நான் கேட்டவை - என் விருப்பம்

எழுது என்கிறது ஒரு மனம் . வேண்டாம் எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று தடுக்கிறது ஒரு எண்ணம். எழுதி என்னதான் ஆகப் போகிறது என்ற கேள்வி எழுகிறது மறு புறம். ஆனாலும் எழுது என்கிற உந்துதலே மேலோங்கி நிற்கிறது.

தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவை என்ற பெயருக்கே பெரிய வரவேற்பிருந்த காலம் அது. அந்தக் கால கட்டத்தில் வானொலியை விட்டால் வேறு கதியே இல்லை. வீட்டில் வானொலிப் பெட்டி இல்லாதவர்களுக்கு அப்பொழுது எல்லாம் தேனீர்க்கடைகள் ஒரு வரப்பிரசாதம். காலையில் கடையைத் திறக்கும் போது போடப்படும் வானொலிப் பெட்டி இரவில் கடை மூடும் போதுதான் நிறுத்தப் படும். வானொலியில் நல்ல இனிமையான பாடல்கள் ஒலிக்கும் பொழுதுகளிலும், நல்ல நிகழ்ச்சிகள் வரும் பொழுதுகளிலும் பலர் தேனீர் கடைகளின் ஓரம் நின்று கேட்பதை அல்லது உள்ளே இருந்து தேனீரோடு அவற்றை இரசிப்பதை நான் பல தடவைகள் அவதானித்திருக்கிறேன். வீட்டில் அதிக நேரம் வானொலியை ஒலிக்க விட்டால், „வர வர எங்கடை வீடும் தேத்தண்ணிக் கடையாப் போச்சு' என்று பெரிசுகள் அங்கலாய்ப்பதும் இருந்திருக்கிறது.

தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவை இலங்கையைத் தாண்டி இந்தியாவிலும் ரசிகர்களைக் கொண்டிருந்தது. நான் கண்ட சொர்க்கம் என்ற திரைப்படத்தில் நடிகர் கே.ஏ. தங்கவேலு, மரணம் அடைந்து சொர்க்கத்திற்குச் செல்கிறார். சொர்க்கத்தில் அவர் நுழையும் பொழுது அங்கு வானொலி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதில் அன்றைய ஒலிபரப்பாளர் மயில்வாகனம் அவர்களது குரல் கேட்கிறது. „இங்கேயும் வந்திட்டானா?' என தங்கவேலு கேட்பதாக அந்தக் காட்சி இருக்கும். இந்த ஒரு விடயமே போதும். அன்றைய இலங்கை வானொலியின் வர்த்தக சேவையின் தரத்தையும் அறிவிப்பாளர்களின் புகழையும் சொல்ல. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூட, தான் அப்துல் ஹமீத்தின் இரசிகன் எனப் பல தடவைகள் குறிப்பிட்டிருக்கிறார். அந்தளவுக்கு சினிமா சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகளைக் கூட இலங்கை தமிழ் வர்த்தகசேவை கட்டிப் போட்டிருந்தது.

அன்றைய முன்னணி இளம் கதாநாயகர்கள் நடித்த, சிறீப்பிரியாவின் சொந்தத் தயாரிப்பான „நீயா' திரைப்படம் தமிழகத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற வில்லை. கே.எஸ். ராஜா அவர்கள், அப்படத்திற்கான திரைவிருந்து நிகழ்ச்சியை அற்புதமாகத் தயாரித்தும் அதற்கு மேலாக தனது குரல் வளத்தாலும், அதை இலங்கையில் பெரும் வெற்றிப் படமாக்கியது தனிப் பதிவு.

அன்றைய காலத்தில் பல தமிழ்ப் படங்கள் தமிழகத்தில் வெளியாகும் பொழுது, அவற்றிற்கான விளம்பரங்கள் இலங்கைத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவையின் ஊடாகவும் விளம்பரப் படுத்தப்பட்டன. இத்தனைக்கும் தமிழகத்தில் தமிழ் வானொலி இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டும்.

திரைப்படப் பாடல்களை முன் நிறுத்தி, பாட்டுக்குப் பாட்டு, பாட்டும் பதமும், இன்றைய நேயர், இசையும் கதையும், பொங்கும் பூம்புனல், பூவும் பொட்டும், ஒலி மஞ்சரி, மலர்ந்தும் மலராதவை, புது வெள்ளம், அன்றும் இன்றும், இரவின் மடியில், இசைத் தேர்வு, நேயர் விருப்பம் என்று பலவகையான நிகழ்ச்சிகளைத் திறம்பட மிகச்சுவையாக நடாத்தி இரசிகர்களை ஈர்த்து வைத்திருந்தார்கள். விடுமுறை நாட்கள் என்றால் நேயர்களுக்காக விடுமுறை விருப்பம் என்றும் விவசாயிகளை ஊக்குவிக்க விவசாய நேயர் விருப்பம் என்றும் பாடல்களில் துள்ளிசை மெல்லிசை என வகை பிரித்தும் நிறையவே வெற்றி கண்டார்கள். ஒரு பாடலை ஒலிபரப்பினார்கள் என்றால் அதே பாடலை எக்காரணம் கொண்டும் அன்று மீண்டும் ஒலிபரப்ப மாட்டார்கள். அடுத்த நாள் அல்லது வேறு ஒரு நாளில்தான் மீண்டும் கேட்கலாம். இவ்வாறு சின்னச் சின்ன விடயங்களில் எல்லாம் மிகக் கவனமாக இருந்தார்கள். நிகழ்ச்சிகளைத் தயாரித்து வேண்டாதவற்றை தணிக்கை செய்து தேவையானதை இணைத்து தரமாகத் தந்தார்கள்.

எனது கால கட்டத்தில் அப்துல் ஹமீத், விமல் சொக்கநாதன், கே.எஸ்.ராஜா, கே.பரராஜசிங்கம், சில்லையூர் செல்வராஜன், திருமதி இராஜேஸ்வரி சண்முகம், திருமதி விசாலாட்சி ஹமீத், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் என்று பல வானொலி அறிவிப்பாளர்கள் இருந்திருந்தாலும், பெரும்பான்மையான வானொலி இரசிகர்களின் விருப்பத்துக்குரியவர்களாக இரண்டு முக்கிய அறிவிப்பாளர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் அப்துல் ஹமீத். மற்றையவர் கே.எஸ்.ராஜா. இதில் முன்னையவரின் தமிழ் உச்சரிப்பும் நேர்த்தியான தடங்கலின்றிய அமைதியான பேச்சும், ஒழுங்கான முறையில் தயாரிக்கப்படும் அவரது நிகழ்ச்சிகளும் அவரைப் பெரிய உச்சத்துக்கே கொண்டு போயின. இலங்கைக் கலைஞருக்கு அதுவும் ஒரு ஒலிபரப்பாளருக்கே கடல் தாண்டி ரசிகர்கள் பெருமளவு இருந்தார்கள் என்றால் அந்தப் பெருமை அப்துல் ஹமீத் அவர்களையே சாரும். அதிலும் „பாட்டுக்குப் பாட்டு' போட்டி நிகழ்ச்சியில் யாராவது வார்த்தைகளை மாற்றிப் பாடினாலோ, இராகங்களை விட்டு விட்டாலோ உடனடியாகக் கண்டு பிடிக்கும் அவரது ஆற்றலும், பாடகர்களைப் பாட வைக்கும் முன் அவர்களை உற்சாகப் படுத்தி தயார் படுத்தும் பாணியும் தோற்றவர்களைத் தட்டிக் கொடுத்து விடை கொடுக்கும் பாங்கும் அவரது தனித் தன்மை. அதேபோல் வேகமான உச்சரிப்புடன் நல்ல குரல் வளத்தால் பலரை ஈர்ந்து வைத்திருந்தவர் கே.எஸ்.ராஜா. நானும் அவர் இரசிகனாகவே இருந்தேன்.

ஒரு தடவை அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் தமிழர்களுக்கு எதிரான ஒரு தகவலை வெளியிட்டார். அன்றைய செய்தியின் முக்கிய தலைப்பாக அது வாசிக்கப் பட்டது. செய்தி முடிந்தபின் கே.எஸ்.ராஜா ஒலிபரப்பியது செல்வம் திரைப் படத்தில் வந்த „அவளா சொன்னாள் இருக்காது அப்படி ஒன்றும் நடக்காது நடக்கவும் கூடாது..' என்ற பாடல். இந்தப் Speichern பாடலை அவர் ஒலிபரப்பிய பின்னர் அவரை சிறிது காலம் வானொலியில் காணவில்லை. மேலிடத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார் என்பது தெளிவாகத் தெரிந்தது.

மீண்டும் கே.எஸ்.ராஜா வானொலியில் வந்தார். எம்ஜிஆர் திமுக வில் இருந்து நீக்கப் பட்ட செய்தி வந்தது. செய்திக்குப் பிறகு கே.எஸ்.ராஜா. „போனால் போகட்டும் போடா.. என்ற சிவாஜி கணேசன் படப் பாடலை அதுவும் கண்ணதாசன் எழுதிய பாடலை ஒலிபரப்பி எம்ஜிஆருக்கும் அவரது இரசிகர்களுக்கும் ஆறுதல் சொன்னார். „இது கோர்ட்டுக்குச் போனால் ஜெயிக்காது அந்தக் கோட்டைக்குள் நுழைந்தால் திரும்பாது போனால் போகட்டும் போடா.' என்ற அந்தப் பாடல் வரிகள் எம்ஜிஆரின் அந்த நிலைக்கு கச்சிதமாகப் பொருந்தி இருந்தன்.

கொழும்பில் கலவரம் தமிழர்கள் தாக்கப் பட்டார்கள். அன்று கே.எஸ்.ராஜா ஒலிபரப்பிய பாடல்களெல்லாம் எம்ஜிஆர் படங்களில் இடம் பெற்ற புரட்சிப் பாடல்களே. அதிலும் „என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே..' பணத்தோட்டத்துப் பாடல் முக்கியத்துவம் பெற்றது. அந்தப் பாடலில் வரும் கடைசி வரிகள் „..கலகத்தில் பிறப்பதுதான் நீதி மனம் கலங்காதே. மதி மயங்காதே' என்று வரும். யாரோ போட்டுக் கொடுத்து விட்டார்கள். அந்தப் பாடலை ஒலிபரப்பியதற்காக நாலாவது மாடிக்கு கே.எஸ்.ராஜா அழைக்கப் பட்டதாக செய்தி பின்னர் வந்தது.

இவைகளை எல்லாம் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், பாடல் வரிகள் இடம் பெற்ற திரைப்படம், இசை அமைப்பாளர், கவிஞர், பாடல்கள் ஒலிபரப்ப வேண்டிய காலம் என்று எல்லா விபரங்களையும் தெரிந்து கொண்டே அன்று தளத்துக்குள் நுழைந்தார்கள். தங்களது அதி மேதாவித் தனங்களைக் காட்டாமல் எது இரசிகனுக்குத் தேவையோ அவற்றை திறம்படத் தயாரித்துத் தந்தார்கள். இப்படி அன்றைய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் எனது ஆதங்கம் என்னவென்றால், அன்றைய தரத்துக்கு… அதாவது மூன்று நான்கு தசாப்தங்களுக்குப் பின்னால் தமிழர்களது வானொலித் துறை எப்படி இப்படி ஆயிற்று என்பதே.

இங்கே நான் முன்னர் சொல்லியது எல்லாம், இலங்கை தமிழ் வர்த்தக சேவையின் அன்றைய பெருமைகளைப் பற்றியதே. இன்றைய அவர்களது தரத்தை உரசிப் பார்க்கும் நோக்கம் எனக்கு இங்கே இல்லை. நான் புலம் பெயர்ந்து வந்து நிறைய வருடங்கள் ஆயிற்று. அவர்களது நிகழ்ச்சியைக் கேட்க எனக்கு இப்பொழுது வாய்ப்பு இல்லை. நான் சொல்ல வருவது புலம் பெயர் நாடுகளில் நான் கேட்கும் சில வானொலிகள் பற்றியே.

வலைத்தளத்துக்குள் நுழைந்தால் இணையத்தள வானொலிகள் சிதறிக் கிடக்கின்றன. என்னைக் கேள் உன்னைக் கேள் என்று வலைத்தளங்களில் அவை மின்னிக் கொண்டிருக்கின்றன. தனியாளாக, நண்பர்களாக, குடும்பமாக, அமைப்புகள் ரீதியாக, வர்த்தக நிறுவனங்களாக என ஏகப் பட்ட வானொலிகள். எங்கே போவது எதைக் கேட்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்க வேண்டிய நிலையாக இருக்கிறது. இதில் பலர் தங்களது பகுதிநேர வேலையாகவே வானொலியில் பணியாற்றுகிறார்கள். ஈழத்துக் கலைஞன் கலைகளில் சம்பாதிக்க வாய்ப்பில்லை. ஆகவே அவனால் பகுதி நேரமாகத்தான் வேலை செய்ய முடியும். அப்படியும் சிரமப்பட்டு வானொலி நடாத்துகிறானே அதைப் பாராட்ட உனக்குத் தெரியவில்லையா? என்று பலர் எரிக்கும் விழிகளுடன் என்னை நோக்குவது தெரிகிறது. அப்படிக் கேட்பவர்களில் ஒரு சில அறிவிப்பாளர்களின் பொருளாதார நிலையும் எனக்குப் புரிகிறது. ஆனால் நான் பேச வருவது வானொலிகளின் தரத்தைப் பற்றி மட்டுமே. பொருளாதாரத்தைப் பற்றி அல்ல.

சிலர் வானொலிகளை கணணியில் இணைத்து விட்டு தங்கள் வேலைகளைக் கவனிக்கப் போய் விடுகிறார்கள். அந்த வானொலிகள் தங்கள் விருப்பத்துக்கு பழையது, புதியது, இடைப்பட்டது எனப்  பாடல்களைக் கலந்து ஆட்டோ ரிக்சா மாதிரி தறி கெட்டு ஓடிக் கொண்டிருக்கின்றன. இல்லை ஒலிபரப்பிக் கொண்டிருக்கின்றன. கணணியில் ஏதாவது தடங்கல்கள் வந்தால் அவை நின்று போய் பின் ஏதோ நினைத்து விட்டு „எந்திரன் எந்திரன்..' என்று பாடத் தொடங்குகின்றன. ஆக „விரும்பினால் கேள் இல்லை என்றால் போ' என்ற நிலைதான் அங்கே பலமாக நிற்கிறது.

சரி வானொலி நிலையங்களாக முத்திரை குத்திக் கொண்டு இயங்குவனவற்றைப் பற்றி சொல்ல வேண்டுமானால்.., அதற்குத்தான் கட்டுரையின் ஆரம்பத்திலே இப்படி ஆதங்கப் பட்டிருக்கிறேன். „எழுது என்கிறது ஒரு மனம் . வேண்டாம் எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று தடுக்கிறது ஒரு எண்ணம். எழுதி என்னதான் ஆகப் போகிறது என்ற கேள்வி எழுகிறது மறு புறம். ஆனாலும் எழுது என்கிற உந்துதலே மேலோங்கி நிற்கிறது.'

ஆகவே தொடர்ந்து எழுகிறேன்.

இதை எழுதுவதற்காக - சர்வதேச தமிழ் வானொலி ஒன்றில் சில வருடங்களுக்கு முன்னர் ஒலிபரப்பப் பட்ட ஒரு நிகழ்ச்சியை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்கிறேன்.

´பாதகாணிக்கை´ என்ற ஒரு திரைப் படம். அதில் இடம் பெற்ற ஆழமாக மனதில் பதிந்திருக்கும் ஒரு அற்புதமான பாடல்

„பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா...'

கண்ணதாசன் வரிகள் தர, விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையில் பி.பி. சிறிநிவாஸ், ஜானகி இணைந்து பாட ஜெமினி கணேசன் விஜயகுமாரி அந்தப் பாடலுக்காக நடித்திருந்தார்கள்.

திருமணம் முடிந்து ஒரு முதலிரவில் இந்தப் பாடல் வருவதாகக் காட்சி அமைத்திருந்தார்கள். இருக்கட்டும். பாடல் நன்றாகத்தானே இருக்கிறது. காட்சியும் அழகாகத்தானே இருக்கிறது. பிரச்சினை உனக்கு எங்கே இருக்கிறது என்கிறீர்களா?

பிரச்சினை என்று ஒன்றும் பெரிதாக இல்லை ஒரு ஆதங்கம். அவ்வளவுதான்.

அன்று ஒரு நாள் இந்தப் பாடலை சர்வதேச தமிழ் வானொலி ஒன்றில் ஒலிபரப்பி அதற்கு விளக்கம் கேட்டார் அந்த அறிவிப்பாளர். விளக்கத்தை எழுதி அனுப்புங்கள் அடுத்த வாரம் சந்திப்போம் என்றார். எனக்குப் பிடித்தமான பாடல். விளக்கத்துடன் கேட்க அடுத்த வாரம் வரை காத்திருந்தேன். அடுத்த வாரம் வந்தார். தொலைநகலில் வந்த ஒரு ரசிகையின் விளக்கத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

'பூஜைக்கு வந்த மலரே வா. பூமிக்கு வந்த நிலவே வா என்று ஒரு கருத்தையும், பூஜைக்கு உவந்த மலரே வா. பூமிக்கு உவந்த நிலவே வா என்று இன்னும் ஒரு கருத்தையும் இந்தப் பாடல் கொண்டிருக்கிறது. எனவே சரியான விடையை எழுதி அனுப்பிய இன்னாருக்கு பாராட்டுக்கள். அவருக்கான பரிசுத் தொகை விரைவில் அனுப்பி வைக்கப்படும்' எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது.

பி.பி. சிறிநிவாஸ், ஜானகி இருவரும் தமிழர்களாக இல்லாவிட்டாலும். தமிழ் உச்சரிப்பில் அதிக கவனம் செலுத்திப் பாடுபவர்கள். அவர்கள் பாடும் போது 'வந்த' என்ற சொல்லே மேல் ஓங்கி நிற்கிறது. 'உவந்த' என்று காதில் ஆழமாக விழவில்லையே. கண்ணதாசன் இரண்டு பொருள் பட எழுதுவதில் வல்லவர். ஆகவே அவர் இரு பொருள் பட இந்தப் பாடலையும் எழுதி இருப்பாரோ என்று அன்று முழுவதும் குழப்பமாகவே இருந்தது.

'கட்டான கட்டழகுக் கண்ணா - உன்னைக் காணாத கண்ணும் ஒரு கண்ணா...'
'வேலை வணங்காமல் வேறென்ன வேலை..'
'வக்கீலாத்து வசந்தா –உன் மனதை எந்தன் வசந்தா'
'குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி –எங்கள் குடும்பம் இருப்பது உன்னை நம்பி'

இவை போன்று இன்னும் பல பாடல்களில் கவிஞர் ஒரு சொல்லை பெயராகவும், வினையாகவும் வைத்து விளையாடி இருப்பார் அந்த வகையில் இதுவும் அடங்குமா?

'உள்ளமெல்லாம் இளகாயோ ஒவ்வொரு தேன் சுரக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ..'
என்று பலே பாண்டியாவில் வரும் 'காய்' பாடல் போன்று இதுவும் ஒன்றா?

அப்படியாயின், அறிவிப்பாளர் ஒப்புவித்த கருத்தைப் பார்த்தால்,
பூஜைக்கு உவந்த மலர் சரி. அதென்ன பூமிக்கு உவந்த நிலவு? கூட்டிக் கழிச்சு ஏன் பெருக்கியும் பார்த்தால், உகந்ததோ இல்லையோ பூமிக்கு ஒரு நிலவுதான் இருக்கப் போகிறது. ஆக கவிதையில் பொருட் குற்றம் வந்து விடுமே? கண்ணதாசனின் பாடல்களில் பொருட் குற்றம் சொன்ன நக்கீரர்கள் இருக்கிறார்கள்.

பச்சரிசிப் பல் ஆட பம்பரத்து நாவாடா..'
'உச்சி மரக் கிளையில் நின்று உயிர் வேரை அறுத்தவன் நான்..'
'பூஜ்ஜியத்துக்குள் ஒரு இராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு...'
என்று பாடல் வரிகளைச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அந்தப் பாடல்கள் எல்லாம் நேரடியாகப் பொருள் தருபவை. பூஜைக்கு வந்த மலரே வா பாடலில் நேரடியாகப் பார்த்தால் பொருட் குற்றம் எதுவும் இல்லை. பிரித்துப் பார்த்தால்தான் பிரச்சினையாகிறது.

தேவர் மகன் திரைப் படத்தில் வரும் 'இஞ்சி இடுப் பழகி..' பாடலில் எஸ். ஜானகி பாடும் வரிகளைப் பார்த்தால்,
'இஞ்சி இடுப்பழகா... மஞ்ச சிவப்பழகா... கள்ளச் சிரிப்பழகா...மறக்க மனம் கூடுதில்லையே... ' வரிகளை பிரித்து மேய வெளிக்கிட்டால், இஞ்சி இடுப்பு அழகா? மஞ்ச சிவப்பு அழகா? கள்ளச் சிரிப்பு அழகா? என்று கேட்க வேண்டி வரும்.

நிறத்தைப் பற்றிச் சொல்லும் போது இன்னும் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

'என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை...'

என்ற பாடலில் உள்ள வரிகளை உற்றுப் பார்த்தால்

மஞ்சள் நிறத் தவளை – என்
நெஞ்சில் நிலத் தவளை
என்றெல்லாம் காதலியை காதலன் தவளையாக வர்ணிக்கிறான் என்று கருத்தக் கொள்ள வேண்டி வரும்.

திருக்குறளுக்கு பலர் உரை எழுதி இருக்கிறார்கள். தாங்கள் இருக்கும் சூழல், தங்களது வாழ்வியல் அனுபவங்கள், அறிவுகள் எல்லாவற்றையும் இணைத்து பொருள் எழுதுவார்கள். அது போல்தான் கண்ணதாசனின் பாடலுக்கு அறிவிப்பாளர் விளக்கம் தந்திருக்கிறார் என்று எண்ணிக் கொள்வதைத் தவிர வேறு மார்க்கம் எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் பூமிக்கு உவந்த நிலவு என்று சொன்னவருக்குப் பரிசு தந்து, நேரடியாக விளக்கம் தந்தவரை கண்டு கொள்ளாமல் விட்டது அறிவிப்பாளரின் அதிகப் பிரசங்கித் தனம் என்பதுதான் எனது கருத்து. இது நடந்து பல வருடங்களாயிற்று என்றாலும், என்னுள் அமர்ந்திருந்த ஒரு உறுத்தலை இன்று உலா வர விட்டிருக்கிறேன்.

நாங்கள் மீண்டும் வந்து விட்டோம். வாருங்கள் வந்து பாருங்கள், கேளுங்கள்.. என்று அறிவிப்பு வந்திருந்தது. சரி என்னதான் சொல்கிறார்கள் போய்த்தான் பார்ப்போம் என்று அந்த வானொலிக்குக் காது கொடுத்துக் கேட்டேன்.

நான் அந்த வானொலியில் கேட்டதற்கு முன்னால், இந்த விடயத்தை முதலில் சொல்லி விடுகிறேன்.

60களின் பிற்பகுதியில் வந்த செல்வம் திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு அற்புதமான பாடல். அது பட்டி தொட்டிகள் எல்லாம் அன்று ஒலித்துக் கொண்டிருந்தது. ஜமுனாராணி, தாராபுரம் சுந்தரராஜன் இணைந்து பாடிய பாடல். அப்பொழுது எல்லாம் திருவிழாக் காலங்களில் அதிகம் சுழன்ற இசைத் தட்டுக்களில் இதுவும் ஒன்று. கே.வி மகாதேவன் இசைக்கு வாலி கவிதை எழுதி இருந்தார்.

எனக்காகவா
நான் உனக்கானவா
என்னைக் காணவா
என்னில் உன்னைக் காணவா..
இந்தப் பாடலில் பலருக்கு அன்று ஒரு மயக்கம் இருந்தது. அந்த மயக்கத்தைத் தரும் குரலாக ஜமுனாராணி இருந்தார். அவர் குரலில் வந்த சில பாடல்களில் எனக்கு இன்றும் மயக்கம் உண்டு.

'என் ஆசையும் என் நேசமும் ரத்த பாசத்தினால் ஏங்குவதை பாராயடா'
'செந்தமிழ் தேன் மொழியாள்'
'காமுகர் நெஞ்சில் நீதியில்லை'
'அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு'
'காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு'
'சித்திரத்தில் பெண் எழுதி சீர் படுத்தும் மானுடமே ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழவிட மாட்டாயா
'பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதைப் பாடவில்லை
'மாமா,மாமா மாமா'
'குங்குமப் பூவே, கொஞ்சும்புறாவே'
'நான் சிரித்தால் தீபாவளி'

போன்ற பாடல்களை இங்கே உதாரணத்திற்குத் தருகிறேன்.

தாராபுரம் சுந்தரராஜன் சினிமாவுக்காக அதிக பாடல்கள் பாடவில்லை. ஆனால் ஜமுனாராணியுடன் இணைந்து அவர் பாடிய 'எனக்காகவா நான் உனக்காகவா' பாடல் மிகப் பிரபலமானது. அறுபதுகளில் வாழ்ந்தவர்களுக்கு மட்டும் அல்ல, அதன் பின்னரும் கூட இந்தப் பாடல் பலருக்குத் தெரிந்திருக்கும்.

அதிலும்,
இளவேனில் வெயிலே காய இளம் மீன்கள் கண்ணில் மேய
இளமேனி தோளில் சாய இதழோரம் தேனும் ஊற..

என ஜமுனாராணியின் குரலில் குழைந்து வரும் பாடலின் ஆரம்பம் நிச்சயமாகப் பலரை கிறங்கடித்திருக்கும்.

இப்பொழுது நான் காது கொடுத்து வானொலியில் கேட்டதைச் சொல்லி விடுகிறேன்.

'உங்கள் விருப்பம் நிகழ்ச்சியில் ஒரு நேயர் என்னிடம் 'எனக்காகவா நான் உனக்காகவா...' என்ற பாடலைக் கேட்டிருந்தார். அந்தப் பாடலில் ஏதாவது ஏடாகூடமாக இருக்குமோ என்ற பயத்தில் அது எங்களிடம் இல்லை என்று சொல்லி விட்டேன். ஆனால் கலையகத்தில் அந்தப் பாடல் இருந்தது. பிறகு நான் தனியாக அந்தப் பாடலைக் கேட்டு, அதில் அப்படி ஒன்றும் இல்லாததால் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அந்தப் பாடலை அந்த நேயருக்காக ஒலிபரப்பினேன்...' என்று வானொலியில் சொன்னார் ஒரு அறிவிப்பாளர். இந்த ஒரு சம்பவத்தில் அந்த அறிவிப்பாளரின் ஞானத்தைப் புரிந்து கொண்டேன்.

எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒரு தளத்துக்குள் நுழையும் பொழுது குறைந்த பட்சம் அது சம்பந்தமான விடயங்களையாவது தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. இத்தனைக்கும் `நெஞ்சில் நிறைந்தவை´ நிகழ்ச்சியில் நான் கேட்டிராத பல பழைய பாடல்களை தேடி எடுத்து வந்து தூசி தட்டி தன் விளக்கம் தந்து ஒலிபரப்பும் ஒரு அறிவிப்பாளர் அவர்.

அவருக்கு ஏன் இந்தப் பாடல் தெரியாமல் போனது என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சரி அவருக்குத் தெரியாமலே போகட்டும். அன்றைய கால கட்டத்தில் நாங்கள் விரும்பிய பாடல்களைக் கேட்க வானொலிப் பெட்டி முன் தவமாய் இருந்தோம். வானொலி நிலையத்துக்கு எழுதிப் போட்டு ஒலிபரப்புவார்கள் என்று காத்திருந்தோம். ஆனால் இன்று நிலமை அப்படி இல்லை. வேண்டிய பாடலை இணையத்தில் தேடினால் உடனேயே வந்து விடப் போகிறது. விரும்பிய பாடல்களை வேண்டிய தடவைகள் கேட்டு விட முடிகிறது. இப்படியான நிலையில் ஒரு நேயர் ஏன் வானொலிக்கு தொலைபேசி எடுத்து, காத்து நின்று ஒரு பாடலைக் கேட்க விரும்புகிறார்? தான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற அவர் விரும்புகிறார் என்ற பரந்த நோக்கமா? இல்லை தனது குரலும் வானொலியில் ஒலித்தது என்கிற பெருமையா? எதுவாகவேனும் இருந்து விட்டுப் போகட்டும்.

'மடல் வாழை தொடை இருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க..'
'தேன் கனிகள் இருபுறமும் தாங்கி வரும்..

பாடல்கள் எல்லாம் அந்த வானொலியில் ஒலிக்கிறது.

'வண்டு வருகின்றது மலரில் அமர்கின்றது..'

என்ற இரு கருத்துப் பாடல்களை அவர்களால் தர முடிகிறது.

தீப்பிடிக்க தீப்பிடிக்க..
பாடல்களேயே ஒலிபரப்ப முடிகிறது.

எனக்காகவா.. பாடல்களில்தான் வில்லங்கம் இருக்கிறதா எனப் பார்க்கிறார்கள்.

இதேபோல் இன்னும் ஒரு விடயம்,

தங்களுக்குப் பிடித்த பாடல்களை இரண்டு அறிவிப்பாளர்கள் இணைந்து வானொலியில் வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பிடித்திருந்த பாடல்கள் எனக்கும் பிடித்திருந்தது. பாடல்களுக்கான விளக்கங்களையும் மேலதிகமாகத் தந்து கொண்டிருந்தார்கள்.

'உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது..'

`நான் ஏன் பிறந்தேன்´ திரைப் படத்தில் இடம் பெற்ற மனதை விட்டகலாத ஒரு பாடல். இரண்டு அறிவிப்பாளர்களும் இந்தப் பாடல் பற்றி ஆளாளுக்கு விளக்கம் தந்து கொண்டிருந்தார்கள்.

'இசை அமைப்பாளர்கள் சங்கர் கணேஸ். எம்ஜிஆர் படம். கேஆர்.விஜயா நடித்திருந்தார். படத்தில் பாடல் இடம் பெறும் பொழுது அசோகன் ஒழித்து நின்று எட்டி எட்டிப் பார்ப்பார்...' என்று ஒரு அறிவிப்பாளர் விளக்கம் தந்தார்.

நான் ஏன் பிறந்தேன் திரைப் படத்தில் அசோகன் நடித்திருந்தாரா? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. பிறகு புரிந்து கொண்டேன் அந்த அறிவிப்பாளர் தேங்காய் சீனிவாசனைத்தான் அசோகன் என்று சொல்கிறார் என்று.

இவை எல்லாம் அறிவிப்பாளர்களின் அறிவு ஞானங்கள். அறிந்ததைத் தரலாம். தெரியாததைத் தவிர்க்கலாம். அல்லது தேடுதலில் பெற்றுக் கொண்டு அழகாகத் தொகுத்துத் தரலாம். ஒன்றும் அவசரம் இல்லை. எனக்குத் தெரியும் என்று நினைத்துக் கொண்டு தவறானவற்றை தந்து விடக் கூடாது. பின்னாளில் யாராவது சுட்டிக் காட்டினால், 'அப்படியா? தகவலுக்கு நன்றி..' என்று சமாளிக்கக் கூடாது.

இசைத்தட்டுக்களை மட்டும் வைத்துக் கொண்டு அன்றைய காலத்தில் வானொலி அறிவிப்பாளர்கள் தந்த தகவல்கள், அவர்கள் சுவை படத் தந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்கள் அன்று செய்த நிகழ்ச்சிகளை இணையத்தில் தேடி எடுத்து திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். தடங்கல் இன்றி அவர்கள் தெளிவாகப் பேசிய தமிழைப் பயிற்சி செய்து பெற வேண்டும்.

அவசரமும் அதிகப் பிரசங்கித் தனமும் அறிவிப்பாளருக்கு ஆகாது. எழுது என்கிற உந்தலே மேலாக நின்றதனால்தான் இதை எழுதியிருக்கிறேன்.

ஆழ்வாப்பிள்ளை
Mai 2014

நான் கேட்டவை 2 - மனதில் நிற்கும் பாடல்கள்

 Comments

Related Articles