யேர்மனியில் செப்ரெம்பரில் நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேர்தலில் எதிரும் புதிருமாக நின்றவர்களும், வெவ்வேறு கோரிக்கைகளை வைத்து தேர்தலில் போட்டியிட்டவர்களும் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலைதான் இறுதியில் உருவாகி இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அகதிகள் வருகையைக் கட்டுப்படுத்துதல், குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள், சிறார்களின் வாழ்க்கைத்தரம், முதியவர்கள் பராமரிப்பு... என பலவிடயங்களில் உடன்பாடு காண்பதில் கட்சிகள் இழுபறிபட்டுக் கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சிகள் இப்படி இழுபறிபட்டுக் கொண்டு இருக்கையில் 'யேர்மனியில் ஐந்தில் ஒரு குழந்தை வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறது. ஓய்வூதியம் போதாததால் முதியவர்கள் வறுமையில் வாடுகிறார்கள் என சமீபத்திய கணிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த வழக்கொன்று ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
அவர் பெயர் இங்கிறீட். ஒரு தையல்காரராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற அந்த மூதாட்டிக்கு வயது 84. பல்பொருள் அங்காடி ஒன்றில் உணவுப்பொருட்களை ஐந்து தடவைகள் களவாடியதாக அவர் மேல் வழக்கு ஒன்று பதிவாகி இருந்தது. ஐந்து தடவைகளும் பல்பொருள் அங்காடியில் அவர் களவாடிய பொருட்களின் மொத்த மதிப்பு 70யூரோ 11 சென்ற்ஸ் மட்டுமே. இதில் அந்த மூதாட்டி களவாடி, கண்டு பிடிக்க முடியாமல் போனது எத்தனை தடவைகள் என்பது கணக்கில் இல்லை.
“எனக்கான பென்சனே மாதம் 800 யூரோக்கள்தான். இதில் வீட்டு வாடகை, தண்ணீர், மின்சார கட்டணங்கள், மருந்துச் செலவுகள் போக 100 யூரோக்கள்தான் மிச்சமாக எனது கையில் இருக்கும் போது சாப்பாட்டுக்கு நான் என்ன செய்வது? பென்சன் போதுமானது என சமூக உதவித்தொகையும் மறுக்கப் பட்டிருக்கும் நிலையில் எனக்கு வேறு வழி தெரியவில்லை. பட்டினியின் கொடுமையினால்தான் நான் களவாடினேன்.அதற்காக உண்மையில் நான் வெட்கப்படுகிறேன்” என நீதிமன்றத்தில் அவர் தெரிவித்திருக்கிறார்.
Bayern மாநிலத்தில் மெம்மிங்கன் என்ற இடத்தில் நடந்த இந்த சம்பவத்துக்கான வழக்கு இப்பொழுது முடிவுக்கு வந்திருக்கிறது. இங்கிறேட்டின் வயது மற்றும் சுகாதார மருத்துவம் போன்றவற்றை கருத்தில் கொண்டு அவருக்கு சட்டத்தின் கருணை கண்களைத் திறக்கும் என்று பலர் நம்பி இருந்த நிலையில் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை தந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
உணவு திருடியதற்காக, 84 வயதில் ஒரு மூதாட்டிக்கு இந்தத் தண்டனை வழங்குவது நியாயமாகாது எனப் பலரது விமர்சனங்கள் வந்திருக்கிறன. இப்படியான நிலைமைகள் உருவாகாமல் பார்க்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்ற கருத்துகளும் வந்திருக்கின்றன.
சிறைக்குச் செல்லும் போது இங்கிறீட் சொன்னது இதுதான், “பட்டினியால் திருடினேன். அதற்காக நான் மிகவும் வெட்கப்படுகிறேன். நீதிமன்றத்தில் கருணை கிடைக்கும் என எதிர்பார்த்தேன். மாறாக சிறைத்தண்டனை கிடைத்தது எனக்கு தாள முடியாத சோகம்”
யேர்மனியில் ஓய்வூதியம் பெறுபவர்கள்தொகை ஏறக்குறைய 20 மில்லியன்கள். இதில் இங்கிறீட்டைப் போல குறைந்த ஓய்வூதியம் பெறுபவர்கள் தொகைதான் அதிகமாக இருக்கிறது. அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் புள்ளி விபரங்களைச் சொல்லி சத்தமாகப் பேசிக்கொள்கிறார்கள். தேர்தலின் போது மேடைகளில்,ஊடகங்களில், தேர்தல் அறிக்கைகளில் சொன்னதை எல்லாம் ஆள வரும் போது மறக்காமல் நிச்சயமாக நிறைவேற்றி விடுவார்கள். ஆனால் மறுபக்கம் எரிபொருள், மின்சாரம்,தண்ணீர், பயணக்கடணம், உணவுப்பொருட்களின் விலைகள் எல்லாம் சத்தமில்லாமல் சிறிது சிறிதாக வளர்ந்து நிற்கும்.
செப்ரெம்பரில் தேர்தல் முடிந்தாலும் ஆட்சி அமைக்க இணக்கம் காண முடியாமல் ஒக்டோபர் முடிவிலும் CDU,CSU,FDP,GRUENEN ஆகிய நாலு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. முடிவு நல்லதாக இருக்க வேண்டும். விரைவில் நானும் பென்சனுக்கான வயதுக்கு வந்து விடுவேன். பயமாக இருக்கிறது.
ஆழ்வாப்பிள்ளை
1.11.2017
இல்லாமை நீங்க வேண்டும்
ஆழ்வாப்பிள்ளை
துணுக்கு