நேற்று (குறும்படம்)

(16நிமி.)

னிமைப்பட்ட – ஊர் எல்லைப் பகுதியில், இந்திய அமைதிப்படை ஒரு போராளியைப் பிடிக்கத் துரத்துகிறது. அவன் துப்பாக்கியால் சுட்டபடியே ஓடி வளவிலுள்ள கிழவியிடம் சொல்ல, அவள் அடைக்கலம் தருகிறாள். வைக்கோல் போட்டுவைக்கும் தீவனத்தொட்டியில் அவனை மறைத்து வைக்கிறாள். இராணுவம் கண்டுபிடிக்க இயலாமல் திரும்பிச் செல்கிறது. ஒரு போராளி தனது அலுவலகத்திலிருந்து நாட்குறிப்பைப் புரட்டும்போது, நினைவில் விரிவதாகக் கதை அமைந்துள்ளது. போராளிகளிற்கும் மக்களிற்குமிடையிலான நெருங்கிய பிணைப்பை வெளிப்படுத்தும், சிறந்த ‘வகைமாதிரி’ப் படைப்பாக அமைந்துள்ளமை முக்கியமானது.

.நாட்குறிப்பில் போராளியின் கை, இராணுவத்தினரின் கால்கள், உதட்டில் பீடியுடன் தெரியும் இராணுவத்தானின் முகம், பெட்டி இழைத்த படியுள்ள கிழவி, இறுதியில் கிழவியின் கையிலிருந்து தேநீருள்ள மூக்குப்பேணியை வாங்கும் போராளியின் கை எனவுள்ள அண்மைக் காட்சிச் (close – up ) சட்டங்கள் அழகாக உள்ளன. அவ்வாறே போராளியைத் துரத்தும்போதுள்ள விரைவான தொலைவுக்காட்சிகளும் (long shots ) அமைந்துள்ளன. மையக் கருவை இறுக்கமாக – பிசிறல்கள் இல்லாது, இயல்பான பாத்திரங்களுடன் காட்சிரூப மொழியில் நேர்த்தியாக வெளிப்படுத்தியதால் ஏற்படும் மொத்தப் பாதிப்பு, மிகச் சிறந்த குறும்படம் என்ற உணர்வைத் தருகிறது. இக்குறும்படமும் ‘முகங்கள்’, ‘காற்றுவெளி’ ஆகிய முழுநீளப் படங்களுடன் சேர்ந்து - ஞானரதனுக்கும் ஈழத்துத் திரைத்துறைக்கும் பெருமை சேர்க்கிறது!

- அ. யேசுராசா (Athanas Jesurasa)
- 2002

Related Articles