கடந்து வந்த நமது சினிமா - 5

சினிமாப்படத்தை உருவாக்கும்  ஆர்வம் யார் யாருக்கு வருமென்றில்லை. யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம்.வேத நாயகத்துக்கும்  வந்திருக்கின்றது. விளைவு 'கடமையின் எல்லை' படம் தயாரானது. இது ஷேக்ஸ்பியரின் Hamlet என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட திரைப்படம். திரைப்படம் சம்பந்தமான நுட்பங்கள் தெரியாமலேயே எம்.வேதநாயகம் இந்தத் திரைப்படத்தை நெறியாண்டார். கூடவே இசை அமைப்பையும் ஏற்றுக் கொண்டார். இசை அமைப்பதற்கான தகமை அவரிடமிருந்தது. எம்.வேத நாயகம் அவர்கள் விரிவுரையாளர் மட்டுமல்ல சங்கீத பூசணம் பட்டம் பெற்ற வித்துவானும் கூட. 1966இல் வெளியான இத்திரைப்படத்தில்தான் இன்றும் நடித்துக் கொண்டிருக்கும் ஏ.ரகுநாதன் அறிமுகமாகியிருந்தார். எம்.உதயகுமாருக்கும் இப்படமே அறிமுகமாக இருந்தது.

இப்படம் பெரும் தோல்வியை அடைந்திருந்தாலும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் சரித்திரப் படம் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டது. இப்படத்தில் நடித்த கதாநாயகி ஜி. நிர்மலா உயரம் குறைந்தவராகவே இருந்தார். நாலரையடி நடிகை என்ற பெயர் இவருக்கு தானகவே வந்துவிட்டது. தென்னிந்தியத் திரையுலகில் நுளைந்து தவமணி தேவி புரட்சி செய்து கொண்டிருந்தார். ஆனால் இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படத்தில் நடிக்க நடிகை இல்லாமல் சிரமப்பட்டிருக்கின்றார்கள். இல்லாவிட்டால் கடமையின் எல்லையில் ஒரு ஆணுக்கு பெண்வேடம் போட்டு நடிக்க விட்டிருக்க மாட்டார்கள்.

ஒரு ரயில் பயணம் சிறந்த கலைஞன் ஒருவரை எங்கள் திரையுலகத்திற்குத் தந்திருக்கின்றது. அறுபதுகளின் ஆரம்பத்தில் தனக்கு மனைவியாக நிச்சயிக்கப் பட்டிருந்த பெண்ணைப் பார்க்கும் ஆவலில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வார விடுமுறைக்குச் சென்று கொண்டிருந்த அந்த இளைஞனுக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அந்த ரயிலிலேதான் நிச்சயிக்கப்பட்டது. ரயிலிலே கூடப் பயணித்த விரிவுரையாளர் எம்.வேதநாயகத்தின் கண்களில் அந்த திடகாத்திரமான இளைஞன் பட்டுவிடுகிறான். அந்த இளைஞனைப் பார்த்த மாத்திரமே அவனிடம் விரிவுரையாளர் எம்.வேதநாயகம் கேட்டு விடுகின்றார். நானெடுக்கும் திரைப்படத்தில் நடிக்கிறாயா? கலையரசு சொர்ணலிங்கம் அவர்களிடம் கலை பயின்ற அந்த நாடகக் கலைஞனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும். சம்மதித்துவிடுகிறான். எடுக்கப்படும் திரைப்படம் சரித்திரப் படம் என்பதால் குதிரையேற்றம், வீர விளையாட்டுக்கள் எல்லாம் பயின்று கொள்கிறான். கதாநாயகனுக்குத் தேவையான எல்லாமிருந்த போதும் பல் வரிசை நேர்த்தியில்லை என்ற காரணத்தால் அந்த வாய்ப்பு இல்லாமல் போகிறது. இவருக்கு கிடைத்திருக்க வேண்டிய அந்தப் பாத்திரம் அன்றைய கராத்தே சம்பியனான பொனி றோபேர்ட்ஸ் இற்குப் போய்விடுகிறது. ஆனாலும் கதாநாயகனின் நண்பனாக நடிக்கும் வாய்ப்பு அந்த இளைஞனுக்குக் கிடைக்கிறது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனக்கென்று ஒரு வரலாறு எழுதிய, எழுதுகின்ற அந்தக் கலைஞன் ஏ.ரகுநாதன் ஆவார்.

கடமையின் எல்லையை உருவாக்கிய எம்.வேத நாயகம் அவர்கள் அதன் படத்தொகுப்பின் போது கலையகத்திலேயே மாரடைப்பால் காலமானார். தான் படைத்த திரைப்படத்தைப் பார்க்காமலேயே அவர் காலமானது வரலாற்றில் பதிந்து விட்ட சோகமான சம்பவம்.

வாள் சண்டைகள், குதிரையோட்டங்கள், சிறந்த பாடல்கள் , நன்கு பயிற்றப்பட்ட மாணவிகளின் நடனங்கள், இயற்கைக் காட்சிகள், ஆங்கிலப் படங்களுக்கு நிகராக எடுக்கப்பட்ட திகிலூட்டும் காட்சிகள் என்று எல்லாமிருந்தும் படம் பெரும் தோல்வியைத் தழுவிக் கொண்டது. 04.10.1966 இல் திரைக்கு வந்த கடமையின் எல்லை இரண்டு வாரங்களுக்குள் பெட்டிக்குள் சுருண்டு விட்டது.

மிகுந்த எதிர்பார்ப்புடன்  பெரும் செலவில் தயாரிக்கப்பட்ட கடமையின் எல்லையின் தோல்விக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் சேக்ஸ்பியரின் ஆங்கில நாடகத்தை தமிழில் திரைப்படமாகத் தந்தது மட்டுமல்லாமல் யாழ்ப்பாணத் தமிழை முதன் முதலில் திரைப்படத்தில் அறிமுகப் படுத்திய பெருமையும் விரிவுரையாளர் எம்.வேதநாயகத்தைச் சேரும்.

- மூனா
7.11.2004


கடந்து வந்த நமது சினிமா - 1
கடந்து வந்த நமது சினிமா - 2 
கடந்து வந்த நமது சினிமா - 3
கடந்து வந்த நமது சினிமா - 4
கடந்து வந்த நமது சினிமா - 5
கடந்து வந்த நமது சினிமா - 6

Related Articles