கடந்து வந்த நமது சினிமா - 3

எலிசபெத் ரெயிலர் அன்றைய திரைப்பட ரசிகர்களின் கனவுக் கன்னி. ஆங்கில ரசிகர்கள் மட்டுமல்லாமல் அகிலம் எங்கிலுமே அவருக்கு ரசிகர்கள் இருந்திருக்கின்றார்கள் இருக்கின்றார்கள். வைரமுத்து கூட தன் பாடல் வரிகளில்  எலிசபெத் ரெயிலரின் மகளா? என்ற வரியை தந்திருக்கின்றார். இந்தப் பாடல் வெளிவந்த போது ஒரு ரசிகர், எலிசபெத் ரெயிலரின் ரசிகனாக வைரமுத்து வேண்டுமானால் இருக்கலாம் அதற்காக மனிசா ஹொய்ராலாவை எலிசபெத்தின் மகளாகவா கற்பனை செய்ய வேண்டும்? மனிசா ஹொய்ரலுக்கு அப்படி என்ன வயசாச்சு? என்று ஆதங்கப் பட்டுக் கொண்டார்.

இன்னும் ஒரு விசேசம் அந்தப் படத்தில் இருந்திருக்கின்றது. தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் கேட்க வேண்டும் என பாரதி விருப்பம் தெரிவித்திருந்தான். உலகமெங்கும் திரையிடப்பட்ட Elephant walk இல் அந்தத் தேமதுரத் தமிழ் ஓசை ஒலித்திருக்கின்றது. மலைநாட்டு மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட அந்தப் படத்தில்  தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் பெண்கள் பூமியில் மானிட ஜென்மம் எடுத்தும் புண்ணியமின்றி... என்று அந்நாளில் பிரபல்யமான தியாகராஜ பகவதரின் பாடலை பாடிக் கொண்டே தேயிலைக் கொழுந்து எடுப்பார்கள். இத் திரைப்படத்தினை யேர்மனியரான  William Dieterle  இயக்கியிருந்தார்.

இலங்கையிலும் பிரித்தானியாவிலும்  வைத்துப் படம் பிடிக்கப்பட்டு 01.01.1957இல் வெளியான இன்னுமொரு ஆங்கிலத் திரைப்படம் Bridge on the River Kwai. இன்றும் கூட இத்திரைப்படம் பேசப்படுகிறது. களனி ஆற்றின் மேலே தொங்கு பாலம் கட்டி எடுக்கப்பட்ட Bridge on the River Kwai என்ற திரைப்படத்தின் பதிவு படம் பிடிக்கப்பட்ட  இடத்திலேயே இன்னமும் இருக்கின்றது. இத்திரைப்படம் எடுக்கப்பட்ட கித்துல்கல என்ற ´இடத்தில் இந்த இடத்தில்தான் Bridge on the River Kwai திரைப்படம் எடுக்கப்பட்டது` என்ற அறிவித்தல் இப்பொழுதும் காணப்படுகின்றது.

1943ம் ஆண்டில் யுத்தக் கைதிகளைக் கொண்டு வலுக் கட்டாயமாகக் கட்டப்பட்ட பர்மா தாய்லாந்து காடுகளூடாக ஓடும் க்வாய் நதியின் மேல் உள்ள பாலம் போன்று இலங்கையில் ஓடும் களனி ஆற்றின் மேல்  ஐம்பது அடி உயரத்தில் 425 அடி நீளத்தில் திரைப்படத்திற்காக ஒரு பாலம் அமைக்கப்பட்டது. 500 தொழிலாளர்களும் 35 யானைகளும் ஈடுபடுத்தப்பட்டு இந்தப் பாலம் எட்டு மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது. 2வது உலக யுத்தத்தை அடிப்படையாக வைத்து  எடுக்கப் பட்ட ஐந்து திரைப்படங்களில் Bridge on the River Kwai யும் ஒன்று. இப்படத்தினை David Lean  இயக்கியிருந்தார்.

முதல் சிங்களத் திரைப்படம் தென்னிந்திய திரைப்படக் கலையகத்தில் வைத்து தயாரிக்கப் பட்டு 21.01.1947 இல் இலங்கையில் திரையிடப்பட்டது. ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பின் 29.12.1951இல் அன்றைய சிங்களத் தம்பதிகளும், முன்னணி நடிகர்களுமான எடி ஜயமன்னவும், ருக்மணி தேவியும்  நடித்து வெற்றி பெற்ற சங்கவுனு பிலித்துற (Sengawunu Pilitura) என்ற சிங்களப் படத்தை தமிழுக்கு மொழிமாற்றம் செய்து குசுமலதா என்ற பெயரில் வெளியிட்டிருந்தார்கள். மொழிமாற்றம் செய்யப்பட்ட இத்திரைப்படத்திற்கு வேறு அழகான தமிழ்ச் சொற்கள் கிடைக்கவில்லைப் போலும். படத்தின் பெயர் கூட இத்திரைப்படம் வேற்று மொழியிலான ஒரு திரைப்படம் என்ற நிலையையே தோற்றுவித்திருந்தது. மொழி மாற்றம் செய்யப்பட்ட இந்தத் திரைப்படத்திற்கு குரல் தந்தவர்கள்  இந்தியத் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆதலால் குசுமலதா என்ற இந்தத் திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை. மொழிமாற்றம் செய்யப்பட்ட இத் திரைப்படத்தின் தலைவிதி தலை கீழாகவே இருந்திருக்கிறது. குசுமலதா தலைநகர் கொழும்பில் ஓரிரு திரையரங்குகளிலேயே திரையிடப்பட்டது. திரையிடப்பட்ட வேகத்திலேயே படத்தை திரையரங்குகளைவிட்டு எடுக்க வேண்டியதாயிற்று.

(இனியும் வரும்)

- மூனா
 7.11.2004 

கடந்து வந்த நமது சினிமா - 1
கடந்து வந்த நமது சினிமா - 2 
கடந்து வந்த நமது சினிமா - 3
கடந்து வந்த நமது சினிமா - 4
கடந்து வந்த நமது சினிமா - 5
கடந்து வந்த நமது சினிமா - 6

Related Articles