மோதிப் பார்க்கலாம் வா (இறுதிச்சுற்று)

அவன் பெயர் குளாரஸ் (Kularus). கிறீஸ் நாட்டைச் சேர்ந்தவன். இரண்டு மீற்றருக்கு இரு சென்றி மீற்றர் குறைவான உயரம். மிகுந்த சுறுசுறுப்பு. சாப்பாட்டுப் பிரியன். காணும் பொழுது எல்லாம் ஏதாவது கொறித்துக் கொண்டிருப்பான். நான் வேலை செய்யும் நிறுவனத்தில் பாதுகாப்பு பணியில் வேலை செய்கிறான். அவனிடம் உரையாடிய பொழுதே தெரிந்தது. அவன் ஒரு உதைபந்தாட்ட விளையாட்டாளன் என்று. மாநில அளவில் உதைபந்தாட்ட அணியில் விளையாட போதிய திறமை இருந்தும் அந்த வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கவில்லை. காரணத்தைக் கேட்ட பொழுது சொன்னான், „நான் இந்த நாட்டவன் இல்லை என்பதை ஒரு பக்கமாகத் தள்ளி வைத்தாலும் உதைபந்தாட்ட விளையாட்டுத்துறையில் எனக்கான பின்புலம் இல்லை. தெரிவுக்குழுவில் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. ஒருத்தருடைய சிபார்சும் கிடையாது. உதைபந்தாட்ட அணியில் தெரிவாவதும் ஒரு அரசியல்தான். தொடர்ந்து பயிற்சி மட்டும் செய்து கொண்டிருந்தால் நான் பார்க்கிற இந்த வேலை கூடக் கிடைக்காமல் போயிருக்கும். ஆனாலும் இந்த வேலையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்றான். உணவோடு நிற்கும் அவனது உருவத்தை கேலியாக வரைந்து கொடுத்தேன். மகிழ்ச்சியோடு நன்றி சொன்னான். அவனது நினைவு இறுதிச்சுற்று திரைப்படத்தைப் பார்க்கும் போது எனக்கு வந்தது.

உலகத் தரத்திலேயே நடைபெறும் (FIFA) கால் பந்தாட்டத்திலே பணம் கையாளப்பட்டது கடந்த வருடம் விளையாட்டுத் துறையையே மலினமாக்கி விட்டிருந்தது. இந்தக் கையாடல்களில் ஐரோப்பிய நாடுகளும் இருந்ததுதான் ஆச்சரியமானது. ஜனநாயகம், மனித உரிமை பேசும் ஐரோப்பா நாடுகளிலே இந்த நிலை என்றால், மற்றைய நாடுகளில் என்ன நடை பெறும் என்று ஊகிக்க முடியும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளை எடுத்துக் கொண்டால் விளையாட்டுத்துறையின் தெரிவுக்குழு, அதற்குள் தலை நீட்டும் அரசியல், பண பலம் என்று பல விடயங்கள் அடங்கிக் கிடக்கின்றன. தென்கொரியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனக்கு செய்யப்பட்டது அநீதி என்று பரிசு வாங்க மறுத்த குத்துச் சண்டை வீராங்கனை சரிதா நாயர் இதற்கு ஒரு சான்று.

குழறுபடிகள் விளையாட்டுத்துறையில் நடை பெறுகிறது என்பதை மையமாகக் கொண்டு இறுதிச்சுற்று படம் வெளிவந்திருக்கிறது. வித்தியாசமான கதைக்களம். அதுவும் பெண் குத்துச்சண்டை வீராங்கனையை மையப்படுத்தி கதை அமைக்கப் பட்டிருக்கிறது. பொதுவாக பெண்களை முன்னிலைப் படுத்தும் கதைகளோடு வெளிவரும் தமிழ் சினிமாக்கள் பெரிய வெற்றி வாய்ப்பைப் பெறுவதில்லை. ஆனால் இறுதிச்சுற்று திரைப்படம் வெற்றியை எட்டியிருக்கிறது.

மென்மையான பாத்திரங்களுக்குள் பொருந்திவிடும் மாதவனுக்கு இறுதிச்சுற்றில் முற்றிலுமாக மாறுபட்ட வேடமும், தோற்றமும். படம் முழுவதும் எரிச்சல் பட்டுப் பேசுவதும், குத்துச் சண்டையில் நான் தோத்துப் போனேன். வெற்றி பெற்றவனோடை என் பெண்டாட்டி ஓடிப் போட்டாள் என்று புலம்புவதுமான மாதவனின் நடிப்பு இதுவரை பார்க்காதது. ஆனாலும் படத்தில் மாதவனை மிஞ்சி நடிகை ரித்திகா சிங்கே தெரிகிறார். சந்தையில் மீன் விற்பதும் மாதவனோடு எடுத்தெறிந்து பேசுவதும், தனது அக்காவுக்காக சண்டை போடுவதும், காதலில் விழுந்து உருகுவதும், கோபத்தில் வீதியில் நிற்கும் மாதவனின் மோட்டார் சைக்கிள் விளக்குகளை கெல்மெட் கொண்டு உடைப்பதும் என்று எல்லாவித நடிப்பையும் காட்டுகிறார். ரித்திகா சிங் உண்மையிலேயே ஒரு குத்துச் சண்டை வீராங்கனை என்பதால் அவரால் இந்தப் படத்தில் குத்துச் சண்டை வீராங்கனையின் உடல் மொழியை இலகுவாகத் தரமுடிந்திருக்கிறது.

பார்வையாளர்களிடம் நிறையவே திட்டுக்களை வாங்கிக் கட்டிக் கொண்ட அரங்கில் நடைபெறும் உண்மையான போட்டி ஒன்றில் ரித்திகா சிங் பங்கு கொள்ளும் காட்சியின் காணொளி ஒன்று இங்கே இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=1zVvuC6ET_M

ஓடிப்போன மாதவனின் மனைவியை நாசர் முண்டம் என்று சொல்லிக்காட்டுவதும், அந்த முண்டத்தின் அப்பாதான் நான் என ராதரவி பதில் சொல்வதும், காளி வெங்கட் மதம் மாறி வந்து போதையில் செய்யும் போதனைகளும் ரசிக்க வைக்கின்றன.

படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் தங்கள் பங்குகளை அழகாகத் தந்திருக்கிறார்கள். இயக்குனராக சுதா கொங்கரா வெற்றியடைந்திருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே தேவையில்லாத காட்சிகள் எதுவும் இன்றி கதை இறுதிச்சுற்றுவரை பயணிக்கிறது. ஒரு விவரணப் படத்திற்கான அடிப்படையைக் கொண்டதுதான் இந்தக் கதை. ஆனாலும் அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்புடன் இரண்டு மணித்தியாலங்கள் இறுதிச்சுற்றுக்குள்ளேயே பார்வையாளர்களை இருத்தி வைத்து சுதா கொங்கரா கதையை நகர்த்திக் கொண்டு செல்கிறார். படத்தின் முடிவு இப்படித்தான் அமையப் போகிறது என்று ஊகிக்க முடிகிறது என்றாலும் கதை சொல்லும் கலை இயக்குனருக்குக் கை கொடுத்திருக்கிறது.

ஒரு மீனவக் குடும்பத்துக்குள் எப்படிப் பேசுவார்கள்?. விரக்தியில் இருக்கும் ஒரு பயிற்சியாளர் பேசுவது எப்படி? என்று நன்றாக அறிந்து வைத்துக் கொண்டுதான் அருண் மாத்தீஸ்வரன் வசனங்கள் எழுதி இருக்கிறார் போலும். வசனங்கள் இயல்பாகவே வந்து போகின்றன.

எந்தவித உதவிகள், வசதிகள், சிபாரிசுகள் என்று எதுவுமே இல்லாமல் சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் ஒரு பெண் தனது பயிற்சியாளரின் உதவியோடு தேசிய அளவில் குத்துச் சண்டை வீராங்கனையாக வருவதற்கு எதிர் கொள்ளும் தொல்லைகள் தடைகள் என்ன என்பதை இந்தப் படத்தைப் பார்த்தால் தெரிந்து விடுகிறது.

படம் பார்த்து விட்டு உடனேயே மறந்து போக முடியாதளவு இறுதிச்சுற்று அப்படியே சில நாட்கள் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. கிளின் ஈஸ்வுற் (Clint Eastwood) நடித்த மில்லியன் டொலர் பேபி (Million Dollar Baby) திரைப்படத்தை ஆதாரமாகக் கொண்டும் வேறு சில ஆங்கிலப் படங்களின் காட்சிகளையும் இணைத்தே இறுதிச்சுற்று வந்திருக்கிறது என்று சிலர் குரல் தந்தாலும் தமிழுக்கு இறுதிச் சுற்று ஒரு மாறுபட்ட திரைப்படமே.

- ஆழ்வாப்பிள்ளை
1.02.2016

Related Articles