கனவுக் கன்னி ரீ.ஆர்.ராஜகுமாரி

'வசந்தசேனை, வட்டமிடும் கழுகு, வாய்பிளந்து நிற்கும் ஓநாய், நம்மை வளைத்து விட்ட மலைப்பாம்பு...' சிவாஜி கணேசன் மனோகராவில் பேசிய கருணாநிதியின் வசனங்கள் இவை. அந்த வசந்தசேனையாக மனோகராவில் நடித்தவர்தான் ரீ.ஆர்.ராஜகுமாரி. கதாநாயகியாக, அக்காவாக, சித்தியாக, அம்மாவாக, வில்லியாக என திரைப்படங்களில் பல வேசங்கள் போட்டவர்.

கனவுக் கன்னி, ஆடும் மயில், பாடும் குயில், கோயில் சிற்பம் எனப் பல பட்டங்களுக்கு ரீ.ஆர்.ராஜகுமாரி சொந்தக்காரி. பல பட்டங்கள் இவருக்கு கிடைத்தாலும் இரசிகர்களின் 'கனவுக் கன்னி' என்பதே இவருக்கு நிலைத்து நின்றது. சொந்தக் குரலிலே இவர் பாடி ஆடி நடித்தாலும் இரசிகர்கள் இவரிடம் ஒருவித கவர்ச்சியைக் கண்டார்கள். இவரின் பேச்சில் இருந்த தெளிந்த தமிழ் உச்சரிப்பும், இனிமை கலந்த குரலும், காந்தக் கண்களால் பேசும் அவரது நடிப்பும் இவருக்கு திரையுலகத்தில் வேகமான வளர்ச்சியைத் தந்தன.

இவர் நடித்த கச்ச தேவயாணி திரைப்படத்தை முப்பது நாற்பது தடவைகள் பார்த்த வெறி பிடித்த இரசிகர்களும் இருந்திருக்கிறார்கள். கச்ச தேவயாணிதான் இவர் நடித்த முதல் திரைப்படம் என நினைக்கிறேன். அந்தத் திரைப்படத்தில் குளத்தில் குளித்து விட்டு ஈர உடையுடன் இடுப்பில் குடத்தை தூக்கி வரும் காட்சியில் சொக்கிப் போய்தான் இவரது இரசிகர்கள் அதிகம் திரையரங்குக்குப் போனார்கள் போலும்.

ஜெமினி வாசனின் சந்திரலேகா திரைப்படத்தில் இடம்பெற்ற பிரமாண்டமான நடனக் காட்சி ஒன்றில் ஏராளமான முரசுகளுக்கு மேல் தாவித் தாவி இவர் ஆடிய கவர்ச்சி நடனம் அன்று மிகவும் பேசப்பட்டது.

அன்றைய சுப்பர் ஸ்ரார் நடிகர்களான எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, ரீ.ஆர். மகாலிங்கம் ஆகியோருடன் இணைந்து நடித்து தமிழ்த் திரையுலகின் முதல்தர  நாயகியானார். எம்.கே.தியாகராஜ பாகவதருடன் இவர் நடித்த ஹரிதாஸ், சிவகவி போன்ற படங்கள் இவரது திரையுலக மைல் கற்கள். ஹரிதாஸ் படத்தில், 'மன்மத லீலையை வென்றார் உண்டோ?' என்ற பாபநாசம் சிவனின் பாடலை, எம்.கே.தியாகராஜ பாகவதர் பாட, அவருக்கு முன் இவர் நடனம் ஆட அது அன்றைய இரசிகர்களுக்கு பெரு விருந்தாகியிருந்தது.

முன்னர் இருந்த சுப்பர் ஸ்ரார்கள் புகழ் மங்க பின்னால் வந்த எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய சுப்பர் ஸ்ரார்களுடனும் இணைந்து இவர் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆருடன் குலேபகாவலியில் காதலியாக, பெரிய இடத்துப் பெண்ணில் அக்காவாக, பாசம் திரைப்படத்தில் அம்மாவாக பல்வேறு வேசங்கள் கட்டி வெளுத்து வாங்கி இருப்பார். அந்த மூன்று படங்களையும் இவரது தம்பி ரீ.ஆர்.ராமண்ணாவே இயக்கி இருந்தார். மனோகரா திரைப்படத்தில் சிவாஜிக்கு மோசமான சித்தியாக நடித்தவர், அன்பு திரைப் படத்தில் பாசமிகு சித்தியாக வந்து போவார்.

தனது தம்பி ரீ.ஆர்.ராமண்ணாவுடன் இணைந்து 'ஆர்.ஆர் பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கி பல வெற்றிப் படங்களைத் தயாரித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரையும் தனித் தனியாக அழைத்து அவர்களுடன் உரையாடி இருவரையும் சம்மதிக்க வைத்து, அவர்கள் இணைந்து நடிக்க ஆர்ஆர் பிக்சர்ஸ் சார்பில் இவர் தயாரித்த திரைப்படம்தான் கூண்டுக்கிளி. படம் மோசமான தோல்வியடைந்தாலும், அன்றைய சுப்பர் ஸ்ரார்களை இணைத்து படம் தயாரித்தவர் என்ற பெருமை இவருக்கே உரியது.

இவர் நடித்து இறுதியாக வந்த படம் வானம்பாடி. 1963இல் வெளிவந்தது. கமலஹாசனும் அதில் நடித்திருந்தார். வானம்பாடி திரைப்படத்திற்குப் பின்னர் திரையுலகை விட்டு இவர் முற்றாக ஒதுங்கிக் கொண்டார். 1963இற்குப் பிறகு இவர் தன்னை ஊடகங்களுக்குக் காட்டிக் கொள்ளவே இல்லை. கவர்ச்சியான தோற்றம், கனிவான பேச்சு, கண்களால் பேசும் கவிதைகள், அலட்டிக் கொள்ளாத அற்புதமான நடிப்பு எல்லாவற்றையும் இரசிகர் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டு தன்னை மறைத்துக் கொண்டார். தனது வயது முதிர்ந்த தோற்றம் இரசிகர்களின் மனதில் பதிந்திருக்கும் தனது இமேஜை மாற்றிவிடக் கூடாது என்பதற்காகவே அவர் அந்த நிலையை கைக்கொண்டார் என ஊடகங்களில் தகவல் வெளியாகி இருந்தன.

இரசிகர்கள் மனதில் இளமையான தனது தோற்றத்தை மட்டும் பதிந்து வைத்த அந்த 'கனவுக் கன்னி' தனது 77வது வயதில் 1999 இல் மறைந்து போனார்.

ஐம்பதுகளில் நடித்த ரீ.ஆர்.ராஜகுமாரி பற்றி இப்பொழுது ஏன் எழுதுகிறேன் என்று பார்க்கிறீர்களா? நேற்று ஒரு திரைப்படம் பார்த்தேன். அதன் விளைவுதான் இது.

ரஜனிகாந்தின் லிங்கா திரைப்படத்தைப் பார்த்தேன். படத்தில் நடிப்பதை விட 65 வயதில்  தன்னை இளைஞனாக காட்டவே ரஜனிகாந்த் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா என்று ரஜனிகாந்திற்கு இரண்டு ஜோடிகள். ஒன்று தாத்தாவிற்கு மற்றது பேரனுக்கு. தாத்தாவிற்கும் சரி பேரனுக்கும் சரி இரண்டு ஜோடிகளும் பேத்திகள் போலவே தெரிகிறார்கள்.

'நான் ஒரு காரியத்தில் இறங்க மாட்டேன். இறங்கினா முடிக்காமல் விடமாட்டேன்'

'ஒருவேளை சாப்பிட உணவு இல்லேன்னா பிரச்சினையில்லை.. ஒருவேளைக்கும் சாப்பிட உணவில்லைன்னா தான் பிரச்னை'

'எவ்வளவு உயரத்திலே வாழ்ந்தாலும் படுக்குறதுக்கு தேவையான இடம் நம்ம உயரம் அளவுக்கு தான்' என்று அவரது பழைய படங்களைப் போல இந்தப் படங்களிலும் பல 'பஞ்ச்' வசனங்கள் இருக்கின்றன. எல்லாம் அவரது ரசிகர்களின் கைதட்டல்களுக்கே. மோட்டார் சைக்கிளில் சென்று வானில் பறக்கும் பலூனில் குதிக்கிறார். உண்மையில் அவர் சுப்பர் ஸ்ரார்தான் என அவரது இரசிகர்கள் சந்தோசப்பட்டிருப்பார்கள்.

இப்பொழுது ரீ.ஆர்.ராஜகுமாரியையும் ரஜனிகாந்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அவரைப் போல் இவரும் ஒதுங்கிப் போயிருக்கலாம்தானே? எதற்கு இரசிகர்களையும் விநியோகஸ்தரர்களையும் வீணாகக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நேற்று லிங்கா பார்த்து பாவத்தை தேடிக்கொண்டு இரவு முழுதும் நித்திரை இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி இருந்தேன்.

இன்று பிரபு சாலமனின் கயல் திரைப்படத்தைப் பார்த்து லிங்கா திரைப்படத்தைப் பார்த்த பாவத்தை தீர்த்துக் கொண்டேன்.

பிரபு சாலமனுக்கு நன்றி

ஆழ்வாப்பிள்ளை
18.01.2015

Related Articles