
நாட்டில் எங்காவது ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்து ஊரடங்குச் சட்டம் வரப் போகிறது என்று கதை அடிபட்டால் போதும். ஊரில் இருக்கும் சங்கக்கடைகள் பலசரக்குக் கடைகளில் மா,சீனி, மண்ணெண்ணெய் எல்லாம் காணாமல் போய்விடும். அப்படியான காலங்களில் பலசரக்குக் கடை உரிமையாளர்தான் ஊரில் கதாநாயகனாக இருப்பார். நாட்டில் பிரச்சினைகள் நீங்கிய பின்னர் பார்த்தால் முதலாளிகள் என்னவோ செழிப்பாகத்தான் இருப்பார்கள். அந்த நிகழ்வுகள் எல்லாம் மறந்து நீண்ட காலங்களாகிப் போயிற்று. இப்பொழுது கொரோனா வந்து அவைகளை மீண்டும் மீட்டிப் பார்க்க வைக்கிறது.
கொரோனாத் தொற்றுநோயின் அலை வீசத் தொடங்க யேர்மனியிலும் மா, சீனி, அரிசி, நூடில்ஸ் என்பவையோடு ரொயிலற் ரிசுவும் கடைகளில் காணாமல் போகத் தொடங்கியது. இங்கே அவைகளைப் பதுக்கி வைப்பவர்கள் வியாபாரிகள் அல்ல மாறாக நுகர்வோரே அவைகளை அதிகமாக வாங்கி வீட்டில் வைப்பில் வைத்துக் கொள்கிறார்கள்.
பதுக்கி வைத்துப் பொருட்களை அதிக விலைக்கு விற்று இலாபம் பார்ககலாம் என்று சிலர் எண்ணக் கூடும் ஆனால் நிலைமையைப் பயன்படுத்தியும் இலாபம் பார்க்கலாம் என்றும் சிலர் செய்து காட்டுவார்கள்.
ரொயிலற் ரிசு வாங்குவதற்கு யேர்மனியில் சனங்கள் ஓடிக் கொண்டிருக்கும் போது Dortmund நகரில் உள்ள Schuerener Backparadies பேக்கரி உரிமையாளர் Timo Kortuemக்கு ஒரு யோசனை தோன்றியது.
தனது பேக்கரியில் செய்யப்படும் கேக்குகளை ரொயிலற் ரிசு வடிவத்தில் உருவாக்கி கண்ணாடிப் பெட்டிக்குள் அடுக்கி வைத்தார். அந்தக் கேக்குகளைப் பார்த்த வாடிக்கையாளர்கள் “இதென்ன பேக்கரிக்குள் ரொயிலற் ரிசு?” என்று வியந்து போனார்கள். அந்தளவுக்கு அவை அச்சு அசலாக ரொயிலற் ரிசு போலவே இருந்தன.
Timo Kortuem முதலில் மாதிரிக்கு எட்டு கேக்குகளைத்தான் செய்து பேக்கரியில் விற்பனைக்கு வைத்தார். அவை உடனடியாக விற்றுவிட இப்பொழுது நாளொன்றுக்கு எண்பது கேக்குகளைச் செய்கிறார். அத்தனையும் விற்றுவிடுகின்றன.
“ஒரு நாளில் எண்பது கேக்குகளை வடிவமைப்பதற்கே அதிக நேரம் எடுக்கிறது. எங்களிடம் மா, மற்றும் தேவையான பொருட்கள் போதியளவில் இருக்கின்றன. வாரத்தில் ஏழு நாட்களும் எங்கள் பேக்கரி மக்களுக்காகத் திறந்திருக்கும்” என்று Timo Kortuem சிரித்தபடி தொலைக்காட்சியின் நேர்காணலில் சொல்கிறார்.