கல்லாய் இருந்தேன் சிலையாய்...

கல்லாய் இருந்தேன்
சிலையாய் ஏன் வடித்தாய்
சிலையாய் வளர்ந்தேன்
உயிரை ஏன் கொடுத்தாய்.

உளியின் ஓசை படத்தில் இந்த அழகான கவிதை வரிகள். அழகான இக்காதல் பாடல் அழகான கவிதை வரிகளோடு எத்தனைதரம் கேட்டாலும் திரும்பத் திரும்பக் கேட்கத் தோன்றும் இப்பாடல். இளையராஜாவின் இசையமைப்பில் இப்பாடல். இப்பாடலில் வரும் காட்சி அமைப்பு பழைய படங்களை ஞாபகப்படுத்துகின்றது.

பெண்:

கல்லாய் இருந்தேன்
சிலையாய் ஏன் வடித்தாய்
சிலையாய் வளர்ந்தேன்
உயிரை ஏன் கொடுத்தாய்.

கல்லாய் இருந்தேன்; சிலையாய் ஏன் வடித்தாய். சிலையாய் வடித்தது மட்டுமல்லாமல் சிலையுருக்கொண்ட என்னைக் காதல் உயிர்தந்து வளர்த்தாய். தேன் எனினும் இன்பச் சுவையை உணர்வில் தினம் தினம் உண்டு திளைக்கும்போதில் நீ தீண்டுவாய் எனத்தினம் தினம் துடிக்கின்றேன்.

பெண்:

உன் நெஞ்சின் உணர்வுகள்

இங்கு என்னுள்ளில் புகுந்ததே

சொல்லி வருமோ வருமோ

சொல்லை எடுத்துத் தருவாய்

கல்லாய் இருந்தேன்

சிலையாய் ஏன் வடித்தாய்.

என்னவனே உன்னை நினைக்காத நேரம் இல்லை. உன்னை நினைக்காத நாளுமில்லை. ஒவ்வொரு நாளும் விளக்கேற்றி அருகில் உன் பொன்முகம் பார்க்கின்றேன்.

சிலையின் அழகை அள்ளிப்பூண்டு ஓர் அற்புதப்பாலம் தந்து எனக்கு ஆயிரம் ஆசைகளை ஊட்டிநிற்கின்றாய். கருவும் காரணமும் இனிதே அறிந்தவன் நீ கூறாயோ அந்த பேரின்பத்தின் ஆனந்தத்தை.

ஆண்:

உன்னைப் பார்த்த கண்கள்

விலகாது என்றும்

உன்னிலே பதியும்.

உன்னில் பதிந்த என் கண்கள் உலகமே அழிந்தாலும் விலகாது பதிவாய் உறையும். என்னை நான் இழந்து தேடும் வேளையில்தான் நான் அறிந்தேன் உன்னுள்தான் நான் என்று. ஆனால் நீ என் கண்களில் இருக்கின்றாய் காட்சிப்படிவமாக. அந்த மீன்களின் கண்ணே அழகு என்றிருந்தேன் என்னவளின் கண்ணைப் பார்க்கமுதல். உலகத்தில் இருக்கும் மொத்த அழகையும் நான் உன்னிடத்தில் கண்டேன்.

ஆண்:

சுழன்றாடும் கனவில்

சொல்லாது சென்று

சுகத்திலே அலையும்.

நிற்கும் கனவுகளில் வந்து போகும் வனிதையே நீ சொல்லாமல் தரும் எத்தனை எத்தனை வானவில்லின் வண்ணங்களைப்போல் முகம் காட்டி நீ மறையும் ஒவ்வொரு வேளையிலும் சொர்க்கம் சென்று வரும் இன்பம் காண்கின்றேன். நீ என் சுகம் காணும் இராகம்.

பெண்:

யார் யார்க்கு மண்ணில்

நிலைக்காத அழகு

காலத்தின் ஒழுங்கு

யார் யார்க்கு என்று எழுதிய விதிகள் அழகைக்கொட்டி ஒழுங்குபடுத்திய உலகைப்போல் என்னையும் உன்னையும் சேர்த்திடும். காலத்தின் அழகும் நிலையான ஒழுங்குதான்.

நீ தந்த அழகில் நிறைந்துவிட்டது என் உள்ளம். இனி அதற்கு முதிர்ச்சியில்லை. இழமைப் பூங்காற்றில் உன் மென்கரம் தழுவி கொஞ்சிடும் உறவாய்.

ஆண்:

நீ எனக்குத் தந்த

நிலையான அழகில்

கூடுமோ வயது.

உன் இராகத்தின் ஆலாபனையில் என் உயிர்நின்று ஆடும். உறவாட வரம் தந்து வழியொன்று சொல் கண்ணே. கரைகின்ற காலத்துக்குள் கடந்து செல்லும் வயதென்பார். ஆனால் நீ தந்த சுகம்தனில் முதுமையே தொலைந்ததே. இன்றும் இழமையின் சிறகுகள் விரிகின்றது என் மனதுள்.

ஆண்:

உன் உடல்தனில்

என் உயிர்தனை

கடந்து என்றும் வாழ்வேன்.

காலங்கள் நம்மை பிரிக்குமோ

சிலையோடு சேர்ந்து

காலநேரம் நின்றது.

உன் உடலும் கலந்தும் உறவாடும் உடலே போயினும் என் உடல் வாழும் உன் உறவாய்.

மென்காற்றுத் தழுவிடும் கொஞ்சும் உணர்வில் என் உயிர் விழிகளில் நுழைந்து உடல் கலந்த உறவாய் வென்று நிற்போம் காதல் உலகை.

இனிப்பிரிவு என்பது எமக்குள் இல்லை. காற்றும்கூட சிலகணம் எமக்குள் நுழைய முயன்று தோற்றுப்போகும். எமக்குள் இனி இடைவெளி இல்லை.

பெண்:

என் கண்கள் கூறும்

நீ தந்த பாவம்

உனக்குதான் புரியும்.

உன் நெஞ்சின் அன்பின் சுவையை என் நெஞ்சு அறியும். இருநெஞ்சும் இணைந்து ஒருயிரான பின்பு பிரிவு என்பதில்லை எமக்குள். தார் போற்றும் பேர் உறவு எம் உறவு. இவ்வுறவு இனிதான பின்பே இனி எங்கே எமக்குள் பிரிவு.

பெண்:

உள் அன்புகொண்டு

உறவாடும் நம்மை

புரியுமோ பிறர்க்கு

நீயோ ஓர் அழகின் சிலை உனக்கு உயிர்தந்து உன்னதம் பெற்றவன் நான். என் உணர்வுகளுக்குள் உன் காதலைப் புதுப்பித்துப் பார்க்கின்றேன். இனிப் பிரிவு என்பதில்லை. பிரியாத உன் உறவைச் சொல்லுவதற்கு மொழிக்குள் சொல்லில்லை. அது இன்றுமில்லை இனியுமில்லை.

ஆசையும் உழியின் ஓசையும்

எனது உயிரின் நாதமாகும்.

காதலாய் இதைச் சொல்லவா?

என்றும் அழியும் உலகில்

அழிந்துதிடாத எம் உறவிது.

கல்லாய் கல்லாய்

கல்லாய் இருந்தேன்

சிலையாய் வடித்தாய்

உயிரை ஏன் கொடுத்தாய்.

காட்சிகளில் வடியும் கவிதை உணர்வாய் என்றும் நீ என் இதயத்திற்குள் சின்மசொற்பனம். மனிதன் தொலைவது பெண்ணின் பார்வைக்குள்தானோ என்று தோன்றுகிறது. நானும் உன் பார்வைக்குள் தொலைந்து போனேனோ என்று எண்ணுகின்றேன். உன் உயிருக்குள் நான் நுழைந்து இடம்தேடி உன் இதயக் கதவுகளை பூக்கள் கொண்டு திறந்து பார்க்கின்றேன். அதுதான் என் இருப்பிடம்.

என் உயிரோசை நீயாயிருக்க விழிவழி வந்துசெல்லும் பெரெழில் சிலையே நீ எனக்கு சிலை தொடும் உளியின் ஓசை மீட்டிடும் புதிய நாதமாகும். இதை நான் காதலென்று சொல்வதா? காதலென்றால் இது காலமுள்ள மட்டும் வாழும். உலகே அழிந்தாலும் பிரியாத சொந்தம் எம் சொந்தம்.

கனடாவிலிருந்து

அல்பேட்டா மோகன்.

Related Articles