உயிர் வளர்ப்பா தியாகம்மப்பா
கிழக்கு விடியுமுன்னே விழிக்கிறா அவ உலக்கை பிடித்துதான் பிறக்கிறா
மண்ணை கிண்டிதான் பிழைக்கிறா உடல் மக்கி போகமட்டும் உழைக்கிறா..

தாயி கையில் என்ன மந்திரமோ
கேப்பை களியில் கூட நெய் ஒழுகும்
காஞ்ச கருவாடு தேனொழுகும் அவ சமைக்கியிலே

தங்கம் தனிதங்கம் மாசு இல்லை
தாய்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்லை
தாய்வழி சொந்தம் போல பாசம் இல்லை நேசமில்லை..
ஆறு இல்லா ஊரில் கிணறு இருக்கு
கோயில்லா ஊரில் தாய் இருக்கு
தாயில்லா ஊரில் நிழல் இருக்கா அன்பில் நிசமிருக்கா

சொந்தம் நூறு சொந்தம் இருக்குதே
பெத்த தாய் போல ஒன்னு நிலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குதே அட
தாய் இரண்டு தாய் இருக்குதா

Related Articles