கருவறை கருவறை தொடங்குமிடம்

படம்: தம்பி வெட்டோந்தி சுந்தரம்
பாடல் வரிகள்: கவிஞர் வைரமுத்து
பாடியவர்: பாலக்காட் சிறீராம்

இப்பாடல் என்னைக் கவர்ந்ததற்கான காரணம் கவிஞர் வைரமுத்து அவர்களின் அருமையான பாடல் வரிகள். பல பாடல்களை நாம்; கேட்டிருந்தாலும் ஒரு சில பாடல்களின் பாதிப்புக்களிலிருந்து விடுபடுவதற்கு நாம் படாதபாடு படுகின்றோம். அந்த வகையில் இப்பாடல் வரிகள் என்னைப் பாதித்து விட்டது. இப்பாடலுக்கான வரிகளை எழுதத் தூண்டியதும் அதுதான். படித்துப் பாருங்கள்.

கருவறை கருவறை தொடங்குமிடம்
கல்லறை கல்லறை அடங்குமிடம்
ஆசைகள் பாசங்கள் என்பதெல்லாம்
ஆவனவன் வசதிக்குத் தங்குமிடம்
இதில் கொட்டை போட்டவன் கோட்டை ஆ
லாம்
பட்டை போட்டவன் பரமனாகலாம்
ஒருத்தியும் ஒருநாள் புத்தனாகலாம் புத்தி மாறலாம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆரம்பமும் முடிவும் மாற்றங்கள் ஏதுமற்றது. கருவறைதான் தொடக்கம் அதன் முடிவு கல்லறை. அதற்குள் எல்லாமே அடங்கிவிடும். இயல்பான வாழ்க்கையில் வாழ்ந்தவன் மரணத்தின் பின் எல்லாமே அடங்கிப் போய்விடுகின்றான். சொந்த பந்த உறவுகள் ஒரு சில நாட்கள் பேசிக்கொள்ளும். அதற்குள்ளாக எல்லாமே மௌனித்து விடும். ஆயினும் அவரவர் ஆசைகள், இலக்குகள் எல்லாமே அவனிட்ட விதையின் பயனே. விதை விருட்சமாகலாம். அது வீணாகவும் போகலாம்.
கொட்டை போட்டவன் கோட்டை ஆளலாம். பட்டை போட்டவன் பரமனாகலாம்.

இந்த வரிகளைப் பார்க்கும் போது எவனெவன் எதைச் செய்யத் துணிகின்றானோ அதன்படி வினையும் அமைகின்றது. வாழ்க்கை என்பது எது என்று தெரியாமலேயே வாழ்க்கைப் படகை திசை தெரியாது ஓட்டி அறிந்தவன் சில வேளைகளில் ஞானம் பெற்று விடுகின்றான். அவனே புத்தனாகியும் விடுகின்றான். அதுவும் ஆயிரத்தில் ஒன்று அப்படியும் நடந்து விடுகின்றது. அவனை உலகம் போற்றுகின்றது.

தர்மம் நாளைக்குத் தப்பு ஆகலாம்
தப்பு என்பதே தர்மமாகலாம்
உறவு மட்டுமே ஒழுக்க மாகலாம் உலகம் மாறலாம்.

உலகில் எதுவுமே நிலையானதல்ல. இன்று உயர்ந்திருப்பது நாளை தாழ்ந்து போகலாம். ஒருவனுக்கு ஒன்று உயர்ந்ததாக இருக்கலாம். இன்னொருவனுக்கு அதுவே தாழ்ந்ததாக இருக்கும். அதுபோலவே அறமும் தவறாகலாம். அது எல்லோருடைய கால தேவைகளைப் பொறுத்தது. ஒருவருடைய நேர்மை ஒரு நேரம் சரி என்று சொல்லும். ஒரு கட்டத்திலே அதைத் தவறு என்று சொல்லும். இளமைப் பருவத்தில் நாம் செய்யும் குறும்புகள் - எல்லாமே எங்களுக்கு அப்போது சரியெனப்பட்டது. இப்பொழுது அவைகள் எல்லாமே தவறாகத் தெரிகின்றது. அன்றைய தர்மம் இன்று தவறாகத் தெரிகின்றது.

உறவு மாற்றமே ஒழுக்கமாகலாம்
உலகம் மாறலாம்
எல்லாம் உன்னிடம் இருக்கிற போது
எட்டி எட்டிச் செல்லும் ஞானம்
எல்லாம் கெட்டுப் போன பின்னாலே
கிட்ட கிட்ட வரும் ஞானம்.

ஒவ்வொருவருக்கும் பொருட்களும் செல்வங்களும் எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை. பணமும் பொருளும் ஒரு நாள் வரும், ஒரு நாள் போகும் உன்னிடம் இருக்கும் போது பிறருக்குக் கொடு. இல்லாத போது - கூச்சப்படாமல் கேள். செல்வம் சேருகின்ற போது உறவை மறக்காதே. நீ அந்த உறவுகளை மறந்தால் உன் செல்வங்கள் தீர்ந்து போனாலும் உனக்கு உதவ யாரும் இருக்கமாட்டார்கள். இறைக்க இறைக்கத்தான் கிணறு சுரக்கும். இல்லையேல் - தேங்கிய அளவிலேயே திகைத்துப்போய் நின்று விடும். ஓடிக்கொண்டிருக்கும் நதியினால் பயிர்கள் செழிக்கும். அது ஓட ஓட மேகமும் பொழியும். தேங்கிக்கிடக்கும் குட்டையில் புழு பூச்சிகள் தான் உற்பத்தியாகும். பதுக்கப்பட்ட செல்வத்தோடு பாவமும் பதுக்கப்படுகின்றது. விநியோகிக்கப்படும் பணத்துக்கு புண்ணியம் கிடைக்கின்றது.

நிலையில்லாத இச்செல்வத்தால் நிலையான ஞானத்தைக் கணக்கிடுவார்கள். பொருளும் செல்வமும் இருந்த போது அதனைத் தேடுவான். அது இல்லை என்ற போதுதான் அவன் ஞானக்கடலைத்தேடி ஓடுவான். இது வாழ்க்கையின் பாடமும் அனுபவத்தின் தொகுப்பும் என்றே சொல்லலாம். இதுதான் உலகம் என்று உணர்ந்து விட்டால் என்னதான் நடந்தாலும் கலங்கா நிலையிருக்கும். சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கின்றது. இவைகளே அவனவன் செய்யும் தவறுகளுக்கும் காரணமாகி விடுகின்றது. 5 சதம் வழியில் விழுந்து கிடந்து பொறுக்கி எடுத்தால் வழி நெடுகப் பணம் விழுந்து கிடக்குமோ எனத் தேடிச் செல்கின்றான்.

மண்புழுவோ மண்ணைத் திங்குது
அந்த மண்ணைத் தின்னும் மண் புழுவைத் தவளை திங்குது
புழுவைத்தின்னும் தவளையைத் தான் பாம்பு திங்குது
மேலே பறந்து போகும் கழுகு  அந்தப் பாம்பைத் திங்குது
பாம்பைத் தின்னும் கழுகைத்தானே நரியும் திங்குது
அந்த நரியைக் கூட வேட்டையாடி மனுசன் திங்கிறான்
அந்த மனுசனைத்தான் கடைசியிலே மண்ணு திங்குது.

ஒரு மரணத்தின் முடிவு இன்னொன்றின் பிறப்பாகும். மண்புழுவின் மரணம் தான் தவளையை வாழ வைக்கின்றது. தவளையின் மரணம் பாம்பை வாழ வைக்கிறது. பாம்பின் மரணம் மேலே பறந்து போகும் கழுகை வாழ வைக்கின்றது. பாம்பைத் தின்னும் கழுகின் மரணம் நரியை வாழ வைக்கின்றது. வாழும் நரியை வேட்டையாடி உயிர் வாழும் மனிதன் உண்டு வாழ்கிறான். உயிர் வாழும் மனிதன் கடைசியில் மண்ணுக்கு இரையாகின்றான். மனிதனைத் தனிமைப்படுத்தும் கடைசி முயற்சி மரணம். மரணத்தின் தாக்கம் என்பது வெறுமையின் ஆதிக்கம். இழப்பின் நீட்சி. முதல்க்குழந்தை, முதல்ப்பணி, முதல்பள்ளியைப் போல முதல் மரணமும் மறக்க முடியாது. பிறப்பது போலத்தான் இறப்பதும். பிறப்பது இறப்பதற்காகத் தான். அழிவது மீள் வருகைக்காக, மீள்வது அழிவதற்காக. விதைப்பது அறுப்பதற்காக, அறுப்பது விதைப்பதற்காக.

எல்லாம் உன்னோடு இருக்கிற போது
எட்டி எட்டிச் செல்லும் ஞானம்
எல்லாம் விட்டுப் போன பின்னாலே
கிட்ட கிட்ட வரும் ஞானம்.

மனிதன் மதிமயங்கிப் போவது அவனுடைய புகழும், செல்வமும் அதிகமாக இருக்கும் போது. அந்த நேரத்தில்தான் அவனுக்கு அகங்காரமும், ஆணவமும் அதிகரிக்கின்றது. ஆணவத்தால் அறிவு மங்கிப் போகின்றது. அறிவு மயங்கிய நிலையில் அவன் அனைத்தையுமே இழந்திடுவான். அப்பொழுதுதான் அவன் விழித்துக் கொள்வான். அதன்பின்புதான் அறிவைத் தேடுவான். அறிவின் ஒளியில் தான் அகிலம் பற்றிய புரிதலை உணர்ந்து கொள்வான். அறிவுக் கண்களைத் திறந்த போது அவனுக்கு எதுவுமே தேவையில்லை. வெற்றி வெற்றி என்று தொடர்ந்து வர வர தோல்வி தன் அகராதியிலேயே இல்லை என்று துணிச்சல் வருகின்றது. கண்ணுக்கு முன்னாலிருக்கும் பயங்கரப் படுகுழி கூடத் தனக்காகக் கட்டப்பட்ட நீச்சல் குளம் போலத் தோன்றுகின்றது. விழுந்து எலும்பு முறிந்த பிறகு தான் ஞானம் பிறக்கின்றது.

இன்பம் தேடி, இன்பம் தேடி மனசு அலையுது
அந்த இன்பம் தேடும் பாதை எல்லாம் துன்பம் ஆகுது
கர்வம் சேர்ந்து மனுச வாழ்வு கறை பிடிக்குது
காலம் தோல்வி என்ற கல்லில் அடிச்சு துவச்சுக் கொடுக்குது.

இளமையும், மூப்பையும் ஒப்பிடுவானேன்? ஒருவன் பத்து வயதில் சாவானேன்? இன்னொருவன் இருபது வயதில் சாவானேன்? மற்றொருவன் 30 வயதில் மடிவானேன்? ஒரே வயதில் ஏன் எல்லோரும் சாகக்கூடாது. ஒரு மனிதன் சீரும் சிறப்புடனும் இருந்தபோது அவனுக்கு செருக்கும் இறுமாப்புமாய் எக்காளமும் ஏற்படுகின்றது. இந்த உலகத்தில் ஒவ்வொரு சீவராசியும் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் தேடித்தான் செல்கின்றது. அங்கே ஒவ்வொரு தேடலுக்கும் தடையாக துன்பம் முந்திக் கொள்கின்றது. புயல் மிஞ்சி நிற்கின்றது. இன்பத்தில் மூழ்கி கர்வத்தில் இருக்கும் போது கர்வமே கதையாகிவிடுகின்றது. இந்த இடத்திலே காலம் என்பது கைகட்டி நிற்கின்றது. கொடுக்க வேண்டியதைக் கொடுத்து எடுக்க வேண்டியதை எடுத்து இனிப்பும் புளிப்பும் போல சுவையைத் தருகின்றது. இதுதான் வாழ்க்கை என்பதைச் சொல்லிச் செல்கின்றது.

காலம் தோல்வி என்ற கல்லில் அடிச்சு துவச்சிக் குடுக்குது
காதல் பாசம் குடும்பம் எல்லாம் காலச்சுத்துது.
அது பரீட்ச எழுத வச்ச பிறகே பாடம் சொல்லுது
எட்டி எட்டி போற வாழ்வில் என்ன இருக்குது
சும்மா முட்டி முட்டி பாரக்கும் வாழ்வு முழுமையாகுது.

பந்தமும் பாசமும் குடும்பமும் காலைச் சுற்றி சுற்றி நிற்கின்றது. உலகத்தில் உறவும் பாசமும் நம்மை விட்டுப் போகாத ஒன்று. விரிசலாக வரும்போது கூட விலகிக் கொள்ள முடியாது. இது தான் உலகம், இதுதான் குடும்பம், இதுதான் பாசம் என்று ஒரு வரையறை வைத்துள்ளது. அந்த வரையறைக்குள் நின்றுதான் நாங்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றோம். மனிதனுக்குப் பிடித்த உறவு சேரும் போது கூட இணைத்துக் கொள்ள முடியாத வாழ்க்கை. இரண்டு பக்கமும் தீச்சுடர்கள். அணைக்கவும் முடியாது விலகவும் முடியாது. இதற்குள் என்னதான் சாதிக்கப் போகின்றோம். வாழ்க்கை என்பது கொஞ்சக் காலம் வாழ்ந்து முடிப்போம் என்ற நம்பிக்கையோடு மனிதன் முடிவைத் தேடி ஓடுகின்றான் என்ற நினைவோடு காலத்தை ஒட்டுவதற்கு கரை சொல்லி நிற்கின்றது இப்பாடல் வரிகள்.

கருவறை கருவறை தொடங்குமிடம்.. கல்லறை கல்லறை அடங்குமிடம்.. ஆசைகள் பாசங்கள் என்பதெல்லாம் அவனவன் வசதிக்கு தங்குமிடம் இதில் கொட்டை போட்டவன் கோட்டைலாம் பட்டை போட்டவன் பரமன் ஆகலாம் போரிகியும் ஒரு நாள் புத்தனாகலாம்.. புத்தி மாறலாம்.. தர்மம் நாளைக்கு தப்பு ஆகலாம் தப்பு என்பதே தர்மம் ஆகலாம் உறவு மாற்றமே ஒழுக்கம் ஆகலாம்.. உலகம் மாறலாம் எல்லாம் உன்னோடு இருக்கிறபோது எட்டி எட்டிச் செல்லும் ஞானம் எல்லாம் எல்லாம் விட்டுப்போனப் பின்னாலே கிட்டக்கிட்ட வரும் ஞானம்..  கருவறை கருவறை தொடங்குமிடம் கல்லறை கல்லறை அடங்குமிடம்..  மண் புழுவோ மண் புழுவோ மண்ணை திங்குது.. அந்த மண்ணைத் தின்னும் மண் புழுவத் தவள திங்குது.. புழுவத் தின்னும் தவளையதான் பாம்பு திங்குது.. மேல பறந்து போகும் கழுகு அந்த பாம்ப திங்குது.. பம்பத் தின்னும் கழுகதானே நரியும் திங்குது.. அந்த நரியைக் கூட வேட்டையாடி மனுஷன் திங்குறான்.. அந்த மனுஷன்தான் கடைசியிலே மண்ணு திங்குது.. அந்த மண்ண புரிஞ்ச மனுஷனுக்கு ஞானம் பொங்குது.. மண்ண புரிஞ்ச மனுஷனுக்கு ஞானம் பொங்குது.. எல்லாம் உன்னோடு இருக்கிறபோது எட்டி எட்டிச் செல்லும் ஞானம் எல்லாம் எல்லாம் விட்டுப்போனப் பின்னாலே கிட்டக்கிட்ட வரும் ஞானம்..  கருவறை கருவறை தொடங்குமிடம்.. கல்லறை கல்லறை அடங்குமிடம்..  இன்பம் தேடி இன்பம் தேடி மனசு அலையுது.. அந்த இன்பம் தேடும் பாதை எல்லாம் தும்பம் ஆகுது.. கர்வம் சேர்ந்து மனுஷன் வாழ்வில் கரை பிடிக்குது.. காலம் தோல்வி என்ற கல்லில் அடிச்சு தொவச்சு குடுக்குது.. காதல் பாசம் குடும்பம் எல்லாம் கால சுத்துது.. அது பறிச்ச எழுத வெச்ச பிறகே பாடம் சொல்லுது.. எட்டி எட்டி போற வாழ்வில் என்ன இருக்குது.. சும்மா முட்டி முட்டிப்பாக்கும் வாழ்வு முழுமையாகுது.. சும்மா முட்டி முட்டிப்பாக்கும் வாழ்வு முழுமையாகுது.. எல்லாம் உன்னோடு இருக்கிறபோது எட்டி எட்டிச் செல்லும் ஞானம் எல்லாம் எல்லாம் விட்டுப்போனப் பின்னாலே கிட்டக்கிட்ட வரும் ஞானம்..

- அல்பேட்டா மோகன்

Related Articles