மாலையில் யாரோ மனதோடு பேச

படம் - சத்ரியன்
பாடல் - மாலையில் யாரோ மனதோடு பேச


எமக்கென்று தனிப் பண்பாடு, கலாச்சாரம் உண்டு. திருமணத்துக்கு முன் கணவனாக வரப் போகும் ஆணிடம் பேசும் வழக்கம் தமிழ்ப் பெண்களுக்குக் கிடையாது. பெண் அதிகம் பேசாமலேயே கருத்தொருமித்த காதல் கனிவு பெற்று வளர்ந்து விடும். ஆண் - பெண் சந்திப்பில் ஆண் அதிகம் பேச, பெண் அமைதியுடன் கேட்டிருப்பாள்.

பெண்களுக்கே உரிய இயல்பாகிய நான்கு குணங்கள் என்று சொல்லப்படுகின்ற அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு ஆகியவற்றை முழுமையாகக் கொண்டு அவள் அதிகம் பேசாதவளாகவே வளர்க்கப்பட்டாள்.

மனித உணர்வுகளுக்குள் உன்னதமானது காதல் உணர்வு. பொதுவாகப் பெண்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தத் தயங்குவார்கள். காதலுணர்வானது எக்காலத்திலும் தெவிட்டாத இன்பத்தை அள்ளித் தரும் உணர்வு. நினைக்க நினைக்க இனிக்கும்.

பல பாடல்கள் பல கவிஞர்களால் எழுதப்பட்ட போதும், பெண் பாடிய பாடல்கள் குறைவு. அந்த வகையில் பாடப்பட்ட பாடல்களில் மிகவும் சிறப்பான காதல் உணர்வை பெண்ணின் வாயிலாக பிரவாகிக்கும் இப்பாடலை இக்காற்றலைக்கு எடுத்து வருகின்றேன்.

அது மார்கழி மாத மாலைப் பொழுது. மங்கையவள் நெஞ்சுக்குள்ளே காதலனின் நினைவலைகள். கானக்குயில்கள் கானம் இசைத்த வண்ணம் அங்கும் இங்கும் பறந்த வண்ணமிருக்கின்றன. மாலையில் இதழ்களை விரித்த மல்லிகைப்பூ வாசம் வீசிக்கொண்டிருக்கின்றது. அந்த மங்கையின் மனதுக்குள்ளே யாரோ பேசுவது போல இருக்கின்றது. அழகிய சோலைக்குள் மார்கழி வாடை வீசிக் கொண்டிருக்கின்றது. அவள் உள்ளத்துக்குள் கேட்கின்ற ஓசையோடு, உடல் தழுவிய வாடைக்காற்று மோகத்தீயை ஊட்டிவிடுகின்றது.

அந்த மோகத்தீயில் மூண்ட அந்த உணர்வின் வெளிப்பாடாக அந்த மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச என்ற இப்பாடல் அவளுடைய நெஞ்சத்துக்குள் இருந்தவையெல்லாம் மறந்து போயிற்று. இனி அவளுக்குள் ஒரே ஒரு பாடல்தான். அந்தப்பாடல் அவளின் மனதைக் கவர்ந்த நாயகனின் பெயர் தான். அந்தப் பெயரே அவளுக்குப்பாடலாகக் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. ஒரு பெண்ணின் மனநிலை, அவளது சிந்தனை அவளுடைய பருவத்தைக்காட்டி நிற்கின்றது. அந்தக் குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்கும் காதலனின் பெயரை நினைக்க நினைக்க இனிக்கின்றது. நெஞ்சமே பாட்டெழுது அதல் நாயகன் பேரெழுது. அந்த வரிகளினூடாகக் கவிஞர் பெண்மையின் இன்ப உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

வருவான் காதல் தேவன் என்று காத்தும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை
ஒருநாள் வண்ணமாலை சூட வளர்த்தேன் ஆசைக்காதலை
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

தனிமையில் இருக்கும் அந்தப் பெண் காற்றோடு பேசுகின்றாள். காற்றோ கனிவாக அவளை அணைத்துக் கொள்கின்றது. அணைப்பில் திளைத்த மங்கையோ தன் காதலனைப் பற்றிப் பேசத் தொடங்குகின்றாள். காற்றுக் கூறுகின்றது, உன் காதலன் வருவான் என்று. அதற்கு அவள் கூறுகின்றாள் என் காதலன் வரட்டும் என்னைச் சுற்றியுள்ள அத்தனை காவல்களையும் மீறட்டும். அவன் படை நடத்தி என்னை வென்று என்னைச் சுற்றியுள்ள காவல்களையெல்லாம் வென்று என்னை ஆட்கொள்ளட்டும் என்று காற்றுக்குக் கூறுகின்றாள் அப்பெண்.
என்னை ஆட்கொண்ட காதலுக்காகவே என் வளையல் ஒசையைப் பாடலாக இசைத்தேன். என்கான வாழ்த்துக்குரிய பாடலை வண்ணமாக இசைக்கின்றேன். அத்தனையும் என் நெஞ்சில் எழுதப்படும் அவன் பெயர் கொண்ட இராகங்கள்.

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க
கடல்மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க
அடடா நானும் மீனைப்போல கடலில் பாயக்கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடைபோல உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது.

கடற்கரை ஓரம் தன் கண்களை அலைகள் மீது பதித்து விடுகின்றாள். அலைகளில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. துள்ளி விளையாடும் மீன்களின் கண்களும் அவளது கண்களும் ஒன்றென எண்ணிய மீன்கள் அவளையும் கடலுக்குள் இழுத்து விடுகின்றன. அவளும் கடல் அலைகளுக்குள் மீனைப் போல் பாய்ந்து விளையாடலாமோ என எண்ணுகின்றாள். கடலுக்குள் கற்பனை மீனாக இறங்கியவளுக்கு கடல் அலைகள் வெள்ளி ஆடையாக மாறி தான் அணியக் கூடுமோ என எண்ணி ஏங்குகின்றாள். குடல் அலை மூடிய தன் அழகு மேனியில் தன் நாயகன் தீண்ட மாட்டானோ தன் நெஞ்சுக்குள் நாமம் தன்னை வரையாதோ.

இப்பாடலில் பெண் தன் உணர்வை நல்ல உவமைகளை எடுத்து உணர்த்தியிருக்கின்றாள். ஒரு பெண்ணவள் மென்மையான உணர்வைக் கொண்டவள். அந்த மென்மையான உணர்வை இளமைக் காலத்திலே மட்டும்தான் அவள் பகிர்ந்து கொள்வாள். அந்தக் காலத்திலேதான் காதலும் அவசியமாகத் தேவைப்படுகின்றது. அந்தக் காதலுடன் தான் தன்னுடைய இனிமையான காதலைப் பகிர்ந்து கொள்கின்றாள். காலம் செல்லச் செல்ல வாழ்க்கையின் அலைகளுடன் மோதுகின்றாள். அங்கேதான் துன்பங்களையும், சோகங்களையும், துயரங்களையும் எதிர்கொள்கின்றாள். அன்பு விலங்குகளினால் அலை கூட அடங்கிப் போய்விடுகின்றது. ஆகவே இனிய காதலுணர்வைப் பகிர்ந்து கொள்வதற்கு எப்ப வாய்ப்புக் கிடைக்கின்றதோ அதை அப்பப்போ பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் பாடலும் அனுபவமும் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்து வைக்கும் என்று நிறைவு செய்து கொள்கின்றேன்.

 - அல்பேட்டா மோகன்

 

படம்: சத்ரியன்
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா
 

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே ஓ..ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ..ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ,ராகமாக இசைத்தேன் வாழ்த்துg; பாடiy
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசைf; காதலை நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

கரை மேல் நானும் காற்று வாங்கி
விண்ணைப்பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணைப் பார்க்க
அடடா நானும் மீனைப் போல
கடலில் பாயக் கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் பூத்ததே ஓ... ஓ...
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ... ஓ...
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது

நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது
(மாலையில்..)

Related Articles