ஆயிரம் மலர்களே மலருங்கள்...

படம்: நிறம் மாறாத பூக்கள்
இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: ஜென்சி, SP.ஷைலஜா, மலேசியா வாசுதேவன்
வருடம்: 1970

ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்


அதிகாலை வேளை சூரியன் உதயத்தோடு பறவைகள் துயில் எழுகின்றன. இதழ்களை விரித்துக் கதிரவனை வா, வா என்று  அழைக்கின்றது. சேவல்கள் கூவி அழைக்கின்றன. கதிரவன் மனம் மகிழ்ந்து போகின்றான். காலையில் கதிரவனின் இதமான சூடுபட்டு மொட்டுக்கள் மெல்லத் தன் இதழ்களை விரித்து உதயகீதம் பாடுகின்றன. ஆயிரம் ஆயிரம் பூக்கள் அங்கே தோன்றி நீங்களோ நாங்களோ என்று போட்டி போடுகின்றன. இந்த வேளையில் சூரியக் கதிர்களைப் பார்த்து மலர்கள் கேட்கின்றன – நீங்களோ, நாங்களோ என்று.

வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்
மனதில் உள்ள  கவிதை கோடு மாறுமோ
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவா.


வானத்து நிலவு தேய்ந்து தேய்ந்து வளர்ந்து வருகின்றது. இப்படியாகத்தான் உள்ளத்துக்குள் இருக்கும் உணர்வுகளும் கவிதைக் கோடுகளாக நிறைந்து நிற்கையில் இராகமும் பாவமும் சேர்ந்து உயிரோவியமாய் - நெஞ்சினில் உறைகின்றன. இந்த ராகமும் பாவமும் இணைந்த போது நீயும் நானும் ஒன்றாய் ஓருயிராகிறோம்.

கோடையில் மழை வரும்
வசந்தகாலம் மாறலாம்
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ
கால தேவன் சொல்லும் பூர்வஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ.


மண்ணில் விழுந்த மழைநீர் மண்ணின் நிறமாய் மாறுவது போல நீயும் எங்கிருந்தாயோ எனக்குத் தெரியாது. ஆனால் நானும் நீயும் சேர்ந்தது உறுதியாகிவிட்டது. கோடையில் மழை வந்து வசந்தகாலம் மாறலாம். உலகமே அழிந்தும் போகலாம். ஆனாலும் உனக்கும் எனக்குமிடையிலான உறவை மாற்றுவதற்கு இங்கே எதுவுமே இல்லை. அதுவே எழுதப்பட்ட விதி. வரைந்த வழியே எங்கள் காதலும் உயிர்ப்பெறும். ஒருவருக்காக ஒருவர் பிறந்தது என்பது இறைவனின் தீர்ப்பு. அதை மாற்ற யாருக்கு சக்தி இருக்கின்றது.

பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே
மலையின் மீது ரதி உலாவும் நேரமே
மேகங்கள் ஓடியாடும் யோகமே


மேகங்கள் வானிலிருந்து இறங்கி பூமியில் ஒடியாடித் தவழ்வது போல ரதியே நீயும் என் வானத்துத் தேவதையாய் வந்து என்னோடு ஓடியாடும் பாக்கியம் தான் என்னே.

சாயாத குன்றும் காணாத நெஞ்சும்
தாலாட்டுப் பாடாமல் தாயாகுமே.


இளமையின் இன்ப நிகழ்வுகளை உரிய நேரத்தில் அனுபவிக்காவிட்டால் சருகாகிக் போகும் நிலைதான். விருப்போடு உன்னை விருந்தாகப் பழகி மருந்தாக மகவொன்று பெற்றெடுப்பதே யோகம். அந்த யோகம் உன்னைத் தீண்டாமல் தான் எட்டுமோ. மார்கழி மாதம் என்றால் நிச்சயம் பனி பெய்யும். இனிப்புச் சுiவியல்லாத கனிகளில்லை. தமிழ் என்றால் இசையும் சேர வேண்டும். அழகில்லாத ஓவியம் கிடையாது. ஆசை இல்லாத பெண் மனதைப் பார்க்க முடியாது. பூங்கொடிக்கு அழகு சேர்ப்பது அதில் பூக்கும் பூக்கள் தான். ஓர் இனிய வாழ்விற்கு ஆண் பெண் என்ற இருவர் தேவை. இருவரும் சேர்ந்து வாழ்வது இளமையின் கட்டாயம்.

- அல்பேட்டா மோகன்

ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்

வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்
மனதிலுள்ள கவிதை கோடு மாறுமோ
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ

கோடையில் மழை வரும் வசந்தகாலம் மாறலாம்
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ

பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே
மலையின் மீது ரதி உலாவும் நேரமே
சாயாத குன்றும் காணாத நெஞ்சும்
தாலாட்டு பாடாமல் தாயாகுமோ

Related Articles