கருணாநிதி காவியம் - எழுதினால் என்ன?

பல சினிமாப்பாடல்களை இலக்கியத்தில் இருந்து எடுத்து கண்ணதாசன் கையாண்டிருக்கிறார் என்பது அறிந்த விடயமே.

„நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம் தென்றலே..'

„பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழியில் கண்டு..'

„இட்ட அடி சிவந்திருக்க எடுத்த அடி கனிந்திருக்க...'


„சற்றே சரிந்த குழலே சரிய தாவுது என் மேனி...' என்று பாடல் வரிகளைக் கேட்டவுடனேயே தெரிந்துவிடும்.

கவிஞர் கண்ணதாசன் இப்படியான பாடல்களை எழுதும் பொழுது, இலக்கியத்தில் இவை எந்தெந்த இடத்தில் இருந்து எடுக்கப் பட்டன என்று கண்ணதாசனுக்கு வேண்டாத ஒருவர் பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்தார். கண்ணதாசன் அதை மறுக்கவில்லை. „இலக்கியத்தில் சுவையானவையை எடுத்து எளிமைப் படுத்தி பாமரனுக்கு கொண்டு சேர்க்கின்றேன்' என்று கண்ணதாசன் தன்னை நியாயப் படுத்திக் கொண்டார். அவரது அந்த நியாயம் சரியானதே. பட்டினத்தார் தனது பாடல் ஒன்றில் இப்படிச் சொல்லி இருக்கிறார்.

„அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழியம் பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே, விம்மி விம்மி யிரு
கைத்தல மேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடுமட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே'


இந்தப் பாடல் எத்தனை பேரைச் சென்றடைந்திருக்கிறது? இதையே கண்ணதாசன்,
„வீடு வரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரையாரோ?'

என்று சொல்லும் பொழுது எல்லோருக்கும் போய்ச் சேர்ந்து விடுகிறது.

மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் – செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான் வேந்து.

அது புகழேந்திப் புலவர் எழுதிய பாடல். அதை வைத்து கண்ணதாசன் எளிமையான வார்த்தைகளைப் பாவித்து பாமரனுக்கும் புரிந்து விடும்படி இப்படி எழுதியிருக்கிறார்.

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற...


கண்ணதாசன் தன்னை இப்படித்தான் உலகத்துக்கு காட்டிக் கொண்டவர்.

„ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு'

காவியத்தாயின் இளைய மகனாக தன்னை நினைத்துக் கொண்டவர். அவர் தமிழை வாழவைக்கிறேன் என்று பெருமை பேசியவர் அல்ல. தமிழை வைத்து வாழ்வு தேடியவர். பொருள்வரவு குறைந்தவுடன் 'விஸ்வநாதன் வேலை வேண்டும்' என்று பாடலில் வெளிப்படையாகச் சொல்லிக் காட்டியவர்.

கண்ணதாசன் சுயமாக தான் படைத்த கவிதைகளோடு இலக்கியத்தில் அவர் சுவைத்தவற்றையும் அவற்றின் பொருள் எள்ளளவும் கெடாமல் எளிய தமிழில் எங்களுக்குத் தந்து விட்டுப் போனவர்.

கண்ணதாசனுக்குப் பிறகு வந்த இந்தக் கவிஞர் பெரிதும் வேறு பட்டவர்.

தமிழ் திரைப்படங்களில் படிமங்களைப் புகுத்தி புதிய பரிமாணத்தை ஏற்படுத்துவதாகக் கூறும்; வைரமுத்து, தான் எழுதும் கவிதைபோல் யாரும் எழுதவில்லை என்றே மேடைகளில் முழங்குவார். ஆனால் சமகாலத்துப் படைப்பாளிகளின் ஆக்கங்களை சமார்த்தியமாக எடுத்தாள்வார்.

ஐந்தாவது உலகத் தமிழ் மநாட்டு மலரில் பெண்கள் பற்றிய கட்டுரைப் பகுதியில்; ஒரு நாட்டுப் பாடலில் இடம்பெற்ற இந்த வரிகள் இருந்தன.

„ஆயிரம் தாமரை மொட்டுக்களே
ஆனந்தக் கும்மி கொட்டுங்களே'


பின்னாட்களில் அலைகள் ஓய்வதில்லை படத்திற்கு வைரமுத்து பாட்டெழுதி இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் ஆகிப் போனார்.

„பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல எழுதி நான் படிக்கவில்லை
வாயிலை வந்தபடி வகையுடனே நான் படிப்பேன்'

என்ற ஒரு நாட்டார் பாடலில் ஒரு சில மாற்றம் செய்து கொஞ்ச வரிகளைச் சேர்த்து வைரமுத்து தனதாக்கிக் கொண்டார்.

ஓர் அழுகை ஆதரவு தேடுகிறது என்ற கவிதை நூலில் உள்ள கவிதை இது,

„பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன்
அவனே வள்ளலடி'

இந்த வரிகளை, திரைத்துறையை தீக்குச்சிக்கு தின்னக் கொடுப்போம் என்று அன்று கவிதை சொன்ன வைரமுத்து மென்று தின்று ஜீன்ஸ் திரைப்படத்தில் ஈன்று வைத்தார்.

ஆலங்குடி சோமு
'ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி'

என்று எழுதினால்

வைரமுத்து,
„ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி'
என எழுதுவார்.

இதுபோல் „வைரமுத்து காவியம்' நிறைய எழுதிக் கொள்ளலாம். அது வீணான நேர விரயமாகப் போய்விடும்.

சமீபத்தில் வைரமுத்து தமிழீழத்தில் வைத்து ஈழகாவியம் படைக்கப் போகிறேன் என்று அறிவித்ததால் உண்மையில் பயம் கொண்டுதான் இப்பொழுது இதை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

போராடி வெல்லும் பொழுதும் பின்னர் வீழ்ந்த பொழுதும் எழுச்சியாக, உணர்ச்சியாக, புரட்சியாக, புதுமையாக இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட கவிதைகள் எங்களிடம் ஏராளமாக இருக்கின்றன. எத்தனையோ தலைமுறைகளுக்கு அவை போதும். வைரமுத்துவோ ஒரு தலைமுறை தமிழை தந்து விட்டு அடுத்த தலைமுறை தமிழுக்கு தயாராகி இருக்கிறேன் என்கிறார்.

ஈழத்தவர் எழுதிய கவிதைகளை வைரமுத்து கையாண்டு விடுவார் என்று அஞ்சுகிறீhகளா என்று என்னை யாரும் விழிக்காதீர்கள். எனது பிரச்சினை அதுவல்ல.

ஈழகாவியம் ஒரு புறம் இருக்கட்டும். தனது தமிழ் ஆசான் கருணாநிதிதான் என்று சொல்லிக் கொள்பவர் „கருணாநிதி காவியம்' என்று ஒன்றை எழுதினால் என்ன? என்பதே எனது இப்போதைய கேள்வி. உலகத் தமிழரின் தலைவர் என்று சொல்லிக் கொள்பவரைப் பற்றி தமிழ்த்தாயை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஒரு கவிஞன் காவியம் பாடினால் நன்றாகத்தானே இருக்கும்.

ஒருவேளை கருணாநிதி அடுத்த முதல்வரானால் ஏழாவது முறையும் தேசியக் கவிஞராக வாய்ப்பிருக்கிறது அல்லவா? அல்லது தேசியக் கவிஞருக்கு மேலாக பத்மவிபூசன், பாரதரத்னா என்று ஏதாவது கிடைக்காமலா போய்விடும்?

வைரமுத்து கொஞ்சமாகவேனும் சிந்தித்துப் பார்க்கட்டும்.

- ஆழ்வாப்பிள்ளை
28.01.2016

Related Articles