இரத்தத்துடன் சேர்ந்தது அந்தப் பாசம்

marianne, ursula
ஒவ்வொரு நாளும் தன்னை வந்து பார்த்துவிட்டுப் போகும் தனது மகள் கொஞ்ச நாட்களாகத் தன்னை வந்து பார்க்கவில்லையே என்று ஒரு தவிப்பு அந்தத் தாயிடம் இருந்தது. ‘இன்று வருவாள் நாளை வருவாள்’ என்று காத்திருந்து இரண்டு வாரங்களாகியும், மகள் வந்த பாடேயில்லை. யார் யாரோ என்னென்னவோ சொன்னார்கள். எதையுமே அந்தத் தாய் தனது காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவளது நினைப்பு முழுக்கத் தன் மகளிடமே இருந்தது.

கொரோனாத் தொற்று யேர்மனியில் பரவிய போது, முதியோர் இல்லங்களில் அதன் தாக்கத்தைத் தடுப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து செயற்படும்படி அரசாங்கம், முதியார் இல்லங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. அப்படி இருந்தும் Wolfsburg என்ற நகரத்தில் இருந்த முதியவர் இல்லத்தில் கொரோனாத் தொற்று ஏற்பட்டு பல முதியவர்கள் இறந்து போனார்கள். இந்த அதிர்சசியான நிகழ்வால், முதியோர் இல்லங்களுக்கான கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன. வெளியார்கள் மட்டுமல்லாமல் இரத்த உறவினர்கள்கூட  முதியவர்கள் இல்லங்களுக்குள் உள்நுளைய யேர்மனி முழுதும் அனுமதி மறுக்கப்பட்டது.

கட்டிலில் படுத்திருந்த 101 வயதான Ursulaவுக்குத் தூக்கம் வரவில்லை. இன்று Marianneக்கு 72வது பிறந்தநாள் ஆயிற்றே. எப்படியும் அவளைப் பார்த்து வாழ்த்துச் சொல்லியே ஆக வேண்டும் என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டார். யாரும் வெளியேறவோ உள்நுளையவோ முடியாதவகையில் முதியோர் இல்லத்து வாசலில் காவல் இருந்தது. ஆனாலும் ஒரு வழி அங்கே இருந்தது. முதியவர் இல்லத்தில் இருந்து அவசரகால வாசலால் வெளி வீதிக்கு வரமுடியும் என்பது Ursulaக்குத் தெரிந்திருந்தது.

வீதியில் தள்ளாடியபடி  நடந்து கொண்டிருந்த Ursulaவை பொலீஸ் இடை மறித்தது. தன்னைப் பற்றிய எல்லா விபரங்களையும் சொன்ன Ursula முதியோர் இல்லத்தைப் பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.

marianne, ursula
Ursula குறிப்பிட்ட இடத்துக்கு தங்கள் வாகனத்திலேயே பொலீஸ் அவரை அழைத்துச் சென்றார்கள். ஆனாலும் பொலீஸார் மிகவும் அவதானமாக நடந்து கொண்டார்கள். தாயையும் மகளையும் தூர நிறுத்திக் கொண்டார்கள். Ursulaவின் கையில் ஒரு வெள்ளை உறை இருந்தது. Marianneவுக்குப் புரிந்து விட்டது, தனது பிறந்த நாளுக்கு தாய் வாழ்த்தோடு வந்திருக்கிறார் என்று.

இதற்கிடையில் தாங்கள் பெற்ற தகவல்களின் அடிப்படையில் Ursula முதியோர் இல்லத்தில் இருந்து வருகிறார் என்பதை பொலீஸார் அறிந்து கொண்டார்கள். அவரை மீண்டும் பாதுகாப்பாக அங்கே கொண்டு போய் விட்டு விட்டார்கள்.

தாயின் பாசத்தில் உருகிப் போய் Marianne, பூக்கள், சொக்கிளேற் பக்கெற்றுக்களை வாங்கிக் கூடையில் போட்டு முதியோர் இல்லத்து வாசலில்போய் நின்றார். பின்னர் முதியோர் இல்ல நிர்வாக ஏற்பாட்டில்  Ursula மாடி யன்னலுக்கு வர அங்கிருந்தே தனது தாய் தந்த பிறந்த நாள் வாழ்த்துகளை கண்ணீருடன் Marianne ஏற்றுக் கொண்டார்


Drucken   E-Mail

Related Articles

நூறாண்டுக்கு மேல் வாழ்க!

காதல் என்பது காட்டாறு

ஆறு வாரங்களில் ஒரு கருவி

இன்னுமொரு வழக்கு

இல்லாமை நீங்க வேண்டும்

சட்டத்தின் முன்னால்