ஐரோப்பியத் திரைப்பட விழா! – 2013

ஐரோப்பியத்  திரைப்பட விழா மூன்றாவது ஆண்டாக யாழ்ப்பாணத்தில், மார்கழி 14 – 15 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இம்முறை யாழ். பொது நூலகத்தில் அது ஒழுங்குசெய்யப் பட்டிருந்தது. முந்திய ஆண்டுகளில் திருமறைக் கலாமன்றத்தில் நடைபெற்ற விழாக்களுக்குப் பார்வை யாளர் குறைவாகவே வந்தனர். இத்தனைக்கும் விழாவில் திரைப்படங்கள் இலவசமாகவே காட்டப்படுகின்றன. ஆனால்,  இம்முறை ஒப்பீட்டளவில் கூடுதலான பேர் வந்தனர்; அதிலும், முதல் நாளின் முதலிரண்டு காட்சிகளுக்கு மண்டபம் நிறைந்திருந்தமை ஆறுதலைத் தந்தது!

   நாளொன்றுக்கு மூன்று என்றவாறாக இரண்டு நாள்களிலும் ஆறு திரைப்படங்கள் காட்டப்பட்டன. நான்கு படங்கள் சிறுவர் திரைப்படங்கள்; மற்றைய இரண்டும் வளர்ந்தோருக் குரியவை. எல்லாப் படங்களுக்கும் ஆங்கிலத் துணைத் தலைப்புக்கள் இருந்தன.

1. சமுத்திரத்தின் நிறம்

(Color  of the Ocean), 88நி. யேர்மனி.

சுபிட்சமானவாழ்வைத் தேடி ஆபிரிக்கக் கண்டத்திலிருந்து வரும் அகதிகள், ஆபத்தான கடற்பயணத்தின்பின் கனறி தீவை அடைகின்றனர். அங்கிருந்து ஸ்பெயினின் பிரதான நிலப்பகுதிக்குச் சென்று, பின்னர் ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்குச் செல்ல முயல்வர். பலர் கடலில் காணாமற்போகின்றனர்; கரைசேரும் படகுகளில் சிலர் அரைகுறையாய் உயிர்பிழைத்திருக்கப் பலர் சடலங்களாகியிருப்பர். கொங்கோவைச் சேர்ந்த ஸோலா சிறுவனான தனது மகன் மாமடோவுடன் வந்த படகு, கனறி தீவை அடைகிறது. 18 பேர் இறந்துவிட 10 பேரே அரைகுறை உயிருடன் தப்புகின்றனர். தண்ணீருக்குத் தவிக்கும் மாமடோவுக்கு, கடற் குளிப்பிலிருந்து வரும் யேர்மன் சுற்றுப்பயணியான நத்தாலி தனது தண்ணீர்ப் போத்தலிலிருந்து  தண்ணீர் கொடுக்கிறாள்; பிறகும் ஆதரவாக நடந்துகொள்கிறாள். எல்லைக் காவற்றுறை அதிகாரி ஜோசே கடினமாக நடந்துகொள்பவன்; ஸ்பெயினில் பிறக்கும் குழந்தைகளிற்குரிய வளத்தைச் சுரண்டுபவர்கள் அகதிகளென்பது, அவனின் கருத்து. கொங்கோவைச் சேர்ந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்படுகிறது. செனிகலைச் சேர்ந்தவர்கள் அவர்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர். ஜோசே பிடிவாதமாக, ஸோலாவையும் மகனையும் செனிகலைச் சேர்ந்தவர்களெனவே சாதித்து, அகதி முகாமுக்கு அனுப்புகிறான். இருவரும் அங்கிருந்து தப்பி ஓடுகின்றனர். பிரதான நிலப்பகுதிக்குக் கள்ள மாய்ப்  படகில் செல்லப் பணம் தேவைப்படுகிறது; நத்தாலி 500 யூறோ பணம் கொடுக்கிறாள். பயணத்துக்கு உதவி செய்வதாகக் கூறிய இன்னொரு ஆபிரிக்கன், பணத்திற்காகத் தகப்பனையும் மகனையும் இன்னொருவனுடன் சேர்ந்து தாக்கியதில், ஸோலா படுகாய மடைந்து மருத்துவமனையில் இறக்கிறான். அநாதை என்றால் அகதிஅந்தஸ்து கொடுக்க வேண்டும்; ஏற்கெனவே, தான் கொடுத்த பணத்தால்தான் இவ்வாறெல்லாம் நடந்ததென்ற குற்ற உணர்வில் அவதிப்படும் நத்தாலியா, சிறுவனுக்கு அகதி அந்தஸ்து கிடைப்பதில் கவனமாயிருக்கிறாள். அதன்மூலம் அவனது எதிர்காலம் ஸ்திரமாகும் என்பது அவளது நம்பிக்கை!

ஐரோப்பாவுக்குள் நுழைய முயலும் அகதி மனிதர்களின் கதை அவலமானது; அது எம்மவரின் கதை போலு முள்ளது! இந்தத் துயரங்களையும், இறுகிய மனப்போக்குள்ள அதிகாரிகளையும், மனிதாபிமானங் கொண்டசில மனிதர்களையும் படம் சித்திரிக்கிறது. இதன்மூலம் இப்பிரச்சினை பற்றிய விழிப்புணர்வு பார்வையாளரிடம் நன்கு உருவாக்கப்படுகிறது. இப்படத்தின் நெறியாளர் :மகி பெரென் என்னும் பெண்.

2. அமைதியான சிறுவர் அழுவதில்லை

(Cool Kids Don’t Cry) , 96நி. நெதர்லாந்து.

 ‘அக்கி’ என்னும் எட்டாம் வகுப்பு மாணவியின் பால் சமத்துவ உணர்வும், புற்றுநோய் எனத் தெரிந்தபின்பும் பேணும் தன்னம்பிக்கையும்,  அவள்மீதான ஏனையோரின் பரிவும், முரட்டுத்தனமும் வெறுப்பும் கொண்ட சக மாணவன் ‘ஜோஎப்’பின்  மனநிலை மாற்றமும், பெரியவர்களின் உணர்வுநிலையும் படத்தில் நன்கு சித்திரிக்கப்படுகின்றன. ஜாக் விரியென் எழுதிப் பிரபலமான நாவலைத் தழுவியே, இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

எட்டாம் வகுப்பில் படிக்கும் அக்கி துடிப்பானவள். காற்பந்தாட்டத் தில் ஆர்வமும் திறமையும் கொண்டவள். பெண்களும் காற்பந்தாட் டத்தில் விளையாடவேண்டும் என்று விரும்புபவள். ஆனால், சகமாணவனான ஜோஎப், காற்பந்தாட்ட அணிக்குப் பெண்கள் தேவை யில்லை எனச் சொல்பவன். வாக்குவாதத்தின்போது ஏற்பட்ட  சண்டையில் அக்கியின் முகத்தில் குத்துகிறான்; அக்கியின் மூக்கிலிருந்து இரத்தம் வடிகிறது. மருத்துவப் பரிசோதனை யில் அவளுக்குப் புற்றுநோய் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். நோயின் தன்மை பற்றி மருத்துவரிடம் பல கேள்விகளைக் கேட்கிறாள்; அவர் சாதுரியமாக விளக்குகிறார். அவள் உறுதியுடனே இருக்கிறாள். தான் அவளது நோயுடன் போராடி வெற்றி அடையப்போவதாகவும், தோல்வியடைந்தால் தனது மீசையை எடுத்துவிடப் போவதாகவும் ( தனது பெயர் ‘மீசை மருத்துவர்’ என்று முன்னரே கேலியாக அவளிடம் சொல்லி யுள்ளார்!) அவர் கூறுகிறார். வகுப்பின் மாணவர்களும் ஆசிரியை ‘இனா’வும்  அக்கியின்மீது கூடிய அக்கறை காட்டுகின்றனர் ; ஜோஎப் மட்டும் ஒதுங்கிநிற்கிறான்.அக்கி தொடர்ந்து வகுப்பின் காற்பந்தாட்ட அணி மீது கவனம்காட்டுகிறாள்; தனது நெருங்கிய தோழியான ‘எலிசே’யை முன்னணியில் தாக்கும் வீராங்கனையாக விளையாட ஊக்குவிக்கிறாள். ஒருநாள் மருத்துவர் மீசையின்றித் தோன்றுகிறார்; நிலைமை  குறியீடாகச் சொல்லப்படுகிறது. மெல்ல மெல்ல மாற்றங்கொள்ளும் ஜோஎப் ஆச்சரியமான முடிவொன்றைச் சக மாணவர்களிடம் சொல்கிறான். அக்கியின் படுக்கை அருகே - வெளியிலுள்ள சிறு மைதானத்தில், பாடசாலை அணியுடன் மருத்துவமனை அணி காற்பந்தாட்டம் விளையாட ஒழுங்குசெய்கிறான். ஆட்டத்தை மகிழ்வுடன் அக்கி பார்த்து இரசிக்கிறாள்; பின்னர் இறந்துவிடுகிறாள். அக்கியின் பெயரிலான அணி காற்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்கிறது; அவளது விருப்பப்படியே எலிசே முன்னணியில் சாதிக்கிறாள்! மனதை வருடும் துயரமும் சக மனிதரின் பரிவும் இணைந்து வெளிப்படும் நல்லதொரு திரைப்படம்.

ரொறொன்ரோவிலும் வியன்னாவிலும் நடைபெற்ற சிறுவர் திரைப்பட விழாக்களில் இப்படம் விருதுகளை வென்றுள்ளது. இதன்நெறியாளர்  டென்னிஸ் ஃபொட்ஸ் ஆவார்.5. இரவுக் கதைகள்

(Tales of the  Night), 84நி. பிரான்ஸ்.

இது ஒரு கார்ட்டூன் திரைப்படம்; அழகானவையும் பொருத்தமானவையுமான ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொருத்தமான இசையும் பின்னணியில் சேர்க்கப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட திரையரங்கொன்றில் -  ஓர் இளம்பெண், ஒரு பையன், வயதுபோன தொழில்நுட்பவியலாளன் ஆகிய மூவரும்,  ஒவ்வொரு இரவும் சந்திக்கின்றனர். வெவ்வேறு காலங்களிலும் நாடுகளிலும் நடைபெறும் ஆறு கதைகளைத் தேர்ந்தெடுத்து, முதியவரின் சம்மதத்துடன் பொருத்தமான உடைகளையும் களங்களையும் தீர்மானித்து, இளம் பெண்ணும் பையனும்  உரிய பாத்திரங்களாக மாறுகின்றனர்.

ஓநாய்மனிதன், திஜீனும் அழகியும், தேர்ந்தெடுக்கப்பட்டவனும்  தங்க நகரமும், டம் டம் பையன், ஒருபோதும் பொய் சொல்லாத பையன், இளம்பெண்ணும் கட்டடக் கலைஞனின் மகனும் ஆகிய ஆறுகதைகளும் காட்சிகளாகத் தோன்றுகின்றன. இவை முறையே மத்தியகால ஐரோப்பா, மேற்கிந்தியத்தீவு, அஸ்ரெக் காலம், மேற்காபிரிக்கா, திபெத், மத்தியகால ஐரோப்பா ஆகியவற்றில் நடைபெறுகின்றன.

மைக்கல் ஒஸ்லொட் நெறியாள்கைசெய்தஇப்படம், 2011இல், பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில், தங்கக் கரடி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதுமாகும்!

6. அழகியும் வம்பனும்

(The Beauty and the Bastard),102நி. பின்லாந்து.

   இத்திரைப்படத்தின் நெறியாளர்: டொம் கறுகோஸ்கி ஆவார்.

“.... அழகியும்  வம்பனும், வயதுக்குவரும் பருவத்தை அண்மிக்கும் பின்லாந்து இளைஞர்களைப் பற்றிய நவீனத் திரைப்படம். அது, காதலையும் கனவுகளையும் கொள்கை கோட்பாடுகளையும் – அவையெல்லாம் நீங்கள் எதிர்பார்ப்பதற்கு மறுவளமாக  எவ்வாறு அடிக்கடி மாறிவிடுகின்றன என்பதையும் சொல்கிறது” என, ஒருவர் தனது மதிப்பீட்டில் குறிப்பிடுகிறார். இளமையின் துடிப்பும், ஏமாற்றத்தின் சலிப்பும், ஆட்டங்களும் பாட்டுகளும் படத்தில் விரவி இருக்கின்றன!

‘நெல்லி’ வசதியான குடும்பதைச் சேர்ந்த அழகிய இளம்பெண். மருத்துவப் படிப்பை அவள் மேற்கொள்ள வேண்டுமென்பது பெற்றோரின் விருப்பம்; ஆனால்,அவளோ பாடகியாக வரவேண்டுமென விரும்புகிறாள். ஓர்  இசைத்தட்டு நிறுவனத்தை அணுகி பாடிக்காட்டுகிறாள்; இசை சேர்த்த இறுவட்டைக் கொண்டுவரும்படி நிறுவனம் கேட்கிறது. பின்தங்கிய இடப் பின்னணியிலிருந்து வந்த ‘சூன்’, இசையைச் சேர்த்துப் பதிவுசெய்வதில் திறமைசாலி;ஆனால் ஏமாற்றத்தில் ஒதுங்கியிருப்பவன். பெண்களுடன் பழகுவதிலும்  தயக்கங்கொள்பவன். நெல்லி  தன் பாடலைப் பதிவுசெய்ய சூனை அணுகுகிறாள். பெண்களைக் கண்டு பயப்படுபவனென நண்பர்கள் அவனைக் கேலிசெய்ய, நெல்லியை அடைந்து காட்டுவதாகச் சவால் விடுகிறான். பாடலைப் பதிய முதலில் மறுப்பவன் பின்னர் அவளுக்கு  உதவுகிறான்.  இசை நிறுவனம் அப்பதிவை ஏற்றுக்கொள்கிறது; நெல்லி கவனத்துக்குரிய பாடகியாகிறாள். ஒருகட்டத்தில், நெல்லியும் சூனும்  தங்களிடையேயான பரஸ்பர ஈர்ப்பை  உணர்ந்துகொள்கின்றனர். தனது காதலனை நீங்கி சூனிடம்  வந்துவிடுகிறாள் நெல்லி!

‘இலங்கைக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான கலாசார ஒத்துழைப்பினைப் பலப்படுத்தி மேம்படுத்துவதற்காக’ ஒழுங்குசெய்யப்படும்  ஐரோப்பியத் திரைப்பட  விழா,  கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும்  மட்டுமே  நடைபெறுகிறது. கொழும்பில் 17 திரைப்படங்களும் யாழ்ப்பாணத்தில் 6 திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. போதிய அளவிலான பார்வையாளர் யாழ்ப்பாணத்தில் பங்கெடுக்கவில்லையென்றே சொல்லவேண்டும். முதல் இரண்டு  காட்சிகளைத்  தவிர ஏனையவற்றுக்கு, சுமார் இருபதுபேர்வரையே வந்தனர்.  விழா அமைப்பாளர்கள் கொழும்பை அடுத்து யாழ்ப்பாணத்துக்கு முக்கியம்  தரும்போது, பார்வையாளரின் வருகை குறைவடைவது எதிர்விளைவை  - வேறு இடத்துக்கு  விழா மாற்றப்படும் நிலைமையை - உருவாக்கிவிடலாம். அவ்வாறான நிலைமை ஏற்பட்டுவிடாதவாறு,  இங்குள்ள கலை இலக்கியத்  துறை சார்ந்தோர் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும்; அடுத்த ஆண்டில் திரைப்படங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி, நாம் வற்புறுத்தவும்  வேண்டும்!

அ. யேசுராசா  (Athanas Jesurasa)
 - ஜீவநதி
தை 2014

Related Articles