நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்யக் கூடாதா?

„இப்படி குடிச்சு உடம்பைக் கெடுத்து வீணா பொழுது போக்குறீங்களே. இந்த நேரத்திலை நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்யக் கூடாதா?' நான் ஏன் பிறந்தேன் என்ற படத்தில் வரும் பாடலின் இடையில் எம்ஜிஆர் பேசும் வசனம் இது. பொதுவாக எம்ஜிஆர் படங்களில் நாயகன் குடிப்பது போன்ற காட்சி இருக்காது. விதிவிலக்காக அவரது நூறாவது படமான ஒளிவிளக்கில் அவரே குடித்துப் போட்டு வருவதான காட்சி இருந்தது. அப்படிக் குடித்து விட்டு வரும் அவரை நாலு எம்ஜிஆர்கள் வந்து „தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா?' என்று கேட்டு „மதுவால் விலங்கிலும் கீழாய் நின்றாய்' என பாடி விட்டுப் போவார்கள்.

திரையில் மதுவுக்கு எதிராக எம்ஜிஆர் படங்களில் ஏதாவது காட்சிகளோ வசனங்களோ இருக்கும். பிறகு திமுக ஆட்சியில் மதுக்கடைகள் திறந்த பொழுது மக்களின் எதிர்ப்புகளை சமாளிக்க மதுவிலக்கு பிரச்சாரத்தை மேற்கொள்ள கருணாநிதி எம்ஜிஆரை நியமித்தார். மதுவை எதிர்த்து பிரச்சாரம் செய்த எம்ஜிஆரின் அ(ண்ணா கண்ட)திமுக ஆட்சியின் பொழுது வந்த உன்னால் முடியம் தம்பி என்ற படப் பாடலில் எம்ஜிஆரின் திரைப்படக் கவிஞர் புலமைப் பித்தனின் இந்த வரிகள் இருந்தன.

ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்
சாராய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும்
காசுள்ள பக்கம் பாயாதடா

குடிச்சவன் போதையில் நிப்பான்
குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா
கள்ளுக்கடை காசிலே தாண்டா
கட்சிக் கொடி ஏறுது போடா


ஆக எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மதுக்கடைகளின் வருமானமே ஆட்சியாளர்களுக்கு பெரிதும் தேவைப்பட்டது. இன்று இந்த நிலை மிகவும் மோச மடைந்திருக்கிறது. டாஸ்மார்க் என்று மதுக்கடைகள் ஊரெல்லாம் பரவிக் கிடக்கின்றன. சமூகம் நிறையவே சீரழிந்திருக்கிறது. போதாததற்கு திரைப்படங்களில் மறைமுகமான பிரச்சாரங்ககள் வேறு குடிப்பவர்களை உசுப் பேற்றிக் கொண்டிருக்கின்றன.

நாயகர்களோ நாயகிகளோ திரையில் புகைப்பது மது அருந்துவது போன்ற காட்சிகள் வரும் பொழுது எல்லாம் „புகை பிடிப்பது புற்று நோயை உண்டாக்கும் மற்றும் உயிரைப் பறிக்கும். மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதாகும்„ எனக் காட்டி விட்டு காதல் தோல்வியில் நாயகன் டாஸ்மார்க் கடையில் குடித்து விட்டு கும்பலுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் காட்சியை வைத்திருப்பார்கள்.

குடியின் கொடுமையை வெளிப்படுத்த மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த கோவன் இரண்டு பாடல்களைப் பாடி இருந்தார். அதற்காக அவர் தேசத்துரோகம், சமூகத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல், வதந்திகளைப் பிரசுரித்து, பரப்பி மக்களை அரசுக்கு எதிராக செயல்படும்படி தூண்டுதல் போன்ற காரணங்களைக் காட்டி, கைது செய்யப் பட்டிருக்கிறார். கருணாநிதி ஆட்சியின் பொழுது எம்ஜிஆர் திரைப்படங்களின் மூலமே அதிமுக விற்காக அதிக பிரச்சாரங்கள் செய்தார். அப்பொழுது வந்த அவரின் திரைப்படங்களின் பெயர்களும் சரி அந்தப் படங்களில் இடம் பெற்ற வசனங்கள், பாடல்களும் சரி எல்லாமே கருணாநிதிக்கு எதிராகவே இருந்தன. நீதிக்குத் தலைவணங்கு என்ற திரைப்படத்தில் „நான் பார்த்தா பைத்தியக்காரன் உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்..' என்ற பாடலில் காட்டுநரி, குள்ளநரி என்று மறைமுகமாக கருணாநிதியை தாக்கி இருப்பார்.அந்தப் பாடலில் இருந்து சில வரிகள்,

பாதுகாவல் போர்வையில் சாதி இன பேதம் சொல்லி
ஊர்ப்பகையை வளர்ப்பவன் நீ
ஊரில் உள்ளவரை மோதவிட்டு குள்ளநரி போல் இருந்து
ரத்தம் எல்லாம் குடிப்பவன் நீ
இந்த உண்மைகளை ஊர் அறிய எடுத்துரைப்பேன்
நாளை உன் ஆட்டம் எல்லாம் முடித்து வைப்பேன்.'
காலம் நெருங்குது கதை முடிய
இந்த காட்டு நரி கூட்டத்துக்கு விதி முடிய
என்று அரசுக்கு எதிராக அன்று எம்ஜிஆர் ஆடிப் பாடிய பொழுது அவருக்கு எதிராக தேசத்துரோகம் என்ற சட்டம் பாயவில்லை.

எது எப்படியோ ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருந்த கோவனின் பிரச்சாரப் பாடல்கள் இன்று பேஸ்புக், டுவிட்டர், யூ ரியூப், இணையத்தளங்கள் என வெளிவந்து உலகம் எல்லாம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. அதற்கான வாய்ப்பு கோவனின் கைது மூலம் வந்திருக்கிறது.

கோவனின் கைது குறித்து ஒருவர் எழுதியிருந்தார். „நல்ல வேளை திருவள்ளுவர் தப்பிச்சார். அவர் இன்று இருந்திருந்தால் கள்ளுண்ணாமை அதிகாரம் எழுதியதற்காக கைது செய்யப்பட்டிருப்பார்“ என்று.

மக்கள் கலை, இலக்கிய கழக கோவன் பாடிய „மூடு டாஸ்மாக்கை மூடு...' மற்றும் „ஊருக்கொரு சாராயம் தள்ளாடுது தமிழகம் ஊத்திக்கொடுத்த உத்தமிக்கு போயஸ்கார்டனில் உல்லாசம்' இரண்டு பாடல்களும் இங்கே இருக்கின்றன.

மூடு டாஸ்மாக்கை மூடு
ஊருக்கொரு சாராயம் தள்ளாடுது தமிழகம்

ஆழ்வாப்பிள்ளை
1.11.2015

Related Articles