திவ்யராஜனின் `உறவு´ (குறும்படம்)

புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடமிருந்து கலை இலக்கியப் படைப்புக்கள் பல வெளிவந்துகொண்டுள்ளன. ஒப்பீட்டளவில் இலக்கியம் சார்ந்த படைப்புக்கள் கூடுதலாகவுள்ளன; ஆயினும் நாடகம், திரைப்படம், இசைப் படைப்புக்களும் உருவாக்கப் பட்டுள்ளன. இலக்கியத்தில் ஈழத்து நினைவுகள், ஈழப் பின்புலம் என்பவற்றையே வெளிப் படுத்துகிறார்கள். தாம் வாழும் வெளிநாட்டு வாழ்க்கைச் சூழலை – பிரச்சினைகளைச் சித்திரிப்பவை அரிதாகவுள்ளன என்ற விமர்சனத்தையும், பலர் முன்வைக்கிறார்கள். கனடாவில் வாழும் தமிழ் மாந்தர் சிலரின்  வாழ்க்கைச் சூழலில் - சிலமுரண்பாடுகளினால் நேரும் நெருக்கடிகளைப் பின்புலமாகக் கொண்ட உறவு (2010) என்னும் திரைப்படத்தை அண்மையில்  பார்த்தேன். சில குறைபாடுகளுடனும் கவனத்துக்குரியதாக அது அமைந் திருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் பொறுப்பான அரசாங்க உத்தியோகத்திலுள்ள அண்ணனின் மகன் முரளிக்கு, வெள்ளைவான் நெருக்கடிபோன்ற பிரச்சினைகளால் உயிர் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில், கனடாவிலுள்ள மாமியார் அவனைக் கனடாவுக்கு எடுக்க முயல்கிறார்.

தனது மகள் அபிக்கு அவனைத் திருமணம் செய்தும்வைக்கிறார். கனடாவுக்கு வந்த முரளிக்கு சூழலுடன் இசைந்துபோக இயலவில்லை. பல நேர்முகப் பரீட்சைகளுக்குச் சென்றும் வேலை கிடைக்க வில்லை. மனைவியின் உழைப்பில் வாழ்வது அவனது மனப்பாங்குக்கு ஒத்துவரவில்லை. அதைவிட  மனைவி வேலை, நடன வகுப்புகள்,மேடையேற்ற நிகழ்ச்சிகள் என்று ‘பிஸி’யாக இருப்பதும், அதனால் நேரம் சென்று வீட்டுக்குவருவதும் அவனுக்குப் பிடிக்கவில்லை. அவளுடன் வேலைசெய்யும் ஜெய்சன் என்னும் வெள்ளைக்காரனுடன் அவள் இயல்பாகப் பழகுவதையும் சந்தேகிக்கிறான். ‘ஆமிப் பிரச்சினைஇருந்தாலும் ஊரிலேயே இருந்திருக்க லாம்....’ என்றும் எண்ணுகிறான். பட்டயக் கணக்காளனான அவனுக்கு நல்லதொரு வேலை கிடைத்தபின், வேலையை விடும்படி மனைவியை வற்புறுத்துகிறான்; நடன வகுப்புகளையும் விடும்படி சொல்கிறான். கலையார்வம்கொண்ட பெற்றோர் உள்ள  குடும்பச் சூழலில் வளர்ந்த அபி, கணவனின் மனப்பாங்கின் முரண்பாடுகளில் மன நெருக்கடிக்குள்ளாகினாலும் விட்டுக்கொடுக்கிறாள்; கணவனின் பிடிவாதத்தால் பெற்றோரின் வீட்டில்நின்றும் நீங்கி  வேறு வீட்டிற்குச் சென்றும் கணவனுடன்வசிக்கிறாள். ஆனால், புரிந்துணர்வில்லாத – தன்முனைப் பில் பிடிவாதம் காட்டும் – சந்தேகம்கொண்ட அவன், மனைவியை உடல்ரீதியாகத் தாக்கும் போது, அயல் வீட்டுப் பெண்ணின் அறிவிப்பினால் பொலிசார் அவனைக் கொண்டுசெல்கின்ற னர். விடுவிக்கப்பட்டபின் நண்பன் கூறும் அறிவுரையையும் ஏற்காது - மேலும் வன்மத்துடன், அவளை விட்டுவிட்டுத்  தனியாகச் சென்று வசிக்கிறான். ஆணாதிக்க மனோபாவமும், விழுமியங்கள் பற்றிய நோக்குநிலை வேறுபாடுகளும் இருவரிடையிலும் முரண்பாடுகளை  வளர்க்கின்றன. இறுதியில், அபி அவனின் இடத்துக்குச் சென்று தனது நிலைமையை விளக்க முயல்கையில், இருவரிடையிலும் காரசாரமான உரையாடல் நிகழ்கிறது. இது திரைப்படத்தில் முக்கியமான கட்டமாகும்.

 “அப்பவே சொன்னவங்க ஒரு ஆட்டக்காரியைக் கட்டவேணாம் என்று.”
“என்னை நீங்க புரிஞ்சுகொள்ள இல்ல. எல்லாத்துக்கும் சந்தேகம். என்ர விருப்பத்துக்கு ஒண்டுமே செய்ய முடியாது....”
“உனக்கு உன்ர அப்பா அம்மாதான் முக்கியம்.... பிரெண்ட்ஸ்தான் முக்கியம்.என்னைப்பற்றி அக்கறையில்ல.”
“புரிந்துகொண்டுதானே விட்டுக் குடுத்தனான்? எல்லாத்துக்கும் கேள்வி....கொஞ்சங்கூட நம்பிக்கையில்ல.”
“நீசெய்த பிழைக்கு நீதான் அனுபவிக்கவேணும்.”
“ஓம், என்ர பிழை. ஊரில உங்கட உயிர் போகப்போகுதெண்டு துடிச்சு  உங்களைக் கலியாணஞ் செய்தன் பார், அது என்ர பிழை.காலங்காலமா நான் நேசிச்ச கலையை உங்களுக் காக  விட்டுக் குடுத்தன்பார், அது என்ரபிழை.  பின்னாலவாறது, ஒளிச்சுநிண்டு பாக்கிறது, ஸ்பை பண்ணுறது.... தேவையில்லாம  சந்தேகப்பட்டு என்னச் சித்திரவதைப்படுத்தினீங்களே....
இதையெல்லாம் பொறுத்துக்கொண்டிருந்தன்.   சீ...! நீயெல்லாம் ஒரு மனுசனா?”
“நிப்பாட்டு!” – முரளி கோபத்துடன் கத்துகிறான்.

 “இப்ப சொல்லுறன். உங்களைப்போல ஆண்களுக்கு, எங்களைப்போல பெம்பிளையள் எவ்வளவு விட்டுக் குடுத்தாலும், உங்கட புத்தி உங்களை விட்டுப் போகாது.... சந்தேகப்பிசாசுகள். எங்களப்போல பெம்பிளையள் எவ்வளவுதான் செய்தாலும், நீங்கள் ஒருநாளும்புரிஞ்சுகொள்ள மாட்டீங்க.... எங்கட வாழ்க்கை நரகம்தான்.

பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு. எப்பிடி வாழுறதெண்டு எனக்குத் தெரியும்.... Bye!”  கலங்கிய கண்களைத் துடைத்தபடியே, வேகமாக முரளியின் அறையிலிருந்து வெளியேறி, உறுதியுடன் அபி நடக்கிறாள்!

அடுத்த காட்சியில், அபி சதங்கையைப் பாதத்தில் அணிவதும், தட்டுக்கழியினால்  கை தாளம் போடுவதும் அண்மைக்காட்சிகளாக (close –up) காட்டப்படுகின்றன – பின்னணியில் நடனத்துக் குரிய பாடல் ஒலிக்கின்றதுடன் படம் நிறைவடைகிறது!

முக்கியமான விடயங்களைக் கதைக்கரு கொண்டுள்ளது. பெரும்பகுதி கனடாச் சூழலில் நிகழ்ந்தாலும், ஈழத்து நிலைமைகளும்  கொஞ்சம் உணர்த்தப்படுகின்றன. பாதை மூடுண்டநிலைமை, விசேட அடையாள அட்டை இருந்தால் நல்லது – பாதுகாப்புப் படைகளைத் தாண்டிப் போவதற்கு என்ற அரச ஊழியரின் எண்ணம். தொலைக்காட்சி வழியாக – பருத்தித்துறையில் சூட்டுக் காயங்களுடன் இரண்டு சடலங்கள், கொக்குவில் மேற்கில் வர்த்தகர் வெள்ளைவானில் கடத்தல், மட்டக்களப்பில் இரு தரப்பு மோதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர் என்பன தெரிவிக்கப்படுகின்றன. ஆனால், பிறிதோரிடத்தில் வெள்ளைவானுடன் சம்பந்தப்படுவது இயக்கமா அல்லது அரசசார்புக் குழுவா என்பதில் மயக்கமுள்ளது.

ஜீவன்ராம் ஜெயம் ஒளிப்பதிவைக் கையாண்டுள்ளார். பொதுவில் பாராட்டும் வகையில் அமைந்த ஒளிப்பதிவு, இயல்பான காட்சிப் பதிவுகள் மனதைக் கவர்கின்றன. பல இடங்களில் அண்மைக் காட்சிகள் (குளோஸ் அப்) சிறப்பாக உள்ளன. குறிப்பாக, தோழியுடன் அபி கதைக்கும்போதான இருவரின் காட்சிகளைக் குறிப்பிடலாம். மகள் வேறு வீடு சென்றபின், படிகளால் இறங்கியபடி ஆடிவரும் மகளின் தோற்றத்தைத் தகப்பன் நினைப்பதும், சாப்பிடுகையில் மகளுக்கு இறால் கறியும் பிட்டும் தீத்துவதான தாயின் நினைவும் மனதில் பதிகின்றன!

எனினும், ஆரம்பக் காட்சிகளின் பதிவுகள் நாடகத் தன்மையைக் கொண்டுள்ளன. நாட்டிய நிகழ்வுகளைச் சித்திரிக்கும் காட்சிகளும் வேறுமாதிரியாக – இன்னும் மெருகுடன் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்ற உணர்வு எழுகிறது!

இசையமைப்பும் குறிப்பிடத்தக்க வகையிலுள்ளது. பயாஸ் சவாஹிரைப் பாராட்டலாம். பல பாடல்கள் நன்றாகவுள்ளன. இவை வாயசைக்கப்படாமல் பின்னணிப் பாடல்களாகவே உள்ளமையையும் குறிப்பிடவேண்டும். காட்சிகளின்போது பின்னணியில் ஒலிக்கும் இசைக்கூறுகள் காட்சிப் படிமங்களுக்கு வலுவூட்டுவதும் முக்கியமானதாகப் படுகிறது. ஆயினும், சில பாடல்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். உதாரணமாக, கணவனின் நடத்தையால் மனநெருக்கடியுடன்  அபி தனிமையில் நடந்துபோகும்போதும் -  நீர்நிலை அருகே அமர்ந்துள்ள போதும் பின்னணியில் ஒலிக்கும் பாடல், இசைவாகத்  தோன்றவில்லை.

தமிழ்நாட்டுத் திரைப்படங்களில் வழமையாகவுள்ள மிகைநடிப்பு  இத்திரைப்படத்தில் இல்லையென்பது, மகிழ்ச்சிக்குரிய விடயம். ஏறக்குறைய பெரும்பாலான நடிக நடிகையர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அபியாக வரும் சங்கீதா திவ்யராஜனும், முரளியாக வரும் P.S.சுதாகரனும் விசேடமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். அவ்வாறே தகப்பனாக வரும் க.நவம், தாய், நண்பன், அவனது குடும்பத்தினர், ஜெய்சன் என்னும் வெள்ளைக்காரப் பாத்திரம் மற்றும் ஏனைய சிறு பாத்திரங்களாக வருபவர்களும் தமது இயல்பான நடிப்பில் மனதில் பதிகின்றனர்.

திவ்யராஜன் ஏற்கெனவே ‘சகா முதலிய படங்களை நெறியாள்கை செய்திருப்பவர். இத்திரைப்படத்திலும் அவர் தனது ஆற்றலை நன்கு வெளிக்காட்டியுள்ளார். ஈழத்தவரின் வாழ்க்கை அதற்கேயுரிய தனித்துவத்துடன் இலக்கியப் படைப்புக்களில் வெளிப்படுவதுபோல், திரைப்படங்களிலும் வெளிப்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால், ஈழத்தில் அம்முயற்சி உரிய வகையில் மேற்கொள்ளப் படவில்லை. இதற்குப் பல காரணங்களும் உள்ளன. புலம்பெயர்ந்த ஈழத்தவரால் அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்படும் சில முயற்சிகள் வித்தியாசமானவையாக இருப்பதை அறிய முடிகிறது. அவை தமிழ்நாட்டு மசாலாப் படங்களிலிருந்து வேறுபடுபவை. ஈழத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலுமுள்ள நம்மவர்கள், இவற்றை வரவேற்று ஊக்கப்படுத்த வேண்டும். இத்தகையதொரு தனித்துவமான முயற்சியில் இப்படைப்பை உருவாக்கி அளித்த திவ்யராஜனுக்குப் பாராட்டுக்கள்!

அ. யேசுராசா (Athanas Jesurasa)
- கலைமுகம் ஐப்பசி - மார்கழி 2013

Related Articles