ஐஸ்கிறீமின் விலை 400 யூரோவுக்குச் சற்று அதிகம்

வசந்த காலம் ஆரம்பமாகிவிட்டது. ஏப்ரல் மாதத்தில் வழமையாகப் பெய்யும் மழை இந்த வசந்தத்தில் ஏனோ இன்னமும் இல்லை. ஆனால் இன்னுமொன்று இருக்கிறது. கோடையில் இருக்க வேண்டிய வெய்யில் வசந்தத்தில் வந்திருக்கிறது. சூரியனுக்குத் தாராள மனதா? இல்லை கொரோனாவில் வீடுகளுக்குள் அடைந்து கிடப்பவர்களை வெளியே இழுத்துவிடும் எண்ணமா? தெரியவில்லை. வெறிச்சோடி இருக்கும் வீதிகளில் எல்லாம் சூரியன் வெளிச்சம் ஓடி இருக்கிறான். வெப்பநிலை 25 செல்ஸியசைக் கடந்திருக்கிறது.

இந்த நேரத்தில்தான் 800 சதுர மீற்றர் பரப்பளவுக்குள் உள்ள வியாபார நிலையங்களை மீண்டும் திறந்து வியாபாரங்களை ஆரம்பிக்க யேர்மன் அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது. அதற்குள்ளும் சலூன்கள், பார்கள், உணவகங்கள் என்று சிலவற்றுக்கான அனுமதி இன்னமும் மறுக்கப் பட்டிருக்கின்றன. ஆனாலும் வெப்பமான கால நிலை, மக்களின் விருப்பங்கள் எல்லாவற்றையும் கணக்குப் போட்டு ஐஸ்கிறீம் நிலையங்களைத் திறப்பதற்கு யேர்மனிய அரசாங்கம் மனமுவந்து அனுமதி அளித்திருக்கிறது. அனுமதி வழங்கப் பட்டிருந்தாலும் ஏகப்பட்ட கெடுபிடிகள் அங்கே இருக்கின்றன.

ஐஸ்கிறீமை வாங்கிக் கொண்டு கடையை விட்டு வெளியே போய்விட வேண்டும். நிலையத்துக்குள் வைத்து அதைச் சுவைப்பதற்கு அனுமதி இல்லை.  விற்பனை நிலையத்துக்கு அப்பால் அதுவும் 50 மீற்றர் தள்ளி நின்றே ஐஸ்கிறீமைச் சுவைக்க வேண்டும். ஐஸ்கிறீம் விற்பனை நிலையத்துக்குள் அதிகப் பட்சம் மூவர் மட்டும் அனுமதிக்கப் படல் வேண்டும். அனுமதிக்கப் படுபவர்களுக்குள் சமூக இடைவெளி பேணப்படல் வேண்டும். வாடிக்கையாளர்கள் நிற்பதற்கான இடங்கள் தரையில் அடையாளப் படுத்தப் பட்டிருக்க வேண்டும். விற்பனையாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்... என்றெல்லாம் ஏகப்பட்ட நிபந்தனைகள். இவற்றுக்கெல்லாம் கட்டுப்பட்டவர்களே விற்பனை நிலையத்தைத் திறக்க முடியும்.

 Nordrhein- Westfalen மாநிலத்தில் உள்ள ஐஸ்கிறீம் நிலையம் ஒன்றுக்கு ஐஸ்கிறீம் வாங்குவதற்காக Jenniferஉம் Patrickகும் சென்றார்கள். தங்களுக்கு விருப்பமான ஐஸ்கிறீமுகளையும் வாங்கிக் கொண்டார்கள். வெளியில் வெய்யில், கையில் உருகி ஓடும் ஜஸ். மனதில் மகிழ்ச்சி. சட்டம் ஒழுங்கு எல்லாம் அவர்களுக்கு  மறந்து போக ஐஸை நாக்கால் நக்க ஆரம்பித்தார்கள். ஐஸ்கிறீமின் சுவை தெரியும் முன்னே அவர்கள் முன்னே பொலீஸார் வந்து நின்றனர். ஐஸ்கிறீமை விற்பனை நிலையத்தில் இருந்து 50 மீற்றர் தூரத்தில்தான் சுவைக்கலாம் என்ற விதியை மீறியதற்காக 400 யூரோக்கள் அவர்களுக்கு அபராதம் தரப்பட்டது.

“இது அவர்கள் குற்றமல்ல. இங்கே சொல்லப்பட்ட விதிகளை நாங்கள் கடைப் பிடிக்கிறோம். தவறுதலாக நடந்திருக்கிறது. பொலீஸாரின் இந்த நடவடிக்கையால் வாடிக்கையாளர்கள் கோபம் கொள்ளக் கூடும் என்பதால் வேண்டுமானால் எனது வாடிக்கையாளரின் தண்டனைப் பணத்தை நானே செலுத்துகிறேன்” என ஐஸ்கிறீம் விற்பனை நிலைய உரிமையாளர் Giuseppe Sambito பொலிஸாரிடம் கேட்டிருக்கிறார்.

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். இது என்ன புது நடைமுறை. சாப்பிடுவதற்கே யேர்மனியில் தண்டம் செலுத்த வேண்டுமா? நாங்கள் இதற்குச் சட்ட நடவடிக்கை எடுக்கிறோம்” என்று Jenniferஉம் Patrickஉம் பொலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.


Drucken   E-Mail

Related Articles

நூறாண்டுக்கு மேல் வாழ்க!

நானும் காத்திருக்கிறேன்

காதல் என்பது காட்டாறு

பேக்கரிக்குள் ரொயிலற் ரிசு

பதின்ம வயது Vitor Rafael

குறைந்த வயது மரணம்

ஆறு வாரங்களில் ஒரு கருவி

செய்திகள்

இன்னுமொரு வழக்கு