ரொம்பக் கேவலமா இருக்கு

அன்றொரு நாள் மன்னன் சொலமன் சபையிலே ஒரு விசித்திரமான வழக்கு வந்தது. இரண்டு தாயார், ஒரு பிள்ளை. இருவருமே அதைத் தன் பிள்ளை என்றனர். அன்று அதற்கு மன்னன் சொலமன் வழங்கிய தீர்ப்பும், அந்தத் தீர்ப்பை வழங்க அவன் கையாண்ட முறையும் மன்னனது புகழையும், தாயின் பெருமையையும் உயர்த்தி நின்றன. இந்த நிகழ்வு இரண்டு ஆயிரங்களைக் கடந்த ஒன்று. இன்றொரு வழக்கு வந்தது. இரண்டு பிள்ளைகள் ஒரு தாய். வழக்கில் கிடைத்த தீர்ப்பும், அதை வழங்கக் கையாண்ட முறையும்

தாயின் பெருமையை மட்டுமல்ல தீர்ப்புத் தந்தவரின் தரத்தையும் உயர்த்தவில்லை. வழக்கானது 'சொல்வதெல்லாம் உண்மை' (12.09.2013) என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வந்திருந்தது. வழக்கிற்கு வந்தவர்கள் ஒரு தாய், இரு பெண் பிள்ளைகள். பிறப்பால் இவர்கள் ஈழத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு இன்னும் ஒரு சகோதரனும், சகோதரியும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் கனடாவில் வசிக்கிறார்கள். கனடாவில் இருக்கும் சகோதரி 'எதற்கு டென்சன்' என்ற நிலையில் ஒதுங்கி இருக்கிறார். சகோதரனுக்கோ, தாயைப் பற்றி கதை எடுத்தால் ஆத்துக்காரி டென்சனாகி விடுகிறார். ஆகவே மற்ற இரு மகள்களுமே வழக்குக்குள் வருகிறார்கள். ஒருவர் இந்தியாவில் வசிக்கிறார், மற்றவர் பிரான்சில் வாழ்கின்றார்.

இந்தியாவில் இருக்கும் மகளுக்கு ஒரு மகன் இருக்கிறார். 74 வயதுத் தாயை கூடவே வைத்துப் பராமரிக்கிறார். அவர் தற்போது செய்யும் தொழிலில் வருமானம் போதுமானதாக இல்லை. வீட்டு வாடகையே 5000 இந்திய ரூபாய்கள். எல்லாச் செலவுகளுடன், தாய்க்கான மருத்துவச் செலவுகளும் தனியாக இருக்கிறது.

இவர் இந்தியாவிற்கு வந்ததற்கு காரணமும் சொல்கிறார். தனது பையனை வெளிநாட்டுக்கு அனுப்ப சகோதரர்கள் உதவுவதாகச் சொன்ன வார்த்தையை நம்பியே இவர் இந்தியா வருகிறார். 'வரும் போது அம்மா அப்பாவையும் கூட்டிக் கொண்டு வா' என்ற சகோதரர்களின் பேச்சுக்கும் கட்டுப்பட்டு அவர்களையும் உடன் அழைத்து வருகிறார். கடந்த வருடம் தந்தை இறந்து போகிறார். பிரான்சில் இருக்கும் சகோதரி அனுப்பிய பணத்தில் வியாபார நிலையம் ஒன்றைத் துவங்குகிறார். நட்டம் ஏற்பட்டதால் அதை நிறுத்தி விடுகிறார். கடந்த மாதம் தாயாரை இலங்கைக்கு அழைத்துச் சென்று, அங்கு வங்கியில் இருந்த அவரது ஓய்வூதியப் பணத்தை (நாலு இலட்சத்து எண்பத்தி ஒன்பதாயிரம் இலங்கை ரூபாக்கள்) எடுத்துக் கொண்டு, மாதாமாதம் வரும் தாயாரது ஓய்வூதியப் பணத்தை இந்தியாவில் இருந்தே பெறக்கூடிய ஒழுங்குகளையும் செய்து விட்டு வருகிறார்.சரி இங்கே எங்கே வழக்கு இருக்கிறது என்கிறீர்களா? எனக்கும் அதே கேள்விதான் இருக்கிறது. ஒருவேளை தொலைக்காட்சியில் தன்னைத் தானே பார்க்க ஆசைப்பட்டு, பிரான்சில் வசிக்கும் சகோதரி இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கலாம்.

சகோதரிகள் இருவரையும் பார்த்த உடனேயே சொல்லிவிடக் கூடியதாக இருந்தது. இந்தியாவில் இருப்பவர் வாடி வதங்கி இருந்தார். அவர் வாழ்க்கையில் பட்ட அடிகளின் தாக்கங்கள் அவர் முகத்தில் அப்படியே ஒட்டி இருந்தன. பிரான்சில் இருந்து வந்தவர் ஊதி உப்பி குறுக்கு வரிகள் போட்ட உடையில், எந்தக் காற்றும் என்னை அசைக்க முடியாது என்ற தொனியில் குசாலாக அமர்ந்திருந்தார். 'கொஞ்சம் நிறத்திட்டாய்' என்று தாயார் சொன்ன போது அவரது முகத்தில் ஒரு பூரிப்பு. 'நான் வெள்ளையா வந்திந்திட்டன்' என்று அவர் பெருமையாகச் சொன்னபோது, எனக்கு வெள்ளை நிறமே மறந்து போயிற்று.

'தாயாரை சகோதரி சரியாகப் பராமரிக்கவில்லை' என்பது பிரான்சில் இருப்பவரது குற்றச்சாட்டு. அது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை. தந்தை இறந்தபோது தாயாரை அநாதைகள் இல்லத்தில் விட்டுவிடச் சொன்னவர் இவர்தான் என இந்தியாவில் இருப்பவர் அவரைக் காட்டிச் சொன்னபோது அதை அவர் மறுக்கவில்லை என்பதில் தெளிவாகிறது. போதாதற்கு தாய் தனது வாக்கு மூலத்தில் அவர்கள் தனக்கு சாப்பாடு எல்லாம் ஒழுங்காகத் தருகிறார்கள் என்று அத்தாட்சியும் தருகிறார்.

தங்களது வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் உள்ளவர்கள், தங்களது பிள்ளைகளைப் பார்க்க பெரிதும் ஆசைப்படுவார்கள். ஒரு இடத்தில் அடைந்து நிற்க அச்சப்படுவார்கள். வெளி இடங்களைப் பார்க்க, வெளியார்களோடு கதைக்க பெரிதும் விரும்புவார்கள். தனியாக இருப்பதற்குப் பயப்படுவார்கள். இப்படியே படுக்கையில் படுத்திருந்து செத்துப் போவோமோ என்ற அச்சத்தில் இருப்பார்கள். இதுதான் அந்தத் தாயின் நிலையாக இருந்தது. பிரான்சில் இருந்து வந்தவர் இந்த நிலையை தனக்குச் சாதகமாக்கி வார்த்தைக்கு ஒரு தடவை 'மம்மி' என்று சொல்லி கண்ணீர் விட்டு ஒரு குறும்படத்தில் நடித்து முடித்திருந்தார். சீரியல்களை பெரிதும் விரும்பிப் பார்ப்பதால் வந்த வினையோ இது என்று தெரியவில்லை. ஆனாலும் தாயாரை மையமாக வைத்து அவர் ஆடிய நாடகத்தில் அவரை அறியாமல் அவர் சொன்னவைதான் கவனிக்கப்பட வேண்டியவை. ஒன்று, கடை விற்றதை சகோதரி தனக்குத் தெரியப்படுத்தவில்லை. இரண்டு, தனது மகனை இந்தியாவுக்கு அழைத்து வந்தபோது, சகோதரி இந்தியாவில் நிற்காமல் தாயை அழைத்துக் கொண்டு இலங்கைக்குச் சென்றுவிட்டார். இந்த இரு சம்பவங்களுமே 'உன்னை விட்டேனா பார்' என்ற நிலைக்கு வந்திருக்கிறதே தவிர. தாயார் பரபமரிப்பு எல்லாம் வெறும் சோடனை.

வெளிநாட்டுக்கு அதுவும் பிரான்சுக்கு அந்தத் தாயாரை அழைப்பது அவ்வளவு சுலபமானது இல்லை. மருத்துவக் காப்புறுதி தொட்டு அவரது பராமரிப்பு என்ற விடயங்கள், இவற்றுடன் வயதானவர் இங்கு நிரந்தரமாகத் தங்குவதற்கான விசா எல்லாமே நடைமுறையில் சாதாரணமானது இல்லை. தமது குடும்பப் பிரச்சினையை தங்களுக்குள் தீர்க்க முடியாமல் தொலைக்காட்சியில் வெளிச்சம் போட்டுக் காட்டிய ஒரு பெண், 25 வருடங்களாக தனது மகனைக் கூட்டிச் சென்று தாயாருக்குக் காட்டாமலே இருக்கும் ஒரு பெண், இதை எல்லாம் செய்து முடிப்பாரா? இதற்கு மேலாக பிரான்சின் குளிர் காலத்தை அந்தத் தாயின் உடம்புதான் தாங்குமா? வெளியில் குளிர். ஒரு அறைக்குள் அடைபட்டிருக்கிறேனே என்று அந்தத்தாய் மறுபடியும் புலம்ப மாட்டாரா? வெளிநாடுகளில் எல்லோரும் பணம் சம்பாதிக்கப் பறந்து கொண்டிருப்பார்கள். இந்தத் தாய் என்ன செய்யப் போகிறார்? இப்படி பல சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால் இவற்றை எல்லாம் அலசாமல் அல்லது அந்த மகளிடம் இப்படியான கேள்விகளை வைக்காமல் எடுத்தோமா கவிழ்த்தோமா என்ற பாணியில் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியாளர் நடந்து கொண்டது வேதனையாக இருக்கிறது. எங்களுக்கு என்ன ஒருநாள் நிகழ்ச்சி பூர்த்தியாயிற்று என்று அவர்கள் தங்களது அடுத்த நிகழ்ச்சிக்குப் போய் விடுவார்கள். அப்படித்தான எனக்குச் சொல்லத் தோன்றுகிறது.

இங்கெல்லாம் அதாவது ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிலைமைகளைச் சொல்கிறேன். என்னதான மருத்துவக் காப்புறுதி இருந்தாலும், முதியோர் இல்லத்துக்குச் செல்லவேண்டிய நிலை வரும்போது எங்களிடம் உள்ள பணம், சொத்துக்கள் போன்ற விபரங்களை அரசாங்கத்துக்குத் தர வேண்டும். ஒன்றில் நாங்களாகவே பணத்தைக் கட்டி, அது கையிருப்பாக இருக்கட்டும் அல்லது ஓய்வூதியப் பணமாகவே இருக்கட்டும் இல்லங்களுக்கான செலவுகளை ஏற்றுக் கொள்ளலாம். அல்லது அவர்கள் எங்கள் பணத்தை, சொத்துக்களை எடுத்து அதில் செலவு செய்வார்கள். வீட்டில் வைத்து வயதான, இயலாத பெற்றோரை கவனிப்பவர்களுக்கு அரசாங்கமே வேலையில் இருந்து விடுப்புக் கொடுக்கிறது. ஆனாலும் அவர்கள் தங்கள் வீட்டில் வைத்து ஒருவரைப் பராமரிப்பதை அது தாய், தந்தை, மாமா மாமி யாராக இருந்தாலும் அதனையும் ஒரு வேலையாகக் கருதி அதற்கான பணத்தை அந்தந்த மருத்துவ, மற்றைய காப்புறுதிகள் தந்து விடுகின்றன. இந்த நிலை இந்தியாவில் இல்லாமல் இருக்கலாம்.

ஆனாலும் 'வயசான காலத்திலை அவங்க பாதுகாப்புக்குத்தான் பென்சன் குடுக்குறாங்க. அதையும் பிடுங்கி வைச்சிட்டீங்கண்ணா...' என்று வாதியைப் பேச விடாமல் நிகழ்ச்சி நடத்துனர் அதிகாரமாகக் கேட்டது அறிவுரீதியாகத் தெரியவில்லை. அந்தத் தாயாரை வைத்துப் பராமரிப்பதற்கும், மருத்துவச் செலவுகள், தங்குமிடம், உணவு போன்ற இதர செலவுகளுக்கும் அந்தப் பெண்ணுக்கு யார் பணம் கொடுப்பார்கள்? இவை எல்லாம் நிகழ்ச்சி நடத்துனர் சிந்திக்காமல் போன விடயங்களில் சில.

இந்தப் பிரச்சினையை தொலைக்காட்சி வரை கொண்டு போனவர்க்கு சூடு, சுரணை எதுவுமே இல்லையா?

தென்னிந்திய நடிகர் ஒருவரின் பாணியில் சொல்வதானால்,

'ரொம்பக் கேவலமா இருக்கு'

- ஆழ்வாப்பிள்ளை

Quelle -  Ponguthamizh

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை