`மாசிலன்´ ஒரு பார்வை

இன்று பரவலாக பல குறும்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சிலவற்றை மட்டும் பார்க்க வாய்ப்பு அமைந்து விடுகிறது. இதனால் பல நல்ல குறும்படங்கள் பார்வைக்கு வராமலே போய் விடுகின்றன.  குறும்படங்களுக்கான விமர்சனங்கள் பலமாக இருந்தால் அவற்றைப் பார்க்கத் தூண்டும். அல்லது யாராவது பரிந்துரைத்தால் அந்த குறும்படத்தை இணையத்தில் தேடிப் பார்க்க எண்ணம் வரும். அந்த முறையில் நான் பார்த்ததுதான் மாசிலன்.

மாசிலன் என்றொரு குறும்படம் வந்திருக்கிறது பாருங்கள் என்று நண்பர் ஒருவர் பரிந்துரைத்திருந்தார். அதனாலேதான் மாசிலனை தேடி  எடுத்துப் பார்த்தேன்.

எடுத்து வந்த விடயம் பலமாக இருந்து அதை  சுருக்கமாகவும் நேர்த்தியாகவும் குறுகிய நேரத்தில் சொல்லி விட்டால் அது இலகுவாக மனதில்  பதிந்து விடும். மாசிலனில் சொல்ல வந்த விடயம் நமது புலம் பெயர் வாழ்வில் நிகழும் இளம் குடும்பங்கள் பற்றியது என்பதால்  உடனடியாகவே கதைக்குள் நாமும் சேர்ந்து விடுகிறோம்.

திருக்குறளில் வள்ளுவர் தான் சொல்ல வந்ததை இரண்டு வரிகளில் செதுக்கி இருப்பார். அதனால் அதை உள்வாங்க ஏதுவாக இருந்தது. இங்கே சுஜீத்ஜி தான் எடுத்துக் கொண்ட இரண்டு வரிகளில் உள்ளதை எங்களுக்காக குறும்படமாக்கி இருக்கிறார். அந்த இரண்டு வரி வார்த்தைகள் இதுதான்

Please don`t  break their world through your break-up

முன்னர் எப்பொழுதாவது  எங்கள் சமூகத்தில் கேட்கும் விவாகரத்து  என்ற வார்த்தை இன்று புலம் பெயர்வில் கொஞ்சம் அதிகமாகக் கேட்கத் தொடங்கி இருக்கிறது. அது ஏற்படுத்தும் தாக்கங்கள் பலவாக இருந்தாலும், ஒரு தாக்கத்தை மட்டும் எடுத்து சுஜீத்ஜி இங்கு குறும்படமாக்கி இருக்கிறார்.

படத்தை மேலோட்டமாகப் பார்த்தோமாயின் எதுவித குறைகளும் தோன்றாது. ஆனாலும் படம் முழுவதும் சின்னச் சின்ன விடயங்களில் எல்லாம் மிகக் கவனமாக நேர்த்தியாக செதுக்கிக் கொண்டு வந்த சுஜீத்ஜி, இறுதிக் காட்சியில் நாடக பாணியிலான வசனங்களினால் யதார்த்தத்தை இழந்து விடுகிறார். அதுவும் 'நீங்கள் நல்ல husband ஓ இல்லையோ என்று எனக்குத் தெரியாது...' என்று மனைவி சொல்லும் போது 'அப்போ எதுக்கு விவாகரத்து?' என்ற கேள்வி வந்து விடுகிறது. அந்த இறுதிக் காட்சியில் வசனங்களில்தான்  தகராறா அல்லது அதை உச்சரிப்பதில்தான் தவறு ஏற்பட்டு விட்டதா தெரியவில்லை.

அதே போல் ஆரம்பத்தில் கணவனை நீங்கள் என்று அழைக்கும் சட்டத்தரணி இறுதியில் நீர் என்று உரையாடுவதையும், 'அம்மாவும் அப்பாவும் உங்களோடை  எப்பவும் இருப்பம்...' என்ற உரையாடலில் ஏற்படும் வார்த்தை தடுமாற்றத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

கதை, திரைக்கதை, உரையாடல், இயக்கம், தயாரிப்பு என்று எல்லாப் பாரத்தையும் தானே சுமந்து கொண்டு  சுஜீத்ஜி நிறையவே சிரமப் பட்டிருப்பார். ஆனால் அவரது சிரமம் எங்களுக்கு ஒரு சமூக விழிப்புணர்வைத் தரும் ஒரு  நல்ல குறும் படத்தைத் தந்திருக்கிறது.

சுஜீத்ஜியின் நடிப்பும் யதார்த்தமாகவே இருக்கிறது. எரிச்சலை, கோபத்தை, இயலாமையை அவர் இயல்பாகவே காட்டி இருக்கிறார். அதேபோல் மகனாக வரும் அந்தச் சிறுவனும் இயல்பாகவே ஒரு மகன் போலவே வந்து போகிறான். லண்டனில் இருக்கும் மாமியார்கள் இப்படித்தான் தூபம் போட்டுக் கொண்டு இருப்பார்களா என்ற அச்சத்தை அந்த தாயின் பாத்திரம் ஏற்படுத்தி விடுகிறது. மேல்முறையீடால் சட்டத்தரணிகளுக்குத்தான் லாபம் கிடைக்கும் என்று ஒரு சட்டத்தரணி மூலமே சொல்வது சிறப்பு. அவரது நடிப்பும் நன்று. மூக்குத்தி போட்டபடி வந்து முழுவதும் சோகமே நிறைந்த முகத்தோடு வரும் மனைவி தனக்கு தரப்பட்ட வேலையை நன்றாகவே செய்கிறார்.

உரையாடல்களின் போது சில வேளைகளில் வசனங்களைக் கேட்க விடாமல்  இசை இடையூறு செய்தாலும் பெரும்பாலான பகுதிகளில் இசையையும் காட்சியையும் வேறு படுத்த முடியாமல் இருப்பது சிறப்பு. அதுவும் வீடு தேடி வந்து கணவன் மனைவியுடன் உரையாடும் காட்சியில் வரும் இயற்கையான பின்னணி இசையின் சேர்ப்பு அற்புதம். அதேபோல் ஒளிப்பதிவும் நேர்த்தியாக இருக்கிறது. இவ்வளவு சிறப்புக்களுடன் வந்திருக்கும் மாசிலன் குறும்படம் இன்னும் சமூகப் பிரச்சினைகளைச் சுமந்த நேர்த்தியான பல படைப்புக்களை சுஜீத்ஜியிடம் இருந்து எதிர்பார்க்க வைக்கிறது.

இந்தக் குறும் படத்தை தயாரிக்க உதவியவர்களுக்கு படத்தின் ஆரம்பத்தில் சுஜீத்ஜி நன்றி தெரிவித்திருந்தார். இப்படியான குறும் படத்தை தந்ததற்கு நாங்கள் சுஜீத்ஜிக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய நேரம் இது.

Maasilan [மாசிலன்] - Short film

ஆழ்வாப்பிள்ளை
1.12.2014

Related Articles