அவளுக்கென்ன...

நாட்டின் அதிபதி, உலகப் பொருளாதார மையத்தின் தலைவர், வீராங்கனை கவிஞர், கலைஞர், எழுத்தாளர் என்று பல  உச்சங்களை இன்று பெண்கள் தொட்டிருக்கின்றார்கள்.  இப்படி  எல்லாத் துறைகளிலும் முன்னிலையில் இருந்தாலும் இவர்கள் ஆண்களுக்குச் சமமாக இன்று ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டார்களா? என்ற கேள்வி இன்னமும் இருக்கிறது.

ஐரோப்பாவைப் பார்க்கும் போது அல்லது ஆசிய ஆபிரிக்க நாடுகளுடன் ஐரோப்பாவை ஒப்பிடும் பொழுது பெண்களின் வாழ்வும், வசதியும் அவர்களுக்கான உரிமையும்  மேலோங்கி நிற்பது தெரியும். ஆனாலும் ஐரோப்பியப் பெண்களுக்கும் தொல்லைகள் இருக்கின்றன. அவர்களிடமும் அவலங்கள் நிறைந்த வாழ்வு இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தனிப்பட்ட கதை இருக்கிறது. உள்ளத்தில் காயம் இருக்கிறது. அவர்களுக்கு மேல் பிரயோகிக்கப் படும் அநேகமான வன்முறைகள்  வெளியே தெரிவதில்லை. அதாவது தெரிவிக்கப் படுவதில்லை. வெளியே சொல்வதனால் பிரச்சினைகள் இன்னும் பூதாகரமாக மாறி விடுமோ என்ற பயம். அல்லது பிறருக்குத் தெரிவிப்பதில் அவமானம் ஏற்படுமோ என்ற கூச்சம். சமுதாயத்தால் ஒதுக்கப் படுவோமோ எனும் அச்சம் போன்ற பல பிரச்சினைகளால் தங்களுக்கு மேல் தொடுக்கப் படும் வன்முறைகளை, அது வீடானாலும் சரி அலுவலகங்களானாலும் சரி பெண்கள் தங்களுக்குள்ளேயே அமுக்கி விடுகிறார்கள். இதை சமீபத்தில் வெளியான ஐரோப்பிய அடிப்படை உரிமை மையத்தின் அறிக்கை ஒன்று தெளிவாக்கி இருக்கிறது.

28 ஐரோப்பிய நாடுகளில் ஐரோப்பிய அடிப்படை உரிமை மையத்தினால் பெண்களிடம் தனிப்பட்ட முறையில் நடாத்தப்பட்ட ஒரு ஆய்வு கடந்த 05.03.2014 இல் வெளியாகி இருக்கிறது. ஐரோப்பாவில் மூன்றில் ஒரு பெண் உடல் ரீதியாக வன்முறைகளைச் சந்திக்கிறாள் அல்லது பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப் படுகிறாள். வீதியில், அலுவலகங்களில், நான்கு சுவர்களுக்குள் பூட்டிய வீட்டுக்குள் என்று இந்த வன்முறைகள் அரங்கேறுகின்றன. வீட்டில் துணைவனால் அல்லது உறவினரால், வெளியில் நண்பர்களால், மற்றும் தெரியாத நபர்களினால் என்று பெண்கள் மீது வன்முறைகள் எப்பொழுதும் பிரயோகிக்கப் பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.

மேலும் இந்த ஆய்வின் படி ஐரோப்பாவில் மட்டும் ஏறக்குறைய 62 மில்லியன் பெண்கள் உடல் ரீதியான வன்முறைகளையும் 3மில்லியனுக்கு மேலான  பெண்கள் பாலியல் கொடுமைகளையும் சந்திக்கிறார்கள். பெண்களுக்கான இக் கொடுமைகள் அநேகமானவை அவர்களது 15வது வயதில் இருந்தே ஆரம்பமாகின்றன. இவ்வாறான வன்முறைகள் ஐரோப்பாவின் வடக்கு நாடுகளிலேயே அதிகம் நடைபெறுகின்றன. விகிதாசாரங்களோடு பார்க்கையில் பெண்களுக்கான வன்முறைகள் இடம் பெறும் நாடுகளில், டென்மார்க் நாடு முதல் இடத்தில் இருக்கின்றது. டென்மார்க்கில் மட்டும் இவ்வாறான கொடுமைகளின் விகிதம் 52ஆகப் பதிவாகி இருக்கிறது. பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும், அதுவும் பெண் ஒருவரை அதிபரைக் கொண்டிருக்கும் யேர்மனியில் இவ்வாறான வன்முறைகள் 35 வீதம் என அறியும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

இந்த ஆய்வின் முடிவில் ஐரோப்பிய அடிப்படை உரிமை மையத்தின் இணைப்பாளர் மோர்றன் கஜெர் இப்படிக் குறிப்பிடுகிறார் „ பல பெண்கள் தங்கள் மேல் பிரயோகிக்கப் படும் வன்முறைகளை வெளியில்  தெரிவிக்காத வகையில், பெண்கள் மீதான வன்முறைகள் நாங்கள் தந்த புள்ளி விபரங்களை விட அதிகமானதாகத்தான் இருக்கும்'

ஐரோப்பிய நிலையே இதுதான் என்றால், இலங்கையில் உள்ள பெண்கள் நிலை பற்றிப் பேசவே தேவை இல்லை. தமிழரது நிலப் பரப்பு மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டது. இன்று அதற்கு மேலால் சிறீலங்கா இராணுவத்தால் சூழப் பட்டிருக்கிறது. அந்த இராணுவம் தமிழரது கலாச்சாரங்களை; சீரழிப்பதில் அதீத முனைப்புக் காட்டுகிறது. அதற்குக் கருவியாக சிறீலங்காவின் இராணுவம் பெண்களையே குறி வைக்கிறது.

போரினால் ஏகப்பட்ட விதவைகள் உருவாகி விட்டார்கள். அவர்களது பரிதாபங்களைச் சொல்ல முடியவில்லை. சிறையில் வாடும் சகோதரிகளின் அவலங்கள் சிறைக் கூடங்களுக்குள்ளேயே அமுக்கப் படுகின்றன. வேண்டாத கலாச்சாரங்களை பாடசாலை மாணவர்கள் மத்தியில் உருவாக்கி விடுகிறார்கள். போதாதற்கு இப்பொழுது தமிழ்ப் பெண்களை இராணுவத்துக்குள் இழுத்து விட சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கையை அமோகமாகத் தொடங்கி இருக்கிறது.

ஆக பெயரளவில் நாங்கள் மகளிர் தினத்தை நினைவு கூருகிறோமே தவிர நிலமைகளில் மாற்றங்கள் எங்களிடம் இல்லை. 93 வருடம் மகளிர் தினம் கண்டு விட்டோம் அடுத்த வருடமும் மகளிர் தினம் வரும். இதுதான் நிலமை. ஏணியும் பாம்பும் என்று ஒரு விளையாட்டு இருக்கிறது. ஏறுவதும் சறுக்குவதுமாக அந்த விளையாட்டு இருக்கும். ஆனால் இங்கே சறுக்குவது மட்டும்தான் நிலையாக இருக்கிறது.

ஆழ்வாப்பிள்ளை

8.3.2014

Related Articles

சர்வதேசப் பெண்கள் தினம்

ஆண்-பெண் நட்பு