காதல் என்பது காட்டாறு

love, seiss, germany, grenze,
கடந்த இரண்டு வாரங்களாக யேர்மனி Konstanz நகரத்தில், தற்காலிகமாகப் போடப்பட்ட ஒரு வேலி யேர்மனியையும் சுவிற்சலாந்தையும் பிரித்து வைத்திருக்கிறது. வேலி போட்டதற்கான காரணம் கொரோனா.

மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து யேர்மனி, சுவிற்சலாந்து நாடுகளுக்கான எல்லைச் சோதனைகளும் மீண்டும் முன்னர் போல் ஆரம்பித்திருக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்துக்கள் அல்லது வேலை சம்பந்தமான பயணிகளுக்கு மட்டுமே சோதனைச்சாவடியில் அனுமதி கிடைக்கிறது. அதிலும் ஏகப்பட்ட கெடுபிடிகள். Konstanzநகரத்தின் ஏரியின் அருகே இருக்கும் புல்வெளியூடாக இரு நாடுகளுக்கும் இடையில் நடந்து அல்லது சைக்கிளில் செல்வதற்கான பாதை ஒன்று இருக்கிறது. அந்தப் பாதையையும் இடைமறித்து தற்காலிகமாக மார்பளவு உயரத்திலான வேலி எழுப்பப்பட்டிருப்பதால் இரண்டு நாடுகளுக்குமான மக்களின் நடமாட்டம் முற்றாகத் தடைப்பட்டிருக்கிறது.

எல்லையில் போடப்பட்ட வேலியால் இரு நாட்டு மக்களுக்கும் பலவித அசௌகரியங்கள் இருந்தாலும், நாடுவிட்டு நாடு போய்க் காதலிப்பவர்கள் பாடு பற்றித்தான் இப்பொழுது அதிகமாகப் பேசப்படுகிறது. காதலனோ காதலியோ ஒருவர் ஜெர்மனியிலும் மற்றவர் சுவிசிலும் என்று ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமல் போனதுதான் பிரச்சினையாக உருவாகி இருக்கிறது.

ஆரம்பத்தில் அவரவர் வீடுகளில் முடங்கியிருந்தவர்கள் பிறகு வேலியினூடாக ஆளை ஆள் பார்த்தாவது கொஞ்ச நேரம் மகிழலாம் என்று தீர்மானித்து தினமும் அந்த எல்லை வேலியில் கூட ஆரம்பித்தார்கள்.

பார்த்தாவது திருப்தியடையலாம் என்று போனவர்கள் ஆவல்மீறி மார்பளவு வேலியூடாக ஒருவரையொருவர் இறுக்கமாக அணைத்துக் கொண்டு, எதற்காகத் தங்களை வேலி பிரித்திருக்கிறது என்று மட்டுமல்லாமல் சுற்றியுள்ள எல்லாவற்றையும் மறந்து நின்றார்கள். இது தொடுவதும் நெருங்கி நிற்பதுவும் தவிர்க்கப்படல் வேண்டும் என்று கொரோனா கட்டுப்பாட்டுக்காகப் போடப் பட்டிருந்த விதியை மீறுவதாகும்.

காதலர்களுடன் எதற்குப் பிரச்சினை என்று இரண்டு நாடுகளும் கூடிக் கதைத்து சத்தமில்லமால் எல்லை வேலியின் உயரத்தைக் கூட்டிவிட்டார்கள். அதுவும் பலனளிக்கவில்லை. வேலிகளின் கம்பிகளினூடாக தொடுதல்களும், முத்தங்களும் தொடரத்தான் செய்தன.

இப்பொழுது முன்னர் இருந்த வேலிக்கு இரண்டு மீற்றர் இடைவெளி விட்டு இன்னுமொரு வேலியைப் போட்டிருக்கிறர்கள். காதலர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

இந்த செய்தியைக் கேட்கும் போது,“காதல் என்பது காட்டாறு - அது கண் தெரியாத மோட்டாரு” என்ற கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றது.


Drucken   E-Mail

Related Articles

நூறாண்டுக்கு மேல் வாழ்க!

ஆறு வாரங்களில் ஒரு கருவி

இன்னுமொரு வழக்கு

இல்லாமை நீங்க வேண்டும்

சட்டத்தின் முன்னால்