ஈஸ்டர் முயலார் வருவாரா?

ostern, osterhase, paula,
யேர்மனியில் மார்ச் 16ந் திகதி வந்த அரசாங்க அறிவிப்பின்படி தனிமைப் படுத்தல் மேலும் இரண்டு வாரங்கள் அதிகமாக்கப்பட்டு ஏப்ரல் 3ந்திகதிவரை நீடிக்கப் பட்டிருக்கிறது.

ஈஸ்டர், கிறிஸ்மஸ் இரண்டுமே யேர்மனியில் பிரதானமானவை. ஈஸ்டர் திருநாளை ஒட்டி யேர்மனியில் வெள்ளி முதல் திங்கள்வரை நான்கு நாட்கள் பொது விடுமுறை இருக்கிறது. பாடசாலைக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை. யேசுவை சிலுவையில் அறைந்த வெள்ளிக்கிழமையில் அநேக யேர்மனியர்கள் இறைச்சி சாப்பிடுவதில்லை. ஆனால் மீன் சாப்பிடுவார்கள். விருந்தினர்கள் வருகைகள், அன்பளிப்புகள் என்று யேசு உயிர்த்த ஞாயிறில் அவர்கள் களித்திருப்பார்கள்.

ஈஸ்டர் திருநாளில் முட்டைகளுக்கு வர்ணம் தீட்டி, அவற்றைத் தோட்டங்களில் ஆங்காங்கு ஒளித்து வைத்து விட்டு பிள்ளைகளிடம் கூடைகளைக் கொடுத்து, “ஈஸ்டர் முயல் தோட்டத்தில் முட்டைகளை ஒளித்து வைத்திருக்கும். போய் தேடி எடுங்கள்” என்று சொல்லி பெற்றோர்கள் அனுப்பி வைப்பார்கள். சின்னச் சின்னக் கூடைகளைக் கையில் வைத்துக் கொண்டு பிள்ளைகள் ஓடியோடி புதர்களுக்குள் முட்டைகளைத் தேடி எடுத்து ஆனந்தப் படுவார்கள்.

வழமையான பாடசாலை விடுமுறைக்கு முன்னரே மூன்று வாரங்களாக தனிமைப் படுத்தலில் வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்கும் சிறார்களுக்கு கொரோனா காலப் பகுதியில் வரும் ஈஸ்டர் திருநாள் மிகவும் சிரமமானது. இந்த வருடம் ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம் உறவினர்களோடும் நண்பர்களோடும் இல்லை என்பது பெரியவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் சிறார்களுக்கு?

யேர்மனியின் Thüringen மாநிலத்தில் உள்ள Saalfeld நகரத்தில் வசிக்கும் சிறார்களான Paula, Devin, Larissa, Hannah ஆகியோருக்கு, “இந்தத் தடவை ஈஸ்டர் முயல் வருமா? அப்படி வந்தால் முட்டைகளை எங்கே ஒளித்து வைக்கும்? இல்லாவிட்டால் ஈஸ்டர் முயலுக்கும் கொரோனா வந்திருக்குமா?” என்றெல்லாம் கவலை வந்திருக்கிறது. இது சம்பந்தமாகத் தங்களுக்குள் கதைத்துக் கொண்டார்கள். வெளியே கூட்டமாக நடமாட முடியாது. பொலீஸாரின் கண்காணிப்பில் நகரம் இருக்கிறது. ஆகவே பொலீஸாரிடமே இதைப் பற்றிக் கேட்டு விடுவோம் என்று நாலு பேரும் முடிவு செய்து பொலிஸாருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்கள்.

சிறார்களின் கடிதம் கிடைத்தும், “இருக்கிற தொல்லைகளுக்கு மத்தியில் இவங்கள் சும்மா தொல்லைகள் தந்து கொண்டிருக்கிறாங்கள்” என்று சொல்லி பொலிஸார் அதை அப்படியே தூக்கி எறிந்து விடவில்லை. நகரப் பொலிஸாரிடம் இருந்து அந்தப் பிள்ளைகளுக்கு ஒரு பதில் கடிதம் வந்தது.

"அன்பான Paula, Devin, Larissa, Hannah,
நீங்கள் நினைப்பது போல் ஈஸ்டர் கொண்டாட்டம் இந்த வருடம் இல்லாமலில்லை. அது வழமை போல நடக்கும். ஈஸ்டர் முயலார் இந்த வருடமும் வருவார். நாங்கள் நகரப் பவனி வரும் போது கவனித்தோம், வழமைபோலவே ஈஸ்டர் முயலார் ஓடித் திரிகிறார். கொரோனா பாதிப்பில்லாமல் அவர் நலமாகவே இருக்கிறார். நிச்சயாமா இந்த வருடமும் அவர் முட்டைகளை ஒளித்து வைப்பார். ஆனால் இந்த முறை அவர் தோட்டங்களிலோ பூங்காக்களிலோ ஒளித்து வைக்கமாட்டார் என்று நம்புகிறோம். அவர் உங்கள் வீட்டுக்குள் வந்து அங்கங்கே ஒளித்து வைப்பார். ஆகவே ஈஸ்டர் முட்டைகளை உங்கள் வீட்டுக்குள் தேடுங்கள். நிச்சயமாக உங்களுக்கு அவை கிடைக்கும். மகிழ்வாக இருங்கள்”

பொலிஸாரிடம் இருந்து வந்த கடிதத்தைப் பார்த்த Paula, Devin, Larissa, Hannah நால்வரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். அவர்கள் குழந்தைகளின் மகிழ்ச்சியில் பெற்றோர்கள் தாங்களும் பங்கு கொள்ள, பொலீஸாரிடம் இருந்து வந்த கடிதத்தை தங்கள் முகநூலில் பதிவிட்டிருக்கிறார்கள்.


Drucken   E-Mail

Related Articles

ஆறு வாரங்களில் ஒரு கருவி

இன்னுமொரு வழக்கு

இல்லாமை நீங்க வேண்டும்

சட்டத்தின் முன்னால்

Wie viele Kapuzenträger?

Schlemmen auf hoher See

Im Wasser gefangen