ஓரொண்ணு ஒண்ணு ஈரொண்ணு இரண்டு

வீட்டுப்பாடமாக வாத்தியார் தந்த கணக்குகளைச் செய்யாமல் பள்ளிக்குப் போய் „இண்டைக்கு அடி விழப் போகிறது' என்று பயந்ததும் உண்டு. சினிமாப் பாடல்களில் கவிஞர்கள் பாடல்களில் போட்ட கணக்குகளைப் பார்த்து மயங்கியதும், கலங்கியதும் உண்டு.

ஒரு கால கட்டத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல் என்று பாடல்கள் வந்து கொண்டே இருந்தன. இதற்கெல்லாம் முன்னோடியாகக் கவிஞரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும். சங்கிலித்தேவன் திரைப்படத்தில் அவர் ஒரு பாடல் எழுதியிருப்பார்,

ஓரோண் ஒண்ணு உள்ள தெய்வம் ஒண்ணு
ஈரோண் இரண்டு ஆண் பெண் ஜாதி இரண்டு
மூவோண் மூணு முத்துத்தமிழ் மூன்று
நாலோண் நாலு நன்நிலம் நாலு...
  

என்று முதலாம் வாய்ப்பாட்டைச் சொல்லித் தந்த பாடல் அது. பின்னாளில் முதலாம் வாய்ப்பாட்டில் ஆரம்பிக்கும் ஓரோண்டு ஒண்ணு ஈரோண்டு இரண்டு என்ற பாடல் ஒன்று ஐயா திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. உத்தமபுத்திரன் திரைப்படத்தில்

யாரடி நீ மோகினி
கூறடி என் கண்மணி..'


என்ற நீண்ட பாடல் இடம்பெற்றிருந்தது. கு.மா. பாலசுப்ரமணியம் எழுதிய அந்தப் பாடலுக்கு ஜி.ராமநாதன் இசை அமைத்திருந்தார்.  பாடலில் இந்த வரிகள் இடம் பெற்றிருக்கும்.

ஒண்ணும் ஒண்ணும் இரண்டு
உன்மேல் ஆசை உண்டு
இரண்டும் மூன்றும் ஐஞ்சு
என்னை நீயும் கொஞ்சு...


மெட்டுக்கு வார்த்தைகளைப் போட்டு இங்கு கவிஞர் காசை கணக்குப் பார்த்திருப்பார் போலும். கொடுத்து வைத்தவள்  திரைப்படத்தில்

பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது...


என்ற பாடலில்

ஆறேழு வயதினில்
அம்புலியாய் பார்த்த நிலா
ஈரேழு வயதினில் மாறுது
ஏதேதோ கதைகள் கூறுது'


என்ற வரிகள் வரும். கவிஞர் காதல் அரும்பும் வயதை, ஈரேழை பெருக்கிப் பார்த்து அறிந்து  கொள் என்பார். தொடர்ந்து

எண்ணிரண்டு வயதினிலே
கண்ணிரண்டு மாறுபட்டு
பெண்மனது ஊஞ்சலாடுது
அதன் பேச்சும் மூச்சும் வேகமாகுது...


என்று காதலிக்கும் வயது பதினாறு என்று கவிஞர் வந்திருப்பார். எதுக்கு பெருக்கி சிரமப் படுகிறீர்கள்? விடையையும் நானே சொல்கிறேன் என்று அன்னை இல்லம் படத்தில்

எண்ணிரண்டு பதினாறு வயது - அவள்
கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனசு..


என்ற பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருப்பார்.

மங்கியதோர் நிலவில் காதலியைக் கண்டு அவளுக்கு பதினாறு வயது இருக்கும் என்று பாரதியார் சொல்லி இருந்தார். இங்கே கவிஞர் தனது காதலிக்கு பதினெட்டு என்று காதல்படுத்தும் பாடு படத்தில் பாடல் எழுதி இருந்தார்.

இவள் ஒரு அழகிய பூஞ்சிட்டு
வயது ஈரொன்பது பதினெட்டு...


அதே பாடலில் காதலி தனது காதலனுக்கு தன்னை விட ஆறு வயதுகள் அதிகம் என்பாள்.

இவருக்கு வயது மூவெட்டு
பொங்கி விளையாடும் உடல் கட்டு...


என்று காதலியும் காதலனும் கூடிக் களித்து எங்களைப் பெருக்கிப் பார்க்க வைத்திருக்கும் பாடல் அது. கூட்டிக் கழிச்சு ஏன் பெருக்கிப் பார்த்தாலும் அதிகமாக மெட்டுக்குள் எட்டு என்ற எண்ணே அதிகமாக அகப்பட்டுக் கொண்டிருப்பது புரியும்.

எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் கணவன் -
பூஜைக்கு வந்த மலர்
வரவு எட்டணா செலவு பத்தணா – பாமாவிஜயம்

என்று பல பாடல்களைச் சொல்லிக் கொள்ளலாம்.

முகராசி திரைப்படத்தில் இடம் பெற்ற, உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேரு...  பாடலில் இந்த வரிகள் எனக்கு பிடித்த வரிகள்.

பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான் - அந்த
பட்டையத்தில் கண்டதுபோல் வேலி எடுத்தான் - அதில்
எட்டடுக்கு மாடி வைத்து கட்டிடத்தைக் கட்டி விட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தான் - மண்ணை
கொட்டியவன் வேலி எடுத்தான்...


பின்னாளில் வைரமுத்துவும்  ரா.ரா.ராமையாவை கூப்பிட்டு வைத்து சித்தர்கள் சொல்லி வைத்த வாழ்க்கைக் கணக்கை பாட்ஷா படத்தில் சொல்லி இருந்தார்.

முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல
மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
நான்காம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல
ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல
ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமல்ல
எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்ல...


எண்களை வார்த்தைகளில் வைத்து சிறப்பாக விளையாடியவர் கவிஞர் கண்ணதாசன். அவருடைய ஒரு பாடலை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். சரவணப்பொய்கையில் நீராடி.. என்ற பாடல். இதுசத்தியம் திரைப்படத்தில் இடம்பெற்றது. விஸ்வநாதன் + ராமமூர்த்தி இசை அமைத்திருந்தார்கள். இலங்கை தமிழ் வானொலியில் அன்று அதிகமாக இடம் பெற்ற பாடல்களில் இதுவும் ஒன்று. ஆறுதலைகள் கொண்ட முருகனிடம் ஒரு பெண் தன் வேண்டுதலை வைக்கிறாள். அந்த வேண்டுதலை கவிஞர் அஞ்சு, ஆறு எண்களை வைத்து  அசத்தியிருப்பார்.

அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை - அந்த
அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை
இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை கண்டு
என்னிடம் நான் கண்டேன் மாறுதலை...


பி.சுசிலாவின் குரலில், „சரவண பொய்கையில் நீராடி...' ஒரு இனிமையான பாடல்.

இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது சட்டென்று நினைவுக்கு வரும் இன்னும் ஒரு பாடல் பஞ்சவர்ணக்கிளி படத்தில் வரும் அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்... அந்தப் பாடலை கவிஞர் வாலி எழுதியிருந்தார். கவிஞர் வாலியும் எண்ணும், எழுத்தும் தனக்கும் வரும் என்று மன்னிப்பு என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் எழுதி இருந்தார். வெண்ணிலா வானில் வரும் வேளயில் நான் விழித்திருந்தேன்.. என்ற அவரின் அந்தப் பாடலுக்கு எஸ்.எம்.சுப்பையாநாயுடு இசை அமைத்திருந்தார்.

நாலு வித குணமிருக்கும்
அஞ்சுகின்ற மனமிருக்கும்
ஆறுகின்ற பொழுது வரை
அனல் போல் கொதிப்பதெது...


என்று நாலு, ஐந்து, ஆறு இலக்கங்களை வைத்து வாலியின் விளையாட்டு இப்படி இருந்தது.

இலங்கை வானொலியில் இந்தப் பாடலும் அடிக்கடி வந்து போனது. பாடலைக் கேட்கும் பொழுது இசையும் அதில் இடம்பெற்றிருந்த வார்த்தைகளும்  எண்ணிலாக் கனவுகளைத் தந்து போனது உண்மை.

வெண்ணிலா வானில் வரும் வேளயில் நான் விழித்திருந்தேன்..

ஆழ்வாப்பிள்ளை
22.03.2015

Related Articles