நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்

அன்றைய தலைவர்கள் பலதரப்பட்ட மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்காகப் போராடி சிறை சென்றார்கள். ஒவ்வொரு தடவையும் சிறை சென்று திரும்பும் போது அந்தத் தலைவர்களுக்கான மதிப்பு மக்கள் மத்தியில் உயர்ந்து கொண்டே போனது. மக்கள் நலனே அந்தத் தலைவர்களின் வாழ்வாக இருந்தது.

ஆனால் இன்று எல்லாமே தலை கீழ். மக்களுக்காக தலைவர்கள் போராடிய காலம் போய் தங்கள் தலைவர்களுக்காக  மக்கள் போராடும் காலம் உருவாகி இருக்கிறது. இல்லை உருவாக்கப் பட்டிருக்கிறது என்று சொல்வதே பொருந்தும்.

அன்று கலைஞர் மகள் கனிமொழி திகார் சிறையில் இருந்து வெளியே வந்த பொழுது பெரிய வரவேற்பு நிகழ்த்தப் பட்டது. இன்று ஜெயலலிதா பெங்களுர் சிறையில் இருந்து வெளியே வரும் பொழுது கொட்டும் மழையில் நின்று கோலாகல வரவேற்பு நடந்திருக்கிறது. இவர்கள் எதைச் சாதித்து விட்டார்கள் என்று  இப்படியான வரவேற்பு? இதற்குள் காருக்குள் வசதியாக இருந்து கொண்டு கையசைப்பு வேறு தனியாக நடக்கிறது.

தலைவர் தவறானவர் என்று சட்டம் தண்டித்தாலும், தங்களைச் சுரண்டுகிறார் என்று தெரிந்தாலும் அதெல்லாம் தொண்டனுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவனது மானசீகத் தலைவன்தான் அவனுக்கு எல்லாமே.

சிறையில் இருந்து தற்காலிகமாக வெளியே வந்த ஜெயலலிதா அறிக்கை விடுகிறார். அந்த அறிக்கையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

“எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக மக்களின் நல்வாழ்வு, முன்னேற்றம், உயர்வு, இவை தான் என் இதயத்தில் என்றைக்கும் நான் பதித்து வைத்திருக்கும் இலக்குகள். இந்தப் பாதையில் என்னுடைய பயணம் நடைபெறும் போது ஏற்படுகின்ற இன்னல்களைப் பற்றியோ, துயரங்களைப் பற்றியோ, சோதனைகளைப் பற்றியோ, வேதனைகளைப் பற்றியோ நான் சிறிதும் கவலைப்படுவதில்லை...

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் பேரியக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ´உன்னையே நீ அர்ப்பணித்து பணியாற்ற வேண்டும்` என்று இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். என்னிடம் பெற்றுக்கொண்ட சத்தியத்தை இதயத்தில் ஏற்று நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தொடர்ந்து அந்த பாதையிலேயே என்னுடைய பயணம் அமையும்...“

ஆக ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது எல்லாம் அதிமுகவை காப்பாற்றத்தானா? தண்டனை பெற்று  சிறைக்குப் போனது தமிழக மக்களின் நல்வாழ்வுக்கும் முன்னெற்றத்துக்குமாகவா?

சினிமாவில் நடிப்பு என்று வரும் பொழுது, அது ஜெயலலிதாவுக்கு வெகு தூரத்திலேயே இருந்தது. ஆனால் அரசியலில் இவரது நடிப்பு அபாரம்.

அன்று எம்ஜிஆர் தொடங்கி வைத்த அண்ணா திமுக இன்று அம்மா திமுகவாக மாறிப் போயிருக்கிறது.

எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய நேரம் புலமைப் பித்தன் எழுதிய பாடல் „நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..' உலகம் சுற்றும் வாலிபனில் இடம் பெற்ற அந்தப் பாடலை எம்ஜிஆர் தனது அரசியல் மேடைகளிலும் ஒலிக்க விட்டார்.

வல்லோர்கள் சுரண்டும் கொடுமை நீங்கி சமநீதி வரும் என்றாரே அதுதான் என்ன என்று புரியவில்லை.

ஏன் எம்ஜிஆர் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லையா என்று யாரேனும் கேட்டால்,

கொஞ்சம் இதைப் படியுங்கள்.

1987ஆம் ஆண்டு விகடன் அட்டைப்படத்தில் வெளியான ஒரு நகைச்சுவைக்காக, தமிழக சட்டமன்றத்தின் அன்றைய சபா நாயகர் பி.ஹெச்.பாண்டியன் விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியனைக் கைது செய்து, மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை விதித்தார். பின்னர் ஏற்பட்ட அழுத்தங்களால் ஆசிரியரை எம்ஜிஆர் பெருந்தன்மையாக விடுதலை செய்தார். அந்த ஜோக்கை எழுதியவர் படுதலம் சுகுமாரன். இதுதான்அந்த ஜோக்

„மேடையில் இருக்கிற இரண்டு பேர்ல, யாரு எம்.எல்.ஏ., யாரு மந்திரி..?'

„ஜோப்படித் திருடன் மாதிரி இருக்கிறவர் எம்.எல்.ஏ., முகமூடிக் கொள்ளைக்காரன் மாதிரி இருக்கிறவர்தான் மந்திரி..!'

கண்ணதாசனும் திமுகவையும், எம்ஜிஆரையும் விட்டு வைக்கவில்லை. 1974இல் வந்த சிவாஜி கணேசனின் என்மகன் திரைப் படத்தில் கருணாநிதியையும், எம்ஜிஆரையும் „நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்..' என்று பாடலில் கேட்டு வைத்திருப்பார்.

தங்கப் பதக்கம் திரைப்படத்தில் அண்ணன் தம்பியாக சோ இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். தம்பி அரசியல்வாதி. அண்ணன் போலீஸ்.

ஒரு காட்சியில்:

பொலிஸ் சோ: வாடா, வீட்ல இருந்த பணத்தை எடுத்தியா?

அரசியல் சோ: அண்ணா!!! அத நான் தேர்தல்ல போட்டியிட டெபாஸிட்டுக்கு எடுத்துக்கிட்டேன்.

பொலிஸ் சோ: அண்ணண் பணத்துல கைய வெச்சது தம்பிதானா? உனக்கு என்னடா தெரியும்? தேர்தல்ல நிக்கற?

அரசியல் சோ: எனக்கு ஒண்ணுமே தெரியாது அண்ணா!!! அதனாலதான் நிக்கறேன் அண்ணா!! உட்கார முடியல அதான் நிக்கறேன் அண்ணா!!!

இங்கே அரசியல்வாதி பணத்தை கையாடுவதையும் அண்ணா-தம்பி என்ற திமுக உறவுகளையும் எம்ஜிஆரின் அரசியல் அறிவையும் அவர் நகைச்சுவையாக வெளிக்காட்டி இருப்பார். இன்னும், „ரூபாவுக்கு மூன்று படி அரிசி தருவோம்' என்று அன்றைய திமுகவின்  தேர்தல் பிரச்சாரத்தை, ரூபாவுக்கு மூன்று கிளிகள் தருவோம் என்று சோ தங்கப் பதக்கம் திரைப் படத்தில் கிண்டலடித்து நடித்திருப்பார்.

இப்படி எல்லாம் அரசியல் ஊழலை தனது துக்ளக் பத்திரிகையில் எழுதியும் நாடகங்கள், சினிமாவில் தோலுரித்தும் காட்டிய சோ, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு சம்பவத்தில் அதைப் பற்றி அலசாமல், ஜெயலலிதாவுக்கு வழங்கிய தண்டனையைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறார். ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

சோவின் இந்த நிலைப்பாடு, ஜெயலலிதா அவரின் பள்ளித் தோழி என்ற முறையிலா, அல்லது அவருடன் நடித்த சக நடிகை என்ற நிலையிலா, இல்லை தன்னால் ஆசிர்வதிக்கப்பட்ட அரசியல்வாதி என்பதாலா தெரியவில்லை.

இந்திரா காந்தி மற்றும்  திமுக கட்சித் தலைவர்களை கிண்டலடித்து ´முகமது பின் துக்ளக்` என்ற திரைப்படத்தை 1971இல் சோ எடுத்திருந்தார். அரசியலில் இருக்கும் மனோரமாவின் பதவி ஆசை, அதை நன்றாக அவர் அனுபவிப்பது ஊழல்கள் செய்வது அதிகாரம் செலுத்துவது என எல்லாவற்றையும் நகைச்சுவையாக காட்டி இருப்பார். அந்தத் திரைப் படத்தில் இடம் பெறும் ஒரு பிறந்தநாள் காட்சியில் வரும் „பாவலன் பாடிய புதுமைப் பெண்ணை பூமியில் கண்டது இன்று..' என்ற இந்தப் பாடல் இப்பொழுதும் இன்றைய அரசியலுக்குப் பொருந்தி இருக்கிறது.

பெரும் தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா இருவரும் எளிமையாக வாழ்ந்து ஏழைகளாகவே காலமானவர்கள்.  ஆனால் அண்ணா தொடங்கிய திமுக ஆகட்டும், அண்ணா திமுக ஆகட்டும் சொத்து சேர்ப்பதிலும், ஊழலிலும்  நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டேயிருக்கின்றன.

தலைவர்கள் தவறுகள் செய்வது தெரிகிறது. ஆனால் ஊடகங்கள் அதை பெரிதாகப் பேசாமல் இருப்பதுவும், விடயத்தை திசை திருப்புவதும் ஏன்..? உண்மைகளைப் போட்டு உடைப்பதுவும், மக்களைத் தெளிவு பெறச் செய்வதும் அவர்கள் கடமைகள் அல்லவா? பெரிய இடத்து விடயங்கள் எதற்கு வம்பு என ஒதுங்குவதாயின் ஊடகங்கள் சமூகத்திற்கு நல்லது செய்ய வாய்ப்புகள் இல்லையே.

அன்றைய திமுக கவிஞராக இருந்த பாரதிதாசனின் ´தமிழர் எழுதுகோல்` என்ற கவிதையில் சில வரிகள்,

பொதுமக்கள் நலம்நாடிப் பொதுக்கருத்தைச் சொல்க
புன்கருத்தைச் சொல்வதில் ஆயிரம் வந்தாலும்
அதற்கொப்ப வேண்டாமே அந்தமிழர் மேன்மை
அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடுபல வாழ்ந்தால்
எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை
ஏற்றசெயல் செய்தற்கும் ஏன் அஞ்சவேண்டும்?


ஆழ்வாப்பிள்ளை
24.10.2014

Related Articles