அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்..

அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்
அவை சூரியச் சந்திரரே
என் வாழ்வுக்கு இரண்டு தீபங்கள்
என் தாயொடு தந்தையரே

படம் - பூமகள் ஊர்வலம்
பாடியவர் - உன்னி கிருஷ்ணன்
இசை - சிவா


தாய் தந்தையருக்கு இணையாக இந்த உலகில் வேறெதுவுமே இல்லை. அந்தப் பாசதீபங்கள் இல்லையென்றால் நாமும் இல்லை. ஆனாலும் நாமெல்லோரும் தாய் தந்தையரின் அருகில் இருக்கும் போது அவர்களின் அன்பையும், அருமையையும் புரிந்து கொள்வதில்லை. அன்பைப் புரிந்தாலும் அவர்களின் தியாகங்களைப் புரிந்து கொள்வதில்லை.

வெயிலின் அகோரத்தில்தான் நிழலின் அருமையைப் புரிந்து கொள்கிறோம். அதே போலத்தான் தாய், தந்தையரைப் பிரிந்த ஒரு தனிமையான காலத்திலோ அல்லது அவர்களை இழந்த ஒரு கொடுமையான தனிமையிலோதான் அந்தப் பாசதீபங்களின் அன்பையும், ஆதரவையும், தியாகத்தையும் உணர்ந்து கொள்கிறோம். அந்த அன்பு நிறைந்த அணைப்புக்காக ஏங்குகிறோம்.

ஒரு தாயின் அன்புக்கு இணையாக ஒரு தந்தையால் ஈடு கொடுக்க முடியாதென்றாலும் எமது வாழ்க்கையில், வளர்ச்சியில் தந்தையின் பங்கும் அளப்பரியதே. தாயின் அன்பை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு தந்தையின் அன்பைப் பெரும்பாலானோர் உணர்ந்து கொள்வதில்லை. தூணாக நின்று தாங்கிய அந்தத் தோள்கள் தந்த பலமான ஆதாரத்தை
ப் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொள்வதில்லையென்று சொல்வதை விட கவனத்தில் கொள்வதில்லை என்று சொல்லலாம். அதையெல்லாம் கவனத்தில் கொள்ளும் போது அனேகமாகக் காலம் கடந்திருக்கும். திரையுலகம் கூட இந்த விடயத்தில் கொஞ்சம் பாரபட்சமாகவே இருந்திருக்கிறது. தாயின் அன்பை எமது மனசை உருக்கக் கூடிய வகையில் எத்தனையோ விதமாகப் பாடி வைத்த திரையுலகம் தந்தையின் அன்பை அவ்வளவாகப் பாடவில்லை.

எனக்குத் தெரிந்த வரையில்
தேவர்பிலிம்ஸ்ஸின் முதற் படமான தாய்க்குப் பின் தாரம் படத்தில் தந்தை இறந்திருக்கும் போதான காட்சிக்காக TMS ஆல் பாடப் பெற்ற
தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ
ஒரு மகனுக்கு சர்வமும் அவனென்றால்
விந்தை உண்டோ

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஒளவையின் பொன்மொழி வீணா
ஆண்டவன் போலே நீதியைப் புகன்றாள்
அநுபவமே இதுதானா

உண்ணாமல் உறங்காமல்
உயிரோடி மன்றாடி
என் வாழ்வின் இன்பமே
எதிர் பார்த்த தந்தை எங்கே?
என் தந்தை எங்கே?
கண்ணிமை போலே எனை வளர்த்தாரே
கடமையை நான் மறவேனா
காரிருள் போலே ----- பாழான சிதையில்
கனலானார் விதிதானோ...!

என்ற பாடல் தவிர்ந்த வேறு எந்தப் பாடலும் தந்தையின் அன்பு, பாசம், அவசியம் பற்றி அவ்வளவாகப் பேசவில்லை. வழமையாக எம.ஜி.ஆர் படங்களில் தாயை முன்னிறுத்தியே பாடல்கள் அமைந்திருக்கும். இப்படத்தில் சற்று வித்தியாசமாக தந்தையை முன்னிறுத்தி இப் பாடல் அமைந்துள்ளது. ஆனாலும் இப் பாடல் ஏனோ பெரியளவில் பேசப் படவில்லை. நல்ல வரிகள், நல்ல இசை, நல்ல குரல்வளம் இருந்தும் இந்தப் பாடல் பிரபல்யமாகாததால்தானோ என்னவோ பிற்காலத்தில் யாரும் தந்தையைப் பற்றிப் பாடாமலே விட்டு விட்டார்கள். அவ்வப்போ ஓரிரு பாடல்கள் திரைப்பங்களுக்காகப் பாடப் பட்டிருந்தாலும் அவைகள் கூட ஏதோ சாட்டுக்கு `தந்தை´ என்ற சொல்லை பிரயோகித்தனவே தவிர தாயின் அன்பை வெளிப்படுத்திய பாடல்கள் போல் தந்தையின் அன்பை வெளிப்படுத்திய பாடல்களாக அமையவில்லை.

இது பலபேரின் மனதில் ஒரு குறையாகவே இருந்து கொண்டுதான் இருந்தது. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் திரையுலகம் எமக்குத் தந்த இப்பாடல் எம் எல்லோரையும் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை.

அந்த வானின் தீபங்கள் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் இரண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய் தந்தை போலே
உலகில் உறவில்லையே

தாய்தானே அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்

நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி
தாய்க்குப் பூசைகள் செய்க
இமயமலைகளும் ஏழு கடல்களும்
தந்தை நாமமே சொல்க

கடும் கோபங்கள் நானும் பார்த்ததில்லை
ஒரு சுடு சொல்லுக் கூடக் கேட்டதில்லை
ஒரு ஏழைத்தாய் போல்
உலகில் தெய்வம் இல்லை.

தந்தை காலடி தாயின் திருவடி
நல்ல மகனுக்குக் கோயில்
அன்பின் முகவரி என்ன என்பதை
கண்டு கொள்கிறேன் தாயில்

நான் உறவென்ற தீபம்
ஏற்றி வைத்தேன்
அதில் உயிரென்ற எண்ணெய்
ஊற்றி வைத்தேன்
நான் என்னில் கண்ணில்
இருவரைச் சுமந்திருப்பேன்.


தாயோடு தந்தையையும் சேர்த்து 1999 இல் வெளியான பூமகள் ஊர்வலம் திரைப்படத்துக்காகப் பாடப் பட்ட அருமையான இப் பாடலின் வரிகளில்
தாய்தானே அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்

என்ற வரிகள்தான் சற்று அதிருப்தியை வரவழைக்கின்றன. தாயின் அன்பு ஈடிணை இல்லாததுதான். அதனால் அன்புக்கு ஆதாரமாய் அவளைச் சொல்வது சாலப் பொருத்தமே. ஆனால் அறிவுக்கு ஆதாரமாய் தந்தையை மட்டும் சொல்வது பொருத்தமாக இல்லை. ஆண்களே பெரும்பாலும் பாடல் ஆசிரியர்களாய் இருப்பதால் ஏற்படும் தவறு இது.

இருந்தாலும்
உன்னி கிருஷ்ணனின் குரல் சிவாவின் இசையோடு இணைந்து பாடல் மிகவும் அற்புதமாக அமைந்து விட்டது.

சந்திரவதனா
யேர்மனி
28.4.2004

Comments

Related Articles