ஆண்-பெண் நட்பு


உதாரணமாக, வீடு மட்டுமே உலகமாக்கப்பட்டு வளரும் பெண் பிள்ளைகள் வீட்டுக்கு வந்து போகும் அண்ணனின் நண்பனையோ அல்லது பக்கத்து வீட்டு யன்னலில் தெரியும் வாலிபனையோ காதலிக்கத் தொடங்கி விடுகிறார்கள். .

இதிலிருந்தாவது பெற்றோர்கள், பிள்ளைகளைக் கட்டி வைப்பதால், அவர்கள் மனதையோ, உணர்வுகளையோ கட்டி வைக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அத்தோடு இப்படி வளர்க்கப்படும் பெண்பிள்ளைகள் உலகத்தைக் காணத் தவறி விடுகிறார்கள். மனிதர்களின் நியமான குணங்களைப் புரிந்து கொள்ள முடியாமற் போய் விடுகிறார்கள். தமது வட்டத்துக்குள் தாம் சந்திக்கும் யாராவது ஒரு ஆண்மகனை (அவன் அண்ணனின் நண்பனோ, அல்லது பக்கத்து வீட்டு யன்னலில் தெரிபவனாகவோ இருக்கலாம்) அவன் நல்லவனா, கெட்டவனா, தனக்குப் பொருத்தமானவனா என்று தெரியாமலே கண் மூடித்தனமாய் காதலிக்கத் தொடங்கி விடுகிறார்கள். எந்த வித முன் யோசனையுமின்றி கல்யாணத்துக்குத் தயாராகியும் விடுகிறார்கள். ஆனால் வெளியில் போய் ஆண், பெண் என்ற பேதமின்றி எல்வோருடனும் நட்புடன் பழகும் ஒரு பெண், யாராவது ஒருவனைக் கண்டவுடன் காதலிக்க மாட்டாள். நட்புடன்தான் பழகுவாள். .

இப்படிப் பலருடன் நட்புடன் பழகும் போது யாராவது ஒருவரின் குண இயல்புகள், பழக்க வழக்கங்கள் அவளுக்குப் பிடிக்கும் போது, அங்கு அது காதலாகவும் மலரலாம். இந்தக் காதல் தப்பு என்று கருத வேண்டிய அவசியம் இல்லை. இந்தக் காதல் ஒருவகையில் நல்லதும் கூட. ஒருவரையொருவர் ஓரளவு முதலே தெரிந்து கொண்ட இவர்களின் மணவாழ்வு பெரும்பாலும் புரிந்துணர்வும், ஒற்றுமையும் மிகுந்ததாகவே இருக்கும். .

"எங்கடை பெடியள் சரியில்லை." இது பெண்ணைப் பெற்றவர்கள் பலரின் வாய்ப்பாடமும், மனக்கருத்தும். இது மிக மிகத் தப்பானதொரு கருத்து. ஆண்கள் கெட்டவர்கள், பெண்கள் நல்லவர்கள் என்றில்லை. நல்லவர்களும், கெட்டவர்களும் இருபகுதியிலும் உள்ளார்கள். அந்தக் கெட்டவர்கள் ஏன் உருவானார்கள் என்பதைத்தான் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். .

இங்கு நாம் எடுத்துக் கொண்ட விடயத்துடன் பார்த்தால், ஆண், பெண் என்ற பாகுபாடின்றி வளரும் போது பெண் பிள்ளைகளுடன் கதைப்பதை, ஒரு சாதனையாக ஆண் பிள்ளைகள் கருதவே மாட்டார்கள். கதைப்பதற்கென்றே அலையவும் மாட்டார்கள். எமது வாழ்க்கை முறையின் தவறினால்தான் இந்தத் தப்புகள் எல்லாம். .

சின்ன வயதிலிருந்தே பால் பாகுபாடின்றி ஒன்றாக நட்புடன் வளரும் பிள்ளைகள் மத்தியில் ஏற்படும் தவறுகளைவிட, "நீ ஆண், நீ பெண்" என்று பிரித்து, தனிமைப் படுத்தப்பட்டு வளர்க்கப்படும் பிள்ளைகளின் மத்தியில்தான் தவறுகள் அதிகமாக ஏற்படுகின்றன. .

12, 13 வயதுகளின் பின், ஒரு பெண் பிள்ளைக்கு பெண் நண்பிகளைத் தவிர, வேறு ஆண் நண்பர்களே இல்லாத போது அவளுக்கு யாராவது ஒரு ஆணுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டால், உடனேயே அவனில் காதல் வந்து விடுகிறது. இப்படியான காதலின் போது, இவனுடனான என் வாழ்வு இனிமையாக அமையுமா? இவன் போக்கும் என் போக்கும் பொருந்திப் போகுமா..? என்பது போன்ற பல விடயங்களைச் சிந்தித்துப் பார்க்கும் மனப்பக்குவம் இல்லாது போய் விடுகிறது. இதே போலத்தான் ஆண் பிள்ளைகளின் நிலையும். .

ஆனால் ஆண், பெண் என்ற பாகு பாடின்றி நட்புடன் பழகும் பிள்ளைகளிடம், இவன் அல்லது இவள் எனக்குப் பொருத்தமானவளா? இவன் அல்லது இவளுடன் காலம் பூராக வாழ முடியுமா..? என்பது போன்ற பல விடயங்களைச் சிந்தித்துப் பார்க்கும் மனப்பக்குவம் தாராளமாக இருப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது. .

ஆதலால் ஆண்-பெண் பால் பாகுபாடின்றிய நட்பு அவசியம். பெண் பிள்ளைகளும் உலகத்தைப் பார்க்க பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். தவறுகள் நடவாதிருக்க உரிய வயதிலேயே உடல் ரீதியான, உணர்வுகள் சம்பந்தமான சில முக்கிய விடயங்களை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து அவர்கள் மனதில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். .

அதைவிடுத்து பெண் பிள்ளைகளை ஆண்களுடன் பழக விடாது வீட்டுக்குள் வைத்து வளர்ப்பதுதான் சரியென நினைத்து பிள்ளைகளையும் மனரீதியாக வதைத்து, பெற்றோர்கள் தம்மையும் தாமே வதைத்துக் கொண்டு, ஏதோ, "நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்கின்றோம்." என்று சொல்வது அனாவசியச் செயலே. .

சந்திரவதனா.
ஜேர்மனி

ஒலிபரப்பு - ஐபிசி தமிழ்(வாலிபவட்டம் 1999)
பிரசுரம் - ஈழமுரசு - பாரிஸ் (13-19ஆடி-2000)
பிரசுரம் - செம்பருத்தி - மலேசியா (ஆவணி-2002-இதழ்-7)
பிரசுரம் - வடலி - லண்டன் (மார்ச்-2003)
மின்னூல் - நாளைய பெண்கள் சுயமாக வாழ... (March 2016)

Comments

 

Comments

 

சந்திரவதனா, இதுவொரு மிகச் சிறந்த பதிப்பு. கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னார், "பெண்கள் நல்ல புடவை கட்டினால் ஒன்றும் தோன்றுவதில்லை. ஆனால் ஜீன்ஸ் போன்ற உடைகள் அணியும் பொழுது கிண்டல் செய்யவும் தவறு செய்யவும் தோன்றுகிறது. ஆகையால் பெண்கள் புடவை கட்டிக் கொள்ள வேண்டும்," என்றார்.

எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவரிடம் சொன்னேன். "உங்கள் அம்மை சீலை கட்டிக் கொண்டிருப்பதால் உங்களுக்கு சீலை கட்டிய பெண்களை அப்படிப் பார்க்க முடியவில்லை. தன்னுடைய தாயை ஜீன்சிலும் பனியனிலும் பார்த்த பையன்கள் அந்த மாதிரி பிள்ளைகளைப் பார்க்கும் பொழுது அதிகம் தோன்றாது. ஆக கோளாறு உங்கள் பார்வையில். ஏன் ஆடையைக் காட்டுகிறீர்கள்?" என்றேன்.

பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு கலை. பெண்பிள்ளையோ ஆண்பிள்ளையோ இருவரையும் உருப்படியாக வளர்க்க வேண்டும்.

Posted by G.Ragavan 24.5.2005 10:58:58 AM


 

You never fail to suprise me.

Posted by eswara prasadh 24.5.2005 11:45:28 AM


 

ராகவன்
சரியாகச் சொன்னீர்கள்.

கோளாறு அனேகமான சமயங்களில் பார்வைகளிலும் அவரவர் மனங்களிலும்தான். பின்னர் ஏதோ உடைகளும் நடைகளும்தான் காரணம் என்று சொல்லி விடுகிறார்கள்.

திரண்ட புஜங்களையும், விரிந்த மார்பகங்களையும், நிமிர்ந்த தோற்றங்களையும் கண்டு பெண்களெல்லாம் ஆண்கள் மேல் ஆசை கொண்டால்... அதற்கு ஆண்களின் ஆடை குறைப்பின் மேல் யாராவது குற்றம் சொல்வார்களா?

Posted by Chandravathanaa 27.5.2005 06:52:27 AM

 

Haran
நல்ல ஒரு பதிவு....

நான் ஊரில் வளர்ந்த பொழுது, பெண்களுடன் சகவாசமே வைத்துக் கொண்டதில்லை... வீட்டில், உறவினர்களால் அப்படியே வளர்க்கப்பட்டு விட்டோம்.

வெளி நாடு என வந்த பின்னர், இங்கு அனைவருடனும் சகஜமாகப் பழகி வாழும் பெண்களுடனும் நாம் ஏதோ ஒரு வகையில் (பாடசாலையிலா அல்லது வேலைத் தளங்களிலா) தொடர்பு வைத்திருந்தே ஆக வேண்டிய நிலை.

ஆரம்பத்தில் எனக்கு இது மிகவும் கடினமாக இருந்தது... இங்கு பிறந்து வளர்ந்த தமிழ் பெண்களும் சிலர் அவ்வாறே... பாகுபாடின்றிப் பழகுவர். எனக்கு அவர்களுடன் ஆரம்பத்தில் நட்புடன் பழகுவது என்பது பொய்ப் பேச்சாகவே தோன்றியது... பின்பு அவர்களுடன் பழகப் பழக... அவர்களும் நம்மைப் போன்றவர்களே எனும் எண்ணம் வந்து விட்டது. இப்பொழுது எனக்கு எவ்வளவு ஆண் நண்பர்களோ.. அவ்வளவு பெண் நண்பர்களும் உள்ளார்கள்... இதையே சில நம் தமிழர்கள் அப்படி பழகக் கூடாது என்றோ... அல்லது, நான் ஒரு பெண் நண்பர் ஒருவருடன் பேசினால்... என்ன கேர்ல் பிரண்டோ என்றும் கேட்கின்றார்கள்... ஒரு விதத்தில் அவர்கள் மீது கோபம் வரும்.. இன்னும் ஒரு விதத்தில் யோசித்துப் பார்க்கையில் அவர்களுடைய அறியாமையை எண்ணி அவர்கள் மீது பரிதாபமாக இருக்கும்.

Posted by ChandravathanaaMittwoch, Mai 23, 2007 3:33:00 vorm.

Related Articles

அவளுக்கென்ன...

சர்வதேசப் பெண்கள் தினம்