ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி - வ. ந. கிரிதரன்

எனக்கு மிகவும் பிடித்த பழைய திரைப்படப் பாடல்களிலொன்று 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி'. ம்.எஸ்.வி/ டி.கே.ராமமூர்த்தி ஆகியோரின் இசையில் எஸ்.ஜானகியின் நெஞ்சையள்ளும் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் எம்ஜிஆர்/சரோஜாதேவி இணைந்து நடித்த 'பாசம்' திரைப்படத்தில் வருகிறது. டி.ராமண்ணாவின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மேற்படி 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி' பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் மருதகாசி. இந்தத் திரைப்படத்தில் எம்ஜிஆர் திருடனாக நடித்திருப்பார். அத்திருடனைக் காதலிக்கும் நாயகியாக வரும் சரோஜாதேவி மாட்டு வண்டியில் மேற்படி பாடலைப் பாடியபடி வருவார். திருடனைக் காதலிக்கும் நாயகி தன் காதலைப் கூறும் பாங்கு சுவையானது. ஒரு திருடனின் வாழ்வுடன் சம்பந்தப்பட்டிருக்கும் விடயங்களைக் கொண்டே கவிஞர் மருதகாசி இப்பாடலை இயற்றியிருப்பார். காட்டில் நாயகியைக் கண்ட திருடனான நாயகன் தன் இயல்பின்படி அவளிடன் உள்ளதைக் கொடு என்று வற்புறுத்தவே நாயகியோ கையில் எதுவும் இல்லாத காரணத்தால் தன் கண்ணில் உள்ளதைக் கொடுத்து விட்டேன் என்று பின்வருமாறு பாடுகின்றாள்:

காட்டில் ஒருவன் எனைக் கண்டான்
கையில் உள்ளதை கொடு என்றான்
கையில் எதுவும் இல்லை என்றே
கண்ணில் உள்ளதை கொடுத்து விட்டேன்

அது மட்டுமா திருட வந்த அவனைத் தானே திருடி விட்டதாகவும் கூறுகின்றாள். நாயகிக்கோ திருடுவதில் நாயகனைப்போல் பரிட்சயமில்லை. இதுதான் அவளது முதல் திருட்டு. முதல் திருட்டு என்பதால் அவளுக்குப் போதிய அனுபவமில்லை. அதனால் அவனை அவளால் முழுவதுமாகத் திருட முடியாமல் போய் விட்டதாம்.

அவன்தான் திருடன் என்றிருந்தேன்.
அவனை நானும் திருடிவிட்டேன்
முதல் முதல் திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்துவிட்டேன்


அத்துடன் அவன் மேல் காதல் கொண்ட நாயகி தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அந்தத் திருடனைக் கைது செய்து தன் உள்ளத்துச் சிறையினில் வைக்கப்போவதாகவும் அதிலிருந்து அவனை என்றுமே விடுதலை செய்யப்போவதில்லையென்றும், இவ்விதம் அவனைக் கைது செய்து ஆயுள் தண்டனைக் கைதியாகச் சிறையினுள் வைப்பதற்குத் தான் ஒருபோதும் விளக்கம் கூறப்போவதில்லையென்றும் கூறுகின்றாள்:

இன்றே அவனை கைது செய்வேன்
என்றும் சிறையில் வைத்திருப்பேன்
விளக்கம் சொல்லவும் முடியாது
விடுதலை என்பதும் கிடையாது

ஒரு திருடனைக் காதலிக்கும் நாயகியென்பதால், திருடனுடன் சம்பந்தப்பட்ட திருட்டு, சிறை, கைதி, விடுதலை போன்ற சொற்களை வைத்தே பாடலை இயற்றிய கவிஞரின் சொல்நயம் என்னைக் கவர்ந்தது. அத்துடன் மெல்லிசை மன்னர்களின் இசையும், எஸ்,ஜானகியின் குரலும் மேற்படி பாடல் என்னைக் கவர்வதற்கு மேலதிகக் காரணங்கள். அத்துடன் கன்னடத்துப் பைங்கிளியின் காதல் ததும்பும் குறும்புடன் கூடிய நடிப்பையும் தவிர்ப்பதற்கில்லை. எத்தனை தடவைகள் கேட்டாலும் ஜானகியின் உள்ளத்தைக் கவரும் அந்தக் குரல் என் உள்ளத்தைத் திருடத் தயங்குவதில்லை. அவ்விதம் என் உள்ளத்தைத் திருடிவிடும் இந்தக் குரலுக்கும் என்றுமே என் உள்ளத்திலிருந்தும் விடுதலை கிடையாது. நீங்களும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். உங்கள் உள்ளங்களையும் திருடிவிடுமிந்தப் பாடல். அதன்பின் உங்கள் உள்ளங்களிலிருந்தும் என்றுமே இந்தப் பாடலுக்கு விடுதலை கிடைக்கப்போவதில்லை.


பாடலின் முழு வரிகள் கீழே:

திரைப்படம்:பாசம்
இசை:எம்.எஸ்.விஸ்வநாத
ன், டி.கே. ராமமூர்த்தி
இயற்றியவர்:மருதகாசி
பாடகர்கள்:எஸ்.ஜானகி


ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சல வென சாலையிலே
செல் செல் செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திட வேண்டும் இரவுக்குள்ளே

காட்டில் ஒருவன் எனைக் கண்டான்
கையில் உள்ளதை கொடு என்றான்
கையில் எதுவும் இல்லை என்றே
கண்ணில் உள்ளதை கொடுத்து விட்டேன்
(ஜல் ஜல் )

அவனே திருடன் என வந்தான்
அவனை நானும் திருடிவிட்டேன்
முதல் முதல் திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்துவிட்டேன்
(ஜல் ஜல் )

இன்றே அவனை கைதி செய்வேன்
என்றும் சிறையில் வைத்திருப்பேன்
விளக்கம் சொல்லவும் முடியாது
விடுதலை என்பதும் கிடையாது

http://www.youtube.com/watch?v=yyASKLWGrvg

- வ. ந. கிரிதரன்

Related Articles

ஆயிரம் மலர்களே மலருங்கள்...

கருவறை கருவறை தொடங்குமிடம்

புதுவாசம் தந்த புதுமலரே

மாலையில் யாரோ மனதோடு பேச

சில நேரம் சில பொழுது...

கல்லாய் இருந்தேன் சிலையாய்...

பார்த்த முதல் நாளே உன்னைப்...