ஜில் ஜில் (மனோ)ரமாமணி

பெண் நடிகர்களை விட ஆண் நடிகர்களே அதிக காலங்கள் திரையில் தோன்றிக் கொண்டிருப்பார்கள். அந்த எண்ணத்தை மாற்றிக் காட்டிய ஒரே நடிகை மனோரமா என்பேன்.

சினிமாவில் நாயகர்களாக மட்டு மல்லாமல் நகைச்சுவையிலும் ஆண்களே முன்ணணியில் நிற்பார்கள். இப்படி அன்று முன்ணணியில் நின்ற நகைச்சுவை நடிகர்களான கே.ஏ.தங்கவேலு, நாகேஸ், ஏ.கருணாநிதி, சோ, சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், கவுண்டமணி என்று அத்தனை நடிகர்களோடும் ஈடு கொடுத்து நடித்ததோடு அவர்களையும் மீறி நீண்ட காலங்கள் நடித்துக் கொண்டிருந்த நடிகை மனோரமாதான்.

எம்ஜிஆர், சிவாஜி என்ற இரு இமயங்கள் திரையுலகை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலத்தில் இருவர் படங்களிலும் அதிகமாக வந்து போனவர் மனோரமாதான். சாண்டோ சின்னப்பா தேவர், ஏ.பி.நாகராஜன் இருவரும் தயாரித்த படங்களில் இவர் நிச்சயமாக இடம் பெற்றிருப்பார்.

ஏ.பி.நாகராஜன் இயக்கிய படங்களில் இவரது நடிப்பு அசத்தலாக இருக்கும். சரஸ்வதி சபதம் படத்தில் சிவாஜி செந்தமிழில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்க மறுபுறத்தில் மனோரமாவோ, நாகேசுடன் திக்குவாயுடன் பேசுவதற்கே திண்டாடிக் கொண்டிருப்பது ரசிக்க வைத்தது. நவராத்திரி படத்தில் „வந்தநாள் முதல் இந்த நாள் வரை நாங்கள் மாறவில்லை..' என்ற பாடலுக்கு நடிகை சாவித்திரியுடன் பைத்தியக்கார விடுதியில் போடும் கூத்து திரையரங்கேயே ஆட வைத்தது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக தில்லான மோகனாம்பாள் படத்தில் ஜில்ஜில் ரமாமணியாக வந்து சிக்கல் சண்முகத்துடன் அடித்துப் பேசும் காட்சியில் இவரது நடிப்பு மறக்க முடியாதது.

ஏ.பி.நாகராஜனை அடுத்து பி.வாசுவின் படத்திலும் இவருக்கு பாத்திரங்கள் நன்றாக அமைந்திருந்தன. மூல நட்சத்திரத்தில் பிறந்ததால் ஐம்பத்தைந்து வயதிலும் மணமாகமல் இருந்து பின்னர் சத்தியராஜை காதலிக்கும் பாத்திரத்தில் நடிகன் படத்தில் தனது திறமையைக் காட்டி இருப்பார். பி.வாசுவின் சின்னத்தம்பி படத்தில் பிரபுவுக்கு தாயாக வந்து சிறப்பாக நடித்திருப்பார்.

அனுபவி ராஜா அனுபவி படத்தில் தூத்துக்குடி தமிழ் பேசி நடிக்க வைத்து, அன்றைய வானொலிகளில் அதிக இடம் பெற்ற முத்துக்குளிக்க வாறீகளா? பாடலுக்கு ஆடவைத்த கே.பாலச்சந்தர்தான் மனோரமாவின் குணசித்திர நடிப்பை திரையில் காட்டியவர். கே.பாலசந்தரின் உன்னால் முடியும் தம்பி படத்தில் மனோரமா ஏற்ற பாத்திரம்தான் பின்னாளில் இவர் தாயாக, அண்ணியாக, மாமியாக திரையில் வலம் வரக் காரணமாயிற்று.

தாயாக இவர் பாசம் பொங்க நடித்தாலும் அதிலும் ஒருவித நகைச்சுவை நூலைப் பிடித்துக் கொண்டே இவர் நடித்திருப்பார். உதயகுமாரின் சின்னக் கவுண்டர் திரைப் படம் அதற்கொரு சாட்சி. வெளியே துருத்திக் கொண்டிருக்கும் பற்களோடு கவுண்டமணி செந்திலுடன் இவர் போடும் லூட்டி படத்தின் வெற்றியை பெரிதும் நிர்ணயித்தது எனலாம்.

பொதுவாக சினிமாவில் முன்ணணியில் இருக்கும் நடிகர்களுடன் மோதுவதற்கு எவருமே விரும்ப மாட்டார்கள். ஆனால் மனோரமா நடிகர் ரஜனியுடன் மோதினார். தேர்தல் மேடைகளில் ரஜனியை ஏக வசனத்தில் பேசி ஜெயலலிதாவுக்காகப் பிரச்சாரம் செய்தார். அந்தத் தேர்தலில் ஜெயலலிதா தோற்றுப் போனதும் மனோரமாவின் நிலையை ஊடகங்கள் பரிதாபகமாகவே பார்த்தன. ஆனால் எல்லோரது எண்ணத்தையும் மீறி என்னால் முடியும் தம்பி என்று மீண்டும் நடிப்பில் தன் ஆற்றலைக் காட்டினார். விஜய்காந்திற்கு எதிராக வடிவேலு ஏக வசனத்தில் பிரச்சாரம் செய்யப் போய் காணாமல் போனதை இங்கே நினைத்துப் பார்த்தால் மனோரமாவின் ஆற்றல் புரியும்.

பாடல் ஆடல் நடிப்பு என்று தனது திறமையைக் காட்டிய மனோரமாவின் முதல் திரைப்படம் மஸ்தான் இயக்கிய ஒரு சிங்களத் திரைப்படம் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதைவிட ஆச்சரியம் சி.என். அண்ணாத்துரை, மு.கருணாநிதி, எம்ஜிஆர், என்டிஆர், ஜெ.ஜெயலலிதா என்று ஐந்து மாநில முதல்வர்களுடன் நடித்திருக்கிறார் என்பது.

சிவாஜி கணேசனின் பாசமலர் திரைப்படத்தில் சிறிய பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கும் மனோரமா பின்னாளில் ஞானப்பறவை திரைப்படத்தில் சிவாஜியுடன் ஜோடியாக நடிக்கும் அளவுக்கு தன்னை வளர்த்துக் கொண்டிருந்தார்.

1300க்கு மேற்பட்ட திரைப்படங்கள், 5000க்கு அதிகமான நாடக மேடைகள் என மனோரமாவின் கின்னர்ஸ் சாதனை இருக்கிறது. இந்த சாதனையை முறியடிக்கவோ, மனோரமாவின் இடத்தை நிரப்பவோ இனி எவரும் வரப் போவதில்லை என்பதே உண்மை.

ஆழ்வாப்பிள்ளை
11.10.2015

Related Articles