வானோர் தூவும் தேன்மலர்!

ஐம்பதுகளில் வெளிவந்த ராஜா ராணி பாணிப் படங்களுக்கு இசையமைத்த பலரால் சமூக ரீதியான படங்கள் வெளி வந்த பொழுது தாக்குப் பிடிக்க முடியாமல் போனது. மேற்கத்திய இசைத் தழுவல்களுடன் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இரட்டையர்களின் ஆதிக்க காலமாக 60கள் மாறிப் போனது.

காலத்தால் அழியாத, அற்புதமான பாடல்களைத் தந்தவர் இசையமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா. அப்பொழுது பத்மினி பிக்சர்ஸ் பி. ஆர் பந்துலுவின் ஆஸ்தான இசையமைப்பாளர்  இவர்தான். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையர்களின் வருகைக்குப் பின்னர் பிரகாசிக்க முடியாமல் போனவர்களில் இவரும் அடங்குகிறார்.

இந்தி திரைப்படங்களில் இருந்து தமிழுக்கு இசையைக் கொண்டு வந்து கொண்டிருந்த நேரம் டி. ஜி. லிங்கப்பா இசை அமைத்த „அமுதைப் பொழியும் நிலவே...' பாடல் மெட்டு இந்திக்குப் போனது. இவர் இசையமைத்த பாடல்கள் இன்றும் கேட்க இனிமையாக இருக்கும்.

உதாரணத்திற்கு

'தங்க மலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே...'

'ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்..'

'என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே..'

'ராதா மாதவ வினோத ராஜா
எந்தன் மனதின் ப்ரேம விலாசா...'

'சித்திரம் பேசுதடி - என்
சிந்தை மயங்குதடி...'


என்று இன்னும் பல பாடல்களை இங்கே வரிசைப் படுத்தலாம்.

பி. ஆர் பந்துலு தயாரித்து இயக்கிய திரைப் படம் சபாஸ் மீனா. 1958இல் வெளிவந்தது. சிவாஜி கணேசன், மாலினி, சந்திரபாபு, சரோஜாதேவி நடித்த ஒரு வெற்றிப் படம். சந்திரபாபுவுக்கு இரட்டை வேடம். இந்தப் படம் நகைச்சுவைப் படமானதால், சிவாஜி கணேசனை விட சந்திரபாபுவுக்குத்தான் படத்தில் அதிக வாய்ப்பு. இதனால் பி.ஆர் பந்துலுவுக்கு சிவாஜி கணேசனை திருப்திப் படுத்த வேண்டிய நிலை. எனவே சபாஸ் மீனா படத்துக்காக அவருக்கான ஒரு மெலடி நிறைந்த பாடல் உருவாகிறது.

சிவாஜி கணேசனுக்கு குரல் கொடுப்பவர் டி. ஏ. மோதி. இவர் ஐம்பதுகளில் ஒரு சில பாடல்களைப் பாடி இருந்தாலும் கண்டசாலா, சிதம்பரம் ஜெயராமன் ஆகியோருடன் போட்டி போட்டு முன்னுக்கு வருவது முடியாமல் இருந்தது. அதிகமாகப் பேசப்படாத அவரால் பாடப் பட்ட இந்தப் பாடலுக்கு இணைந்து குரல் தருபவர் பி.சுசிலா.

மழையில் நனைந்து கொண்டு காதலனும் காதலியும் பாடும் பாடல் காட்சியில் குதூகலத்தைக் காட்ட வேண்டும் என்று இயக்குனர் சொன்னாரோ என்னவோ தேவைக்கு அதிகமாகவே சிவாஜி கணேசன் குதூகலத்தைக் காட்டி பாடல் காட்சியில் நடித்திருப்பார். இதில் நடித்த மாலினி பின்னர் சபாஸ் மாப்பிள்ளை திரைப் படத்தில் எம்ஜிஆருடன் நடித்திருந்தார். பிறகு திரையில் அவரைப் பார்க்கவே முடியவில்லை.

வானம் சிந்தும் மாமழை எல்லாம்
வானோர் தூவும் தேன்மலரோ?
மேகம் யாவும் பேரொலியோடு
மேளம் போலே முழங்குவதாலே
கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
விண்ணில் வாண வேடிக்கையோ?
மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
மனதில் பொங்கும் ப்ரேமையினாலே
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ...


என்று கு.ம. பாலசுப்பிரமணியம் அவர்களது பாடல் வரிகள் மழை போல் அழகாக இருக்கும்.

இவ்வளவு பெரும் மழையில் நனைந்து காதலர்கள் இப்படி மகிழ்ந்திருப்பது போன்ற காட்சிகள் பின்னாளில் திரைப் படங்களில் வந்ததா தெரியவில்லை. அப்படி வந்திருப்பின் இதுவே முன்னோடி.

இதே மெட்டில் அதே ஆண்டு வெளிவந்த எங்கள் குடும்பம் பெரிது என்ற திரைப்படத்துக்கும் 'ராதா மாதவ வினோத ராஜா எந்தன் மனதின் ப்ரேம விலாசா..' பாடலை  டி.ஜி. லிங்கப்பா இசை அமைத்திருப்பார். ஆனாலும் காணா இன்பம் கனிந்ததேனோ.. பாடலில் டி.ஏ.மோதியின் குரல் இனிமையும் பி.சுசிலாவின் கம்மிங்கும் சிவாஜி கணேசன் மாலினியின் நடிப்பும் பாடலுக்கான வரிகளும் அதற்கேற்ற இசையும் குறிப்பாக அந்த பெரு மழையும் அற்புதம்.

மழை பிடிப்பதால் குடை பிடிக்காதவர்களுக்கு இந்தப் பாடல் பிடித்துப் போகும்.

https://www.youtube.com/watch?v=p3YP3G0iMSk

ஆழ்வாப்பிள்ளை
26.11.2014

Related Articles