நிரந்தரமானவன் அழிவதில்லை

சோகம், வீரம், வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, அன்பு, பாசம் என்று எல்லாவித உணர்ச்சிகளுக்கும் ஆட்பட்டிருக்கும் அனைவரையும் தட்டிக் கொடுக்கவும், தோள் கொடுத்துத் தூக்கிவிடவும், தடவித் தாலாட்டி வைக்கவும் எத்தனையோ சினிமாப் பாடல்களை இசை கோர்த்து வைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

கவிஞர் வாலி கூட பல தடவைகள் சொல்லி இருக்கிறார், சினிமாவுக்குப் பாட்டெழுத சென்னைக்கு வந்து அது கைகூடாமல் ஊருக்குத் திரும்பிப் போக எத்தனித்த பொழுது „மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா..' என்ற பாடலைக் கேட்டு விட்டு ஊருக்குப் போகும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டதாக.

ஜனனம் என்பது வரவாகும் அதில் மரணம் என்பது செலவாகும்.

வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடம் ஏது? என்ற வரிகளுக்கும் இசை தந்தவர். தனது குரலிலே தீர்ப்பு என்ற திரைப்படத்தில் ஒரு பாடலையும் பாடி வைத்தார். „தீயே உனக்கென்ன தீராத பசியோ நீ தின்ற உடல் எத்தனையோ கணக்கிடவில்லையோ ஆளுக்கொரு தேதி வைச்சு ஆண்டவன் அழைப்பான் அதில் யார் அழுதால் அவனுக்கென்ன காரியம் முடிப்பான்...'

1200 படங்களுக்கு மேல் இசை அமைத்தவர். ஆனாலும் அடக்கமானவர். இவர் இசையமைக்க வந்த காலங்களில் இசையமைப்பாளர்களுக்கு இப்பொழுது இருக்கும் அங்கீகாரங்கள் இருக்கவில்லை. தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள், நடிகர்கள், கவிஞர்கள் என்ற வரிசைகளின் பின்னாலேயே இசையமைப்பார்களுக்கான இடங்கள் இருந்தன.

இவர் இசையமைத்த முதல் படம் எம்ஜிஆர் நடித்த ஜெனோவா. சிறுவனாக இருந்த எம்.எஸ்.விஸ்வநாதனில் நம்பிக்கை இல்லாத எம்ஜிஆர், இவர் இசை அமைத்தால் தான் நடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்க, „இசையமைப்பாளரை மாத்த முடியாது வேண்டுமானால் நடிகரை மாத்துகிறேன்' என தயாரிப்பாளர் அறிவிக்க ஆடிப்போன எம்ஜிஆர், வேறு வழியில்லாமல் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க ஒப்புதல் கொடுத்தார். அன்று தொடங்கிய அவரது இசையமைப்புப் பயணம் எம்ஜிஆரின் கடைசிப் படமான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனுக்குப் பின்னரும் தொடர்ந்தது.

இயக்குனர் சிறீதரின் ஆஸ்தான இசையமைப்பாளாராக ஏ.எம்.ராஜா இருந்த பொழுது அற்புதமான பாடல்களை தந்திருக்கிறார். சிறீதருக்கும் ஏ.எம்.ராஜாவுக்கும் பிணக்கு ஏற்பட்டு பிரிந்த பொழுது சிறீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்திற்கு அற்புதமான இசை தந்தவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள். தொடர்ந்து சிறீதரின் விருப்பமான இசையமைப்பாளராக அவரின் பல படங்களுக்கு காலத்தில் நின்று நிலைக்கும் பல பாடல்களை இசையமைத்துத் தந்தார்கள். இடையில் எம்.எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் பிரிந்து விட்டாலும் தனது படங்களுக்கு இசையமைக்க எம்.எஸ்.விஸ்வநாதனையே சிறீதர் பயன்படுத்திக் கொண்டார்.

எம்.எஸ்.விஸ்வநாதனிடம் இருந்து பாடல்களுக்கான நல்ல இசையைப் பெறுவதில் அன்றைய காலங்களில் ராமண்ணா, சிறீதர், பீம்சிங், பந்துலு, ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர் வல்லவர்கள். இவர்களது படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வந்த அத்தனை பாடல்களும் மிகப் பிரபல்யமான பாடல்கள். சரித்திரப் படங்கள், புராணப் படங்கள் என்றால் தயாரிப்பாளர்கள் திரை இசைத்திலகம் கே.வி. மகாதேவனைத்தான் தேடிப் போவார்கள். தங்களுக்கும் அவ்வாறான படங்களுக்கு இசையமைக்க முடியும் என்பதை பி.ஆர். பந்துலுவின் கர்ணன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படங்களில் செய்து காட்டியவர்கள் மெல்லிசை மன்னர்களான எம்.எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும். இன்றும் இவ்விரு திரைப்படங்களின் பாடல்கள் பிரபல்யமானவையாகவே இருக்கின்றன.

இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என எம்.எஸ்.விஸ்வநாதனுக்குப் பல முகங்கள். பாசமலர் திரைப்படத்தில் அன்பு மலர் ஆசை மலர் இன்ப மலர் நடுவே அருளோடு மலர்வதுதான் பாசமலரம்மா.. பாடலை இவர் பாடி இருப்பார்.

அதன்பிறகு பாடல்களுக்கு முக்கியத்துவம் தராமல் பாடல்களின் இடையே வரும் ஹம்மிங் மட்டுமே தந்து கொண்டிருந்தார். இவரது குரலை நடிகர் சோ தனது முகமது பின் துக்ளக் திரைப்படத்தில் பயன்படுத்தப் போய் அந்தப் பாடல் பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலித்தது. வானொலிகளில் நாள் தவறாமல் ஒலித்த அந்தப் பாடல் எம்.எஸ்.விஸ்வநாதனின் குரலில் வந்த „அல்லா அல்லா நீ இல்லாத இடமேயில்லை அல்லா அல்லா...' என்ற பாடல். இந்தப் பாடலுக்குப் பிறகு திரைப் படங்களில் காட்சிகளின் பின்னணியில் அதுவரை ஒலித்துக் கொண்டிருந்த சீர்காழி கோவிந்தராஜனின் குரலுக்குப் பதிலாக எம்.எஸ்.விஸ்வநாதனின் குரல் ஒலிக்கத் தொடங்கியது.

பல வருடங்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் ஐபிசி வானொலியில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் நேயர்களுடன் நேரடி நிகழ்ச்சியில் பங்கு கொண்டிருந்தார். அப்பொழுது கவிஞர் தீட்சண்யன் எழுதிய ஈழப் போராட்டம் சம்பந்தமான ஒரு கவிதையை தொலை நகல் மூலமாக ஐபிசிக்கு அனுப்பி வைத்தேன். கவிதையை அனுப்பி சில நிமிடங்கள் கூட ஆகி இருக்காது. அந்தக் கவிதைக்கு அழகான மெட்டுப் போட்டு தானே பாடியும் வைத்தார். அதன் ஒலிப்பதிவை இப்பொழுதும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

இரத்தத் திலகம் திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடலுக்கு கண்ணதாசனே நடித்திருப்பார். அந்தப் பாடலில் இடம் பெற்ற இந்த வரிகள் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் பொருந்தி விடுகிறது.

பாமர ஜாதியில் தனி மனிதன்
நான் படைப்பதனால் என் பெயர் இறைவன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை


- ஆழ்வாப்பிள்ளை
14.7.2015

Quelle - Ponguthamizh

Related Articles