சுமதி ரூபனின் `மனுசி´ (குறும்படம்)

ஒரு வார்த்தை பேசாமல் மனுசி வந்திருக்கிறா. ஆச்சரியமாக இருக்கிறது.

கொட்டாவி விட்டுக்கொண்டு களைப்புடன் சுமதிரூபன் வீதியில் நடந்து வரும்போதே பாவம் இந்த மனுசி என்று பரிதாபப் பட வைக்கிறது.

வீட்டுக்குள் நுழைந்தால் அட எங்கள் வீட்டுச் சமாச்சாரம்.

சோபாவில்  காலை ஆட்டிக் கொண்டு பாடலை இரசித்துக் கொண்டிருக்கிறார் கணவன் சுரேஸ்குமார். வீட்டு வேலைகளைப் பார்த்துப் பார்த்து செய்கிறார் மனைவி சுமதி. சமைக்கும் போது அடிக்கடி அவர்  திரும்பிப் பார்ப்பதுதான் ஏன் என்று புரியவில்லை.  கணவன் உதவிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பிற்கா இல்லை கணவன் உதவிக்கு வந்திடுவாரோ என்று பயந்தா?

சுரேஸ்குமார் இரும, அவருக்கு என்ன தேவைப்படுகிறது எனப் புரிந்து கொண்டு தேநீருக்குத் தண்ணீரைச் சூடாக்குவது கணவனைப் புரிந்து கொண்ட மனுசிக்கு அடையாளம்.

எல்லா வேலைகளையும் முடித்து அப்பாடா என்று அறைக்குள் போனால் அங்கே இன்னுமொரு வேலை பாக்கியிருக்கிறது என்பதை அறிந்து சுமதிரூபன் வெறுப்புடன் காட்டும் முக பாவனை  நன்றாக இருக்கிறது. ஆனாலும் அசட்டுச் சிரிப்புடன் சுரேஸ்குமார் காட்டும் முக பாவம் இருக்கே அது இன்னும் நன்றாக வந்திருக்கிறது.

சுமதிரூபன் வீட்டுக்குள் நுழைந்து, கொண்டு வந்து பொருட்களை குளிர் சாதனப் பெட்டிக்குள் வைத்து விட்டுப்  போய் ஆடையை  மாற்றி விட்டு வரும் வரை மானா மதுரை மாமரைக் கிளையிலே பச்சைக் கிளி ஒன்று.. பாடல்  ஒலித்துக் கொண்டு இருக்கிறதே. மனுசி வேகமாக செயற்படுகின்றாவா? இல்லை பாடல்தான் நீளமா? அல்லது ஒரே பாடலைத்தான் கணவன் திரும்பத் திரும்ப போட்டுப் பார்க்கிறாரா?

படத்தில் அடிக்கடி சுரேஸ்குமார் சொறிந்து கொள்கிறார். போதாதற்கு சுமதிரூபனும் தன்பங்குக்குச் சொறிந்து கொள்கிறார். வீட்டில் எதுவுமே செய்யாமல் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தால், எதிர்ப்புகள் எதுவும் காட்டாமல் பேசாமல் கணவனுக்கு சமைத்துக் கொடுத்தால் இப்படி சொறிய வேண்டி வரும் என்றா சொல்ல வருகிறீர்கள் ருபன்?

பெண்ணியம் பேசுபவர்கள்  மனுசியை வாழ்த்தி வரவேற்பார்கள். ஆனால் ஆண்கள் சண்டைக்கு வரப் போகிறார்களே.

யேர்மனியிலிருந்து
முல்லை

Related Articles