ஏப்ரல் 1 ஆம் திகதியான இன்று ஒரு கவனம் வேண்டும்.
சமூக ஊடகங்கள் மூலமாக கொரோனா வைரஸ் பற்றி ஏகப்பட்ட தகவல்களை ஆளாளுக்கு பகிர்ந்து கொண்டும் பதிந்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அவை அனைத்தையும் உண்மை என்று அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது.
இன்று ஏப்ரல் முதலாம் திகதி. முட்டாள்களின் நாளாக உலகம் எங்கும் அறியப்பட்ட நாள். தங்களது தவறான தகவல்களைப் பரப்புவதற்கு இந்த நாளை சிலர் பயன்படுத்தக் கூடும் என்ற அச்சம் பல நாடுகளுக்கு வந்திருக்கிறது.
தாய்லாந்தில் ´ஒரு தவறான செய்தியைப் பரப்புவர் ஐந்து ஆண்டுகள் வரை சிறைக்குச் செல்ல நேரிடும்` என்று அந்த நாட்டில் ஒரு வருடத்துக்கு முன்னரே சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. அந்தச் சட்டத்தை இப்பொழுது தாய்லாந்து அரசாங்கம் மீண்டும் ஒருமுறை Twitter மூலம் நினைவு படுத்தியிருக்கிறது.
தைவானில் ´தவறான செய்திகள் பரப்புவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையோடு அபராதமும் விதிக்கப்படும்` என்று ஜனாதிபதி Tsai Ing Wen தனது முகநூல் பக்கத்தில் எச்சரிக்கிறார்.
´கொரோனாவைப் பற்றிய சோடிக்கப்பட்ட கதைகளை ஏப்ரல் முட்டாள்கள் நாளான இன்று பலர் பரப்பிவிடக் கூடும். இது பலரின் நிச்சயமற்ற தன்மையை மேலும் வளர்தது விடக்கூடும்` என்று யேர்மனிய சுகாதார அமைச்சு Twitter மூலம் எச்சரிக்கிறது.
கொரோனா வைரஸ் உலகின் மூச்சுக் குழாயை அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தொற்றுநோயில் இருந்து எப்படி வெளியேறலாம் என்று எல்லோரும் தவித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் கொரோனா வைரஸ் பற்றிய தவறான செய்திகளைப் பரப்புவர்கள் பொறுப்புணர்வோடு அதை நிறுத்த முன்வரவேண்டும்.