மாறுதல் தருமா தேருதல்

"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடல் சிரஞ்சீவியான ஒரு சினிமாப் பாடல். மலைக்கள்ளன் படத்திற்காக 1954 இல் கவிஞர் கோவை ஆனைமுத்து எழுதிய பாடல் இது. ஆனால் படத்தில் அவர் பெயர் இடம் பெறவில்லை. அதனால்தானோ என்னவோ இந்தப் பாடலை தஞ்சை ராமதாஸ் எழுதியதாக இன்னமும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாடலுக்கு சுப்பையா நாயுடு இசை அமைத்திருந்தார். எம்ஜிஆருக்காக ரி.எம்.செளந்தரராஜன் பாடிய முதல் பாடல் என்ற பெருமையும் இந்தப் பாடலுக்கு இருக்கிறது.

தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்... ஆளுக்கு ஒரு வீடு கட்டுவோம் என்று இந்தப் பாடலில் சமுதாய முன்னேற்றத்தைச் சொன்னாலும்,
"சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்.
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி..."
என்று காங்கிரசாரை நோக்கி விரலையும் சாமர்த்தியமாக நீட்டி இருப்பதைக் காணலாம். இத்தனைக்கும் இந்தப் படத்துக்கு கதை எழுதிய நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் ஒரு காங்கிரஸ்கார்.

காமராஜர் ஆட்சியில் ஊழல் என்ற சொல்லே இருந்ததில்லை. காமராஜருக்கும், அறிஞர் அண்ணாவுக்கும் பின்னால் வந்தவர்கள் எல்லாம் ஊழல் செய்யாமல் ஆட்சியில் இருந்தது இல்லை. அறிஞர் அண்ணா ஓர் ஆண்டு காலம்தான் ஆட்சியில் இருந்தார். அண்ணா மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவர் ஆட்சிக்காலத்திலேயே அவரது அருமைத் தம்பிகள் அண்ணாவுக்கே தெரியாமல் திரை மறைவில் ஊழலை அரங்கேற்றி இருப்பார்கள். அண்ணா தனது அருமைத் தம்பிகள் எல்லோரையும் நன்றாக அறிந்து வைத்திருந்ததால்தான் "வா தம்பி, வந்து அரசுப் பொறுப்பை ஏற்றுக்கொள்" என்று நெடுஞ்செழியனை மட்டும் அழைத்தார். அண்ணா இருந்த போதும், பின்னாளில் திமுகவிலும் சரி அதிமுகவிலும் சரி நெடுஞ்செழியன் இரண்டாவது இடத்திலேயே இறுதிவரை இருந்து மறைந்து போனார்.

„எம்ஜிஆர் ஒரு அழகான குரோட்டன் செடி. அவர் முகம் காட்டினாலே போதும் ஆயிரம் வாக்குகள் தானாக வந்து விழும்“ என்று அண்ணா சொன்னார். எம்ஜிஆரின் செல்வாக்கு என்ன என்பது அண்ணாவுக்குத் தெரியும். 1967இல் திமுக ஆட்சி அமைக்க எம்ஜிஆரின் செல்வாக்கே காரணம். ஆனால் எம்ஜிஆரின் பலத்தை குறைத்து எடை போட்டு மூன்று மணி நேர சினிமா எங்கள் ஆட்சியை எதுவும் செய்து விடாது என்று கருணாநிதி போட்ட கணிப்பு, சினிமாதான் இறுதிவரை என்று சொல்லிக்கொண்டு இருந்த எம்ஜிஆரை 1977 இல் முதலமைச்சர் நாற்காலியில் கொண்டு போய் அமர்த்தியது.

திராவிடர்கழகத்துக்கு தேர்தலில் நிற்பதிலோ ஆட்சியைப் பிடிப்பதிலோ ஈடுபாடு இருக்கவில்லை. அண்ணாவுக்கோ ஆட்சியைக் கையகப்படுத்தினால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்ற நம்பிக்கை. அண்ணாவின் அந்த நம்பிக்கைக்கு பெரியார், மணியம்மை திருமணம் கதவைத் திறந்து வழி விட்டது. அண்ணா தனது அருமைத் தம்பிகளோடு திகவை விட்டு வெளியே வந்து திமுகவைத் தொடங்கி ஆட்சியை அமைத்துக்கொண்டார். கழக உடன் பிறப்புக்களுக்கு நாள் தவறாமல் கடிதம் எழுதிக் கொண்டே அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதி தனது வாரிசு அரசியலை ஆரம்பித்தார்.

கருணாநிதியின் வாரிசு அரசியலைக் கண்டு மிரண்டு போன எம்ஜிஆருக்கு, இப்படியே போனால் தனக்கு திமுகவில் எதுவுமே இருக்கப் போவதில்லை என்பது விளங்க ஆரம்பித்தது.
"கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது
தருமம் வெளியேறலாம்
தருமம் அரசாளும் தருணம் வரும் போது
தவறு வெளியேறலாம்
நல்லவர் லட்சியம்
வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்

ஒரு தாய் வயிற்றில் வந்த உடன் பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்
நல்ல மனிதனுக்கும் நன்றி மறந்தவர்க்கும்
முன்பு உறவிருந்தால் பின்பு பிரிவு வரும்"
என்று இரத்தத்தின் இரத்தங்களுக்காக பாடிக்கொண்டு எம்ஜிஆர் திமுகவை விட்டு வெளியேறி அண்ணா கண்ட திமுக என்று தனது ராஜப்பாட்டையிலே நடக்க ஆரம்பித்தார்.

அதிமுகவை ஆரம்பித்த பொழுது திமுக ஆட்சியில் எம்ஜிஆர் பல சிரமங்களைச் சந்தித்திருக்கிறார். "நான் ஏன் பிறந்தேன்" என்று ஆனந்த விகடனில் தொடராக எழுதி வந்த கட்டுரையை "நான் கடந்து வந்த அரசியல் பாதை" என்று மாற்றிக் கொண்டார். நடிகைகள் யாரையாவது கட்சியின் பிரச்சாரத்துக்காக பயன் படுத்தலாம் என்றால் கே.ஆர்.விஜயா முதல் கொண்டு ராஜசுலக்சனா வரை எம்ஜிஆருக்காக மேடை ஏற யாருமே முன் வரவில்லை. போதாதற்கு கருணாநிதியின் காய் நகர்த்தலும் அரசியல் சாணக்கியமும் எம்ஜிஆரை அமைதியாக இருக்க விடவில்லை.

"இலங்கையில் சிங்களவர்களால் தமிழர்கள் தாக்கப்படுகிறார்களே அது பற்றி உங்கள்கருத்து என்ன?" என்று ஒரு நிருபர் அரசியல் கேள்வி ஒன்றை எம்ஜிஆரிடம் கேட்ட போது, "இலங்கையில் எனக்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமல்ல பல சிங்கள ரசிகர்களும் இருக்கிறார்கள்" என சினிமா நடிகனாகப் பதில் அளித்து கருணாநிதியிடம் மாட்டிக் கொண்டார். எம்ஜிஆரின் இந்தப் பதில் கருணாநிதிக்குப் போதுமானதாக இருந்தது. கருணாநிதி, தமிழ் - மலையாளி பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டார். தனது மகன் மு.க. முத்துவைக் கொண்டு "தன் பாட்டன் தமிழை காக்கும் படையில் நான் ஒரு தொண்டனுங்க" என்று சினிமாவில் பாட வைத்தார்.

https://m.youtube.com/watch?v=HUT-Iejcd1M

இந்தப் பிரச்சினையில் இருந்து வெளியே வருவதற்கு தமிழீழப் போராளிகளுக்கு ஆதரவாக இருப்பதாக எம்ஜிஆர் தன்னைக் காட்டிக் கொண்டார். ரெலோ இயக்கம் கருணாநிதியின் பக்கம் சாய்ந்து விட்டதால் எம்ஜிஆர் விடுதலைப் புலிகளை ஆதரிக்கத் தொடங்கினார். அன்று தங்களது அரசியலுக்காக பாவிக்க தொடங்கிய ஈழத்தமிழர் விவகாரத்தை தமிழக அரசியல்வாதிகள் இன்றும் தேர்தல் வரும் போது கையில் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள்.

திண்டுக்கல் இடைத்தேர்தலில் அண்ணா திமுகவின் பலம் பலரை எம்ஜிஆர் பக்கம் இழுத்து வந்தது. அவரை விட்டு விலகியவர்கள் நெருங்கி வரத் தொடங்கினார்கள். அப்பொழுது எம்ஜிஆர் ஆனந்த விகடனில் `நான் கடந்து வந்த அரசியல் பாதை´ எழுதிக் கொண்டிருந்த நேரம். அதே நேரம் குமுதம் வார இதழில் ஜெயலலிதா தனது சுயசரிதையை எழுதிக் கொண்டிருந்தார். அவர் எழுதி வந்த சுயசரிதை எம்ஜிஆரின் மதிப்பைக் குறைக்கும் விதமாகப் போய்க் கொண்டிருந்தது. துக்களக் சோ பின்னணியில் இருந்து கட்டுரையினை எழுத ஜெயலலிதாவைத் தூண்டியதாக ஊகங்கள் ஒரு பக்கம் வந்து கொண்டிருந்தன. இப்படியே போனால் எம்ஜிஆரின் வண்டவாளங்கள் எல்லாம் வெளியே வந்து விடும் என்றிருந்த நிலையில் குமுதத்தில் ஜெயலலிதாவின் சுயசரிதை எதுவித காரணங்களும் சொல்லப்படாமல் நிறுத்தப்பட்டது. "இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் அம்மு" என்று ஜெயலலிதாவுக்கு அதிமுகவில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை எம்ஜிஆர் கொடுத்தார்.

சினிமாவில் எம்ஜிஆரின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வந்து,
"சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கெது சொந்த வீடு
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு"
என்று வாழைத்தோட்டங்கள் வரப்புகள் என்று சுதந்திரமாக ஆடிப் பாடியபடியே தெலுங்குப் பக்கம் போன ஜெயலலிதா
"உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தின் இறைவன்"

என்று மீண்டும் எம்ஜிஆரிடமே வருகிறார் என்றால் அதற்கு தனியாக அர்த்தம் சொல்லத் தேவையில்லை.

சேர்ந்து இருந்தே குழி பறிப்பது தமிழக அரசியலில் சாதாரணம். ஆனால் தனிவழியில் போய்க் கொண்டிருப்பவர்களை ஆசை காட்டிக் கூட்டி வந்து இருப்பதையும் பிடுங்கிக் கொண்டு பிறகு வெளியே தள்ளி விடுவதும் கழக அரசியலில் காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி தனிவழியில் போனவர்கள்தான் மூப்பனார், வைகோ, ராமதாஸ், திருமாவளவன், விஜயகாந் போன்றவர்கள். இரு கழகங்களுக்குள்ளே போய் அவர்கள் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதுதான் இப்பொழுது அவர்களை ஒருங்கிணைத்தும் இருக்கிறது. மாற்றம் வேண்டும் என்று குரல் கொடுக்கவும் வைத்திருக்கிறது.

இதுவே எனது கடைசித் தேர்தல் என்று சென்ற தேர்தலில் சொன்ன கருணாநிதி இப்பொழுது மீண்டும் போட்டியிடுகிறார். கருணாநிதி தனது ஓய்வுக்கான வயதை எப்பழுதோ தாண்டி விட்டார் மிச்சம் இருக்கும் தனது காலத்தை அவர் அமைதியாகக் கழிக்க வேண்டும். ஒருவேளை அவரது கட்சி இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் கூடக் கருணாநிதிக்கு ஆட்சி நடத்தத் தெம்பில்லை. திமுக கட்சியுள் துணை முதல்வராகப் பிரகடனம் செய்து வைக்கப்பட்டுள்ள ஸ்ராலின்தான் முதல் அமைச்சர் என்பது வாரிசு அரசியலுக்கான எழுதாத சட்டம்.

எழுபதுகளில், சினிமா நடிகன் நாடாளலாமா? என்ற கேள்வி பெரிதாக இருந்தது. இப்பொழுது ஏறக்குறைய ஐம்பது வருடங்கள் கழித்து பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அன்புமணி இப்படி அங்கலாய்க்கிறார். "காலம் காலமாக சினிமாவில் இருந்து வந்தவர்கள்தான் தமிழ் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஆளக் கூடாதா?"

தமிழ் நாட்டுத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஈழத் தமிழருக்கு எதுவுமே கிடைத்து விடப் போவதில்லை. ஐயாவா? அம்மாவா? அல்லது மாற்றமா? அதைத் தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவு செய்யட்டும். தேர்தலில் மாற்றம் வருகிறதோ இல்லையோ மனிதரில் மாற்றம் வேண்டி மருதகாசி 1956இல் எழுதிய பாடலை, தாய்க்குப் பின் தாரம் படத்தில் எம்ஜிஆர் மாட்டு வண்டியில் இருந்து மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டு போகிறார். நேரம் இருந்தால் கேட்டுப்பாருங்கள்.

https://m.youtube.com/watch?v=a7eM6XtzvJs

ஆழ்வாப்பிள்ளை
03.05.2016

Related Articles