சில நேரம் சில பொழுது...

திரைப்படம்:- கிச்சா வயது 16
பாடகர்:- உன்னிமேனன்
இசை:- தீனா

சில நேரம் சில பொழுது
சோதனை வரும்பொழுது
நம்பிக்கையால் மனம் உழுது
வானில் உன் பெயர் எழுது


மனித வாழ்க்கை என்பது நம்பிக்கையின் அச்சாணியில்தான் உருண்டு கொண்டு இருக்கின்றது. மனித வாழ்க்கையை வண்டிச் சக்கரம்போல என்று சொல்வதும் இதனால்தான். நம்பிக்கை என்ற அச்சாணி உடைந்து விட்டால் வாழ்க்கை அற்றுப் போய் விடுகின்றது. வாழ்க்கையில் ஆயிரம் சோதனைகள், சோகங்கள், துக்கங்கள், அவ்வப்போது சில மகிழ்ச்சிகள். இப்படித்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை அமைந்து விடுகின்றது. மனித மனம் சோகத்தையும், துன்பத்தையும் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை.

ஆனால் மகிழ்ச்சியை மட்டும் மனதார ஏற்றுக் கொள்ளும். மனித வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ துன்பத்தின் உப்புத்தான் கசக்கின்றது. அதை ஏற்றுக் கொள்ள யாராலுமே முடிவதில்லை. இந்த இடத்தில் நம்பிக்கை என்ற அச்சாணியை இறுகப் பற்றிக் கொண்டால் வாழ்க்கையில் வரும் இன்ப துன்பத்தைச் சமனாகப் பார்க்க முடியும். எதுவரினும் வாழ்க்கையை சுவைத்துக் கொண்டு செல்ல முடியும். எல்லாவிதமான உயிரினங்களுக்கும் நோய்வரும். அதுபோல வருத்தங்களைக் குணமாக்கும் மருத்துவருக்கும் நோய் வருகின்றது. அதே போலவே இன்பம் துன்பம் எல்லோருக்குமே உண்டு.

இலட்சியக் கதவுகளைத்
திறந்து வைப்போம்
இதயத்தின் சோகங்களை
இறக்கி வைப்போம்
சூரியன் என்பது கூட
சிறு புள்ளிதான்
சாதிக்க முதல் தகுதி
ஒரு தோல்விதான்


வாழ்கை என்பது இலட்சியத்தை நோக்கிய பயணம். இந்த இலட்சியத்தை நோக்கிய பயணத்தில் தோல்வி அடைவதாக இருந்தால்கூட இலட்சியத்திலிருந்து தளர்ந்து விடக்கூடாது. இலக்கின் பயணமே இன்பத்துக்கான பயணம் என்று கொள்ள வேண்டும். இலக்குகளை நோக்கிய பயணத்தில் இதயச் சுமைகள் ஒரு கனமே இல்லை. சோகங்களையும் துன்பங்களையும் இறக்கி வைத்துவிட்டு இலட்சிய வாசலைத் திறப்போம். ஒற்றைச்சூரியன் கோடானகோடி அணுக்களைப் பிரசவிக்கின்றது. உலகிலுள்ள அத்தனை உயிர்களும் அந்த ஒற்றைச்சூரியன் ஸ்பரிசத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. சூரியன் மறைவதும் தோன்றுவதும் இயற்கையின் நியதி. மனித வாழ்விலும் தோல்விகள் என்பது இலட்சியத்துக்கான படிகளாகத்தான் பார்க்க வேண்டும். தோல்விகளை தோளில் சுமப்பவன் துவண்டு விழுந்து விடுவான். தோற்றுப் போயினும் இலக்குளைச் சுமப்பவன் என்றுமே வீழ்ந்து போவதில்லை. தோல்விகளுக்கிடையேதான் நம்பிக்கை இருக்கின்றது. பிரச்சினைகளுக்கிடையில்தான் காந்தியம் இருக்கின்றது.

வானம் தலையில் மோதாது
பூமி நகர்ந்து போகாது
நடுவிலிருக்கும் உந்தன் வாழ்க்கை
தொலைந்து ஒன்றும் போகாது
சோகம் என்றும் முடியாது
கவலை என்றும் அழியாது
இரண்டையும் நாம் ஏற்றுக்கொண்டால்
வாழ்க்கை என்றும் தோற்காது

தொடு வானம் என்றும் வீழ்ந்ததும் இல்லை. உலகம் ஒன்றும் உடைந்ததுமில்லை. சோகம் என்றும் முடியாது. கவலை என்றும் அழியாது இரண்டையும் நாம் ஏற்றுக்கொண்டால் வாழ்க்கை என்றும் தோற்காது. நம்பிக்கை என்ற நங்கூரத்தோடு வாழ்க்கைப் படகை ஓட்டப்பார்.

நெஞ்சே! ஓ நெஞ்சே!

தடையாவும் துரும்பு
தீயாய் நீயானால் மெழுகாகும் இரும்பு
தோல்வி.. அவையெல்லாம்

சில காயத்தழும்பு
ஏறு முன்னேறு ஒளியோடு திரும்பு
பறவை.. அதற்கு  இறகு சுமையா
தோல்வி ஒரு தடையா


நெஞ்சே தடைகளைத் திறந்து வெற்றியைத் தேடி வெற்றி நடைபோடு. உண்மையாக நீ இருந்தால் உண்மை ஒளி வடிவாய் நீ தோன்றி ஒளிபரப்பி மெழுகாய் உருகி தோல்விகள் எரிக்கும் தீயால் மாறி உண்மையில் ஒளி நின்று கொண்டு வெற்றியின் வழி நின்றுவா. தூய நம்பிக்கையின் ஒளியோடு ஒளிவழி வெற்றியே என்றும் உண்மை.

உனது கண்கள் அழும்போது
எந்த விரலும் துடைக்காது
பிறரை நம்பி நீயும் நின்றால்
வந்த பாரம் தீராது
இன்று வந்த ராஜாக்கள்
நேற்று என்ன செய்தார்கள்
தோல்வி வந்து தீண்டும்போது
தன்னை நம்பி வாழ்ந்தார்கள்


துன்பம் வரும்போது கண்ணிலிருந்து நீர் வழியும். உன் கண்ணீரைத் துடைப்பதற்கு யாரும் வரமாட்டார்கள். சிரித்து நீ மகிழ்ந்திருக்கும்போது பலர் கூடி உதவி என்பார். துன்பம் வரும்போது உனக்கு நீ தான் துணை. பேசப்படும் மன்னர்களோ துன்பம் கண்டு துவழ்ந்ததில்லை. எதிர்த்து நின்று போராடி வெற்றிகளைக் குவித்தார்கள். அதனால்தான் அவர்கள் இன்று அரண்மனைக்கு ராஜாக்கள். மனமே துன்பத்தைக் கண்டு நீ துவளாதே. இலக்கை நோக்கிய உன் பயணம் நீண்டு போயினும் தளர்ந்து போகாதே. வெற்றி உன் பக்கம் என்பதை நீ நினைவில் கொள்.

கோடு... அது நீள புதுக் கோலம் பிறக்கும்
மேடு.. அதில் ஏறும் நீர் வேகம் எடுக்கும்
சோகம் அதை வென்றால் ஒரு சக்தி கிடைக்கும்
பாதை சில போனால் பல பாதை பிறக்கும்
நேற்றை மறப்போம் நாளை ஜொலிப்போம்
இன்று ஜெயித்திருப்போம்!


கோடுகளின் வண்ணங்களில்தான் கோலம் பிறக்கின்றது. கோலங்களின் புதுமைக்குள் எத்தனையோ அற்புதங்கள். மேகத்தின் கோலங்கள் மழை நீராகி, பூமிதனை முத்தமிடுகின்றது.

- அல்பேட்டா மோகன் - கனடா.

Related Articles