அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்

எம்ஜிஆர் , ஜெயலலிதா நடிப்பில், பி.ஆர்.பந்துலு தயாரிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வரும் 'அதோ அந்தப் பறவை போல' பாடல் மிகவும் புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களிலொன்று. கண்ணதாசன் எழுதிய இப்பாடல் விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் இசையமைப்பில் டி.எம்.செளந்தரராஜன் மற்றும் குழுவினர் பாடிய பாடல். ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதமயப்பட்ட காலத்தில் போராளிகள் பலரின் பிரியமான பாடல்களிலொன்றாக விளங்கிய பாடல்களிலொன்று. நீண்ட காலம் இலங்கை வானொலியில் இந்தப் பாடல் ஒலிபரப்பாமல் இருந்ததற்குக் காரணம் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் பாடலென்பதால்தான்.

இந்தப் பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. முக்கிய காரணம் பாடலின் வரிகளில் சில. அடுத்தது எம்ஜிஆரின் துடிப்பான அனைவரையும் கவரும் உற்சாகமூட்டும் நடிப்பு.

திரைப்படத்தில் அடிமைகளின் தலைவனாக வரும் எம்ஜிஆர் அனைவருக்கும் விடுதலையில் நம்பிக்கை ஊட்டும் வகையில் பாடுவதாக வரும் வரிகள் கொடிய அடக்கு ஒடுக்குமுறைகளுக்குள் வாழும் மக்களுக்கு எப்பொழுதும் நம்பிக்கையினையும், ஆறுதலையும் தருவன. 'விண்ணில் எவ்வளவு ஆனந்தமாக, சுதந்திரமாகப் பறவை பறக்கிறது. அதனைப் போல் சுதந்திரமாகச் சிறகடித்துப் பறக்குமொரு வாழ்க்கை வேண்டும்.

கடலின் நீரலைகள்தாம் எவ்வளவு சந்தோசமாக, எந்தவித அச்சமுமற்று ஆடி, ஓடி வருகின்றன. இந்த அலைகளைப் போல் அடிமைத்தளைகளுக்குள் வாழும் நாமும் ஆனந்தமாக ஆடும் வாழ்க்கை வேண்டும்' என்று தன்னை நம்பியிருக்கும் மக்களுக்கு நம்பிக்கையினையும், அடைய வேண்டிய விடுதலை என்னும் இலட்சியத்தையும் எடுத்துரைக்கின்றான் தலைவன். இந்த வானில், இந்த மண்ணில் நாம் பாடுவதும் உரிமைக்கீதமாகவே இருக்கட்டுமென்கின்றான். தலைவனது நம்பிக்கையூட்டும் கூற்றினால் நம்பிக்கைகொண்ட ஏனைய அடிமைகளும் அவனுடன் சேர்ந்து விடுதலைக் கனவுடன் ஆடிப்பாடுகின்றார்கள்.

தலைவன் தொடர்கின்றான். இங்கு வீசும் காற்று நம்மை அடிமை என்று ஒதுக்குவதில்லை. கடல் நீரும் அடிமையென்று எம்மைச் சுடுவதில்லை. நாம் அடிமைகள் என்று காலம் நம்மை விட்டு விலகி நடப்பதில்லை. காதல், பாசம், தாய்மை போன்ற பந்தபாசங்களும் நம்மை மறப்பதில்லை. எம்மை அவை சுதந்திரம் மிக்க மனிதர்களாகவே நடாத்துக்கின்றன. தாயில்லாமல் யாரும் பிறப்பதில்லை. சொல், மொழியில்லாமல் யாரும் பேசுவதில்லை. பசியில்லாமல் யாரும் வாழுவதில்லை. அதுபோல் விடுதலைக்காகப் போராடும் மக்கள் வேறு வேறு பாதைகளில் செல்வதில்லை. இவ்விதமாகத் தொடர்ந்தும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் தலைவன் அடிமைச் சூழலில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் அனைவரும் அச்சமின்றி ஆடிப்பாடிட, சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு விடுதலை வேண்டும். வானம் ஒன்று. இந்த மண்ணும் ஒன்று. அதுபோல் விடுதலைக்காக நாம் பாடும் கீதமும் ஒன்றாகவேயிருக்கட்டும். அது விடுதலைக்கான உரிமைக் கீதமாகவேயிருக்கட்டும் என்று தொடர்ந்தும் நம்பிக்கையூட்டிப் பாடுகின்றான். தலைவனின் நம்பிக்கையும், உற்சாகமும், ஆட்டமும் அவனைச் சுற்றியிருந்த அனைவரையும் பற்றிக்கொள்கிறது. எல்லோரும் அவனுடன் சேர்ந்து விடுதலைக்கனவுடன், நம்பிக்கையுடன், தம் மண்ணில் வாழும் மக்களின் அடிமை வாழ்வை உடைத்தெறிவதற்காக 'அதோ அந்தப் பறவை போல் வாழ வேண்டும்' என்று உரிமைக் கீதம் இசைக்க ஆரம்பிக்கின்றார்கள்.

எம்ஜிஆரின் உற்சாகமும், மகிழ்ச்சியும் ததும்பும் நடிப்பும் அவரது ஆடை அலங்காரங்களும். இந்தப் பாடலில் எனக்குப் பிடித்த ஏனைய விடயங்கள். சிறுவயதில் நெஞ்சில் வாழ்வின் சுமைகளற்று உல்லாசமாகத் திரிவோம். அந்தச் சமயங்களில் உள்ளங்களின் ஆழங்களில் பதிந்துவிடும் எவையும் பின்னர் அழிவதில்லை. அழியாத கோலங்களாக மானுட வாழ்வுடன் நிலைத்து நின்றுவிடுகின்றன. அவ்விதம் அழியாத கோலங்களாக பதிந்துவிட்ட தருணங்களிலொன்றுதான் இந்தப் பாடலும், திரைப்படமும். எத்தனைதரம் கேட்டாலும் சலிக்காத, மனதுக்கு இன்பமூட்டும் பாடல்களிலொன்று கவிஞர் கண்ணதாசனின் 'அதோ அந்தப் பறவை போல் வாழ வேண்டும்.' 'சிட்டுக்குருவியைப் போல் சிறகடிக்க ஆசைப்பட்டான் மகாகவி பாரதி. கவிஞர் கண்ணதாசனோ 'அடிமைத்தளையறுத்து, அச்சமற்ற ஆடிப்பாடி அதோ அந்தப் பறவைபோல் வாழ வேண்டுமென்று' விடுதலை நாடி உரிமைக்கீதமிசைக்கின்றார். இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் எமதுள்ளமும் விண்ணில் பறக்கும் சுதந்திரப்புள்ளாகச் சிறகடிக்க ஆரம்பித்துவிடுகின்றது.

பாடல் வரிகள் முழுவதும் கீழே:

திரைப்படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை:
இயற்றியவர்:
பாடகர்:
டி.எம். செளந்தரராஜன்

அதோ அந்தப் பறவைபோல் வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே
போகும்போது வேறுபாதை போவதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்


http://www.youtube.com/watch?v=FB_mHPsm6Bk

வ. ந. கிரிதரன்

Related Articles