வல்லவன் வாழ்வான்

எம்ஜிஆர் என்ற ஒரு நடிகனுக்கு எப்படி இப்படியான ஒரு சிறப்பு வந்தது? நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது. இவர் சென்ற அந்த உச்சத்துக்கு இனி எந்த ஒரு நடிகனும் சென்று தொட்டு வர வாய்ப்பே இல்லை என்றளவுக்கு இவரது சாதனை உயரமானது. ஒரு நூற்றாண்டு கடந்தும் இன்னும் பலரது நினைவுகளில் இவரது பெயர் ஆழப் பதிந்து இருக்கிறது.

சற்றே அசந்தால் கூட கீழே தள்ளிவிடும் கட்டுக்கடங்காத இரட்டைக் குதிரைகள்தான் சினிமாவும் அரசியலும். ஒரே நேரத்தில் இவ்விரண்டையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு சாகசப் பயணம் செய்து வெற்றிக் கொடி நாட்டியவர் இவர் ஒருவராகத்தான் இருக்கும். அதனால்தான் சினிமாவில் புரட்சி நடிகராகவும் அரசியலில் புரட்சி தலைவராகவும் இவர் விழிக்கப்பட்டார் போலும்.

என்டிஆர் கூட எம்ஜிஆரின் அரசியல் வெற்றியைப் பார்த்த பிறகே துணிவு கொண்டு அரசியலில் குதித்தார் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு கடுமையாகப் போராட வேண்டும். பிறகு பிடித்த இடத்தை தக்க வைக்க இன்னும் அதிதீவிரமாகப் போராட வேண்டும். இதுதான் சினிமா உலக விதி. இந்த இரண்டு விடயத்திலும் எம்ஜிஆரின் போராட்டம் ஒன்றும் சாதாரணமானது கிடையாது.

மலையாளி என்பதால் இவரால் "ப" உச்சரிக்க முடியவில்லை, முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டத் தெரியவில்லை, மொத்ததில் எம்ஜிஆருக்கு நடிக்கவே தெரியவில்லை என்று இவரது முதல் படத்திலேயே பேச்சுக்கள் எழ ஆரம்பித்தன. அத்தனை அவமானங்களுக்கு மத்தியிலும் நடித்த போதும் அந்தப் படம் பாதியிலேயே நின்று போய்விடுகிறது. மீண்டும் ஐந்துக்கும் பத்துக்கும் என்று சிறு சிறு வேடங்களில் இவரது முப்பது வயது மட்டும் காலங்கள் ஓடுகிறது. முப்பதாவது வயதில் மீண்டும் நாயகன் பாத்திரம் இவரைத் தேடி வருகிறது. ஆனால் நாயகியை விட குறைந்த சம்பளம். ஆனாலும் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

எடுத்த உடனேயே திரையுலகில் சாகச நாயகனாகத் தன்னைக் காட்டிக் கொள்ள இவருக்கு நிறையவே சிக்கல்கள் இருந்ததன. ஏற்கெனவே திரையுலகில் நடிகர் ரஞ்சன் ஒரு சாகச நாயகனாக நிலை பெற்றிருந்தார். ஆடல், பாடல், அதிரடிச் சண்டைகள் என றஞ்சன் திரையில் அமர்க்களப் படுத்திக் கொண்டிருந்த பொழுது றஞ்சனைவிட தன்னை உயர்வாகக் காட்ட இவரது அடுத்த போராட்டம் ஆரம்பமானது. றஞ்சன் இந்தித் திரையுலகை நோக்கித் தன் பார்வையை சற்றுத் திருப்பிய பொழுது கிடைத்த அந்தச் சின்ன இடைவெளியில் தமிழ் திரையில் தன்னை சாகச நாயகனாக எம்ஜிஆர் நிலைநிறுத்திக் கொண்டார்.

எம்ஜிஆரின் இடத்தை அசைத்துப் பார்க்க திரையுலகில் நுளைந்தவர்தான் சி.எல்.ஆனந்தன். விஜயபுரி வீரன் படத்தில் சி.எல்.ஆனந்தனின் வாள் வீச்சும், "ரோஜா மலரே ராஜகுமாரி" என்று இளவரசி சச்சு மீது காதல் கொள்ளும் பாணியும் எம்ஜிஆரின் வயிற்றில் நிச்சயமாகப் புளியைக் கரைத்து ஊற்றி இருக்கும். இத்துடன் சாண்டோ சின்னப்பாதேவருடனான எம்ஜிஆருக்கு ஏற்பட்ட முரண்பாடும் எம்ஜிஆருக்கு அடுத்த தலைவலியைத் தந்திருக்கும். சாண்டோ சின்னப்பாதேவருக்கும் எம்ஜிஆருக்குமான தகராறு தாய்க்குப்பின் தாரம் படத்திற்குப் பின்னால் ஆரம்பமாயிற்று. அதன் பின்னர் சின்னப்பா தேவர் எம்ஜிஆரை கைவிட்டு விட்டு றஞ்சன், உதயகுமார், ஜெமினி கணேசன், சி.எல். ஆனந்தன் போன்றோரை வைத்து திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். இதே நேரத்தில் எம்ஜிஆரின் போதாத காலம் நாடகத்தில் நடிக்கும் பொழுது ஒரு சண்டைக் காட்சியில் பயில்வானை தலைக்கு மேலே தூக்கும் பொழுது கால் முறிந்து ஒரு வருடம் படுக்கையில் இருக்க வேண்டியதாயிற்று.

எஸ்.ஏ.அசோகனை கதாநாயகனாக வைத்து சான்டோ சின்னப்பாதேவர் ஒரு படம் உருவாக்கிக் கொண்டிருந்தார். இன்னொரு அதிரடி கதாநாயகனை சமாளிக்கும் திறன் அப்பொழுது எம்ஜிஆரிடம் குறைந்து போயிருக்க வேண்டும். முதற்கட்டமாக சாண்டோ சின்னப்பாதேவரைச் சந்தித்து அவருடன் சமரசம் செய்து கொண்டார். எம்ஜிஆரின் பேரில் கொண்ட அபிமானமும், தாய்க்கும் பின் தாரம் படத்தின் வெற்றியும் சாண்டோ சின்னப்பாதேவரை மனம் மாற்றி விட்டது. ஏற்கெனவே திட்டமிட்டிருந்த திரைக்கதையை எம்ஜிஆருக்கு ஏற்ப மாற்றம் செய்து நாயகனாக உருவாக வேண்டிய அசோகனுக்கு வில்லன் பாத்திரத்தைக் கொடுத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான் தாய் சொல்லைத் தட்டாதே. இந்தப் படம் தேவருக்கு நல்ல இலாபத்தைத் தந்ததால் தொடர்ந்து "த" வரிசையில் எம்ஜிஆரை வைத்து படங்களை எடுக்க ஆரம்பித்தார். அதேவேளையில் தனது தயாரிப்பில் வெளிவந்த படங்களில் மறக்காமல் அசோகனுக்கு நடிக்க வாயப்பும் கொடுத்துக் கொண்டிருந்தார். தன்னால் நாயகன்அந்தஸ்து அசோகனுக்குக் கிடைக்காமல் போய்விட்டதே என்ற குற்றஉணர்ச்சியினால்தானோ என்னவோ தன்னுடைய அநேகமான படங்களில் அசோகனுக்கு வாய்ப்புகளை எம்ஜிஆரும் பெற்றுக் கொடுத்திருந்தார்.

சில காலங்களுக்குப் பின்னர் எம்ஜிஆரை வைத்து தேவர் எடுத்த தனிப்பிறவி என்ற படத்தில் இதுவரையில் நாயகனாக நடித்துக் கொண்டிருந்த சி.எல்.ஆனந்தனுக்கு வில்லன் பாத்திரம் கொடுக்கப்பட்டது. படத்தில் எம்ஜிஆரிடம் மோதி அடிவாங்கி சி.எல்.ஆனந்தன் தோற்று சிறைக்குப் போவார். இங்கிருந்துதான் சி.எல்.ஆனந்தனை திரையுலகில் இருந்து ஓரம் கட்டும் எம்ஜிஆரின் பணி சத்தமில்லாமல் ஆரம்பமாயிற்று. பின்னாளில் வந்த நீரும் நெருப்பும் படத்தில் வாழைத்தோட்டத்தில் எம்ஜிஆருடன் நடக்கும் வாள் சண்டையில் தோற்று ஆடைகள் இழந்து அவமானப்பட்டு உள்ளாடையுடன் 'விஜயபுரி வீரன்' சி.எல்.ஆனந்தன் ஓடிப் போவார். அந்தப் படத்தில் தோற்று ஓடியவர்தான் பின்னாளில் திரையில் சி.எல்.ஆனந்தனை காணவே முடியவில்லை.

அடுத்து எம்ஜிஆருக்குச் சவாலாக இருவர் திரை உலகில் பிரவேசித்தார்கள். ஒருவர் ரவிச்சந்திரன். மற்றவர் ஜெய்சங்கர். இதில் ரவிச்சந்திரன் ஆடல், அதிரடி என்று அட்டகாசப் படுத்தினார். ரவிச்சந்திரனின் முதல் படமான காதலிக்க நேரமில்லை வர்ணப் படமாகவும் வியாபார ரீதியாக வெற்றிப் படமாகவும் அமைந்திருந்தது. இவரது முதல் படம் மட்டுமல்ல அடுத்து வந்த இதயக் கமலமும் ஒரு வெள்ளி விழாப் படமே.

எம்ஜிஆரின் பிரதான தயாரிப்பாளராக இருந்த ரி.ஆர்.ராமண்ணா பறக்கும் பாவை படத்தோடு எம்ஜிஆரின் உறவை முறித்துக் கொண்டு ரவிச்சந்திரனை வைத்து நான், குமரிப்பெண்,மகராசி என்று வரிசையாகப் படங்களை எடுக்கத்தொடங்கினார். எம்ஜிஆரைச் சீண்டுவதற்காக, ரவிச்சந்திரனை 'சின்ன எம்ஜிஆர்' என அடைமொழி கொடுத்து பொம்மை சினிமா மாதஇதழ் கட்டுரை எழுதி வெளியிட்டது. "வசூலில் கலக்கிறாரே இவர் ரவிச்சந்திரனா? ராமச்சந்திரனா?" என பேசும் படம் இன்னொரு பக்கம் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றியது. எம்ஜிஆரை விட ரவிச்சந்திரனுக்கு ஜெயலலிதா, நாயகியாக சிறப்பாகப் பொருந்துகிறார் என வார சஞ்சிகைகள் விம
ர்சனங்கள் எழுதின. அந்த விமர்சனங்களிலும் உண்மை இருந்தது. ரவிச்சந்திரன் ஜெயலலிதா இணைந்து நடித்த மோட்டார் சுந்தரம்பிள்ளை, கெளரி கல்யாணம், நான், குமரிப்பெண், மகராசி என்று எல்லாமே வெற்றிப்படங்களாக அமைந்திருந்தன. ஆனாலும் கதாநாயகனுக்கு முன்னுரிமை உள்ள கதைகளைத் தெரிவு செய்யாமல் ரவிச்சந்திரன் நடித்துக் கொண்டிருந்தார். இது எங்கே போய் முடியும் என்று எம்ஜிஆருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். ரவிச்சந்திரனும் ஜெயலலிதாவும் தொடர்ந்து இணைந்து நடிக்காமல் மட்டும் பார்த்துக் கொண்டார். எம்ஜிஆரின் கணிப்பு சரியாகவே இருந்தது. மக்கள் நாயகனாக ரவிச்சந்திரனால் திரையுலகில் நிலைகொள்ள முடியவில்லை.

ஆடல் என்பது ஜெய்சங்கருக்கு சுட்டுப் போட்டாலும் வராது. ஆனாலும் துள்ளிக் குதித்து ஓடுவதும், பாய்ந்து பாய்ந்து சண்டை போடுவதும் அவருக்குப் பல ரசிகர்களை இழுத்து வந்திருந்தது. நடிப்பை முகத்தில் காட்டத் தெரியாது என்றாலும் தென்னகத்து 'ஜேம்ஸ் பொண்ட்' என்ற பட்டப் பெயர் அவருக்கு வந்திருந்தது. வாரந்தோரும் வெள்ளிக்கிழமைகளில் இவரது படங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. எம்ஜிஆருக்கு மக்கள் திலகம் பட்டம் இருந்தது போல் இவருக்கு மக்கள் கலைஞர் என்ற பட்டம் சேரந்து கொண்டது. இவரை இப்படியே வளர விட்டால் ஐம்பது வயதைத் தாண்டிய தான் திரையுலகில் காணாமல் போய்விடுவேனோ என்று பயந்த எம்ஜிஆரின் அடுத்த திட்டம்தான், ஜெய்சங்கரை தனது படத்தில் நடிக்க வைப்பது என்பது. படத்தில் ஜெய்சங்கருக்கு இரண்டு தட்டுத் தட்டி அவரைக் கீழே விழுத்தி விட்டு, தான்தான் உசத்தி என்று திரையில் காட்டுவதே எம் ஜி ஆரின் பிரதான நோக்கமாக இருந்திருக்க வேண்டும். அதற்காகத் தொடங்கப்பட்ட படம்தான் 'ஒரு தாய் மக்கள்' திரைப்படம். எம்ஜிஆர், சரோஜாதேவி ஜெய்சங்கர் நடிக்க அந்தப் படத்திற்காக சில காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், ஜெய்சங்கர் காரணங்கள் சில சொல்லி மெதுவாக படத்தில் இருந்து விலகிக் கொண்டார் பின்னர் அந்தப் படத்தில் எம்ஜிஆருடன் ஜெயலலிதா, முத்துராமன் இணைந்து நடித்தார்கள்.

1967 இல் எம்ஜிஆர் சுடப்பட்ட போது அது அவருக்கு இரட்டைப் பலனைக் கொடுத்தது. அவர் சுடப்படுவதற்கு முன்னர் அவர் நடித்த சில படங்கள் வெற்றியைப் பெறவில்லை. அநேகமான அவரது படங்கள் சுமாரான வெற்றியைத்தான் பெற்றன. ஆனால் எம்ஜிஆர் சுடப்பட்டதன் பின்னர் எழுந்த அலை அவரைத் திரையுலகில் இன்னும் உச்சத்துக்கு கொண்டு போனது. அரசியலிலும் அவர் சார்ந்த திமுக வெற்றி பெற அரசியல் பலமும் அவரிடம் சேர்ந்து கொண்டது. அதற்குப் பிறகு பெரிய போட்டியாளர்கள் என்று எம்ஜிஆருக்கு எதிராக யாருமே வரவில்லை.

கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் இடையில் மோதல்கள் தொடங்கிய போது கருணாநிதியால் நன்கு திட்டமிட்டு திரையுலகில் களம் இறக்கப்பட்டவர்தான் அவரது மூத்த மகனான மு.க.முத்து. ஆடல், பாடல், அதிரடி என்று எம்ஜிஆர் போலவே வேசம் கட்டி வந்த மு.க.முத்துவை தனது ஆழ்ந்த அனுபவத்தால் இலகுவாகவே திரையுலகை விட்டே எம்ஜிஆர் வெளியே அனுப்பினார்.

எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்தால் எம்ஜிஆர் நல்லவர் என்று திரையில் தன்னைக் காட்டிக் கொண்டாலும் திரைக்குப் பின்னால் வில்லத்தனம் கொண்ட வல்லவர் என்பது பரியும்.

ஆழ்வாப்பிள்ளை
11.11.2016


பிரசுரம் – வெற்றிமணி, ஐனவரி 2017

Related Articles