நேர்மைத்திறன் இருந்தால்

எம்ஜிஆருக்கும் கருணாநிதிக்கும் முட்டல்கள் மோதல்கள் உருவாகி இருந்த  காலமது. இருவருக்குமான லடாய் ஊடகங்களில்  மெதுவாக கசியத் தொடங்கி இருந்தது. இந்த நேரத்தில் தயாரான திரைப்படம்தான் மணியனின் இதயவீணை. இந்தப் படத்திற்கு கிளாப் அடித்து ஆரம்பித்து வைத்தவர் கருணாநிதி. அந்த நிகழ்வில் எடுக்கப் பட்ட புகைப்படங்கள் பத்திரிகைகளில் வந்த பொழுது, „இவர்களுக்குள்ளேயா பிரச்சினை? எல்லாம் கட்டுக்கதை' என்பது போல் அவை இருந்தன.

இதயவீணை படம் வெளிவந்த பொழுது தமிழ்நாட்டு அரசியலில் எல்லாமே மாறுபட்டு இருந்தது. ஊழல் லஞ்சம், கட்சியின் கணக்கைக் காட்டு என வார்த்தைகள் அதிகம் அடிபட ஆரம்பித்திருந்தன.

இதயவீணையில் இடம்பெற்றிருந்த,  „ஒரு வாலுமில்லை நாலு காலுமில்லை சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே..' என்ற பாடல் கருணாநிதியைச் சாடியே எழுதப் பட்டது என்பது அப்பொழுது எல்லோருக்கும் வெளிச்சமானது.

எம்ஜிஆரை சினிமாவில் இருந்து ஓரம் கட்ட கருணாநிதி, தனது மகன் முத்துவை எம்ஜிஆர் போல் வேசம் கட்டி „பிள்ளையோ பிள்ளை' திரைப்படத்தை தயாரித்தார். இந்தப் படத்தை கிளாப் அடித்து ஆரம்பித்து வைத்தது என்னவோ எம்ஜிஆர்தான்.

எம்ஜிஆர் படத்தில் இருக்கும் கதைப்பின்னணி, எம்ஜிஆர் போல் இரட்டை வேடங்கள், எம்ஜிஆர் படத்தில் நடிக்கும்  நடிகர் நடிகைகள் மற்றும் பாடலுக்கு வாலி, இசைக்கு விஸ்வநாதன், சண்டைப் பயிற்சிக்கு ஸியாம் சுந்தர் என முற்று முழுவதுமாக எம்ஜிஆர் படமாக பிள்ளையோ பிள்ளை படம் இருந்தது. போதாதற்கு எம்ஜிஆர் பாணியிலேயே  மு.க.முத்து நடித்திருந்தார்.

நிலமையின் தாக்கமும் கருணாநிதியின் நோக்கமும் என்ன என்று புரிந்து கொண்ட எம்ஜிஆர், `பிள்ளையோ பிள்ளை´ நூறாவது நாள் விழாவில் „என் படங்களைப் பார்த்து அதன்படி நடிக்க விரும்புகிறார் முத்து என்று எண்ணுகிறேன். ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. அதில்தான் செல்ல வேண்டும். முத்து தனக்கென்று தனி வழியை நடிப்பதற்கு வகுத்துக் கொண்டு நடிகராக வளர வேண்டும் என்று  வாழ்த்துகிறேன்' என்று பேசினார்.

உயர்ந்த இடத்தில் இருப்பவன் நான்
துயர் வந்தாலும் சிரிப்பவன் நான்..


முதலில் ஊமை யுத்தமாகத் தொடங்கி சத்தம் வெளியே தெரியாமல் இருந்த எம்ஜிஆருக்கும் கருணாநிதிக்குமான பனிப்போர், மு.க.முத்து நடித்த 'பிள்ளையோ பிள்ளை' படம் வெளிவந்ததும், பகிரங்கமாய் வெடித்தது.

அப்போழுதுதான் திமுக பொதுக் கூட்டத்தில் எம்ஜிஆர் கணக்கு கேட்கிறார்.„கழகத் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கைப் பொதுமக்கள் முன்னால் சமர்பிக்க வேண்டும். கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது சொத்துக் கணக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் இலஞ்சத்தையும், ஊழலையும் ஒழிப்பதற்கு ஆரம்பப் பணியாக இருக்கும்.'

கணக்குக் கேட்டவரின் கணக்கு திமுகவில் கிழிக்கப் படுகிறது.  எம்ஜிஆர் திமுகவில் இருந்து வெளியே அனுப்பப் படுகிறார்.

மு.க.முத்துவுக்காக பிள்ளையோ பிள்ளை படத்திற்கு வாலி எழுதிய „மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ' பாடல் பிரபல்யமாயிற்று. இந்தப் படம் வெளிவந்ததன் பின்னர் எம்.ஜி.ஆர்.  வாலியை ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து சாப்பிடச் சொல்லி வற்புறுத்தி சாப்பிட வைத்திருக்கிறார். சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது 'ஏன்யா.. என் படத்துக்குப் பாட்டு எழுதும்போதெல்லாம் அந்த மூன்று தமிழ் தோன்றியதும் என்ற வரி உனக்குத் தோணலையா?' என்று வாலிக்கு அர்ச்சனையையும் தனியாக நடாத்தி இருக்கிறார். வாலியின் நிறம் மாறும் குணத்தைப் புரிந்து கொண்ட எம்ஜிஆர், பின்னாட்களில் புலமைப் பித்தனுக்கு முன்னுரிமை கொடுக்க ஆரம்பித்தார்.

மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ..


மு.க.முத்துவுக்கு  பாடல் எழுதி எம்ஜிஆரைக் கடுப்பேத்திய வாலியைக் கொண்டே பாடல் எழுதுவித்து விஸ்வநாதனைக் கொண்டு இசை அமைத்து நடிகர் எஸ்.ஏ. அசோகன் தயாரிப்பில் நேற்று இன்று நாளை படத்திற்கு ஒரு பாடல் தயாரானது. திரையில் அந்தப் பாடல் இடம் பெறும் பொழுது ஐசரி வேலன் கொடுக்கும் „சமநீதி“ என்ற புத்தகத்தில் இருந்து „இசை விஸ்வநாதன், பாடல் வாலி“ என்று சொல்லி விட்டு எம்ஜிஆர் பாடலை ஆரம்பிப்பார். அது இவர்கள் எல்லாம் எனது ஆட்கள் என்று கருணாநிதிக்கு அறிவிப்பது போல் இருக்கும்.

தம்பி நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று..


அண்ணா திமுக கட்சிக் கொடியைக் காண்பித்து கருணாநிதிக்கு நேரடியாக சவால் விடும் முதலாவது பாடலாக அந்தப் பாடல் இருந்தது.

அதன் பிறகு வந்த  எம்ஜிஆரின்  எல்லாப் படங்களிலும் கருணாநிதியின் ஊழலை வெளிக் கொண்டு வரும் வகையில் பாடல்கள் அமைந்திருக்கும்.

மீனவநண்பன் திரைப்படத்தில் தனது கேள்விக்கு பதில் கேட்டு எம்ஜிஆர், கருணாநிதியை „நேருக்கு நேர் வா' எனும் பாடல் இது. புலமைப் பித்தனின் பாடலுக்கு இசை தந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்
என் கேள்விக்குப் பதிலைத் தரட்டும் நேர்மைத் திறனிருந்தால்..


„பாக்கப் பாக்க சிரிப்பு வருது அடக்க முடியலே' என்று ஒரு பாட்டு நீதிக்குத் தலைவணங்கு படத்தில் இடம் பெற்றது. „நீ சமைச்சு வச்ச வாழைக்காய வாயில் வைக்க முடியல நீ பொரியல் செஞ்ச புடலங்காயில் கருகல் நாத்தம் சகிக்கலன்னு' லதா சொல்ல எம்ஜிஆர் „கண்ட கண்ட உரத்தப் போட்டு காய்கறியை வளர்க்கிறான் அந்த உரத்துல் கூட ஊழல் பண்ணி எங்கள் பேரை கெடுக்கிறான்' என்று கருணாநிதி செய்த உர ஊழலை எடுத்துப் போடுவார். ஒரு சமையல்காரன் அந்த ஊழலை சுட்டிக் காட்டுவதான இந்தப் பாடலுக்கு இசை  எம்.எஸ்.விஸ்வநாதன்.

பார்க்க பார்க்க சிரிப்பு வருது அடக்க முடியலே
நீ பொங்கிப் போட்டு தின்கிறதெப்போ எனக்குப் புரியலே..


இப்படி எல்லாம் ஊழல் லஞ்சம் சொத்துக் குவிப்பு எல்லாவற்றிற்கும் எதிராகப் பேசி ஆட்சிக்கு வந்த கட்சியால் தாங்கள் மட்டும் சுத்தமாக இருக்க முடிந்ததா என்று யாராவது கேட்டால், இங்கு என்னிடம் பதில் இல்லை. இன்றைய தமிழ்நாட்டு அரசியல் அதற்குப் பதில் சொல்லும்.

அரசியல் எல்லாம் எதற்கு என்று சற்று தெருவோரமாக ஒதுங்கினால் வண்டியை இழுத்து வண்டிய உருட்டி, வறுமையை விரட்டி, வாழ்ந்தாலும் சாய்ந்தாலும் ஒண்ணாகணும் என்று ரிக்ஷோ வண்டி இழுப்பவர்கள் பாடல் காதில் வந்து விழுகிறது.

கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்
கவைக்கு உதவாத வெறும் பேச்சு
கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சு – பழங்
கதைகளைப் பேசி காலம் வீணாக்கி.
கையாலே முன்னேற்றம் கண்டாகணும்


பதிபக்தி படத்தில் இடம் பெற்ற „இந்தத் திண்ணைப் பேச்சு வீரனிடம் ஒரு கண்ணா இருக்கணும் அண்ணாச்சி' என்ற பாடலை மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதி இருந்தார். ரி.எம்.சௌந்தரராஜன், ஜே.பி.சந்திரபாபு, குழுவினர் பாட விஸ்வநாதன், ராமமூர்த்தி இசை அமைத்திருந்தார்கள்.  சிவாஜி கணேசனுக்கு ஆட்டங்கள் அதிகமாக ஒத்துக் கொள்ளாததால்  அவரை ரிக்ஷோவில் இருத்தி வைத்து விட்டு ஜே.பி.சந்திரபாபு, எம்.என் ராஜம் குழவினர்கள்  சேர்ந்து ஆடி அசத்தி இருப்பார்கள்.

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம்
ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி..


ஆழ்வாப்பிள்ளை
03.10.2014

Related Articles