பாலாழி மீன்கள்

„பாற் கடலில் வாழும் மீனானது, அங்கிருக்கும் பாலை உண்ணும் பொருளென்று அறியாதமையினால் அதனை அருந்தாமல் அந்தக் கடலில் வாழும் சிறிய பொருட்களை வருந்தித் தேடி உணவாக உட்கொள்ளும். „பாடசாலை வகுப்பறையில் சமயபாட வகுப்பில் ஏகாம்பரம் ஆசிரியர் திருவருட்பயனிற்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்.

இது எல்லாம் எதுக்கு? திருவருட்பயனை மனப்பாடம் செய்ய வேண்டும். அதுக்கு விளக்க உரையும் சொல்ல வேண்டும். அன்று மனதுக்குள் சலித்துக் கொண்டேன். ஆனாலும் அன்று மனப்பாடமும் செய்து கொண்டேன். மூளையின் ஒரு ஓரத்தில் என்றாவது பயன் படுவேன் என்று பதிந்திருந்த திருவருட்பயன், முகநூலில் வலம் வந்த பொழுது எனது நினைவுக்கு வந்தது.

எனக்கு நேரம் கிடைத்தால் முகநூலில் நுனிப்புல் மேயப் போவேன். ஒரு தடவை அப்படிப் போன பொழுது, எனக்கு வேண்டியவர் ஒருவர் „வெள்ளைக்காரி ஒருத்தி என்னமா பரதநாட்டியம் ஆடுகிறாள்“ என்ற கூற்றுடன் ஒரு இணைப்பைப் போட்டிருந்ததைப் பார்த்தேன். அந்த இணைப்பில் ஒரு வெள்ளை இனத்துப் பெண் பரதநாட்டியத்திற்கான உடையுடன் தமிழ்ப் பாடல் ஒன்றுக்கு அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் அவர் குறிப்பிட்டபடி „என்னமா ஆடுகிறாள்' என்பதில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. ஆடுகிறாள் என்பதோடு விட்டிருக்கலாம். „என்னமா“ என்ற அழுத்தம் எனக்கு அதிகமாகப் பட்டது. இதை விட எங்கள் ஊர் சிறார்கள் நன்றாக ஆடுவார்களே. அரங்கேற்றங்கள், கலை விழாக்கள் வணக்க நாட்கள் என்று பலவற்றைப் பார்த்திருக்கின்றோமே. அதில் எல்லாம் எவ்வளவு திறமைகளை எங்கள் பிள்ளைகள் காட்டி இருக்கிறார்கள். ஏன் அவைகளைப் பற்றி நாங்கள் அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை. அவர்களை ஏன் பாராட்டித் தட்டிக் கொடுக்கவில்லை. எங்களை நாங்களே புரிந்து கொள்ளவில்லையா? அல்லது எங்களுக்கு எப்பொழுதும் மற்றவர்கள் செய்வதுதான் திறமையாகத் தெரிகிறதா? மற்றவர்களை பாராட்டுவதோ, வாழ்த்துவதோ தவறு என்று நான் சொல்லவில்லை. தாராளமாகச் செய்யலாம். அது ஒரு நற்பண்பு. எனினும் எங்களை எங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதே எனது அவா. எங்களால் வெளிப் படுத்தப்படும் கலைகளுக்கும் ஒரு ஊக்குவிப்பு வேண்டும். அதை மற்றவர்கள் எங்களுக்கு அதிகமாகத் தர மாட்டார்கள். நாங்களே தர வேண்டும். திருவருட்பயனில் சொல்லப் பட்ட பாற்கடல் மீன்களைப் போல் அல்லாமல் நாங்கள் எங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

வெள்ளை இனத்துப் பெண் வீதியில் நின்று பரதம் ஆடினால் மூக்கில் விரலை வைத்து அதிசயிக்கிறோம். எங்களில் யாராவது வீதியில் நின்று மேற்கத்திய நடனம் ஆடினால் எங்களவர்களின் விமர்சனங்கள் எப்படி இருக்கும்? இந்த எண்ணங்களோடு அன்று முகநூலில் இருந்து வந்து விட்டேன். எனது எண்ணத்தை அதில் பதிந்திருக்கலாமோ என்று பின்னர் நினைத்துக் கொண்டேன். ஆனாலும் பலர் வந்து „ஆகா..ஓகோ“ என்று அங்கே எழுதியிருந்த பொழுது எனது இந்த எண்ணம் அவர்களுக்கு அதிகப் பிரசங்கித் தனமாகத் தெரியக் கூடும் என்று என்னை நானே சமாளித்துக் கொண்டேன்.

தீபாவளி விடுமுறை. நேரம் கிடைத்தது. நுனிப்புல் மேய மீண்டும் போயிருந்தேன். மீண்டும் அதே பழைய குருடிக் கதைதான். வெள்ளை மாளிகையில் நடந்த „தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தில் ஓபாமாவின் மனைவி இந்தியப் பாடலுக்கு நடனம்“ இணைப்பு ஒன்று இருந்தது. பார்த்து விட்டு சற்று நகர்ந்தேன். „பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனும் அவரது மனைவி சமந்தா கமரூனும் லண்டன் நீஸ்னர் கோயிலில் நடைபெற்ற தீபாவளிப் பூசையில் கலந்து கொண்ட காட்சிகள்“ இன்னும் ஒரு இணைப்பு இருந்தது. அவர்கள் எங்கள் கோயிலுக்கு வந்தால் எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது சரி. நாங்கள் தேவாலயத்துக்குப் போனால் அவர்கள் ஏன் ஆச்சரியப் பட மாட்டேன் என்கிறார்கள். மீண்டும் திருவருட்பயன் „பாற்கடல் மீன்கள்“ நினைவுக்கு வந்தது.

„இலங்கையில் தமிழர்களின் மத, கலாச்சாரங்களுக்கு அரசு வழங்கும் ஆதரவையும், இந்த வேற்று நாட்டில் வேற்று அரசு வழங்கும் ஆதரவையும் தயவு செய்து ஒத்துப்பார்க்கவும்...“ என்று ஒருவர் அந்த இணைப்புக்கு எழுதியிருந்த கருத்து என்னை சமயபாட வகுப்பில் இருந்து சரித்திர வகுப்புக்கு அழைத்துச் சென்றது.

„திருகோணமலை கோணேஸ்வரக் கோயிலை பீரங்கி கொண்டு தாக்கி அழித்து, அதில் இருந்த கற்களைக் கொண்டே திருகோணமலையில் கோட்டையைக் கட்டினார்கள். சாமி கும்பிட்டால், அவர்களால் தண்டிக்கப் படுவோம் என்று எங்கள் முப்பாட்டனார்கள் அஞ்சினார்கள். விரதம் இருக்கப் பயந்தார்கள். விரதச் சோற்றைக் கூட அவர்களுக்குப் பயந்து கிணற்றுக்குள் இறங்கி அங்கிருந்து உண்டார்கள். 500க்கு மேற்பட்ட கோயில்களை அழித்தார்கள். கொள்ளையிட்டார்கள். கோமாதா என்று கும்பிட்ட பசுக்களை கசாப்புக் கடையில் தொங்க விட்டார்கள்....“ ஈஸ்வரபாதம் ஆசிரியர் சரித்திர பாட வகுப்பில் சொன்னவை மீண்டும் நினைவில் வந்து மோதுகிறது.

ஒரு வெள்ளையன் தமிழ் பேசினால் கை தட்டி ஆராவாரிக்கிறோம். உலகெங்கும் பரந்து வாழும் நாங்கள் அந்தந்த நாட்டு மொழிகளைப் பேசுகிறோம். அவர்களைப் பார்த்து நாங்கள் பெருமைப் படுவது போல் எங்களைப் பார்த்து அவர்கள் பெருமைப் படுகிறார்களா? தெரியவில்லை. அவர்களில் ஒருவர் தமிழில் பேசினால், „எப்பிடி தமிழ் பேசுகிறான். எங்களை விட அவனுக்கு எங்கள் மொழியில் நாட்டம். எங்கள் மொழியில் எங்களுக்கு இல்லாத பற்று அவனுக்கிருக்கிறது...“ என்று வார்த்தைகளை  விசிறி அவர்களைப் பெருமை படுத்துவதற்காக எங்களை நாங்களே சிறுமைப் படுத்திக்கொள்கிறோம். நாங்கள் மற்றவர்களை திருப்திப் படுத்துவதிலும், அவர்களைப் பற்றி பெருமையாகச் சொல்வதிலும் அதிக கவனம் செலுத்துவதால் எங்களை மறந்து விடுகிறோம். எங்களை நாங்களே பாராட்டத் தெரிந்து கொள்வோம். பல கலைஞர்கள் தங்கள் படைப்புகளை வெளிக் கொணர அது பெரிதும் உதவும். மேலும் பலர் தங்களை வளர்த்துக் கொள்ள அவை உறுதுணையாக இருக்கும்.

எம்மவர்களால் படைக்கப்பட்ட எவ்வளவோ கதைகள், கட்டுரைகள், கவிதைகள், ஆழமாக சிந்தித்து எழுதப்பட்ட அரசியல் கட்டுரைகள், விமர்சனங்கள் இன்னும் எத்தனையோ பலன் தரும் விடயங்கள் முகநூலில் கொட்டிக் கிடக்கிறன. கருத்துகள் வைக்கவோ, ஆக்க பூர்வமான கேள்விகள் கேட்டு தெளிந்து கொள்ளவோ ஏன் போகிற போக்கில் „லைக்“குகள் போட்டுவிட்டு போகவோ ஆட்களைத்தான் காணோம்.

முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாத்துரை அன்று சொன்னார், „அறையில் இருந்து கொண்டே, ஆறாயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் சீமையில் ஒலிபரப்பும் வானொலியைக் கேட்கிறோம். அது அதிசயமாகப் படவில்லை நம்மவர்க்கு. மாரியம்மன் கோயில் பூசாரியின் மந்திரம் அதிசயமாகத் தெரிகிறது..“ இதை ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் எங்களுக்கு இன்று மரியாவின் பரதநாட்டியமும், கமரூனின் கோவில் தரிசனமும்தானே ஆச்சரியமாகத் தெரிகின்றன.

- ஆழ்வாப்பிள்ளை
9.11.2013
  

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை