பயந்தால் எதுவுமே ஆகாது

தேவை ஒரு சினிமா பாணி என்று நான் எழுதிய ஒரு கட்டுரைக்கு ஒத்தும் ஒவ்வாமலும் இடை நடுவில் நின்றும் பல கருத்துக்கள் வந்திருக்கின்றன.

இங்கே ஒவ்வாமையைப் பற்றியே நான் அதிகம் கவனம் கொள்கிறேன்.

இலங்கைக் கலைஞர்களெல்லாம் வில்லன்களாக சித்தரிக்கப் படவில்லையே? பாலுமகேந்திரா, வி.சி.குகநாதன் இவர்கள் எல்லாம் வில்லர்கள் அல்லவே? எனச் சிலர் கேட்கிறார்கள். இவற்றை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போல் எம்.ஜி.ஆர் இலங்கையில் பிறந்தவர்தானே அவர் வில்லன் இல்லையே என்று முகநூலில் ஒருவர் சண்டைக்கு வருகிறார்.

என்னால் முடிந்தளவுக்கு விளக்க முயற்சிக்கிறேன்.

இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமி, நடிகர் ஜே.பி.சந்திரபாபு, நடிகை சுஜாதா இவர்கள் எல்லாம் இலங்கையில் கல்வி பயின்றவர்கள். இவர்கள் தென்னிந்தியத் தமிழ்த் திரைஉலகில் வெற்றிகரமாக வலம் வந்தவர்கள்.  சிங்கள நடிகையான கீதாவின் மகளான ராதிகா பெரிய திரையில் மட்டுமல்ல சின்னத் திரையிலும் கோலோச்சுபவர். இவர்களை எல்லாம் தென்னிந்தியத் தமிழ்த் திரைஉலகம் அரவணைக்கவில்லையா என்று யாருமே கேட்கவில்லை. இதில் ஏ.எஸ்.ஏ.சாமி, ஜே.பி.சந்திரபாபு, சுஜாதா ஆகியோரது பெற்றோர்கள் இலங்கையில் தொழில் புரிந்தமையால், அங்கு படிப்பை மேற்கொண்டவர்கள். ராதிகாவிற்கு, எம்.ஆர்.ராதாவின் மகள் எனும் அங்கீகாரம் இருக்கிறது. ஆகவேதான் எனது முதற் கட்டுரையில் இவர்களைப் பற்றி நான் எழுதவில்லை. ஆனால் இப்பொழுது சிலரது தெளிவுகளுக்காக இங்கே குறிப்பிட்டு விட்டுப் போகிறேன்.

இத்துடன் இன்னும் ஒன்றையும் தந்து விடுகிறேன். அது தவமணிதேவி எனும் நடிகையைப் பற்றியது. எம்.ஜி.ஆர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்து 1947இல் வெளிவந்த ராஜகுமாரி படத்தில் வில்லியாக நடித்தவர்தான் இந்த தவமணிதேவி. அவரைப் பற்றிய ஒரு கட்டுரை ஒன்று இங்கே இருக்கிறது.

http://manaosai.com/index.php?option=com_content&view=article&id=219:-2-&catid=84:2010-01-29-06-46-42&Itemid=148

நொந்து நூலாகி „வேண்டாம் இந்த சினிமா' என்று ஒதுங்கிப் போனவர் நடிகை தவமணிதேவி.

இவர்களை எல்லாம் பார்க்கையில் பாலு மகேந்திரா சற்று வித்தியாசப் படுகிறார்.

பூனா திரைப்படக் கல்லூரியில் மூன்று வருடங்கள் படித்து போட்டோகிராபி, டைரக்ஷன், எடிட்டிங் என்று பலவற்றை தெரிந்து கொண்டு இலங்கைக்கு திரும்பினார். இலங்கையில் கட்டிடக் கலைஞர் வீ.எஸ்.துரைராஜா தயாரித்த குத்துவிளக்கு படத்தை இயக்கும் வாய்ப்பை வேண்டாம் என்று கூறி விட்டு ராமுகரியாத்தின் 'நெல்லு' என்ற மலையாளப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இந்தியாவுக்கு திரும்பப் போய் விட்டார். இந்தப் படத்திற்காகத்தான் முதன் முதலாக பாலு மகேந்திரா ஒளிப்பதிவு செய்கிறார்.

அவர் தமிழில் ஒளிப்பதிவு செய்த முதல் படம் மகேந்திரனின் 'முள்ளும் மலரும். அதன் பின்னர் மணிரத்தினத்தின் முதல் படமான 'பல்லவி அனுபல்லவி', பரதனின் முதல் படமான 'பிரயாணம்' என அன்றைய  இளைஞர்களுடனே தனது தமிழ் சினிமாத் துறையின் ஆரம்பத்தை தொடங்குகிறார்.

1976இல் தானே படங்களை இயக்க ஆரம்பிக்கிறார். இங்கேதான் ஒன்றைக் கவனிக்க வேண்டும். தமிழ்த் திரை உலகை அவர் அன்று நன்கு புரிந்து கொண்டதனால்தான் யாரிலும் தங்கி இராது தானே ஒரு படைப்பாளி ஆகுகின்றார். ஆகவேதான் தனக்கென்று ஒரு இடத்தை அங்கே தக்க வைக்க அவரால் முடிந்தது. இன்னும் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அவரை இலங்கையர் என்று தென்னிந்தியத் திரை உலகம் வசதி கிடைத்த நேரம் எல்லாம் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தாலும், இலங்கை சினிமா என்ற இடத்தில் இருந்து அவர் தூரமாகவே இருந்து கொண்டார். அது அவரது இருப்புக்கு மேலும் பலமாக இருந்தது.

இலங்கையராக இருந்தும் இலங்கைத் தமிழ் திரையுலகத்துக்கு எதையேனும் பாலு மகேந்திரா சொல்லித் தரவில்லை. ஒரு துரும்பை ஏனும் அவர் எடுத்துப் போடவில்லை என்பத,  இலங்கைத் தமிழ் திரை உலகத்துக்கு அவர் செய்த துரோகம் என்றே சொல்வேன்.

இலங்கைத் தமிழருக்கான சினிமா தேவை என்று நான் சொல்லும் போது, „அதுதானே தென்னிந்திய சினிமா இருக்கிறதே பிறகு எதற்கு தனியாக இலங்கைத் தமிழருக்கு  என்று ஒரு சினிமா? அதைப் பார்க்கலாம்தானே. அதற்கு மேலாகத் தேவை என்றால் பேசாமல் குறும்படத்தை எடுத்து விட்டுப் போங்கள்' என்ற கருத்தும் வைக்கப் பட்டிருந்தது.

குறும்படங்களையும் அவர்கள் தருகிறார்களே என்று எதிர்க் கேள்வி கேட்க நான் விரும்பவில்லை. ஆனாலும் இன்று குறும்படங்களைத் தந்தவர்கள்தான் அங்கே முழுநீளத் திரைப்படங்களிலும் மாற்றங்களைக் கொண்டு வருகிறார்கள் என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.

எங்களுக்கான சினிமா வேண்டும் என்று சொல்லும் போது அதை தென்னிந்திய சினிமாவிற்கு எதிராகப் பார்க்க வேண்டிய தேவை இல்லை. அவற்றோடு ஒப்பிட வேண்டியதும் இல்லை. நீண்ட கால திரைப்பட அனுபவம் கொண்டவர்கள் அவர்கள். அவர்களுக்கு விருப்பமானதை அவர்கள் செய்யட்டும். அவர்கள் தருவதை விரும்பியவர்கள் பார்க்கட்டும். ஆனால் எங்கள் கலைஞர்களுக்கு பெரிய அங்கீகாரம் அங்கே கிடைக்காது. எங்கள் கதைகளுக்கு அங்கே இடம் இல்லை என்பதைத்தான் நான் சொல்ல விளைகிறேன்.

எங்கள் மொழி, அதன் உச்சரிப்புகள், எங்கள் நடைமுறைகள், எங்கள் கதைகள் என்று  நாங்களே ஏன் ஒரு மாற்று சினிமாவுக்கு முயலக் கூடாது என்றுதானே கேட்கிறேன். இந்தத் துறை என்றும் எங்களுக்குப் புதிதில்லையே. ஏற்கெனவே எங்கள் படைப்புகள் பல வெளிவந்திருக்கின்றனவே. வெற்றி பெற்றிருக்கின்றனவே.

அன்று பணத்தில் நாங்கள் வசதியாக இல்லை. இன்று புலத்தில் அதற்கு வசதி இருக்கிறது. எங்களிடம் வீரம், துயரம், துரோகம், தோல்வி, அவலம் என்று நிறையவே கதைகள் நடந்தேறி இருக்கின்றன. அவற்றை ஏன் நாங்கள் காட்சிப் படுத்த முடியாது என்றுதானே கேட்கிறேன்.  சினிமா என்பது மக்களை இலகுவாகச் சென்றடையும் ஒரு ஊடகம். அதை நாங்கள் பயன்படுத்தினால் எங்களுக்கத்தானே நல்லது. இதை விடுத்து விதண்டா வாதங்கள் செய்து கொண்டே இருப்போமாயின் பல 'மகாவம்சங்கள்`  திரைகளில் சுலபமாக அரங்கேறிவிடும்.

பணம் ஏற்பாடாயிற்று. கலைஞர்களும் வந்து விட்டார்கள். படமும் எடுத்தாயிற்று. ஆனால் சந்தைப் படுத்தல் என்ற ஒன்று இருக்கிறதே என்ற கேள்வியையும் கேட்டிருந்தார்கள்.
கேட்பவர்களின் தயக்கம் புரிகிறது. வியாபாரம் என்பது பல உத்திகளைக் கொண்டது.

அன்று எனது ஆச்சி சொன்ன கதை ஒன்று என்னை பல வகைகளில் ஆச்சரியப் பட வைத்தது.

„அப்போ எல்லாம் வெள்ளைக்காரன் பின்னேரம் சரியாக நாலு மணிக்கு வந்து மணி அடிப்பான். நாங்கள் எல்லாம் கையிலை கிடைச்ச பாத்திரங்களை எடுத்துக் கொண்டு ஓடுவோம். பால் தேத்தண்ணி தருவான். காசில்லாமல் சும்மாதான் தருவான். எங்களுக்கு காசில்லாமல் சும்மா தந்தால் எது எண்டாலும் வாங்கிற பழக்கம். வாங்கிக் குடிக்க ஆரம்பிச்சம். கஞ்சித் தண்ணி குடிச்ச எங்களுக்கு அது புதுசாவும் ருசியாவும் தெரிஞ்சுது. குடிச்சா கொஞ்சம் தெம்பாவும் இருச்திச்சு. பழக்கமாப் போச்சு. பின்னேரம் நாலு மணி எண்டால் தேத்தண்ணிதான் நினைப்பாச்சு. ஒருநாள் என்னெண்டால் பாழாப் போன வெள்ளைக்காரன் வரேல்லை. வாயும், வயிறும் தேத்தண்ணி கேட்டுக் கொண்டே இருந்தது. அடுத்த நாள் வந்தான். அவனைக் கண்டதும் சந்தோசமா இருந்தது. நேற்று ஏதும் நோய் நொடி வந்து வரேல்லையாக்கும் எண்டு ஆக்கள் கதைச்சினம். ஆனால் அண்டைக்கு அவன் தேத்தண்ணி கொண்டு வரேல்லை. தேயிலையைத்தான் கொண்டு வந்தான். அதை வைச்சு தேத்தண்ணி எப்பிடி செய்யிறது எண்டு சொல்லித் தந்தான். தனக்கு நேரம் இல்லை இனி தான் வரேலாது. தேயிலையை கடைகளுக்கு அனுப்புறன் எண்டு சொன்னான். கடைக்காரன் வெள்ளைக்காரனைப் போலை சும்மாவா தரப்போறன்? பேந்தென்ன, தேத்தண்ணியைக் குடிக்கோணும் எண்டால் காசு குடுத்துத்தானே குடிக்கோணும் எண்ட நிலையாச்சு'.

வெள்ளைக்காரன் வெற்றிகரமாக ஆரம்பித்த வியாபாரம் இன்றும் தொடர்கிறது.

சமீபத்தில் லிங்குசாமி தயாரிப்பில் வெளிவந்த படம் இனம். இந்தப் படத்தை சந்தோஸ் சிவன் இயக்கி இருந்தார். அவரால் அந்தப் படத்தை வெளியிட முடியாத நிலை.  லிங்குசாமி இனம் படத்தை வாங்கி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் பெயரில் வெளியிட்டார். இனம் படத்திற்காக தமிழ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, இது தொடர்பாக,

'இதுவரைக்குமான எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் தமிழ் மண்ணையும் மக்களையும் ஆத்மார்த்தமாக நேசித்து வந்திருக்கிறேன். இனியும் அப்படியே இருப்பேன். உலகத் தமிழர்களின் வெற்றிகளில் பெருமிதம் கொள்வதும், துயரங்களில் தோள் கொடுப்பதும், உண்மையான போராட்டங்களில் இணைத்துக் கொள்வதையும் எப்போதும் குடும்பத்தின் கடமையாக வைத்திருக்கிறேன்.'  என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதுடன் திரையரங்குகளில் இருந்து இனம் படத்தை வாபஸ் வாங்கி இருந்தார்.

இதன் பின்னணியில் ஒரு வியாபாரம் இருந்தது. இனம் படத்தை வாங்கும் விநியோகஸ்தர்களுக்குத்தான் அஞ்சான் திரைப்படத்தை தருவதாக பேச்சு. அத்துடன் இனம் படத்திற்காக தமிழ் ஆதரவாளர்களோடு முரண் பட்டால், வெளிநாடுகளில் அஞ்சான் படத்தை வெளியிட முடியாதளவுக்கு புலம் பெயர் தமிழர்கள் இடையூறு செய்து விடுவார்கள் என்ற அச்சம்.  இன்னொரு பக்கம் தான் தயாரிக்கும் கமலஹாசனின் 'உத்தமவில்லன்' படத்திற்கும் இதேபோல் சிக்கல் வந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை. இனம் படத்தில் இழந்த பணத்தை சுலபமாக மற்றைய இரு படங்களிலும் எடுத்து விடலாம் என்ற வலுவான கணிப்பீடு.  ஆக மொத்தத்தில் வெகு சமார்த்தியமாக காய்களை நகர்த்தி வியாபாரத்தில் அவர் வெற்றி கண்டார். இத்தனைக்கும், „தமிழீழ ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் ஒரு சதவீதம்தான். அவர்களால் என்ன செய்ய முடியும்?'  என்று அவர் முதலில் அகங்காரமாகப் பேசியதையும் நினைவில் கொள்ளல் வேண்டும்.

இவர்களால் எப்படி எல்லாம் வியாபாரங்கள் செய்ய முடிகிறது? உற்றுப் பார்த்தோமானால் சந்தர்ப்பங்களும், சமார்த்தியங்களும்தானே அவர்களது வியாபாரங்களின் வெற்றிக்கு காரணங்களாகின்றன என்பது புரியும்.

நாங்கள் ஒன்றும் ஏமாற்றி எங்களிடமே வியாபாரம் செய்யத் தேவை இல்லை. சரியான முறையில் எங்கள் கதைகளை காட்சிப் படுத்தி எங்களவர்களுக்குத் தந்தால் அவர்கள் ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள். இந்த வெற்றிக்கு எல்லாம் திறமையானவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். ஒற்றுமையான கூட்டணி இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும்.

எங்களது போராளிகளைப் பார்த்து அன்றைய ஜனாதிபதி ஜெயவர்த்தன „சாரம் கட்டிய பெடியங்கள்' என்று எள்ளி நகையாடினார். ஆனால் சாரம் கட்டியவர்கள் காட்டிய வீரம் என்ன என்பதை சாகுமுன்னரே ஜெயவர்த்தன அறிந்திருப்பார்.

ஆகவே எள்ளி நகையாடுவர்களுக்கும், ஏளனம் பேசுபவர்களுக்கும் பயந்தால் எதுவுமே ஆகாது.

ஒரு விடயத்தை தொடங்கும் பொழுது தேவையில்லாத வேலை என்று புலம்பிச் சொல்பவர்களே வெற்றி பெற்றால் ஓடி வந்து பாராட்டுவார்கள். கட்டுரை எழுதுவார்கள். கவிதை வடிப்பார்கள். காலம் வரும். கவிதையும், கட்டுரையும் சேர்ந்து வரும்.

ஆழ்வாப்பிள்ளை
22.08.2014

Related Articles