பார்த்த முதல் நாளே உன்னைப்...

படம்: வேட்டையாடு விளையாடு
பாடல்: பார்த்த முதல் நாளே
எழுதியவர்: கவிஞர் தாமரை

பார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே
காட்சி பிழைபோலே உணர்ந்தேன் காட்சி பிழைபோலே

ஆம் முதற்சந்திப்பு, முதற்காதல், முதல் முத்தம், முதல் உறவு எப்பொழுதும் எண்ண அலைகளுள் சுற்றிக் கொண்டே இருக்கும். எண்ண அலைகளுள் எத்தனையோ ஆயிரம் சிந்தனைகள் சுற்றிச் சுழன்றடிக்கும். அத்தனைக்குள்ளும் ஆழப்புதைந்து உறைந்திருக்கும். பார்த்த முதல்நாள்ப் பார்வையே நெஞ்சினில்ப் புதைந்து அழிக்க முடியாமல் ஆழப்புதைந்திருக்கும்.

ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறிப்பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய உன்முகம்
என்றும் மறையாதே.

நினைவுகளுக்குள் சிறகடிக்கும் காட்சிகள் அத்தனையும் பொருத்திப் பார்க்கின்றேன். எதுவுமே பொருந்தவில்லை. இது பொருந்தாத காட்சியோ? என்னவென்று புரியவில்லை. இது காட்சிகள் மயக்கமா? இல்லையெனில் என் கண்களில்தான் மயக்கமோ?

காட்டிக் கொடுக்கிறதே
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே
உன்விழியில் வழியும் பிரியங்களை
பார்த்தே கடந்தேன் பகலிரவை
உன் அலாதி அன்பினில் நனைந்தபின்
நனைந்தபின் நானும் மழையானேன்.
 

உன் விழியில் ஊற்றெடுத்த அன்பு மழையைப் பார்த்தேன். அன்பு மழையைப் பார்த்தேன். ரசித்தேன். அதில் குழித்துச் சிலிர்த்தேன். இப்பொழுது நானும் உனக்கான மழையானேன். இது இருவரும் நனையும் காதல் மழை. இதை எழுதியதும் ஒரு பெண் கவி தாமரை. அந்தப்படதுக்காக எழுதப்பட்ட வரியாக இருந்தாலும் அந்தப் பெண்கவி காதலைத் தொட்டு, சுவைத்து சுகிர்த்து எழுதியுள்ளார். அந்தக் கவிவரிகளுக்கும் அந்தக் கவியை எழுதிய பெண் கவி தாமரைக்கும் எனது வாழ்த்துக்கள்.

காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்
தேடிப்பிடிப்பதுந்தன் முகமே
தூக்கம்  வருகையில் கண்பார்க்கும் கடைசி
காட்சிக்குள் நிற்பதும் உன் முகமே

வைகறைப்பொழுதில் இளம்குளிர் தென்றல் வந்து தொட்டுத் தழுவும் கிழக்குச் சுடரொளியும் சூடான சுகம் தரும். பட்சிகள் அத்தனையும் குரல் கொடுத்துத் துயிலெழுப்பும். அந்த அழகான காட்சிகளுக்குள்ளும் என் முகம் தேடிப்பிடிப்பது உன் முகமே.

துயிலெழுவது போலத்தான் நாம் உறக்கத்துக்குச் செல்வது. உறங்கப்போகும் போதும் உற்சாகம்தான் பிறக்கின்றது. தூக்கம் கண்களைத் தழுவும்போதும் விழிமடல்கள் மூடியபின் ஓரப்பார்வைக்குள் உன் முகம்தான் தெரிகின்றது. உறக்கம் எப்படி உற்சாகமானது இப்பொழுது தெரிகின்றதா? துடிப்பான உயிர் உள்ளத்துக்குள் சதிராடிக்கொண்டிருக்கின்றது. காதலில் கருவறையில் கருத்தரிப்பதும் உன் பார்வை தானோ. பெண்ணின் காதல் உணர்வைப் பாடல்களாக எழுதியது அதிகம் ஆண் கவிஞர்கள்தான். அவர்கள் பெண்ணின் உணர்வை உணராமல் எழுதிய கவிதைகள் அவைகள். ஆனால் பெண்ணின் உணர்வை உயிர்ப்போடு எழுதியவர் பெண்கவி தாமரை அவர்கள். அந்தப் பெண்கவி தாமரை அவர்கள் ஆணின் காதல் உணர்வை எப்படி எழுதியிருக்கின்றார் என்று பாருங்கள்.

என்னைப்பற்றி எனக்கே தெரியாத பலவும்
நீயறிந்து நடப்பதை வியப்பேன்
உனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்.

பெண்கள் பொதுவாகவே குறிப்பறிந்து செயல்படும் இயல்புடையவர்கள். அந்த வகையில் ஆணுக்கு எப்பெப்ப என்னென்ன தேவையோ அதை அவ்வப்போது அறிந்து கொடுக்கும் பெண் என்று ஆண்கள் பலர் எழுதியுள்ளார்கள். ஆனால் இந்தப் பெண் கவி ஆணின் வாயிலாகவே பெண்ணிடமிருந்து எதை எப்பெப்ப ஆண்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்பதைக் கூறுகின்றது இந்த வரிகள்.

பெண்கள் ஆணுக்குத் தேவையானவற்றை அறிந்து நிறைவேற்றுகின்றார்கள். ஆணால் எது எதை பெண்ணுக்குத் தேவை என்பதை அறிந்து கொள்ளாமல் தவிக்கின்றார்கள் ஆண்கள். அதைத்தான் அந்த வரிகளும் காட்டி நிற்கின்றன. ஆண்கள் அவசரப்புத்திக்காரர்கள் என்பார்கள் அதனால்தானோ என்னவோ பெண்களுக்குத் தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்யத் தவறுகின்றார்கள். ஆகவே பெண்நிலையிலிருந்து ஆண் பற்றியதான ஒரு பார்வை சற்றுத் தெளிவாகின்றது.

போகின்றேன் என நீ பல நூறு முறைகள்
விடைபெற்றும் போகாமல் இருப்பாய்
சாரி சாரி யென்று உன்னைப்போகச்சொல்லி
கதவோரம் நானும் நிற்கச் சிரிப்பாய்.

பெண்கள் என்றுமே பிரிவுக்கு எதிரி பிரிந்து செல்வதற்கு நாட்டமில்லாமலேயே பிரிவதுக்கு எத்தனிக்கும். விடை பெற்ற பின்பும் விடைபெறமுடியாமல் துடிக்கும். உள்ளங்கள் அங்கே பிரிவுக்கு அப்பால் காதலன் காதலி காதலுடன் உருகுவதும் உயிர் குழைவதும், உணர்வுப் பெருக்கத்தினால் பூக்காடாகி விடுகின்றது. தமிழ்க்காதலர்கள் எப்பவுமே அத்தனை உணர்வுகளையும் அடக்கி அடக்கி ஒடுக்கி வைத்திருப்பார்கள். அது எப்பொழுது வெடித்து பிரபிக்கின்றதோ அன்றுதான் சிக்கல்கள் ஆரம்பமாகின்றது. இதையும் பிரிய முடியாமல் தடுக்கும் உணர்வுகள்தான். ஆயினும் பிரிவோம் என்று விடைபெற்றாலும் பிரியவிடாமல் தடுப்பதுதான் ஏதோ ஒரு பிணைப்பு. அதைக்கூடச் சிலவேளைகளில் ஆண்களால் சொல்லமுடியும். ஆனால் பெண்னால் சொல்ல முடிவதில்லை. அதைக் காட்டிக்கொடுப்பது பெண்களின் கண்கள்தான் அதனால்தான் கவி ஆணின் வாயிலாகத் தருகின்றார். காதல் வழிகின்றதே காதல் வழிகின்றதே என்று.

உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்
தூங்காமல் அதைக் கண்டு நான் ரசித்தேன்

தூக்கம் மறந்து நான் உன்னைப்பார்க்கும் காட்சி
கனவாக வந்ததென்று நினைத்தேன்.

காதலி எதைச் செய்கின்றாள் எப்படி இருக்கின்றாள் என்பதைக் காதலன் மறைந்திருந்து பார்ப்பதிலித்தான் மகிழ்ச்சி அடைகின்றான். அதைப் பெண் நித்திரை கொள்ளும்போது நித்திரையைக் கூடச்சித்திரமாய் ரசிப்பான். அதுவும் அற்புதம்தான் பெண் தூக்கத்தில் சிரிப்பதை ரசிக்கும் காதலன் அவனுக்கே தன்னில் சந்தேகமேற்படுகின்றது. இது கனவா, அல்லது நனவா என்று. அதனால் தானோ என்னவோ காட்சி பிழை எனக்கவிஞர் குறிப்பிட்டிருக்கின்றார். பாடலின் அடுத்த வரிகளுள் கவிஞர் கற்பனைச்சிறகை உயர உயரப் பறக்கவிட்டுள்ளார்.

யாருமே மானிடரே இல்லாத இடத்தில்
சிறு வீடு கட்டிக்கொள்ள தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை
மரம் தோறும் செதுக்கிடவேண்டும்.

அவர்களின் ஆசை எந்த ஒரு மானிடப்பிறப்பும் இல்லாத இடத்தில் வீடு கட்டித் தனித்து வாழவேண்டும் என்ற ஆசை. அது காதலர்கள் யாருக்குமே வரக்கூடிய இயல்பான ஆசைதான். அது அவர்களுடைய சுய ஆசைகளைப் பத்திரப்படுத்திப் பகிர்ந்து கொள்ளப் பொருத்தமான இடமாக இருக்கும். அந்த வாழ்க்கை என்றுமே அழியாமல் இருக்க வேண்டும் என்பது அவர்களின் ஆசை. அது காதலின் வெற்றியோடு என்றுமே நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான். அதனால்தான் காதலர்கள் மரணித்தாலும் காதல் நிலைத்திருக்கும்.

கண்பார்த்து கதைக்க முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்
கண் கொட்டமுடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்.

பெண்ணானவள் எப்படி தான் வாழவேண்டும் என்ற கற்பனையை வாழ விரும்பும் வாழ்க்கையையும் நெட்டெனெத் தெளிவுபடுத்துகின்றது. கவிஞர் பெண் என்ற நிலையில் பார்க்கும்போது அனைத்துப் பெண்களும் காதல் வயப்பட்ட நிலையில் தனிமை என்பது அவர்களை வாட்டத் தொடங்கிவிடும். அந்த வாட்டமானது எப்பொழுதும் துணையைத் தேடிய வண்ணம் இருக்கும். கண்கொட்டாமல் காதலனைப் பார்க்கத் துடிக்கும் கண்கள். சலிக்காத கணங்கள் காதலைத் தூண்டிக் கசிய வைக்கும். அதனால்தான் காதலர்கள் முதல்ப்பார்வையை எண்ணி எண்ணி மகிழ்ந்திருப்பர். கனவுகளுக்குள் கரைந்து போவார். காதல் உலகம் மிகப்பெரியது. அது காதலன் காதலியினால் மட்டும்தான் உணர முடியும்.

கண் பேசும் வார்த்தைகளால் நான் தவிக்கின்றேன் வாய் வார்த்தைகள் கொல்லுமென்பார்கள். ஆனால் உன் கண் பார்வையைக்கூட என் இதயத்தைக் குத்திக் கிழிக்கின்றது. இன்பத்தையும் துன்பத்தையும் இனம் காணாமல் இருக்கச் செய்யும் ஒரு உணர்வுதான் காதல். உன் பார்வைகள் என்னை தழுவாதபோது நான் துன்பப்படுவதுண்டு. ஆயினும் அதிலும் ஒரு சுகமான காதல் சுனைதானே என்று நான் என் மனதை நிறைவு செய்து கொள்வேன்.

கண்ணுக்குள் சதிராடும் காரிகை நீ பேசவோ, பார்க்கவோ, எத்தனை தடைகளிருந்தாலும் அத்தனையையும் தாண்டி என்னையும் உன்னையும் பிணைத்து வைத்திருப்பது காதல் என்னும் மெல்லிய நூல். இது மென்மையிலும் மென்மையாக இருக்கின்றது. என்னையும் உன்னையும் கட்டி இழுப்பதும் அந்தக் கயிறுதான். அந்த அன்புக்கயிறு பாசம், பரிவு, நேசம் என் என்னை இணைய வைத்திருக்கின்றது.      

- அல்பேட்டா மோகன்             

Related Articles