ஒப்புக் கொள்ளுறீங்களா? (விசாரணை)

குற்றவாளி எனக் கருதி காவல் நிலையத்தில் வைத்திருந்தாலும், விசாரணையின் போது அடிப்பார்கள், உதைப்பார்கள், துவைச்சு எடுப்பார்கள் என்ற எதுவித பயமும் இல்லாமல்,
„யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே
அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே..'
என்று சிவாஜி கணேசனும்,

„உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன் அதில்
உலகை மறந்து சிரிக்கிறேன்
எது வந்தாலும் தாங்கிடும்
இந்த இதயம் கலங்காது..'
என்று எம்ஜிஆரும் கைதிக் கூண்டுக்குள் இருந்து கம்பிகளைப் பிடித்துக் கொண்டு குதூகலத்துடன் ஆடிப்பாடியதை திரையில் பார்த்து இரசித்திருக்கிறோம். ஆனால் அது எல்லாம் நிஜத்தில் சிறிதளவேனும் சாத்தியமே இல்லை. கொஞ்சம் ஆடி அசைந்தாலும் கருக்குகள் சீவி எடுத்த பனை மட்டைகள் சிதிலமடையும் வரை அடிகள்தான் விழும் என்பதை விசாரணை படம் பார்த்தால் தெரிந்துவிடும்.

ஆடல்கள், பாடல்கள், தனியாக நகைச்சுவை என வியாபார நோக்கத்திற்கான இன்ன பிற விசயங்கள் எதுவுமே இல்லாமல் விசாரணை என்ற திரைப்படம் வந்திருக்கிறது. குற்றம் செய்தவர்களிடம் இருந்து உண்மையை வரவழைக்க மேற்கொள்ளும் விசாரணை இந்தப் படத்தில் இல்லை மாறாக செய்யாத குற்றத்தை „ஒப்புக் கொள்ளுறீங்களா?' என்று ஒத்துக் கொள்ளவைக்கும் சித்திரவதைகள்தான் இருக்கின்றன.

„தமிழ் நாட்டில் இருந்து வருகிறோம்' என்றவுடன் „எல்ரீரியா?' என்ற கேள்வி ஆந்திரக் காவல்துறையிடம் இருந்து வந்து விழுகிறது. அந்தக் காட்சியைப் பார்க்கும் பொழுது நாய்க்கு எங்கே அடிபட்டாலும் காலைத் தூக்குகின்ற நினைவுதான் வந்து போனது. அட்டைக் கத்தி தினேஸ் பனைமட்டைகiளால் அடிவாங்கும் பொழுதும் அவரது கூட்டாளிகள் மேல் சித்திரவதைகள் அரங்கேறும் பொழுதும், எங்கள் தேகத்திலே பரவும் விதமான வலிகள் நிறைந்த காட்சிகள் இந்தத் திரைப் படத்தில் இருக்கின்றன.

சமீப காலங்களாக சமுத்திரக்கனி திரையில் அதிகமாகத் தெரிகிறார். தனது இயல்பான நடிப்பால் படத்தை விட்டு எங்களை அசைய விடாமல் பார்த்துக் கொள்கிறார். தினேசும் கூட்டாளிகளும் என்னதான் மரண அடிகள் வாங்கி வலிகள் தாங்கினாலும் கதையின் பெரும் பகுதியை தாங்கி நிற்பது என்னவோ சமுத்திரக்கனிதான். கிசோர் நடிப்பு படத்தில் தனிரகம். அதிலும் பணக்காரர்கள் கெட்டவர்கள் அல்ல என்று அவர் தரும் விளக்கமும் அதைச் சொல்லும் விதமும் யதார்த்தம். இது ஒரு கேம் தான், இன்று நான் நாளை நீ என்று கிசோர் எச்சரிக்கும் அந்தக் காட்சியிலே படத்தின் நோக்கத்தைச் சொல்லி விடுகிறார்கள்.

சாமானியனின் குறிப்புகள் என்று மு.சந்திரகுமார் எழுதிய அவரது உண்மைக் கதையான „லாக்கப்' என்ற நாவலில் இருந்து திரைப்படத்திற்கான கதை எடுக்கப் பட்டிருக்கிறது என்பதை படத்தின் ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறார்கள். மு.சந்திரகுமாரின் அந்தக் கதை படத்தின் முதற்பகுதியிலேயே முடிந்து விடுகிறது. இரண்டாவது பகுதிக்கான கதையை வெற்றிமாறன் தமிழகத்துக்கு நகர்த்துகிறார். தமிழக அரசியல் விளையாட்டுகளை, காவல்துறையின் தில்லு முல்லுகளை துணிவாக இரண்டாவது பகுதியில் வெற்றிமாறன் தெரியப் படுத்துகிறார். தங்கள் தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் பதவி உயர்வுகளுக்கும் காவல்துறைக்குள்ளேயே எதுவும் நடக்கலாம் என்ற நிலை இருக்கும் பொழுது சாதாரண பொது மகன் நிலை என்ன என்ற கவலையும் பயமும் சேர்ந்து வருகிறது. படத்தின் இறுதியில் „லாக்கப்' நாவல் ஆசிரியரான மு.சந்திரகுமாரை காண்பித்து பெருமை சேர்த்துக் கொள்கிறார்கள்.

இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். விசாரணை அதிகாரி கேட்ட கேள்விக்கு, „பற்றறி வாங்கிக் கொடுத்தேன்' என்று பேரறிவாளன் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார். பேரறிவாளன் சொன்னதை அப்படியே பதிவு செய்யாமல், வழக்குக்குச் சாதகமாக அமையும் வகையில், „இதற்குத்தான் என்று தெரிந்தே வாங்கிக் கொடுத்தேன்' என்று மேலதிகமாகச் சேர்த்து தான் பதிவு செய்ததை ஓய்வு பெற்ற நிலையில் அந்த அதிகாரி ஒப்புக் கொண்டதையும் அதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளாததையும் கவனிக்க வேண்டும். குற்றம் சுமத்தப் பட்டவர்களது விடுதலையை வைத்து அரசியல் நடாத்தும் ஐயாக்கள், அம்மாக்களினது சுயநலங்களும், யாரையேனும் குற்றச் செயலுக்குள் மாட்டி விட்டு அதன் மூலம் ஆதாயம் தேடும் காவல்துறையினரின் கடமை உணர்வும் எப்படியானது என்பதை தனியாகச் சொல்லத் தேவையில்லை.

தமிழகத்தில் நடைபெற்ற சில விடயங்களை இந்தப் படத்தில் வெற்றிமாறன் சமார்த்தியமாக இணைத்திருக்கிறார். சமூகத்துக்கு இந்தப் படம் நல்லது செய்கிறது. உண்மைகளைச் சொல்லி எச்சரிக்கிறது. வெற்றிமாறன், தனுஸ் இணைந்து தயாரித்து இருக்கும் இந்தத் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் வாங்கி வெளியிட்டிருக்கிறது. இதைப் பார்க்க மாட்டேன் என்று யாராவது சொன்னால் நட்டம் சொல்பவருக்குத்தான் போய்ச் சேரப் போகிறது.

„இது ஒரு நல்ல படம் என்று ஒப்புக் கொள்ளுறீங்களா?' என்று என்னிடம் கேட்டால், ஒப்புக் கொள்கிறேன் என்றே சொல்வேன்.

ஆழ்வாப்பிள்ளை
12.02.2016

Related Articles